Tuesday, August 23, 2016

தமிழ் நாஜிகள் : மக்களை பிரித்தாள அரசு வளர்க்கும் வேட்டை நாய்கள்


கலாச்சாரக் காவலர்கள்:
நாஸிகள் ஆட்சிக் காலத்தில், ஜெர்மன் பெண்கள் பாரம்பரிய கலாச்சார உடையில் அணிவகுத்துச் செல்கின்றனர். நமது தமிழ் கலாச்சாரக் காவலர்கள், ஜெர்மன் நாஸிகளிடம் படித்த சீடர்கள் போலிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே?

நான் அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் தமிழர் "தமிழ் இனத்தின் நலன் காக்க உருவான தேசியவாதக் கட்சி" என்கிறார்கள்.

அப்படியா? ஜெர்மன் நாஜிக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட நோக்கமும் அது தானே? அரசியல் கொள்கையும் ஒன்றுதானே? மறுக்க முடியுமா?

ஹிட்லரின் நாஜிக் கட்சி (Nationalsozialistische Deutsche Arbeiterpartei) ஜெர்மன் இனத்தின் நலன் காக்க உருவான ஜெர்மன் தேசியவாதக் கட்சி தான். அதன் பெயரிலேயே தேசியம் இருக்கிறது. National என்ற சொல்லை ஜெர்மன் மொழியில் "நாற்சியோனல்" என்று உச்சரிப்பார்கள். அது தான் சுருக்கமாக நாஸி என்று அழைக்கப் பட்டது.

"ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கும், ஈழத்தமிழரின் பேரழிவுக்கும் காரணம் தமிழ்நாட்டை ஆளும் தெலுங்கர்கள்" என்று சொல்கிறார் சீமான். "முதலாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் காரணம் ஜெர்மனியை ஆண்ட யூதர்கள்." என்றான் ஹிட்லர். என்ன வித்தியாசம்?

உருது தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சீமான் சொல்லி இருக்கிறாராம். அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. ஒரு காலத்தில், தென்னாபிரிக்கா, மொரிசியஸ், ரியூனியன், சீஷெல்ஸ், பிஜி போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேற்றப் பட்டனர். அந்த மக்கள், மூன்று தலைமுறைகளாக, ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா?

உருது, இந்தி, இரண்டும் ஒரே மொழி தான் என்ற உண்மையை பலர் அறியவில்லை. உருது அரபி எழுத்துக்களையும், இந்தி சம்ஸ்கிருத கிரந்த எழுத்துக்களையும் பாவிப்பது மட்டுமே வித்தியாசம். ஹிந்துஸ்தானி மொழியும், பாரசீக மொழியும், பிற உள்ளூர் மொழிகளும் கலந்து உருவான புதிய மொழி தான் உருது அல்லது இந்தி. மொகலாயர் காலத்தில் உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

தேசியவாதத்தை இனவாதமாக சிறுமைப் படுத்த நினைப்பவர்கள் தான், "அவன் தமிழனா, இவன் தமிழனா?" என்று கேட்கிறார்கள். தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் உருது பேசினாலும் அவர்கள் தமிழர்கள் தான்.

மேற்கத்திய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கும் மேல் வசித்திருந்தால், பிரஜாவுரிமை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டுடன் ஒன்றித்து விட்டதற்காக, அந் நாட்டு மொழியை பேசுவதற்காக கொடுக்கப் படும் நியாயமான வெகுமதி.

இந்த விடயங்களை, முதன்முதலாக ஹிட்லர் தான் கேள்விக்குட்படுத்தினான். ஜெர்மன் தவிர்ந்த வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஜெர்மனியர்கள் அல்ல என்று வாதிட்டான். இட்டிஷ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்று சொன்னான். ஆதாரம் தேவைப்படுவோர் ஹிட்லர் எழுதிய மெயின் காம்ப் நூலை வாசிக்கவும்.


மேலே உள்ள படம், சீமான் ஆதரவாளர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தது. சீமானும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளும், பேரினவாத அரச கைக்கூலிகள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? "மலையாள மாவோயிஸ்டுகள்" என்று அவதூறு பரப்புவதில் இருந்தே இவர்களது அரச அடிவருடித்தனம் வெளிப்படுகின்றது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், தமிழ் நாட்டுக்கு விடுதலை கேட்க மாட்டார்களாம். நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க. 

சீமானை உளவுத்துறை பின்னால் நின்று இயக்க வேண்டிய அவசியமில்லை. முன்னால் நின்றே இயக்கலாம். தமிழ்நாட்டில் மாவோயிச அபாயம் வரவிடாமல் தடுப்பதற்கு தயார் படுத்தப் பட்டிருக்கலாம். அயல் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மூன்றிலும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விடாமல் தடுப்பதற்கு சீமான் போன்ற கைக்கூலிகள் உளவுத்துறைக்கு அவசியம். 

திடீரென தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி அரசியல்வாதி, மிகக் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தால், அது எப்போதும் சந்தேகத்திற்குரியது. தமிழ் நாட்டில் ஏற்கனவே பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கட்சிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. 

நக்சல்பாரி வழி வந்த கம்யூனிச அமைப்புகள் மட்டுமல்ல, தீவிர தமிழ்தேசியக் கட்சிகள் கூட ஊடகங்களின் கண்களுக்கு தட்டுப் படுவதில்லை. அதே நேரம், இன்றைக்கும் மிகக் குறைந்தளவு ஆதரவாளர்களை கொண்ட சீமானுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது எப்படி? 

அமெரிக்காவிலேயே வெகுஜன ஊடகங்களுக்கு, உளவுத்துறையின் உத்தரவுகள் வருவது வழமை. எல்லாக் கட்சிகளிலும் உளவுத்துறைக்கு தகவல் கொடுப்பதற்கு ஆட்களை வைத்திருப்பார்கள். இந்தியாவில் தாராளமான சுதந்திரம் தந்து விடுவார்களா? அதிலும் "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்..." என்று இன- அடிப்படைவாதம் பேசும் கட்சியை சும்மா விட்டு விடுவார்களா?

1 comment:

  1. அன்பு நண்பரின் கட்டுரை சீமான்னை குறைசொல்வதாக மட்டுமே உள்ளது.தமிழர் நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்பதில் என்னதவறு இருக்க முடியும்.அவரின் செயல்பாடுகளில் குறைகள் இருப்பின் அவருக்கு தங்களின் ஆலோசனைகளை தரலாம்,ஆனால் தொடர்இந்து அவரை குற்றம் சொல்வதிலையே நீங்கள் குறியாக இருகின்றீர்கள்,எந்த ஊடகம் அவரை முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறீர்கள்,எல்லா அவரின் செயல்பாடுகளை மறைத்து வருவதே உண்மை,அவரின் படங்களை கட்டுவதை கூட கிடையாது

    ReplyDelete