Saturday, August 27, 2016

பிரான்ஸில் இஸ்லாமிய நீச்சல் உடைக்கு தடை போட்ட இனவாத முதலாளித்துவம்




பிரான்சில் முஸ்லிம் பெண்களை துப்பாக்கி முனையில் "விடுதலை" செய்யும் பொலிஸ். கடற்கரையில் படுத்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் உடைகளை கழற்றுமாறு பொலிஸ் துப்பாக்கி முனையில் பயமுறுத்தியது.

பிரான்ஸ் நாட்டில் கான் (Cannes) ந‌க‌ர‌த்தில், முஸ்லிம் பெண்க‌ள் முழு உட‌லையும் ம‌றைக்கும் நீச்ச‌ல் உடையுட‌ன் க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌த‌ற்கு விதித்திருந்தது. பூர்கினி என்று அழைக்கப் ப‌டும் உடலை மூடும் ஆடை அணிந்து நீச்ச‌ல் குள‌ங்க‌ள், க‌டற்க‌ரைக்கு செல்ல‌க் கூடாது என்று கான் ந‌க‌ர‌ மேய‌ர் ச‌ட்ட‌ம் போட்டிருந்தார். இந்த‌ த‌டையுத்த‌ர‌வுக்கு ஐரோப்பிய‌ தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்து வ‌ர‌வேற்றிருந்தனர்.

பூர்கினி எனும் இஸ்லாமிய‌ நீச்ச‌ல் உடைக்கு எதிரான‌ த‌டையுத்த‌ர‌வு, அர‌ச‌மைப்பு ச‌ட்ட‌த்திற்கு முர‌ணான‌து என்று பிரான்ஸ் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கி உள்ள‌து. ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ள் போட்ட‌ வ‌ழ‌க்கை விசாரித்த‌ நீதிம‌ன்ற‌ம், இந்த‌ த‌டையுத்த‌ர‌வு இன‌வாத‌ உள்நோக்க‌ம் கொண்ட‌து என்றும், ம‌த‌ச்சுத‌ந்திர‌த்தை மீறுகிற‌து என்றும் தீர்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து. அந்த‌ தீர்ப்பை அடுத்து பூர்கினி த‌டை போட்ட‌ ந‌க‌ர‌சபைக‌ள் உடனடியாக த‌டையை வில‌க்கிக் கொள்ள‌ வேண்டும்.

ஐரோப்பிய‌ க‌லாச்சார மேலாதிக்க‌த்தை திணிக்கும் இன‌வாதிக‌ளின் பூர்கினி த‌டையுத்த‌ர‌வுக்கு ஆத‌ர‌வாக‌ சில‌ த‌மிழ‌ர்க‌ளும் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ந‌கைப்புக்குரிய‌து. யாழ்ப்பாண‌த்தில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ள், குள‌ங்க‌ள், கேணிக‌ள், குள‌ங்க‌ளில் குளிக்க‌ வ‌ரும் (இந்து) த‌மிழ்ப் பெண்க‌ள் யாரும் பிகினி அணிந்திருந்த‌தை நான் காண‌வில்லை. ப‌ல‌ர் உடுத்த‌ உடையோடு குளித்து விட்டு செல்கிறார்க‌ள். சில‌ர் குறுக்குக் க‌ட்டி இருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஒரு நிலைமையை க‌ற்ப‌னை செய்து பார்ப்போம். இனிமேல் பொது இட‌ங்க‌ளில் குளிக்கும் பெண்க‌ள் பிகினி அணிந்திருக்க‌ வேண்டும் என்று சிறில‌ங்கா அர‌சு ச‌ட்ட‌ம் போடுகின்ற‌து. (ஏற்க‌ன‌வே பிரான்ஸ் நாட்டில் போட்ட‌ அதே ச‌ட்ட‌ம் தான்.)

த‌ற்போது சிறில‌ங்கா அர‌சு கொண்டு வ‌ந்த‌ பிகினி ச‌ட்ட‌ம், த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ஒடுக்குமுறை என்று த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் போர்க்கொடி உய‌ர்த்தி இருப்பார்க‌ள். த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் "த‌மிழ‌ரின் பூர்கினி உரிமைக்காக"‌, ஐ.நா. வ‌ரை நீதி கோரி ந‌டைப் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்தி இருக்கும். இத்த‌னைக்கும் இந்த‌ "பூர்கினி ஆத‌ர‌வாளர்க‌ள்" யாரும் முஸ்லிம்க‌ள் அல்ல‌. மாறாக‌ த‌மிழ்க் க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை என்ப‌து பொது இட‌ம். அங்கு என்ன‌ உடை அணிய‌ வேண்டும் என்று யாரும் யாருக்கும் உத்த‌ர‌வு போட‌ முடியாது. சில‌ர் பிகினி அணிந்து அரை நிர்வாண‌மாக‌ இருப்பார்க‌ள். சில‌ர் உட‌லை மூடிய‌ ஆடையுட‌ன் வ‌ந்திருப்பார்க‌ள்.

அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ம். ஆனால் எல்லோரும் க‌ட‌ற்க‌ரையில் குளிப்ப‌த‌ற்கு அல்ல‌து ஓய்வெடுக்கும் நோக்கில் வ‌ந்திருப்பார்க‌ள். ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பெண்க‌ள் பிகினி அணிய‌ல‌மா? என்று சில‌ர் அப்பாவித் த‌ன‌மாக‌ கேட்கிறார்க‌ள். இவ‌ர்கள் எத்த‌னை நாடுக‌ளுக்கு சென்று பார்த்தார்க‌ள்? லெப‌னான், எகிப்து, துனீசியா, மொரோக்கோ போன்ற‌ ப‌ல‌ நாடுக‌ளில் உள்ள‌ க‌ட‌ற்க‌ரைக‌ளில், சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌, உள்நாட்டு முஸ்லிம் பெண்க‌ளும் பிகினி அணிந்து வ‌ருவ‌தைக் காண‌லாம்.

அங்கெல்லாம் க‌ட‌ற்க‌ரையில் இந்த‌ உடுப்பு தான் அணிய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுப்பாடு எதுவும் கிடையாது. யூத‌ இஸ்ரேலிலும் அப்ப‌டி ஒரு நிலைமை இல்லை. சில‌ க‌டும்போக்கு யூத‌ ம‌த‌ப் பிரிவுக‌ளை சேர்ந்த‌ பெண்க‌ளும், உட‌லை மூடும் உடை அணிந்து தான் குளிப்பார்க‌ள். இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் கூட‌ ஐரோப்பிய‌ப் பெண்க‌ள், உட‌லை மூடும் உடை அணிந்து க‌ட‌ற்க‌ரைக்கு சென்று குளிப்ப‌து வ‌ழ‌மையாக‌ இருந்த‌து.

பூர்கினி என்றால் என்ன? பலர் தவறாக நினைப்பது மாதிரி, அதற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நீச்சல்குளம், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். "அங்கெல்லாம் எல்லோரும் நிர்வாணமாக இருப்பார்கள்..." என்று அருவருப்பாக கருதுவார்கள். அவர்கள் பூர்கினி அணிந்தும் குளிக்கப் போக மாட்டார்கள்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பெண் தொலதிபர் Aheda Zanetti என்பவர் தான் பூர்கினி என்ற உடையை வடிவமைத்தார். அது பேஷன் சம்பந்தப் பட்ட விடயம். பேஷன் என்றால் அது ஐரோப்பியர்கள் மட்டும் தான் வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா? எங்களில் பெரும்பான்மையானோர் மேற்கத்திய பாணியில் உடுத்துவதை மட்டுமே பேஷன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அஹேடா ஜானெத்தி லெபனானை பூர்வீகமாக கொண்டவர். கடந்த நாற்பது வருட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இஸ்லாமியப் பெண்கள் கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுது போக்குவதற்கு வசதியாக பூர்கினி என்ற உடையை வடிவமைத்ததாக அவர் கூறுகின்றார். "இது பெண்களை விடுதலை செய்கின்றது" என்கிறார். அவர் இதற்கு முன்னர் இஸ்லாமிய மரபு சார்ந்த விளையாட்டு உடைகளை வடிவமைத்து சந்தைப் படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக சந்தைப் படுத்தப் பட்ட பூர்கினி என்ற நீச்சல் உடை, பின்னர் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது வரையில், உலகம் முழுவதும் 700.000 உடைகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஒரு உடையின் விலை $80 அல்லது $200 டாலர்கள்.

இந்த பூர்கினி உடை வாங்கி அணிபவர்கள் இஸ்லாமியப் பெண்கள் மட்டும் அல்ல. இந்து, யூத மதங்களை பின்பற்றும் பெண்களும் வாங்கி அணிகின்றனர். அவர்களும் கலாச்சார நோக்கில் தான் பூர்கினி அணிகிறார்கள். அது மட்டுமல்லாது, புற்றுநோயால் பாதிக்கப் பட்டு குணமான ஐரோப்பிய இனப் பெண்களும் பூர்கினி வாங்குகின்றனர். இந்த விபரங்களை தெரிவித்த Aheda Zanetti, அதனது வாடிக்கையாளர்களில் நாற்பது சதவீதம் இஸ்லாமியர் அல்லாத பெண்கள் என்று சொல்கிறார்.

இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. பூர்கினி உடை குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு, முதலாளித்துவ மேலாதிக்க நலன்களுக்கான போட்டி காரணமாக  இருக்கலாமா? இது உலகமயமாக்கல் காலகட்டம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்கள் ஐரோப்பிய நீச்சல் உடையான பிகினி வாங்கலாம் என்றால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள் இஸ்லாமிய நீச்சல் உடையான பூர்கினி வாங்குவது தவறாகுமா? இந்தியாவில் ஐரோப்பியப் பாணி உடைகளை விற்பனை செய்யலாம் என்றால், ஐரோப்பாவில் இந்தியப் பாணி சேலைகளை விற்பனை செய்வது தவறாகுமா? இது தான் இங்கேயுள்ள பிரச்சினை.

அதாவது, உலக கலாச்சார தளத்திலும், மேற்கத்திய முதலாளித்துவம் மட்டும் தான் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பிரச்சினைக்கு காரணம். அதற்கு போட்டியாக வரும் ஹலால் முதலாளித்துவம், பூர்கினி முதலாளித்துவம், சேலை முதலாளித்துவம், எதுவாக இருந்தாலும் அடக்கி ஒடுக்கவே நினைக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். "இஸ்லாமிய மதப் பிரச்சினை...பாதுகாப்பு பிரச்சினை..." இப்படிப் பல.

எல்லாப் பிரச்சினைகளும் வந்து ஓர் இடத்தில் குவிகின்றன. உலக சந்தையை கைப்பற்றல், நுகர்வோர்களை கட்டுப்படுத்தல்...சுருக்கமாக மூலதன திரட்சி மேற்குலகை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மை மக்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களை ஏமாற்றுவதற்கு இருக்கவே இருக்கிறது..."இஸ்லாமிய தீவிரவாதப் பூதம்"!

No comments:

Post a Comment