Tuesday, August 03, 2010

கிரேக்க கெரில்லாக் குழு: "முதலாளித்துவத்திற்கு எதிரான போர்"

கிரீசில் அண்மையில் இடம் பெற்ற அரசியல் படுகொலைக்கு ‘Sect of Revolutionaries’ என்ற புதிய அமைப்பு உரிமை கோரியுள்ளது. 19 July அன்று Sokratis Giolias என்ற ஊடகவியலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத மூன்று பேர் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு விட்டு தப்பி விட்டனர். படுகொலையான நபர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் போலிசுக்கு தகவல் சேகரிப்பவர் என்று நம்பப்படுகின்றது.

கிரீஸின் பிரபல நாளேடான Ta Nea வுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகடு ஒன்று படுகொலைக்கு உரிமை கோருகின்றது. இதன் மூலம் புதியதொரு தலைமறைவு கெரில்லா இயக்கத்தின் இருப்பு பற்றியும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனுப்பிய குறுந்தகட்டில் இயக்கத்தின் ஆயுதக் கையிருப்பைக் காட்டும் போட்டோ ஒன்றும் உள்ளது. உரிமை கோரும் அறிவிப்பில், தாம் கிரேக்க ஜனநாயகத்திற்கு எதிராக போராடப் போவதாக தெரிவித்துள்ளனர். முதலாளித்துவத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்துள்ளனர். கிறீஸ் இனிமேலும் முதலாளித்துவத்தின் பாதுகாப்பான புகலிடம் அல்ல என்று சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது. குண்டு வைப்பு, மரண தண்டனை, நாச வேலை போன்ற புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் கிறீஸ் முழுவதையும் போர்க் களமாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ளனர்.

கடந்த வருடம், பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போலிஸ் நிலைய தாக்குதலுக்கும் ‘Sect of Revolutionaries’ ஏற்கனவே உரிமை கோரியிருந்தது. தானியங்கி துப்பாக்கிகள், கிரனேட்கள் சகிதம் நடைபெற்ற தாக்குதலில் போலிஸ் நிலையத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. "இம்முறை அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்கள். அடுத்த தடவை நிலைமை வேறு விதமாக இருக்கும்" இவ்வாறு அந்த உரிமை கோரும் கடிதத்தில் இருந்தது.
இதற்கிடையே கிரீசில் பார ஊர்தி வாகன சாரதிகள் வாரக்கணக்காக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை பிரயோகம், தடியடி மூலம் போலீசார் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை அடக்க எத்தனித்த முயற்சி கைகூடவில்லை. இறுதியில் அரச ஆணையின் பிரகாரம், இராணுவ சாரதிகள் பார ஊர்திகளை எடுத்துச் சென்று எரிபொருள் விநியோகம் செய்துள்ளனர்.


No comments:

Post a Comment