Saturday, August 30, 2008

ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு

பொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: "இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.

அமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, "க்மெர் ரூஜ்" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)

நகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).

க்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.

கம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி
"Year Zero" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.
YEAR ZERO



கம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுகள் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான "க்மெர் ரூஜ்" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.

எங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் "கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது! நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

எப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.
_____________________________________________________________________________________
இது தொடர்பான வேறு பதிவுகள் :
லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்


Tell a Friend

Thursday, August 28, 2008

ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது.

"இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும்  தமது எஜமானர்களுக்காக பங்குபற்றின. அப்போதே, ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் "பனிப்போர்" என்ற சொற்பதம். ஏனெனில் "பனிப்போர்" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.

"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்" என்று ஒரு ஸ்வஹிலி (ஆப்பிரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப் படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் "ஆஹா, ஓஹோ" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, "மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.

அப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் "இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் "சர்வதேச வர்த்தக மையம்", "G 7(+ரஷ்யா)" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதய "பனிப் போர்- 2" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும் (அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, "ஆயுதக் களைவு ஒப்பந்தப்" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன? "வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை" கலைத்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா?

இல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட "நேட்டோ"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்?

G 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.

ஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் நேரம், ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது.

ஏனெனில், உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, "கிரீமியா" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

உக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) "ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.

"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

வட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் "பனிப்போர் அபாயம்" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.



முன்னைய பதிவுகள்:

1.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
2.அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
3.விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"


Tell a Friend

Monday, August 25, 2008

இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

"கொகேசியர்கள்", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கருங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே "கொகேசியா" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

இன்று அமெரிக்கா-ரஷ்யா பனிப்போருக்குள் சிக்கி, செய்திகளில் அடிபடும் ஜோர்ஜியாவும் ஒரு கொகேசிய நாடு தான். அதன் வடக்கத்தய மாகாணங்களான அப்காசியா, ஒசேத்தியா ஆகியனவற்றில் வாழும் மக்கள் ஜோர்ஜியாவுடன் இணைந்திருக்க விரும்பவில்லை. அப்காசிய, ஒசெத்திய மொழிகள் ஜோர்ஜிய மொழியில் இருந்து வேறு பட்டவை. இதிலே ஒசெத்தியர்களின் மொழி ஈரானின் பார்சி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. பண்டைய மன்னர் கால ஆட்சி அலகுகளில் இருந்து, தேசிய அரசுகளை நோக்கி கொகேசியா 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றமடைந்தது. 19 ம் நூற்றாண்டில் விரிவடைந்து கொண்டு போன ரஷ்ய ஏகாதிபத்தியம், கொகேசிய நாடுகளையும் கைப்பற்றி, தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது. பின்னர் 1917 ல் லெனின் தலைமையில் கம்யூனிச புரட்சி கண்ட போல்ஷெவிக் கட்சியினர், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை, "சோவியத் யூனியன்" என்ற அதிகார அலகின் கீழ் கொண்டு வந்தனர். முன்னரே தனித்துவ அரசியல் அதிகாரம் கொண்டிருந்த பெரிய நாடுகள் "சோவியத் சோஷலிச குடியரசு" அந்தஸ்து பெற்றன. ஜோர்ஜியாவும் அவற்றில் ஒன்று.

சுமார் 150 மொழிகள் பேசும் மக்களை கொன்ட சோவியத் யூனியனை 15 குடியரசுகளாக பிரித்து விட்டால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இதனால் தமக்கென தனித்துவமான நிலப்பரப்பையும், மொழியையும் கொன்ட பிற சிறுபான்மை இனங்களின் நலன் கருதி, பல சுயாட்சிப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இனத்தால் ஜோர்ஜியரான ஸ்டாலின், சோவியத் அதிபரான பின்பு தான், இனங்களுகிடையே ஆன அதிகாரப்பரவலாக்கல் பூர்த்தியடைந்தன. அதன் அர்த்தம், ஸ்டாலின் காலத்தில் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது என்பதல்ல. ஆனால் இன்று நாம் காணும் தேச, பிரதேச எல்லைகள் யாவும் ஸ்டாலினால் வரையப்பட்டவை. குறிப்பிட்ட தேசம் அல்லது மாநிலம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்டது போல தோற்றம் காட்டுகின்றது. ஆனால் அயல் நாடொன்றின் வேற்று மொழி மாகாணம், வேண்டுமென்றே ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சேர்க்கப்பட்டது. அந்தந்த குடியரசுகளில் குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் பெருகி, பிராந்திய பேரினவாத சக்திகள் தலை தூக்குவதை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அவ்வாறு செய்யப்பட்டது.

அப்காசியாவும், தென் ஒசெத்தியாவும் சுயாட்சி ஆட்சியலகை கொண்ட, ஆனால் "ஜோர்ஜிய சோவியத் குடியரசின்" பகுதிகளாக ஸ்டாலினால் இணைக்கப்பட்டது. இதைத்தான் இன்று ஜோர்ஜிய அரசாங்கமும், அமெரிக்கா உட்பட்ட சர்வதேசமும் "ஜோர்ஜியாவின் நிலப்பரப்பின் மீதான இறைமை" என்று கூறுகின்றனர். இதையே தான் அன்று கொசோவோ மீதான உரிமையை, செர்பியா வலியுறுத்தியது. அமெரிக்கா எல்லாவற்றிற்கும் இரண்டு வகை அளவீடு வைத்திருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்குலக ஊடகங்கள் தற்போதைய ஜோர்ஜிய பிரச்சினை, புத்தின் தலைமையிலான இன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. உண்மை மிகவும் சிக்கலானது.

"சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, 21 ம் நூற்றாண்டின் துயரங்களுக்கு வழிசமைத்துள்ளது." என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் சொன்ன போது, அவர் சோவியத் யூனியனை மீளகட்டமைக்க விரும்புவதாக மேற்குலகம் பரிகசித்தது. ஆனால் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள், புதிய யுத்தங்களை உருவாக்குகின்றன, என்பதையே அன்று புத்தின் எதிர்வு கூறியிருந்தார். சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜோர்ஜியா ஒரு வருடத்துக்கேனும் சுதந்திரமான குடியரசாக இருந்தது. அப்போது உருவாகிய ஜோர்ஜிய தேசியவாதம், பேரினவாதமாகி அயலில் இருந்த அப்காசிய, ஒசெத்திய சிறுபான்மை இனங்களை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பலாத்காரமாக இணைத்தது. அப்போது நடந்த இனப்படுகொலையில் ஒசெத்திய சனத்தொகையின் எட்டில் ஒரு பங்கு அழிந்தது. இதனால் போல்ஷேவிக்குகளுடன் கூட்டுச் சேர்ந்த ஒசெத்தியர்கள், ஜோர்ஜியரை அடக்கி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஆரம்பத்தில் அப்காசியா தனி சோவியத் குடியரசாக இருந்தது. பின்னர் அது ஜோர்ஜியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்படாத தனிநாடாக பிரிந்துள்ள அப்காசியா, தன் சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்றுள்ளது. அதற்கு மாறாக பூகோளரீதியாக பல பிரதிகூலங்களை கொண்ட ஒசேத்தியா, ஒன்றில் ஜோர்ஜியாவில் அல்லது ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. மேலும் தமது தாயகம் இரண்டாக பிளவுற்றிருப்பதாக (வடக்கு பகுதி ரஷ்யாவுடனும், தெற்கு பகுதி ஜோர்ஜியாவுடனும்) ஒசெத்தியர்கள் குறைப்படுகின்றனர். இருப்பினும் வரலாறு நெடுகிலும் ஜோர்ஜிய பேரினவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஒசெத்தியர்கள், ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகின்றனர்.

அண்மைக்கால பிரச்சினை 1991 ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. அப்போது தான் சோவியத் யூனியன் உடைந்ததை பயன்படுத்தி சுதந்திர நாடாகிய ஜோர்ஜியா, அப்காசியா, ஒசேத்தியா ஆகியவற்றின் சுயாட்சி ஆட்சியதிகாரத்தை இரத்து செய்து, ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாக அப்காசியா, ஒசெத்திய விடுதலை இயக்கங்கள் தோன்றி, ஜோர்ஜிய படைகளுடன் சண்டையிட்டு, தமது பிரதேசங்களை மீட்டனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வந்தது மட்டுமல்லாது, சமாதான பேச்சுவார்த்தைக்கு துணை புரிந்ததுடன், சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு, (ஐ.நா. ஆசீர்வாதத்துடன்) தனது படைகளை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்னரே, ஜோர்ஜிய இராணுவம், விடுதலைப்படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடிவிட்டதால்; அப்காசியா மற்றும் ஒசெத்தியாவில் வாழ்ந்து வந்த ஜோர்ஜிய மொழிபேசும் மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் தற்போதும் அகதிகளாக ஜோர்ஜியாவின் பிற பகுதிகளில் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.

பல வருடங்களாக கிடப்பில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதம் இன்றைய அதிபர் மிகையில் சாகாஷ்விலி பதவிக்கு வந்த பின்னர் மீள உயிர்த்தது. ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சாகாஷ்விலி, ஒரு தீவிர அமெரிக்க பக்தர். அமெரிக்காவில் கொலம்பிய பலகலைக்கழகத்தில் சட்டம் படித்தால் மட்டுமே அமெரிக்க விசுவாசியானாரா? அல்லது வேறு காரணம் உண்டா தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு, அமெரிக்காவின் ஆலோசனையும், நிதியும் ஜோர்ஜிய இராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறு அமெரிக்காவினால்(போதாக்குறைக்கு இஸ்ரேலினால்) பயிற்சி அளிக்கப்பட்ட தனது இராணுவம், ரஷ்ய வல்லரசையும் எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்தது, என்று சாகஷ்விலி நம்பியதன் விளைவு தான், ஒசேத்தியா மீதான "முட்டாள்தனமான" இராணுவ சாகசம். ஒசெத்திய போருக்கு, ரஷ்யாவின் மீது பழி போடும் அமெரிக்க அரசு, தான் ஜோர்ஜியாவிற்கு மறைமுக தூண்டுதல் அளித்ததை மறைத்து வருகின்றது. ஜோர்ஜிய படைகள் சண்டையிடாது பின்வாங்கி விட்டதால், தற்போது மேற்கத்தைய ஊடகங்களை வைத்து ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவிற்கு இராணுவ பதிலடி கொடுப்பதற்கு, ரஷ்யாவுக்கு பல காரணங்கள் உள்ளன:
1. அப்காசியா மற்றும் ஒசேத்தியா தனி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும், அவற்றை அங்கீகரிக்கவில்லை. காரணம், ரஷ்யாவினுள் இருக்கும் பிற மொழிச்சிறுபான்மையினர் இதனை முன்னுதாரணமாக்கி தனி நாடு கேட்கக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு.
2. ஜோர்ஜிய படைகளுக்கு அஞ்சி ரஷ்யாவுக்குள் ஓடும் ஒசெத்திய அகதிகள் எதிர்காலத்தில் தலையிடியை கொடுக்கலாம்.
3. சர்வதேச மட்டத்தில் செர்பியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கொசோவோவுக்கு சுதந்திரம் வழங்கிய தன்னிச்சையான செயல் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. கொசோவோ சுதந்திர தனிநாடாக முடியுமானால், ஏன் மாற்ற நாடுகளால் முடியாது என்ற தார்மீக கேள்வி எழுவது இயற்கை.
4. தனக்கு அருகில் ஜோர்ஜியா என்ற குட்டி நாடு, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இடம்கொடுப்பதுடன், நேட்டோவிலும் சேர விரும்புவது.
5. இதுவரை ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த கஸ்பியன் கடல் பகுதி எண்ணை, எரிவாயு விநியோகம், வேறு வழியாக குழாய் போட்டு திசை திருப்பப்படுவது.

பொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும், ஏகாதிபத்திய போட்டி தனியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். சோவியத் யூனியன் காலத்தில் விருத்தியடைந்த எண்ணை, எரிவாயு அகழ்வு வேலைகள், மத்திய ஆசியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் இடம்பெற்றன. அதாவது அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெயும், எரிவாயுவும் குழாய்கள் மூலமாக ரஷ்யா சென்று, பின்னர் அங்கிருந்து தான் அனைத்து சோவியத் பகுதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்த பிறகும், இந்த குழாய்கள் மீது ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த அசர்பைஜான் தானே எண்ணையை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்கும் நோக்கில், அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கு(அசர்பைஜான்)-திபிலிசி(ஜோர்ஜியா)- செய்ஹன்(துருக்கி) குழாய் அமைத்து மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஜோர்ஜியாவில் எண்ணை இல்லாத போதும், அந்நாட்டினூடாக குழாய் அமைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ஜோர்ஜிய அரசியலில் தலையிட்டு செல்வாக்கு செலுத்தியது. இதே போன்ற காரணத்திற்காக தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்தது.

மேற்குறிப்பிட்ட உண்மைகள் யாவும், மேற்குலகிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவெனில், அமெரிக்கா போன்றே "உலக போலீஸ்காரன்" வேலை செய்ய கிளம்பி விட்ட ரஷ்யாவின் நடத்தை. ஒரு பக்கம் இது அமெரிக்கா நடந்து கொண்ட முறையின் எதிர்வினை என்பதை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய தேவையுள்ளது. மறுபக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர், உலகில் ஒற்றை வல்லரசாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு போட்டியாக, ரஷ்யா என்ற புதிய(அல்லது மீள உயிர்த்த) வல்லரசின் தோற்றம். இதனால்வருங்கால உலகநடப்புகள் தாம் எதிர்பார்த்த பாதையில் போகப்போவதில்லை என்ற கவலை. எதிர்பாராத அதிர்ச்சி தந்த விளைவாக, மேற்கத்திய ஊடகங்களே பனிப்போர் பற்றி, வல்லரசு போட்டி பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
____________________________________________________________________________________ இது தொடர்பான பிற பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்


Tell a Friend

_____________________________________________

Sunday, August 24, 2008

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.



இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.

Tell a Friend

_________________________________________________

Friday, August 22, 2008

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

THE MOST SECRET PLACE ON EARTH - CIA'S COVERT WAR IN LAOS


Tell a Friend
________________________________________________

Wednesday, August 20, 2008

அமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று

அமெரிக்க "தேவர்களால்", தலிபான் "அரக்கர்கள்", 7 வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, "விடுதலையடைந்த" ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமை என்ன? மேற்கத்தைய கல்வி போதிக்கப்படுவதற்காக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் எரிக்கப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை படம்பிடிக்க சென்ற ஊடகவியலாளர் சிலர், எரித்த தலிபான்களையும், அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.(அந்த வீடியோவை நீங்கள் இங்கே பார்வையிடலாம்.)
சாம்பலில் இருந்து உயிர்த்த தாலிபான்கள், பல்கிப்பெருகி, தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆப்கனிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, அங்கே ஆக்கிரமித்துள்ள "நேட்டோ" படை அதிகாரிகளே ஒத்துக்கொள்கின்றனர். அவ்வப்போது பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம், தலிபானை அடக்கி ஒடுக்கி வருவதாக, அமெரிக்க இராணுவ பேச்சாளர்கள், CNN ஐ கூட்டி வந்து காட்டினாலும், தொலைக்காட்சி கமெராக்கள் அகன்ற பின்னர், அங்கே நடப்பன பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், இரவு வேளைகளில் தலிபான் போராளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டு செல்கின்றனர். மீறுவோரின் கதி என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.
அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள் பெருமளவு நேரம் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தலிபானுடன் சண்டையிடும் வேலையை, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கன் பாதுகாப்புபடையினர் செய்கின்றனர். எப்படியோ மரணிப்பது ஆப்கானியர்கள் அல்லவா? தலிபான் போராளி ஒவ்வொருவருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது சாதாரண அரசபடை வீரர்களினுடையதை விட 5 மடங்கு அதிகம். தலிபான் முன்னிலும் விட பலமாக காணப்படுவதாகவும், போரிடும் திறணை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், மேற்குலக ஊடகங்களே கூறுகின்றன.
அமெரிக்கர்கள் விடுதலை செய்த ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமை எப்படி மிதிக்கப் படுகின்றது என்பதை கீழேயுள்ள ஆவணப்படம் உணர்த்தும்.

(இதை வெளியிட்ட "Nederland 1" தொலைக்காட்சிக்கு நன்றி)
Tell a Friend
____________________________________________________

Sunday, August 17, 2008

அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?

ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு "பனிப்போர்" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

போலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற "முரட்டு நாடுகளில்" இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, "காலினின் கிராத்" என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜோர்ஜிய போரானது, "பழைய ஐரோப்பா", "புதிய ஐரோப்பா" என்று இரு கருத்து வேறுபாடுகள் கொண்ட முகாம்களை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் மோத விரும்பாமல், நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. அதற்கு மாறாக போலந்து போன்ற புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று கூறி வருகின்றன. 20 ம் நூற்றாண்டில், சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ், சோஷலிச முகாமாக இருந்த காலகட்டத்தை, அவை தற்போது நினைவு கூறுகின்றன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள், தீவிர அமெரிக்க(அல்லது மேற்குலக) ஆதரவாளர்கள்.
அரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே அமெரிக்க பக்தர்களாக காட்சிதருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்குலக சார்பு குணாம்சம், 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வரும் அரசியல் தொடர்ச்சி தான். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற கையோடு, லெனின் போலந்திற்கும் செம்படையை அனுப்பி வைத்தார், அங்கேயும் புரட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும் என்ற நினைப்பில். ஆனால் போலந்து தேசிய படைகளின் மூர்க்கமான எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க மாட்டாமல், செம்படை திரும்பி வந்தது. அப்போது ஸ்டாலின் கூறியதானது, "போலந்தை விட்டுவிடுங்கள், அவர்கள் கத்தோலிக்கர்கள், தேசியவாதிகள், நம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள்." போலந்து குறித்த லெனினின் கணிப்பீடு பிழைத்த போது, ஸ்டாலினின் கூற்று நிதர்சனமானது.

போலந்து போலவே இன்று ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் சேர்ந்துள்ள, முன்னாள் சோவியத் பால்ட்டிக் குடியரசுகளான, எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும், தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர்கள் தான். எந்த அளவுக்கு என்றால், 2 ம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட முன்னாள் இராணுவவீரர்களுக்கு இன்றுவரை அரச மரியாதை செலுத்தப்படுகின்றது.

இந்த புதிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா ரஷ்யாவுடன் இராணுவ மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதனாலேயே ஜோர்ஜியாவில் ரஷ்யா படையெடுத்த காரணத்தை காட்டி, நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க (அணுவாயுத)ஏவுகணைகள் நிறுத்துதல் போன்றவற்றை நியாயப்படுத்த பார்க்கின்றன. மேற்கு ஐரோப்பாவோ அதே காரணத்தை காட்டி, இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம், என்று கூறுகின்றன.

இதற்கிடையே ஜோர்ஜிய போரின் போது, "கோரி" நகரில் இருந்த ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்கிய போது, சில அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே 172 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சியளித்து வந்தனர். ஜோர்ஜியாவில் ரஷ்ய படையெடுப்பை காட்டி, ரஷ்யாவுடன் புதிய பனிப்போரை ஆரம்பிப்பது, அமெரிக்க கடும்போக்காளரின் அரசியல் திட்டமாக உள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், புஷ்ஷின் குடியரசு கட்சி வேட்பாளர் மக் கெயினை வெற்றி பெற செய்வதற்கு, ரஷ்யாவுடனான முறுகல் நிலை பயன்படலாம்.


இது தொடர்பான கடந்தகால பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

____________________________________________________

Saturday, August 16, 2008

அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

அமெரிக்க FOX தொலைக்காட்சி, தென் ஒசேத்திய யுத்தத்தில் இருந்து தப்பிய அமெரிக்க சிறுமியின் நேரடி ஒளிபரப்பில், இடையூறு செய்து நிறுத்தியது. காரணம், ஜோர்ஜிய ஜனாதிபதியை ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சுமத்தியதும், ரஷ்ய ராணுவத்திற்கு நன்றி சொன்னதும் தான்.


தெற்கு ஒசெத்தியாவை பூர்வீகமாக கொண்ட அந்த அமெரிக்க சிறுமியும், அவளது மாமியும், போர் தொடங்கி, ஜோர்ஜிய படைகள் குண்டு வீசிக் கொண்டிருந்த வேளை, ஒசெத்தியாவில் உறவினர்களுடன் ஒரு மாத விடுமுறையில் தங்கி இருந்திருக்கின்றனர். குண்டு வீச்சுகளில் இருந்து ஒருவழியாக தப்பி, அமெரிக்கா வந்து சேர்ந்த அவர்களிடம் இருந்து, ஒசேத்திய நிலைமை குறித்து, நேரடி தகவல்களை பெரும் பொருட்டு, அமெரிக்காவின் பிரபலமான "FOX தொலைக்காட்சி" பேட்டி எடுத்தது. நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், ஜோர்ஜிய குண்டுவீச்சில் தமது வீடுகள் சேதமடைந்ததாகவும், ஒரே நாளில் 2000 ஒசேத்திய மக்கள் இறந்ததாகவும், தாம் ஜோர்ஜிய படைகளுக்கு பயந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். மேலும் தாம் ஜோர்ஜிய மக்களையல்ல, ஜோர்ஜிய அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகவும், ஜனாதிபதி சாகஷ்விலி ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும் கூறிக் கொண்டிருந்த போது; இடையூறு செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர், "வர்த்தக இடைவேளை" என்றும், "நேரமில்லை" என்றும் கூறி அவர்களை தொடர்ந்து பேசவிடாது தடுத்து, நிகழ்ச்சியை இடைநிறுத்தினார். இவற்றை நீங்கள், இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் நேரடியாக பார்க்கலாம்.
12 year old ossetian girl tells the truth about Georgia.

நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் யாவும், தமது செய்திகளை ஆங்கிலோ-அமெரிக்க நிறுவனங்களான CNN, BBC, REUTERS, AP போன்றவற்றிலிருந்தே பெறுகின்றன. இந்த மேற்குலக ஊடகங்கள், அரச கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதாகவும் பலர் இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பாலும் அரசாங்கத்திற்கு சொந்தமற்ற, தனியார் நிறுவனங்கள் தான். சில நேரம் தாம் சார்ந்த அரசாங்கங்களை விமர்சிக்கும் செய்திகளும் வருவது உண்மை தான். இருப்பினும் "தேசிய நலன்" கருதி முக்கியமான தருணங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கின்றன. இவ்வாறு தான், அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படையெடுத்த போது, அமெரிக்காவின் பெரிய வெகுஜன ஊடகங்கள் யாவும் அரசாங்கத்தின் பின்னால் நின்றன.

அதே போன்றே தற்போதும், ஜோர்ஜிய பிரச்சினையில், ரஷ்யாவை கொடூரமான ஆக்கிரமிப்பாளராக காட்டி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன. ஆமாம், அவை வழங்குவது செய்தியல்ல, பக்கச்சார்பான பிரச்சாரம். போர் நடந்த ஜோர்ஜியாவிற்கு இந்த ஊடகங்கள் அனுப்பிய செய்தியாளர்கள் எல்லோரும் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் ஜோர்ஜிய மக்கள் பாதிக்கப்பட்டதை காட்டுவதிலேயே கண்ணும்கருத்துமாக இருந்தனர். அப்போது கூட எவராவது ஒரு ஜோர்ஜிய குடிமகன், "ஜனாதிபதி சாகஷ்விலியின் முட்டாள்தனமே எமது அவலத்திற்கு காரணம்", என்று கூறி விட்டால், விழித்துக்கொள்ளும் செய்தியாளர் உடனேயே வேறு ஆட்களை தேடிப்போய் விடுவார். அப்படித்தான் மேற்குலக ஊடகங்கள் யாவும், "ஜோர்ஜிய மக்கள் அனைவரும் தமது அரசாங்கத்தின் பின்னால் நிற்பதாகவும், ரஷ்யாவை வெறுப்பதாகவும்", ஒருபக்க சார்பான தகவல்களை எம்மீது திணிக்கின்றன.

மக்களை மூளைச்சலவை செய்வதில் செய்தி ஊடகங்களின் பங்கு பெரிது. அவர்கள் யாரை நல்லவன் என்கிறார்களோ, யாரை கெட்டவன் என்கிறார்களோ, சொல்வதை நாமும் நம்ப வேண்டும். அது கூட நிரந்தரமன்று, சந்தர்ப்பத்திற்கேற்ப மாறும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஜப்பானை எதிரி என்றார்கள், ரஷ்யாவை நண்பன் என்றார்கள். மக்கள் நம்பினர். யுத்தம் முடிந்த பின்னர், ரஷ்யாவை எதிரி என்றும், ஜப்பானை நண்பன் என்றும் கூறினார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல், மக்கள் அதையும் நம்பினர்.

இது சம்பந்தமான கடந்தகால பதிவுகளையும் வாசிக்க :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
___________________________________________________



Tell a Friend

Thursday, August 14, 2008

விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"

"ரஷ்யர்கள் வந்துவிட்டார்கள்!", என்ற வதந்தி கிளப்பிய பீதியினால், பல்லாயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற காலம் ஒன்றுண்டு. 2 ம் உலக யுத்த முடிவில், ஐரோப்பாவை சித்தாந்தரீதியாக பிளவுபடுத்த, "ஜனநாயக தலைவர்களால்" உருவாக்கப்பட்ட வதந்தி அது. ரஷ்யா(அன்று சோவியத் யூனியன்) நேச நாடுகளுக்கிடையில் போடப்பட்ட "யால்ட்டா ஒப்பந்தத்தை" நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்த நேரம் தான்; மேற்குலக வல்லரசுகளின் சதியினால், "பெர்லின் பிரச்சினை" என்ற ஒன்று புதிதாக கிளப்பப்பட்டு, அது பின்னர் "பனிப்போர்" ஆனது வரலாறு. அன்று கூட ஆரம்பத்தில் யாரும் இந்த வல்லரசுப் போட்டியை கவனமெடுக்கவில்லை. "பனிப்போர்" என்ற சொற்பதம் புழக்கத்திற்கு வர நீண்ட காலம் எடுத்தது.

நீடித்த பனிப்போர் ஆயுத போட்டியை அதிகரித்து நாடு திவாலாகியதால், எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஜனாதிபதியான கோர்பசேவ், அமெரிக்காவுடன் சமாதானமாகப் போனால் நாடு முன்னேறும் என்று அப்பாவித்தனமாக நம்பி, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தார். இரு நாடுகளுக்கிடையிலும் போடப்பட்ட ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து சோவியத் படைகளை மீளப்பெற்றதுடன், வர்ஷோ (இராணுவ) ஒப்பந்த கூட்டமைப்பை கலைத்து, பேரழிவு தரும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சிதறி, சோஷலிச நாடுகள் யாவும் முதலாளித்துவ நாடுகளாகவும் மாறி விட்டன. அன்று பலர், உலக அழிவு காப்பாற்றப்பட்டு விட்டது என்றும், இராணுவமயமாக்கல், ஆயுதக்குவிப்பு போன்றன இனி இருக்காது என்றும், பல்வேறு கனவுகளில் மிதந்தனர்.

சமாதான விரும்பிகளின் பகற்கனவு பலகாலம் நீடிக்கவில்லை. வர்ஷோ ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு கலைக்கப்பட்டாலும், வட அட்லாண்டிக் ஒப்பந்த இராணுவ கூட்டமைப்பு (நேட்டோ) அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளையும் புதிய அங்கத்துவர்களாக சேர்த்துக் கொண்டு விரிவடைந்தது. புதிய அங்கத்தவர்களுக்கு ஆயுதங்கள் விற்பதன் மூலம், அமெரிக்கா தனது ஆயுதக்குவிப்பை தொடர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு தான் மட்டுமே என்ற மமதையில், ஐக்கிய நாடுகள் சபையையும் மதிக்காமல், உலக போலீஸ்காரனாக மாறியது.

மறுபக்கத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, மேற்குலக சார்பு ஜனாதிபதி யெல்ட்சின் தலைமையில் சீர்குலைந்து போய்க்கொண்டிருந்தது. நாட்டு பொருளாதாரம் வங்குறோத்தாகி, பணக்கார நாடுகளின் பிச்சையை எதிர்பார்த்து நின்றது. தேசிய நாணயமான ரூபிளின் மதிப்பிறங்கி, சாதாரண மக்கள் கூட அமெரிக்க டொலர்களை பயன்படுத்த விரும்பினர். ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மட்டுமல்ல, இராணுவ வீரர்களும் மாதக்கணக்காக சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டனர். இதே நேரம் புதிதாக கோடீஸ்வரர்களான சிலர், அநியாயமாக சேர்த்த செல்வத்தை கொண்டு போய், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முதலீடு செய்து கொண்டிருந்தனர்.


ரஷ்யா 21 ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த போது நிலைமைகள் மாற ஆரம்பித்தன. முன்னாள் கே.ஜி.பி. உளவுத்துறை அதிகாரியான விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அவரும் "யெல்ட்சின் வழி"யில் செல்ல வேண்டும் என்று மேற்குலக நாடுகள் விரும்பின. ஆட்சிக்கு வந்தவுடன் புட்டின் செய்த முதல் வேலை, ரஷ்யாவின் செல்வத்தை சூறையாடி, வெளிநாடுகளுக்கு கப்பலேற்றிக் கொண்டிருந்த கோடிஸ்வரர்களை தனது எதிரிகளாக்கியது தான். வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளை காரணமாக காட்டி, சில கோடிஸ்வரர்களை சிறையிலிட, மற்றவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள்.

அந்த இடத்தில், வர்த்தக நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தை ரஷ்யாவிலேயே முதலீடு செய்யும், தேசிய முதலாளிகள் வந்தார்கள். தொழிலாளர்களின் சம்பளப்பணம், ஓய்வூதியம் என்பன கிரமமாக வழங்கப்பட்டன. பொருளாதார சீர்குலைவு தடுக்கப்பட்டு, தேசிய பொருளாதாரம் வளர்ந்துகொண்டே போனது. இவையெல்லாம் நல்லது தானே, என்று பலர் நினைக்கலாம். ஆனால் நமக்கு நல்லதாகப் படுவது, மேற்குலகிற்கு கெட்டதாகப் படுகின்றது. புட்டின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் பற்றி, மேற்குலக ஊடகங்கள் விலாவாரியாக எடுத்தியம்பி, மக்கள் மனதில் ரஷ்ய எதிர்ப்பு(அல்லது புட்டின் எதிர்ப்பு) உணர்வுகளை தூண்டி விட்டன.

2000 ம் ஆண்டு, சி.என்.என். தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்று, எளிதில் நம்ப முடியாத கதையை கொண்டு வந்தது. அதாவது, பனிப்போர் காலத்தில் இருந்தது போலவே, இன்றும் அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி இருக்கின்றன. ரேடர்கள் ரஷ்ய இராணுவ நகர்வுகளை கண்காணிக்கின்றன என்ற தகவலானது, அமெரிக்கா இன்றும் ரஷ்யாவை முக்கிய எதிரியாக பார்க்கின்றது, என்பதை அமெரிக்க உயர் அதிகாரிகளின் வாக்குமூலம் எடுத்து காட்டியது. ரஷ்யா இன்றும் அணுவாயுத வல்லரசு என்பது மட்டுமல்ல, உலகில் பெருமளவு பெட்ரோலிய, எரிவாயு வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் பொருளாதரீதியாக வளர்ச்சியடைந்த ரஷ்யா, எதிர்காலத்தில் தன்னோடு ஏகாதிபத்திய போட்டியில் இறங்கும் என்பதை அமெரிக்கா எப்போதோ கணித்து வைத்துள்ளது.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பின் விரிவாக்கம் என்பது, ரஷ்யாவை சுற்றி வளைத்து முன்னரங்க காவல்நிலைகளை கட்டும் நோக்கம் கொண்டது என்பதை ரஷ்ய அரசாங்கம் உணராமல் இல்லை. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்கியது கூட, முன்னாள் யூகோஸ்லேவியாவில் ரஷ்ய செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் தான். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் கூட, நேட்டோ அங்கத்துவராவதை ரஷ்யா எப்போதும் எதிர்த்து வந்தது. மேற்குலகமோ ரஷ்ய எதிர்ப்பை கணக்கெடுக்காமல், தம் பாட்டில் போய்க் கொண்டிருந்தன. அதே நேரம், ரஷ்யாவை குஷிப்படுத்தும் நோக்கில், உலக வர்ததக நிறுவனம், பணக்கார நாடுகளின் G7 அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக்கின.

அண்மைக்காலமாக முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்ட "புரட்சிகள்", ரஷ்யாவின் கடுமையான கண்டனத்தை சம்பாதித்தன. ஏனெனில் உண்மையில், அமெரிக்க கோடீஸ்வரனின் "சோரோஸ் பவுன்டேஷன்" போன்ற NGO க்களின் உதவியினால், பெருமளவு பணத்தை கொட்டி தயார்படுத்தப்பட்ட சதிப்புரட்சிகள் தான், மேற்குறிப்பிட்ட "மக்கள் புரட்சிகள்" யாவும். இவற்றின் முக்கிய நோக்கம், ரஷ்ய சார்பு அரசியல் தலைவர்களை ஓரங்கட்டுவதும், மேற்குலக சார்பு தலைவர்களை பதவியில் அமர்த்துவதும் தான். அப்போதெல்லாம் ரஷ்யா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளும்.

தகுந்த தருணம் பார்த்து காத்திருந்த ரஷ்யாவிற்கு, ஜோர்ஜிய ஜனாதிபதி சகாஷ்விலியின் பின்விளைவுகளை உணராத, விவேகமற்ற இராணுவ சாகசம் வழிசமைத்துக் கொடுத்தது. அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களால் பயிற்சியளிக்கப்பட்ட ஜோர்ஜிய இராணுத்தின் திறமை மீது அதீத நம்பிக்கை வைத்த காரணமாகவோ, அல்லது அமெரிக்க படைகள் வரும் என்று நம்பியோ, சகாஷ்விலி "தெற்கு ஒசெத்திய" மீதான இராணுவ நடவடிக்கையை தொடங்கியிருக்கலாம். ஆனால் ரஷ்ய இராணுவத்தின் மின்னல் வேக பதிலடியை கடைசி வரை எதிர்பார்க்கவில்லை. ஜோர்ஜிய அரசு மட்டுமல்ல, மேற்குலக அரசுகளும் அதிர்ச்சியில் உறைந்து போயின. ஜோர்ஜிய படைகள் புறமுதுகு காட்டி ஓடவும், ரஷ்ய படைகள் ஜோர்ஜிய பகுதிகளை ஆக்கிரமிக்கவும்; ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஜோர்ஜியாவிற்கு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டாலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா.தடை சாத்தியமில்லை. அமெரிக்கா செய்யக் கூடியது, உலகப் பொருளாதார நிறுவனம், G 7 ஆகியவற்றில் ரஷ்யாவின் உறுப்புரிமையை பறிப்பது தான். ஆனால் இவை அதிக பலன் தரப்போவதில்லை. ரஷ்யா ஏற்கனவே சீனா, ஈரான், போன்ற பொருளாதாரக் கூட்டாளிகளை சேர்த்துள்ளது. பனிப்போர் காலத்தை போலவே, கியூபா போன்ற நாடுகளின் நட்புறவை புதுப்பித்துள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகின்றன. ஏனெனில் தற்போது ஐரோப்பிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது. மேற்கு ஐரோப்பா தனது எரிவாயு தேவைக்கு ரஷ்யாவில் பெரிதும் தங்கியுள்ளது. அண்மையில் கூட உக்ரைனிடம் இரண்டு மடங்கு விலை கேட்டு, ரஷ்யா எரிவாயு குழாய்களை மூடி விட்டது. இதனால் இத்தாலி, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படைந்தன.

தெற்கு ஒசெத்தியாவில் ஜோர்ஜியா கைவைக்கப் போய் வந்த போரின் விளைவாக, அந்நாட்டில் திட்டமிடப்பட்ட அசர்பைஜானிலிருந்து துருக்கி வரையான எண்ணை குழாய் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளதாக, அதனை நிர்மாணித்துக் கொண்டிருந்த BP தெரிவித்துள்ளது. இது போன்றே பல வெளிநாட்டு முதலீடுகளை இழக்க வேண்டி வரலாம். இது ஜோர்ஜிய அபிவிருத்தியை பின்னோக்கி தள்ளும். மேலும் (கடுமையான ரஷ்ய எதிர்ப்பு காரணமாக) நேட்டோ உறுப்புரிமை நிறைவேறாத கனவாகவே போகலாம். இதை விட தற்போதைய ஜனாதிபதி சாகஷ்விலியே, எல்லாவற்றிக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்று கணிசமான ஜோர்ஜிய மக்கள் நம்புவதால், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. தெற்கு ஒசெத்தியாவை காரணமாக வைத்து தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ பதிலடி, ஜோர்ஜியாவில் தனக்கு சார்பான மாற்று அரசாங்கம் அமைப்பதையே இறுதி லட்சியமாக கொண்டுள்ளது.



ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
______________________________________________________

Saturday, August 09, 2008

ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

ஒசேத்தியா, லக்சம்பேர்க் அளவே ஆன, ஜோர்ஜியாவில் ஒரு சிறுபான்மைமொழி பேசும் மக்களின் மாநிலம். சோவியத் யூனியன் உடைந்த போது உருவான ஜோர்ஜிய குடியரசில் இருக்க விரும்பாமல், 1991- 1992 யுத்தம் மூலம் பிரிந்து தனியாட்சி நடத்துகின்றது. அன்று முதல் இன்று வரை அண்டை நாடும், வல்லரசுமான ரஷ்யா பாதுகாப்பு வழங்கியதால், 15 வருடங்களுக்கு மேலாக, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத "தெற்கு-ஒசேத்தியா" என்ற தனி நாட்டை, ஜோர்ஜியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் கொசோவோ சுதந்திர நாடாக முடியுமானால், தெற்கு-ஒசெத்தியாவால் ஏன் முடியாது, என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்து விட்டு, தற்போது நடக்கும் "ஜோர்ஜிய-ரஷ்ய யுத்தத்தின்" பின்னணியையும், விளைவுகளையும் பார்ப்போம்.

2003 ம் ஆண்டு, மேற்குலக ஊடகங்களால் பெருதும் சிலாகிக்கப்பட்ட, "மாபெரும் ஒரேஞ்சுப் புரட்சி", அந்நாட்டில் ஊழல்மய ஆட்சிக்கொரு முடிவு கட்டும் என்று ஜோஸ்யம் கூறப்பட்டது. அன்றைய புரட்சியின் கதாநாயகன், அமெரிக்க கல்வி கற்ற, நெதர்லாந்து மனைவியை கொண்ட, "சாகாஷ்வில்லி" நாட்டில் தேனும் பாலும் ஓட வைப்பார், என்று மக்களும் கனவுகண்டனர். அந்தோ பரிதாபம், புதிய ஜனாதிபதி சகாஷ்வில்லியின் நண்பர்கள் வட்டத்தை தவிர, வேறு யாரும் ஒரேஞ்சுப் புரட்சியினால் பயனடையவில்லை. விளைவு? மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடினர். இம்முறை புரட்சியின் நாயகனுக்கு எதிரான மக்கள் புரட்சி, கடுமையான போலிஸ் அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது. மேற்குலக நாடுகள் இந்த இரண்டாவது புரட்சியை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் மனதிற்கினிய நண்பன், சகாஷ்வில்லி ஆட்சியதிகாரத்தில் இருப்பது தான். "நம்ம ஆள்" சகாஷ்வில்லியும் ஏமாற்றவில்லை. 2000 ஜோர்ஜிய படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பிவைத்தார். அமெரிக்க தேசம்கடந்த நிறுவனங்களுக்கு நாட்டை திறந்து விட்டார். இதெல்லாம் போதாதென்று, பக்கத்திலிருந்த ரஷ்ய வல்லரசை பகைத்துக் கொண்டு, "நேட்டோ" இராணுவ கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டார்.

மேற்குலக எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாக காட்டிக்கொண்ட ஜோர்ஜியா, தனது இழந்த நிலப்பகுதிகளான, ஒசெத்திய மற்றும் அப்காசியா, ஆகிய "தனி நாடுகள்" மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தருணம் பார்த்து இருந்தது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவும், ஜோர்ஜிய இராணுவம் ஒசேத்திய தலைநகர் "ஷின்வலி" மீது படையெடுக்கவும் சரியாக இருந்தது. ரஷ்யா கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ஒசெத்தியாவில் "சமாதானப்படை"(இந்தப்படையில் ஜோர்ஜியரும் உள்ளனர்) என்ற பெயரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பத்து வீரர்கள் மரணித்ததை காரணமாக காட்டி, ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. ஷின்வலி மீதான ஜோர்ஜிய இராணுவ ஷெல் வீச்சில் மற்றும் சண்டையில் அகப்பட்டு 14000 ஒசேத்திய பொதுமக்கள் மரணமடைந்தனர். குறிப்பிட்ட அளவு ஒசெத்தியர்களுக்கு ஏற்கனவே ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. தனது குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், என்று ரஷ்யா கூறுவதற்கு இதுவும் காரணமானது.

தற்போது போரின் முடிவு தெரியாவிட்டாலும், அதன் விளைவுகள் தெரிகின்றன. ஜோர்ஜிய தனது மேற்குலக நண்பர்கள் உதவிக்கு வருவார்கள், என்ற அதீத நம்பிக்கையுடன், ரஷ்ய வல்லரசுடன் மோதலுக்கு தயாராகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை காவு கொள்ளும் போர், அவர்களின் அரசியல் சூதாட்டப் பொருளாகி உள்ளது. தன்னை மீள் கட்டமைத்துக் கொண்ட ரஷ்ய வல்லரசுக்கும், நிலைத்து நிற்கும் அமெரிக்க வல்லரசிற்கும் இடையில் திரைமறைவில் இருந்த புதிய பனிப்போர், தற்போது நிஜபோராக மாற ஜோர்ஜியா வழிசமைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் எதிர்பார்ப்பது போல, "ரஷ்ய ஆக்கிரமிப்பு" ஆபத்தில் உள்ள ஜோர்ஜிய நண்பனுக்கு உதவ, அமெரிக்க படைகள் வரப்போவதில்லை. இப்போதும் அமெரிக்காவும், மேற்கு-ஐரோப்பாவும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு போகுமாறு தான் கூறுகின்றனர்.

21 ம் நூற்றாண்டின் பனிப்போர் பிரச்சாரங்கள் அன்றுபோலவே இன்றும் ஒரேமாதிரியாக உள்ளன. மேற்குலக சார்பு ஊடகங்கள், "ஜோர்ஜியா மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு" பற்றி அலறுகின்றன. அதற்கு மாறாக ரஷ்ய ஊடகங்கள், "ஒசேத்தியா மீது ஜோர்ஜிய ஆக்கிரமிப்பு" என்று பதறுகின்றன. பிரச்சினைக்குரிய ஒசேத்தியா தவிர்ந்த பிற ஜோர்ஜிய நகரங்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு போடுவதாக, ஜோர்ஜிய அரசு கூறுகின்றது. அதை ரஷ்யா மறுக்கிறது. இருப்பினும் கொசோவோ பிரச்சினையின் போது, நேட்டோ விமானங்கள் செர்பியா மீது குண்டு போட்ட கடந்தகால நினைவுகளை, ரஷ்யா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க பயன்படுத்தலாம். ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஜோர்ஜிய அரசு, அந்நாட்டு மக்களால் வெறுக்கப்படுவதாக காட்டும் விவரணப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதே நேரம் எதற்காக மேற்குலக ஊடகவியலாளர் யாரும் ஒசெத்தியாவினுள் இல்லை? தனியான ஒசேத்திய இராணுவம் பற்றி கூறுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றன. மேலும் ரஷ்யாவில், ஒசேத்திய எல்லையோர பிரதேசத்தில் வாழும் வடக்கு ஒசெத்தியர்கள், மற்றும் பிற மொழி பேசும், ஆனால் "கொசாக்குகள்" என்ற பொது இனத்தை சேர்ந்த, தொண்டர் படைகள் ஜோர்ஜிய இராணுவத்தை எதிர்த்து சண்டையிட ஒசேத்தியா செல்வதாக, ரஷ்ய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கேயோ இருக்கும் மேற்குலக ஆதரவை மட்டும் நம்பி போர் அன்ற சூதாட்டத்தில் இறங்கியிருக்கும் ஜோர்ஜியா, ரஷ்ய வல்லரசை எதிர்த்து வெல்லப் போவதில்லை. ஆனால் அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இடையிலான பனிப் போரை, ஆரம்பித்து வைத்த பெருமையை மட்டும், சரித்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பான பிற பதிவுகள் :
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

__________________________________________

Friday, August 08, 2008

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்


லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உணவையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.

சைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

ஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கிய போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.

செல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அபாயம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.

வழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.

சைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.

இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இளைஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

முன்னைய பதிவு :


ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்
_____________________________________________

Wednesday, August 06, 2008

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை


குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு தெற்காசிய தொழிலாளரின் மலின உழைப்பை பயன்படுத்தி வருகின்றன. நவீன அடிமைகளாக நடத்தப்படும் இந்த தொழிலாளர்கள், ஒன்று சேர்ந்து கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்குடன், பல்வேறு தேசங்களை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இருப்பினும் அடிமைவாழ்வு எல்லோருக்கும் பொதுவானது. இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், தொழிலாளரின் சம்பளங்களை குறைத்து கொடுத்து, அத்தியாவசிய தேவைகளை செலவினங்கள் என்று சொல்லி குறைத்து, அதிக லாபம் கோடி கோடியாக சம்பாதிக்கின்றன. இதைப்பார்த்து சில அமெரிக்க நிறுவனங்களே பொறாமை கொண்டதால், தொழிலாளரின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகின்றது.

உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம்(அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.

அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. சில நேரம் அனலாக கொளுத்தும் கோடையில், குளிரூட்டிகள் இல்லாமல் படுக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வேலை மட்டும் ஒழுங்காக வாங்கப்படும். 40 அல்லது 50 பாகை என்று வெப்பம் கூடினாலும், உயர்ந்த கட்டடங்களில், அந்தரத்தில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் கடந்த வருடம் முதல்தடவையாக, வெப்பம் 50 பாகைக்கு போகுமானால், 12:30 மணிக்கும் 14:00 மணிக்கும் இடையில் வெளி வேலை செய்ய தடைச்சட்டம் போடப்பட்டது.

கடந்த ஜூலை மாத இறுதியில், குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.

குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளின் சட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தொழில் ஒப்பந்தத்தை மீறும், அவை மோசமான வெளிப்படையான மீறல்களாக இருந்த போதிலும், நிறுவனங்களின் முதலாளிகள் எவரும்(இவர்கள் எப்போதும் அந்நாட்டு பிரசைகள்) இதுவரை தண்டிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. மாறாக உரிமை கோரும் தொழிலாளர்கள் மாத்திரம் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலமைச்சின் பரிசோதகர்கள் கூட தமது கடமையை திறம்பட செய்வதில்லை. சுமார் இரண்டு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளரை கொண்ட ஐக்கிய அரபு ராச்சியத்தில் 80 பரிசோதகர்கள் மாத்திரமே உள்ளனர் என்பது, அரசின் அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகின்றது.

குவைத்தில் தம்நாட்டு தொழிலாளரின் அவலநிலை குறித்து கருத்து வெளியிட்ட சில பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள், தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்று விவரித்தனர். தாயகத்தில் மாதம் 188 டாலர்கள் சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் போடும் நிறுவனங்கள், குவைத் வந்ததும் 75 டாலர் மட்டுமே கொடுக்கின்றன. தொழிலாளருக்கு புரியாத அரபு மொழியில் ஒப்பந்தம் போட்டு, கையெழுத்திட வைத்து ஏமாற்றுகின்றனர். சில அரச நிறுவனப் பணிகளை குத்தகைக்கு எடுக்கும் வேலை முகவர் நிலையங்கள், ஒரு தொழிலாளிக்கு 500 டாலர் படி பெற்றுக்கொண்டாலும், 75 டாலர் மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக கொடுக்கின்றன. ஒருவேளை தொழிலாளி சுகவீனமுற்றால், அந்த நாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை.
சர்வாதிகார வளைகுடா நாடுகளில், கட்டாரில் மட்டுமே சில வருடங்களுக்கு முன்பு, தொழிற்சங்கம் அமைக்க சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. துபாயில் குறிப்பிட்ட அளவில் தொழிலாளரின் நிறுவனமயமாக்கல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைவன தொழிலாளர் குடியிருப்புகளில், தற்போது கூட்டம் கூடி, தமது உரிமைகளுக்காக போராடுவது பற்றி விவாதிக்கப்படுகின்றது. துபாய்க்கு வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்து, சர்வதேச ஊடக கவனத்தை பெறும் வகையில் ஆடம்பர வியாபார அங்காடிகள், கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் அமைதியான மறியல் போராட்டங்களை நடத்த திட்டமிடப்படுகின்றது. இவர்கள் ஏற்கனவே ஒருமுறை, துபாயின் உலகப் பிரசித்தி பெற்ற "பேஜ் அல் அரப்" என்ற ஆடம்பர ஹொட்டேலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அது உள்ளூர் பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்தது.


மக்களின் எந்த உரிமையும் போராடாமல் கிடைக்கவில்லை, என்ற யதார்த்தத்தை குவைத், துபாயில் நடந்த சம்வங்கள் உணர்த்துகின்றன.

___________________________________________________

Saturday, August 02, 2008

ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனியான சைப்ரசில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினால், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராக, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதற்கு உல்லாசப்பிரயானதுறை, கட்டட நிர்மாணத்துறை, மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை அதீத வளர்ச்சி அடைந்தமை முக்கிய காரணங்கள். குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வரும் உல்லாசபிரயாணிகள், தமது நாட்டின் குளிரான காலநிலையில் இருந்து தப்பி, வெயில் காய வருவதற்கு ஏற்ற நாடாக சைப்ரசை கண்டுபிடித்தனர். வெப்ப மண்டல நாடொன்று ஐரோப்பிய கண்டத்திற்கு அருகில் இருப்பதும், ஆங்கிலம் பேசுவதும் அவர்களை கவர்ந்தன. அதே நேரம் ஓய்வூதியம் பெறும் ஆங்கிலேய வயோதிபர்கள் அமைதியான நாட்டுப்புறங்களில் வீடுகளை வாங்கி குடியேறியதும், "ரியல் எஸ்டேட்" துறை புதிய சந்தையை கண்டு கொண்டது. தற்போதும் கடற்கரையோர நகரங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. நமது நாடுகளில் இருப்பது போலவே, சைப்ரஸ் பெண்களும் குடும்பத்தை பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளையுமே காலங்காலமாக செய்து வந்தவர்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் உழைப்பும் தேவையாக இருந்ததால், பெண்கள் வேலைக்கு போவதும், உயர்கல்வி கற்று பதவிகளை பெறுவதும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. வருமான உயர்வு, வசதிகளை பெருக்கினாலும், வீட்டை பராமரிக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் பெண்களால் நேரம் ஒடுக்குவது கஷ்டமான போது, அரசாங்கம் அதற்கொரு தீர்வை காட்டியது. வீட்டுப் பணிப்பெண்களை, குறைந்த கூலிக்கு, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவித்துக் கொடுத்தது.

பிற்காலத்தில் பணிப்பெண்களின் இறக்குமதி, பிறிதொரு பிரச்சினையை தீர்க்கவும் உதவியது. வாழ்க்கைத்தரம் உயர்வதென்பது, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைகின்றன என்பதும் அர்த்தமாகும். இதனால் மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், வயோதிபர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருகியது. அறுபதுகளில் ஓய்வு பெறும் வயோதிபர்கள், தேசிய பொருளாதார உற்பத்தியில் ஈடுபடாமல், ஓய்வூதியம் என்ற செலவினத்தையே வைக்கின்றனர். இதனால் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, ஏற்கனவே கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரம்பரிய முறையான பிள்ளைகள் பராமரிக்கும் நிலை மாறி, அரசாங்கமே வயோதிபரை பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளதால், அதற்கு ஏற்படும் செலவினங்களை ஈடுகட்டுவதும் பெரும்பாடாக இருந்தது. தாராளவாத முதலாளித்துவ சட்டங்களின் கீழ், அரச பொறுப்பு தனியார்மயமாகியது. அதன் படி வயோதிபர்கள், அவர்களின் வீடுகளில் வைத்து, பணிப் பெண்களால் பராமரிக்கப்படும் நிலை தோன்றியது. இதற்கெனவே இருக்கும் முகவர்கள் இலங்கை, பிலிபைன்ஸ் பணிப் பெண்களை குறைந்த கூலிக்கு தருவிக்கின்றனர். உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு அரசாங்கங்களுடன் ஒரு மாத சம்பளம் எவ்வளவு என்று முன்கூட்டியே பேசி தீர்மாணிக்கப் படுகிறது. இந்தப் பேரம் பேசலில் ஒரு பணிப்பெண்ணின் ஊதியம் அண்ணளவாக மாதம் 300 யூரோ என்று உள்ளது. தற்போது இலங்கை அரசு தொகையை அதிகரிக்குமாறு கேட்டு வருவதால், முகவர்கள் வேறு வறிய நாடுகளில் வலைவீசுகின்றனர். சைபிரசில் சட்டப்படி குறைந்த சம்பளம் 700 யூரோ என்றிருந்த போதும், அந்நாட்டு பிரசைகளுக்கே அது பொருந்தும். அங்கே பாகுபாடான சம்பளம் வழங்குவது சர்வசாதாரணம். ஒரே வேலைக்கு சைப்ரஸ் பிரசைக்கு கொடுப்பதை விட மிக குறைவாக வெளிநாட்டு தொழிலாளருக்கு வழங்கபடுகின்றது.


சைப்ரஸ் வந்த பின்பு இலங்கை பணிப்பெண்களின் அடிமைவாழ்வு ஆரம்பமாகின்றது. பணியில் அமர்த்தும் சைப்ரஸ் குடும்பம் (தொழில் வழங்குனர்) அவர்களது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். வாரம் 40 தொடக்கம் 44 மணித்தியாலம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று இருந்த போதும், பல பெண்கள் குறிப்பாக வயோதிபரை பராமரிக்கும் பெண்கள் 24 மணிநேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இரவில் குறைந்தளவு நேரம் மட்டுமே உறங்கும் வயோதிபர்கள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கவனித்துக் கொள்ளுமாறு பிள்ளைகளால் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் இந்தப் பணிப்பெண்கள் ஒரு நாளைக்கு சராசரி 12-17 மணிநேரம் வேலைசெய்தாலும், ஒப்பந்தப்படி வேலைசெய்த அதிக நேரத்திற்கு ஊதியம் வழங்குவது அரிதாகவே நடக்கும் விஷயம். அதேநேரம் தமது 8 மணி வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில், இந்த இளம்பெண்கள் வெளியில் சென்று வரவோ, அல்லது பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.


ஞாயிற்றுகிழமைகள் அல்லது பிற விடுமுறை தினங்கள் சுதந்திரமாக வெளியில் போக அனுமதி கிடைத்தாலும், மாலைநேரம் வீடு திரும்ப வேண்டும். இதனால் பகல் நேரம் மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கிறது. நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஞாயிற்றுகிழமைகளில் இலங்கையர் கூடும் இடங்களில் முக்கியமானது. இந்த தேவலாயம் அவர்களது ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமல்லாது, பிறரை சந்திக்க வாய்ப்பளிக்கும் சமூக பரிவர்த்தனை மையமாகவும் செயற்படுகின்றது. சைப்ரஸ் மக்கள் கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால், கத்தோலிக்க தேவாலயங்கள் முழுக்கமுழுக்க வெளிநாட்டு தொழிலாளரை நம்பியே இயங்குகின்றன. இருப்பினும் எந்தவொரு மத நிறுவனமும், தன்னை நம்பி வரும் தொழிலாளரின் அடிமைநிலையை போக்க முயற்சி செய்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் மீது பிறிதொரு வடிவில் சமூக கட்டுபாடுகளை திணித்து, அடங்கிப் போக வழி செய்வனவாகவே உள்ளன.


சில சைப்ரஸ் தொழில் வழங்குனர்கள் தந்திரமாக ஒப்பந்தத்தில் இல்லாத வேலை வாங்குவதில் கில்லாடிகள். தமது குடும்ப பண்டிகைகளில் பணிப்பெண்களையும் கலந்து கொள்ள அழைப்பர். இவ்வாறு "குடும்பத்தில் ஒருவர்" என்ற மாயையை தோற்றுவித்து விட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வேறு வேலைகளை செய்ய சொல்வர். அப்பாவி பணிப்பெண்களும் எஜமானர்களின் "தாராள குணத்தை" மெச்சி முணுமுணுக்காமல் வேலை செய்து முடிப்பர். இத்தகைய "புத்திசாலி" எஜமானர்கள் எதாவது வியாபாரநிலையம் வைத்திருந்தால், அவற்றையும் துப்பரவாக்கும் படி பணிக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தமது உறவினர் வீடுகளுக்கு சென்று வேலை செய்யுமாறு உத்தரவிடுகின்றனர். இவ்வாறு பெருமளவு இலங்கை தொழிலாளரின் இலவச உழைப்பு, உபரிமதிப்பாக சைப்ரஸ் மக்களை இன்னும் இன்னும் பணக்காரர் ஆக்குகின்றது. நிலைமை இவ்வாறு இருக்க அப்பாவி இலங்கை பணிப்பெண்கள் இலங்கையில் இருக்கும் தொழிலாளியை விட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிப்பதற்காக திருப்திப்படுகின்றனர். அவர்கள் தமது தாய் நாட்டிற்கு அனுப்பும் பணத்தால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைத்தாலும், இலங்கை அரசும் தனது பிரசைகள் நலன் குறித்து அதிக அக்கறை எடுப்பதில்லை.

பெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவு குறைவால், அல்லது அக்கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று கவனிப்பதில்லை. இதனால் ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் எஜமானர்கள், பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றனர். இளம்பெண்களின் பாலியல் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. பல பணிப்பெண்கள் ஆண்-நண்பர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒப்பந்தமும் ஒரு பெண், ஆண் நண்பர் வைத்திருக்க கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற விடயம் கூட அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த "பாலியல் நன்னடத்தை" குறித்த எதிர்பார்ப்பு, பணிப்பெண்களை அடக்கி அதிக வேலை வாங்கவும், அதே நேரம் எஜமான் தரப்பு பிழைகளை மறைக்கவும் பயன்படுகின்றது.

தற்போது ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ள சைப்ரஸ் அரசாங்கமோ, தனது பிரசைகள் நலன் குறித்தே அதிக அக்கறை படுகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலசட்டங்களை வைத்து, ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்போனால், அது அதிக காலம் எடுக்கும், அதிக பணம் விரயமாகும் செயலாகும். இதனால் நீதியை எதிர்பார்க்காத தொழிலாளர்கள், தமது தாய் நாட்டிற்கே திரும்பி செல்கின்றனர். மேலும் பொதுவாக சைப்ரசில் நிலவும் வெள்ளை இனவாத மேலாண்மை, தொழிற்சங்கம் அமைக்க அனுமதியின்மை, வாக்குரிமை உட்பட பிற அரசியல் உரிமைகளின்மை என்பன, சைப்பிரசில் இலங்கை தொழிலாளரை, அடிமைகளாக அடக்கி வைக்க சாத்தியமாக்கும் பிற காரணிகள்.
(இந்த ஆய்வுக்கட்டுரை நேரே பார்த்த சம்பவங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது .)
_____________________________________________________
மேலதிக விபரங்களுக்கு இதையும் வாசிக்கவும்:
சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்