Sunday, August 17, 2008

அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?

ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு "பனிப்போர்" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

போலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற "முரட்டு நாடுகளில்" இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, "காலினின் கிராத்" என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜோர்ஜிய போரானது, "பழைய ஐரோப்பா", "புதிய ஐரோப்பா" என்று இரு கருத்து வேறுபாடுகள் கொண்ட முகாம்களை உருவாக்கியுள்ளது. ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் மோத விரும்பாமல், நல்ல உறவைப் பேண விரும்புகின்றன. அதற்கு மாறாக போலந்து போன்ற புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று கூறி வருகின்றன. 20 ம் நூற்றாண்டில், சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின் கீழ், சோஷலிச முகாமாக இருந்த காலகட்டத்தை, அவை தற்போது நினைவு கூறுகின்றன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள், தீவிர அமெரிக்க(அல்லது மேற்குலக) ஆதரவாளர்கள்.
அரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே அமெரிக்க பக்தர்களாக காட்சிதருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்குலக சார்பு குணாம்சம், 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வரும் அரசியல் தொடர்ச்சி தான். 1917 ம் ஆண்டு, ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற கையோடு, லெனின் போலந்திற்கும் செம்படையை அனுப்பி வைத்தார், அங்கேயும் புரட்சிக்கு மக்கள் ஆதரவு கிட்டும் என்ற நினைப்பில். ஆனால் போலந்து தேசிய படைகளின் மூர்க்கமான எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க மாட்டாமல், செம்படை திரும்பி வந்தது. அப்போது ஸ்டாலின் கூறியதானது, "போலந்தை விட்டுவிடுங்கள், அவர்கள் கத்தோலிக்கர்கள், தேசியவாதிகள், நம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள்." போலந்து குறித்த லெனினின் கணிப்பீடு பிழைத்த போது, ஸ்டாலினின் கூற்று நிதர்சனமானது.

போலந்து போலவே இன்று ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோவிலும் சேர்ந்துள்ள, முன்னாள் சோவியத் பால்ட்டிக் குடியரசுகளான, எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளும், தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர்கள் தான். எந்த அளவுக்கு என்றால், 2 ம் உலக யுத்த காலத்தில் ஹிட்லரின் நாஸிப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட முன்னாள் இராணுவவீரர்களுக்கு இன்றுவரை அரச மரியாதை செலுத்தப்படுகின்றது.

இந்த புதிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா ரஷ்யாவுடன் இராணுவ மோதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதனாலேயே ஜோர்ஜியாவில் ரஷ்யா படையெடுத்த காரணத்தை காட்டி, நேட்டோவின் விரிவாக்கம், அமெரிக்க (அணுவாயுத)ஏவுகணைகள் நிறுத்துதல் போன்றவற்றை நியாயப்படுத்த பார்க்கின்றன. மேற்கு ஐரோப்பாவோ அதே காரணத்தை காட்டி, இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம், என்று கூறுகின்றன.

இதற்கிடையே ஜோர்ஜிய போரின் போது, "கோரி" நகரில் இருந்த ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்கிய போது, சில அமெரிக்க இராணுவ ஆலோசகர்களும் பலியாகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அங்கு ஏற்கனவே 172 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள், ஜோர்ஜிய இராணுவத்திற்கு பயிற்சியளித்து வந்தனர். ஜோர்ஜியாவில் ரஷ்ய படையெடுப்பை காட்டி, ரஷ்யாவுடன் புதிய பனிப்போரை ஆரம்பிப்பது, அமெரிக்க கடும்போக்காளரின் அரசியல் திட்டமாக உள்ளது. வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், புஷ்ஷின் குடியரசு கட்சி வேட்பாளர் மக் கெயினை வெற்றி பெற செய்வதற்கு, ரஷ்யாவுடனான முறுகல் நிலை பயன்படலாம்.


இது தொடர்பான கடந்தகால பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்
விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்

____________________________________________________

No comments:

Post a Comment