Friday, August 08, 2008

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்


லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை உலகமயமாக்கியதன் விளைவு; ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும், பின்னர் சைப்பிரசுக்கும் ஏற்றுமதியானர்கள். சைப்பிரசின் நாணயமான பவுணின் உயர்ந்த பெறுமதியை, இலங்கை ரூபாய்க்கு பெருக்கி பார்த்து, அதனால் தாம் சம்பதிக்கப் போகும் தொகையை மனதுக்குள் நினைத்து பார்த்து மகிழும் பணிபெண்கள், தாம் சர்வதேச உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இலங்கை பெண்களை பணிக்கமர்த்தும் குடும்பங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று: சிறு பிள்ளைகள் உள்ள குடும்பங்கள். இரண்டு: வயோதிப ஆண்கள்,பெண்கள். எப்படியான குடும்பமாக இருப்பினும், இவர்களின் பணி தினசரி அதிகாலையே ஆரம்பமாகி, இரவில் முடிகின்றது. சிறு பிள்ளைகள் இருக்கும் குடும்பமாயின், அந்தப் பிள்ளைகளை பராமரித்தல், அல்லது வயோதிபர்களை பராமரித்தல் போன்றன இவர்களின் கடமை. பிள்ளைகளை பராமரிக்கும் பணிப்பெண்கள் குடும்பத்தலைவிக்கு சமையலில் உதவி செய்தல் வேண்டும், வயோதிபர்களை பராமரிப்போர் அவர்களுக்கு சமைத்தும் கொடுக்க வேண்டும். சைப்ரஸ் உணவையே சமைப்பதால், அதையே அன்றாடம் சாப்பிடும் பணிபெண்கள், தமக்கு விடுமுறை கிடைக்கும் ஞாயிற்று கிழமை மட்டும், இலங்கை உணவை ருசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட அளவு நேரம் தாய்மார்கள் பொறுப்பு எடுப்பதால், சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பெண்களின் நிலை பரவாயில்லை. ஆனால் வயோதிபர்களை பராமரிப்பவர்களின் நிலைமை பெரும்பாலும் பரிதாபகரமானது. தமக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது என்றும், அப்படியே கிடைத்தாலும், பொழுதுபோக்காக தொலைக்காட்சி பார்க்க கூட அனுமதிக்காது, தங்களை கவனிக்கும் படி வயோதிபர்கள் நச்சரிப்பதாக சில பெண்கள் தெரிவித்தனர். உண்மையில் அதிக கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள், வயோதிபர்கள் ஆகியோரை பராமரிப்பதில் ஏற்படும் மன உளைச்சல்களில் இருந்து தப்பிக்கொள்ளவும், பல சைப்ரஸ்காரர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்கின்றனர்.

சைப்ரசில் வயோதிபமடங்கள் உள்ள போதிலும், சம்பிரதாயப்படி பல பிள்ளைகள் வீட்டில் வைத்து பார்க்கவே விரும்புகின்றனர். இருப்பினும் பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு இடங்களில் வாழ்ந்து வருவதால், அல்லது அதே வீட்டில் இருப்பினும் செல்வச்செழிப்பு காரணமாக, தமது பெற்றோரை பார்த்துக்கொள்ள பணிபெண்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். “வயோதிபர் பராமரிப்பு” என்ற பொதுப்பணித்துறையை அரசாங்கம் தனியார்மயமாக்கியுள்ளதால், வசதி குறைந்த சைப்ரஸ் குடும்பமாகவிருந்தாலும், பிள்ளைகள் பணம் சேர்த்து பணிப்பெண்களின் மாதசம்பளத்தை கொடுக்கின்றனர். மேற்கு ஐரோப்பிய தரத்துக்கு வளர்ச்சியடைந்த சைப்ரஸ் பொருளாதாரம், சாதாரண தொழிலாளியையும், வீட்டில் வேலைக்காரி வைத்துக் கொள்ளுமளவிற்கு பணவசதி படைத்துள்ளவர்களாக மாற்றியுள்ளது. ஒரு காலத்தில், அதாவது சுதந்திரத்திற்கு பின்னான அறுபதுகளில், பொருளாதார பின்னடைவு காரணமாக, பெருமளவு வசதியற்ற சைப்ரஸ் மக்கள் வேலை தேடி இங்கிலாந்து சென்றனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

ஏற்கனவே ஒரு முகவர் மூலம் இந்தப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும் சைப்ரஸ் குடும்பம், அந்தப் பெண்களுக்கு தமது வீட்டிலேயே உணவும், இருப்பிடமும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இந்த கடமை குறிப்பிடப்பட்டிருப்பினும், பெரும்பாலான தொழில் வழங்குனர்கள் தனியான அறை ஒதுக்கிய போதும், சில வீடுகளில் வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுக்கும் நிர்ப்பந்தம் நிலவுகிறது. பெரும்பாலும் வேலைக்கு வைத்திருக்கும் எசமானர்களே ஒப்பந்தத்தை மீறுவது வழமை. பல தொழில் வழங்குனர்கள், சட்டத்திற்கு மாறாக, பணிப்பெண்களின் கடவுச்சீட்டு, மற்றும் வதிவிட அனுமதிப்பத்திரம், வெளிநாட்டவர் பதிவுக் கையேடு போன்ற மிக முக்கியமான பத்திரங்களை கூட வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் அதிக நேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காதது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தல் என்பன தாராளமாக நடக்கும் சட்ட மீறல்கள். பணிப்பெண்களுக்கான வதிவிட அனுமதி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் என்று இருப்பதால், நீடிக்கப்படும் ஆண்டுகளுக்கு விசாவை புதிப்பிக்காமல் வைத்திருப்பதும், அது பின்னர் சம்பத்தப்பட்ட பணிப்பெண்களுக்கே பாதகமாக அமைவதும் உண்டு. தொழில் வழங்குனர்களின் மீது புகார் கூற துணியும் பெண்கள் மீது, “நடத்தை சரியில்லை” என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் இருந்தால், “துரதிர்ஷ்டவசமாக” கர்ப்பமடைந்தால், அது கூட “தகாத நடத்தையாக” கணிக்கப்பட்டு, சில நேரம் ஒப்பந்தத்தை முறித்து, நாடு கடத்தலில் கொண்டு போய் விடும்.

செல்வச்செழிப்பு அகம்பாவத்தையும் கூடவே கொண்டுவரும். சைப்ரஸ் சமூகத்தில் அடிமட்டத் தொழிலாக கருதப்படும் துப்பரவாக்கும் பணியை, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோர் செய்வதால், இலங்கையரை தரக்குறைவாக கருதும் பழக்கம் உள்ளது. மேலும் சிறு பிள்ளைகள் கூட, “மவ்று”(கிரேக்க மொழியில், கருப்பு) என்று இகழும் அளவிற்கு இனவாதம் வளர்ந்துள்ளது. இனவாதம் வெளிப்படையாக காட்டப்படா விட்டாலும், அது சைப்ரஸ் சமூகத்தினருக்குள்ளே மட்டுமுள்ள பேசு பொருளாகும். உதாரணத்திற்கு “ரகசிய உறவின்” மூலம் குழந்தை பெறும் இலங்கைப்பெண்கள் அந்தக் குழந்தையை கைவிடும் சம்பவங்கள், சைப்ரஸ் ஊடகங்கள் மூலம் பூதாகரமாக காட்டப்படும். அது போன்ற செய்திகளை பார்க்கும் சைப்ரஸ் மக்கள், இலங்கையரை பற்றி இனவாதக் கண்ணோட்டத்தில் தரக்குறைவாக கதைக்க பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அரசியல் சக்திகள் இந்த உதாரணங்களை காட்டி, “வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் புற்றுநோய் கிருமிகள்” நாட்டை பாழ்படுத்தும் அபாயம் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். இலங்கையருக்கும் சைப்ரஸ் மக்களுக்குமிடையிலான தொடர்பு வெறும் தொழில்முறை சார்ந்தது என்பதால், இனவாத தப்பபிப்பிராயங்கள் மிக அதிகம்.

வழக்கம் போலவே இலங்கைப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்கும் பணம் சைப்ரசை செல்வந்த நாடாக வைத்திருக்கும் உண்மை பற்றி பேசுவோர் மிகக்குறைவு. அதற்கு காரணம் தொழில் ஒப்பந்தம் பெற்று வரும் பணிப்பெண்கள், சைப்ரஸ் சமூகத்துடன் தாமரை இல்லை தண்ணீர் போல ஒட்டாமல் வாழ்வது தான். இந்த அரசியல் அறிவு, பாதிக்கப்படும் இலங்கைப் பணிப்பெண்களிடமும் இல்லை என்பது பெரிய குறை தான். முடிந்த அளவு பணம் சம்பாதித்துக் கொண்டு, இலங்கை திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்கும் இவர்கள், மனதளவில் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களது சமூக தொடர்பு பிற இலங்கையருடன் மட்டுமே உள்ளது. கிரேக்க மொழி தெரிந்த பெண்கள் கூட, தமது தொழில், மற்றும் தனிப்பட்ட பிரச்சினை குறித்து மட்டுமே சம்பாஷனைகளை குறுக்கிக் கொள்வதால், தாம் வாழும் நாட்டைப் பற்றி எதுவும் அறியாது வாழ்கின்றனர்.

சைப்ரசிற்கு இலங்கையைச் சேர்ந்த ஆண்களும் பெருமளவு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் கல்லூரிகளில் படிக்க என்று வந்து, பின்னர் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்று தங்கி விட்டவர்கள். இலங்கையில் ஏழ்மையான பின்னணியில், உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வரும் பணிப்பெண்களைப் போலன்றி, இந்த வாலிபர்கள் ஓரளவு வசதியான (கீழ்) மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்கள். கல்லூரி மாணவர்களாக வந்த இலங்கை வாலிபர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களாக வந்த இலங்கை யுவதிகளுக்கும் இடையே ஆன உறவு, சில நேரம் வர்க்க முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. சைப்ரசில் பொதுப் போக்குவரத்து சேவை அரிதாகவே கிடைப்பதால், சில இளைஞர்கள் சட்டவிரோத “டாக்ஸி” ஓடுகின்றனர். இவர்களின் ஜீவனம், பெரும்பாலும் பணிப்பெண்களை நம்பியே உள்ளது. பணிப்பெண்களின் (சட்டபூர்வ) மாத வருமானம் 300 யூரோவை தாண்டாத போது, இந்த டாக்ஸி சாரதிகளின் (சட்டவிரோத) வருமானம் மாதம் 1000 யூரோவை தாண்டுவது முரண்நகை.

இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பணிப்பெண்களின் சமூக பின்னணி, ஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்கத்தை(குட்டி பூர்ஷுவா) சேர்ந்த இளைஞர்களிடம் தங்கியிருக்க வைப்பதால்; காதலித்து நடித்து ஏமாற்றும் ஆண்களும், நம்பி ஏமாறும் பெண்களுமாக இலங்கையர் சமூகம் உள்ளது. சில பெண்களின் மோசமான நடத்தையை சுட்டிக்காடும் ஆண்கள், “எல்லா பெண்களும் அப்படி” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கூட சிலர் ஆணாதிக்க பார்வையுடன் அணுகுகின்றனர். சில “நடத்தை தவறும்”(லாப நோக்கோடு செயற்படும்) பெண்கள், பல காதலர்களுடன் தொடர்பு கொண்டு பணம் கறப்பதை சுட்டிக்காட்டும் அதே வேளை, பல அப்பாவி யுவதிகள் தம்மால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை பல ஆண்கள் நியாயப் படுத்துகின்றனர். சில சம்பவங்கள் பாலியல் சுதந்திரம் சம்பத்தப் பட்டதாயினும், வறுமையான சமூகப் பின்னணியும் இத்தகைய பெண்கள் தடம் மாறும் காரணங்களாகும். அதேவேளை நன்னடத்தையுள்ள பெண்களை கூட தனது வாழ்க்கைத்துணையாக சில ஆண்கள் ஏற்க மறுப்பதற்கு, இலங்கையில் அவர்களது வேறுபட்ட சமூகப் பின்னணி தான் காரணமாக இருக்க முடியும். வெளிப்பார்வைக்கு ஆண்-பெண் முரண்பாடாகவோ, இன, மத முரண்பாடுகளாகவோ புரிந்து கொள்ளப்படும் பல சம்பவங்கள், வர்க்க அடிப்படையை கொண்டதாக உள்ளன. இலங்கை திரும்பியதும், “நல்ல பிள்ளையாக” தமது பெற்றோர் நிச்சயிக்கும் பெண்ணை மணக்க நினைக்கும் ஆண்கள், தமது தற்காலிக சுகத்திற்காக மட்டுமே சைப்ரஸ் காதலிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். “காதல்” என்ற முகமூடி மட்டும் இல்லையென்றால், வர்க்க வேறுபாடு அம்பலமாகி இருக்கும். விதிவிலக்காக சில காதல்கள் திருமணங்களில் முடிந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய யூனியனில் சைப்ரஸ் சேர்ந்த பின்னர் இலங்கையில் இருந்து பணிப்பெண்களை தருவிப்பது குறைந்து வருகின்றது. தொழில்கள் யாவும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாட்டு பிரசைகளுக்கே வழங்க வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், தற்போது பல்கேரிய, ருமேனிய பணிப்பெண்கள் வேலைக்கு வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் முன்பு போல பணிப்பெண்களை ஏற்றுமதி செய்ய விரும்பவில்லை. வளைகுடா நாடுகளில் நடந்த, சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட, இலங்கைப்பெண்கள் மீதான வன்முறைகள், பிற மோசமான ஒப்பந்த மீறல்கள் என்பன, இலங்கை அரசு இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

முன்னைய பதிவு :


ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்
_____________________________________________

1 comment:

  1. சவூதியில் இலங்கை பணிப்பென்களின் நிலை ரொம்ப மோசம் அதைப்பற்றி எனது தளத்தில் பதிவு போடலாம் என்று இருக்கிறேன்

    ReplyDelete