Showing posts with label வெள்ளாளர். Show all posts
Showing posts with label வெள்ளாளர். Show all posts

Saturday, February 15, 2025

யாழில் பெரியார் சிலை உடைப்போம்! வெள்ளாள- தாலிபான்கள் மிரட்டல்!!


ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஒரு சைவ மத அடிப்படைவாதியும், ஆதிக்க வெள்ளாள சாதிவெறியனுமான  ஆறுமுக நாவலனின் சிலை இருக்கலாம் என்றால், ஏன் சமூக நீதிப் போராளியான பெரியாருக்கு சிலை வைக்க முடியாது?

இவ்வளவு காலமும் தமிழ்த் தேசிய முகமூடிக்கு பின்னால் இருந்த வெள்ளாள ஆதிக்க சாதி வெறியர்கள் தற்போது தமது சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

Well done. சாதி வெறி, இனவெறி, மதவெறி பிடித்தலையும் காகிதப் புலிகளின் முகத்திரை கிழிகிறது!

இதற்கு தான் ஈழத்திற்கு பெரியார் அவசியம்.

யாழ் நகரில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல் வந்தவுடனே, புலித் தோல் போர்த்திய வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. 

"சிலை உடைக்கப் படும்!" என்று இந்த சாதி வெறியன் பிரான்சில் இருந்து கொண்டு மிரட்டுகிறான். பிரான்ஸ் போன்ற ஜனநாயக பண்பு கொண்ட நாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டு, தாலிபான், ISIS பாணியில் பெரியார் சிலையை தகர்க்க போவதாக மிரட்டும் அளவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் சாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது. இ‌ந்த சாதி வெறி ஓநாய்களை தான் "தீவிர தமிழ்த் தேசியவாதிகள்" என்று சிலர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

"பெரியார்களுக்கு எல்லாம் பெரியார்" பிரபாகரன் சமூகநீதி குறித்து எழுதிய ஒரு புத்தகம் வேண்டாம், ஒரு கட்டுரை காட்டட்டும் பார்ப்போம்? சும்மா வாயில் வந்த படி எதையாவது உளற வேண்டியது. 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக இனப் படுகொலை நடந்திருக்காது.  40000 மாவீரர்களை பலி கொடுத்து இருக்க மாட்டீர்கள். 

ஏனென்றால் இனப் படுகொலைக்கு பலியான, மாவீரர்களான மக்கள் 90% ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அல்லது வறுமையில் வாடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

 சாதியின் பெயரில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக, பெரியார் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார். ஆனால் இவன் போன்ற வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களை தமிழீழ வேள்வித் தீயில் வீசி கொன்று குவித்து விட்டு, "மாவீரர்களை வணங்குகிறேன்... இனப் படுகொலைக்கு நீதி கேட்கிறேன்..." என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாம் கபட நாடகம். பகல் வேஷம். தமிழர்களை சுரண்டி வாழும் இவன் போன்ற சாதிவெறி ஓநாய்களை விரட்டி அடிக்க வேண்டுமானால் ஈழத்திற்கு பெரியார் தேவை. இனிமேல் நடக்கப் போவது தான் உண்மையான விடுதலைப் போராட்டம்.



Sunday, September 17, 2023

"பெரியாரை ஈழத்தில் யாருக்கும் தெரியாது!"

 

- ஈழத்து சங்கிகளின் உளறல்.

மார்பை மறைக்க முடியாத காலத்தில் மேல் சட்டை அணிந்த தமிழ்ப் பெண்களின் சட்டையை கத்தியால் கிழித்தெறிந்த, வெள்ளாள சாதிவெறி ஓநாய்களின் வாரிசுகள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

கோயில் கட்டிய தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத வெள்ளாள சாதிவெறி பேய்களின் வாரிசுகள் கேட்கின்றன "பெரியார் யார்"?

இதெல்லாம் எப்போதோ நடந்த கதை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஈழப் போர் தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட கிராமப்புறக் கோயில் கிணறுகளில் சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தண்ணீர் அள்ளத் தடை இருந்தது. அவர்களது கிராமங்களுக்கு போடப்பட்ட தொலைபேசி/மின்சாரக் கம்பிகள் அறுத்தெறியப் பட்டன.

அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று பொய்யுரைக்கும் அயோக்கியர்கள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

ஆண்ட பரம்பரை சாதியின் நலன்களுக்காக தமிழீழம் கேட்ட வெள்ளாள பேரினவாதிகள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

டச்சுக் காலனிய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளாளர்கள், பூர்வகுடி ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த வரலாற்றை மறைத்து விட்டுக் கேட்கிறார்கள், "பெரியார் யார்"?

சொந்த இனத்தவரான தமிழர்களையே அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அடிமைகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்காக, டச்சுக் காலனிய ஆட்சியாளருக்கு கால் கழுவி விட்டு, தேசவழமை சட்டம் என்ற ஒடுக்குமுறைச் சட்டம் எழுத வைத்த வெக்கங்கெட்ட வெள்ளாள ஒட்டுக்குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

நாகரீக காலத்திற்கு ஒத்துவராத, அடிமைகளை சீதனமாக கொடுப்பதை அங்கீகரித்த, ஒடுக்குமுறை தேசவழமை சட்டத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வெள்ளாள துரோகக் குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

Sunday, September 25, 2016

சிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்


தமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன? எங்கேயோ உதைக்கிறதே?

"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.



மைந்தன் சிவாவின் நக்கலான பதிவு : 

//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, "விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.!" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்? அட அதான் அண்ணன் சொல்றார்லே? அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு? ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா! இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610?pnref=story)

ஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா? அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா? அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.

மைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.

இதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பதில் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.

சிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும்? மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

மைந்தன் சிவா திரிப்பது மாதிரி, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.!" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

கட்டுரையில் இருந்து: 
//விமல் வீரவம்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)

கொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்!

நான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.

வட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.


விமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா?)

கொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினால், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா?

மைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் கூட  அவதானமாக இருக்கிறார்கள். 

Friday, September 23, 2016

ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்


பிரபலமான சிங்கள இனவாதி விமல் வீரவன்ச பிறப்பால் ஒரு தமிழர்! அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர்!! தமது தொப்புள்கொடி உறவுக்காக தமிழினவாதிகள் பெருமைப் படலாம். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் பலரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், அவர்களது முன்னோர் தமிழர்களாக இருந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.

விமல் வீரவன்ச பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நம்பிக்கைக்குரிய அடியாள். தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை உதிர்த்து பிரபலம் தேடி வந்தார். அவரது முன்னோர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறினார்கள்.

விமல் வீரவன்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு. சிங்களத்திலும் பெற என்பது பறை மேளத்தை குறிக்கும் சொல் தான். (ஆதாரம்: Caste And Exclusion In Sinhala Buddhism)

சிங்களப் பிரதேசங்களில் முதலியார்கள், கொவிகம (தமிழில்:வெள்ளாளர்) போன்ற ஆதிக்க சாதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு அதிகாரத்தையும், விவசாய நிலங்களையும் பகிர்ந்தளித்து இருந்தனர். இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.

கொவிகம நிலவுடைமையாளர்களின் அடியாட்களாகவும் பெறவாக்களே இருந்தனர். மகிந்த ராஜபக்சே (கொவிகம), விமல் வீரவன்சவை (பெறவா) அடியாளாக வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இலங்கையில் சிங்களவர்களும் இன்னமும் சாதிய சமூகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், பெரும்பாலும் கொவிகம சாதியினர் தான்.

இராணுவத் தளபதிகளாக ஒன்றில் கொவிகம அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கரவா (கரையார்) சாதியினராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கோத்தபாய ராஜபக்சே ஒரு கொவிகம. சரத் பொன்சேகா ஒரு கரவா. ஆனால், இராணுவத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதாரணமான போர்வீரர்கள் பெரும்பாலும் பெறவாக்கள் அல்லது பிற தாழ்த்தப் பட்ட சாதியினர். ஈழப்போரில் பலி கொடுக்கப் பட்டவர்களும் அவர்கள் தான்.

"இனவெறியூட்டப் பட்ட சிங்கள இராணுவம்" என்று அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிராமப்புறங்களை சேர்ந்த படிப்பறிவில் குறைந்த பெறவா மற்றும் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை இனவாதிகளாக மூளைச்சலைவை செய்வது இலகு. அவ்வாறான ஒருவர் தான் விமல் வீரவம்ச.

உயர்த்தப் பட்ட சாதி சிங்களவர்கள், தமக்கு கீழே உள்ள தாழ்த்தப் பட்ட சாதியினரை இனவெறியூட்டி போரில் பீரங்கிக்கு தீனியாக பயன்படுத்தி வந்தனர். அதே நேரம், கொவிகம உயர்சாதியினர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டது மாத்திரமல்லாது, தமிழ் பேசும் வெள்ளாளர்களுடன் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டனர். ராஜபக்சே குடும்பமே அதற்கு சிறந்த உதாரணம்.

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்: 
1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண். 
2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன். 
3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.) 
4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார். இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றியவர், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கொல்லப் பட்டார்.
(ஆதாரம்: Gota's War, C.A. Chandraprema)

இல‌ங்கையில், சிங்க‌ள‌ - த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதின‌ம் அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். ஏனென்றால் அவ‌ர்க‌ள் ஒரே வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.

பார்த்தீர்க‌ளா ம‌க்க‌ளே! மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். "சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது" என்றுரைப்பார்க‌ள்.

த‌மிழ் ம‌க்களே உங்க‌ளது எதிரி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அல்ல‌. சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான். அவ‌ர்க‌ள் இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்வார்க‌ள். இர‌ண்டு இன‌ங்க‌ளையும் மோத‌ விட்டு வேடிக்கை பார்ப்பார்க‌ள். இந்த‌ அயோக்கிய‌ர்க‌ளை அடித்து விர‌ட்டாம‌ல் விடுத‌லை சாத்திய‌மில்லை.

Saturday, December 04, 2010

இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்


தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? 

தமிழ் இனவாதிகள், சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, "பறத் தெமலோ" என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.

தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் "கம" என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது. 


வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. "கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்" என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு "வெள்ளாளர்" என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.) 

இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் "வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக" காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். "கந்தன் நல்ல கமக்காரன்" போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.

வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை "ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி" என்று உயர் சாதியினர் பரிகசித்தனர். 


ஆதிக்க சாதியினரின் "நல்ல காலம்", அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 - 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.

வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர். 


தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள். 

ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.

"கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்." என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு "டொன்" என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் "வெள்" என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. "வெள்" பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.


"பறங்கிகள் 'டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பணங் கொடுத்தவர்களை 'வெள்' அல்லது 'மடப்பம்' என்று தோம்பிற் பதிந்தனர்." (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)

இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நாவலர் எழுதிய "சைவ வினா-விடை" என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. "விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது." பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.


இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் "சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்" என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. 


வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக "தமிழினத் தலைவரான" பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.

வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். 


பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.

(தொடரும்)