Showing posts with label டென்மார்க். Show all posts
Showing posts with label டென்மார்க். Show all posts

Tuesday, April 05, 2011

டென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்


டென்மார்க் தலைநகரமான கோபென்ஹெகன் நகரில், உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடங்களில் அதுவுமொன்று. பொதுவுடைமை சமூக கட்டமைப்பைக் கொண்ட "கிறிஸ்தியானா" தன்னை தனியான சுதந்திர தேசமாக கருதிக் கொள்கின்றது. (Freetown_Christiania) 1971ல், நகர மத்தியின் அருகில் உள்ள, கைவிடப்பட்ட கடற்படை முகாம், ஹிப்பிகளின் வதிவிடமானது. அறுபதுகளில் அமெரிக்காவின் வியட்னாம் போரை எதிர்த்த ஹிப்பிகள், முதலாளித்துவ சமூக அமைப்பை வெறுத்தனர். எதிர்க் கலாச்சாரமாக பின்பற்றிய கஞ்சா (மரிஹுவானா) பாவனை, மனோவியல் சுதந்திரத்தைக் கொடுத்தது. டென்மார்க்கில் ஒரு சில ஆக்கபூர்வமான ஹிப்பிகளின் கடின உழைப்பால், கிறிஸ்தியானா என்ற தனிமைப் படுத்தப் பட்ட சமூகம் தோன்றியது. சமூக உறுப்பினர்கள், கூடிய பட்சம் அரசையும், முதலாளித்துவ நிறுவனங்களையும் தவிர்த்தனர். தமக்கு தேவையானவற்றை, கூட்டுறவுப் பண்ணையில் உற்பத்தி செய்து கொண்டனர். முழு ஐரோப்பாவிலும் இன்றும் நிலைத்திருக்கும் ஹிப்பி சமூகம், கிறிஸ்தியானா மட்டும் தான். வருடம் தோறும் சுமார் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மாற்றுக் கலாச்சாரத்தை கண்டு களிப்பதற்காக மட்டுமல்லாது, கஞ்சா வாங்குவதற்கும் வருகை தருகின்றனர்.



தன்னைத் தானே சுதந்திர தேசமாக அறிவித்துக் கொண்ட, ஆனால் டென்மார்க் அரசால் அங்கீகரிக்கப் படாத, "கிறிஸ்தியானா" தனக்கென தேசிய கீதம் ஒன்றைக் கொண்டுள்ளது. எதிர்க் கலாச்சார பாப்பிசைப் பாடலான "I kan ikke slå os ihjel " (நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது) தேசியகீதமாக இசைக்கப் படுகின்றது. தேசத்திற்கு தனியான கொடி உண்டு. சிவப்பு பின்னணியில் மூன்று மஞ்சள் நிற வட்டங்களைக் கொண்ட கொடி. டேனிஷ் குரோனருக்கு பதிலாக, சிறப்பு நாணயம் ஒன்று புழக்கத்தில் உள்ளது. உண்மையில் கிறிஸ்தியானா சமூகத்தின் பொருளாதாரம் காசை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால், உழைப்பின் பெறுமதியை அளப்பதற்கு தனியான நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் பண்டமாற்று பொருளாதாரத்தை கொண்டுள்ளதால், சமூக உறுப்பினர்கள் நாணய நோட்டுகளுக்கு பதிலாக உழைப்பை பரிமாறிக் கொள்கின்றனர்.



சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக, கிறிஸ்தியானா நகரினுள் வாகனங்கள் தடை செய்யப் பட்டுள்ளன. சமூக உறுப்பினர்கள் தமது கார்களை எல்லையில் நிறுத்தி விட்டு வருவார்கள். ஹிப்பிகளின் தேசத்திற்கு என்று தனியான சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளன. சில விசித்திரமானவை. உதாரணத்திற்கு, ஓடுவது தடை செய்யப் பட்டுள்ளது. (திருடன் மட்டுமே ஓடுவான்.) பொதுவுடைமை பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதால், மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். "நான்" என்ற தன்முனைப்பு வாதம் கிடையாது. "நாங்கள்" என்ற கூட்டு மனப்பான்மை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. சமூக உறுப்பினர்கள் ஒருவரில் மற்றவர் தங்கியிருக்கின்றனர். வெளியில் இருந்து எந்த உதவியும் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய அரசு சாராத தன்னாட்சி அதிகாரத்திற்கு, தற்போது ஆபத்து வந்துள்ளது. ஆட்சியில் உள்ள வலதுசாரி அரசு, கிறிஸ்தியானா நகரை கலைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு வாங்கியுள்ளது.



மொத்தம் 850 வதிவிடப் பிரஜைகளைக் கொண்ட, 35 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கிறிஸ்தியானா நகரம், முந்திய இடதுசாரி அரசு காலத்தில் கண்டும் காணாது விடப்பட்டது. 2004 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஸ்முஸ்சன் (இன்று நேட்டோ தலைவர்) தலைமையிலான அரசு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வருடம் வரை இழுத்துக் கொண்டிருந்த வழக்கின் இறுதியில், அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதன் பிரகாரம், முதற்கட்டமாக கிறிஸ்தியானா நகரில் கட்டப்பட்ட சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்படும். கஞ்சா போன்ற மென் போதைவஸ்துகள் தடை செய்யப்படும். மேற்கொண்டு முழுப் பிரதேசமும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், கிறிஸ்தியானா உறுப்பினர்கள், தமது எதிர்காலம் குறித்து அரசுடன் பேச வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களே நிதி சேகரித்து அந்த இடத்தை வாங்கும் தெரிவும் உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் இடதுசாரி சமூக- ஜனநாயகக் கட்சி வென்றால், தமது இருப்புக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று நம்புகின்றனர்.


கிறிஸ்தியானா சுதந்திர தேசம் பற்றி எழுதிய முன்னைய பதிவு: டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது

Monday, November 29, 2010

அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்

கோபன்ஹெகன் நகரில் ஒரு தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த அகதிகளை, போலிஸ் குண்டர்கள் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். டென்மார்க்கில் கடந்த வருடம் (13-8-2009) நடந்த இந்த சம்பவம், வழமை போலவே "சுதந்திர" ஊடகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தது. "உன்னத நாகரீகத்தைக் கொண்ட மேற்குலக நாடுகளில் போலிஸ் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்," என்று இப்போதும் நம்பும் படித்த பாமரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்த வீடியோவை கலையகத்தில் பதிவிட விரும்புகிறேன். அமைதியான வழியில் போராடிய அகதிகளையும், டேனிஷ் ஆதரவாளர்களையும், போலிஸ் எவ்வாறு மிருகத்தனமாக அடித்து வதைக்கின்றது என்பதை இந்த வீடியோவில் காணலாம். அகதிகளை அடித்தால் கேட்பதற்கு ஆளில்லை. மனித உரிமை குறித்து பாடம் எடுப்பவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஊடகங்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியல்ல.

Wednesday, October 20, 2010

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் - சில குறிப்புகள்

10 -10 -10 அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் "இனி" அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.


கலையரசனின் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்." என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். "நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு" போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

இரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். "சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது." என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். "சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை." என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், "ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன." இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், "சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன." என்றார்.

கலையரசன் தனது உரையில், "ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்." என்று தனது உரையை முடித்துக் கொண்டார். ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

(டென்மார்க் நிருபர்)

Sunday, September 26, 2010

10.10.10 டென்மார்க்கில் நூல் அறிமுகம்

வருகிற 10 அக்டோபர் 2010, டென்மார்க் Vejen நகரில் நடைபெற இருக்கும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுக விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



நூல் அறிமுகம் நடைபெறும் இடம்:
lindetorvet 2,
6600 Vejen,
Denmark


காலம்: 10.10.10 பி.ப. 3 மணி

தொடர்புகளுக்கு :
Thas : 004541427562 (Denmark)
Kalaiy : 0031642344458 (The Netherlands)

Sunday, December 13, 2009

கோபன்ஹெகன் மாநாடு: பொலிஸ் அராஜகம், 700 பேர் கைது

டென்மார்க், கோபன்ஹெகன் நகரில் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் தொடர்பாக கூட்டப்பட்ட சர்வதேச மாநாடு ஆரம்பமாகியது. கூடவே பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாற்றுக் கருத்தாளரும், தமது குரலை ஒலிக்கச் செய்வதற்காக தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். ஆர்ப்பாட்டக்காரரை மேற்கொண்டு நகரவிடாது பொலிஸ் சுற்றி வளைத்தது. மணித்தியாலக் கணக்காக தெருவில் இருத்தி வைக்கப்பட்டனர். சிறுநீர் கழிப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. இதனால் பலர் தமது காற்சட்டைகளில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை. இறுதியாக 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். கோபன்ஹெகன் மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனுப்பி வைத்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.