Showing posts with label இடதுசாரியம். Show all posts
Showing posts with label இடதுசாரியம். Show all posts

Sunday, April 08, 2018

"டட்லி மசாலா வடை சுட்ட கதை" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்

பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் எடுத்துக் காட்டி, கம்யூனிசம் என்பது ஒரு பூச்சாண்டி என்று அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல.

அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் ஈடுபடுகின்றது.

ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், கம்யூனிசமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாக்கி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. LTTE என்ற புலிகள் கூட, ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள்.

அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம்.

ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர்.

அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது " சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஈழத்தமிழர்கள் "அரசியலற்ற விலங்குகள்" என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் இடதுசாரி, வலதுசாரி பிரிவினைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதும் வலதுசாரி அரசியல் தான். தொண்ணூறுகளில் உருவான, தோற்றவர்களுக்கு (இடதுசாரி) எதிரான வென்றவர்களின் (வலதுசாரி) மேலாதிக்க அரசியல்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் இடதுசாரி தலைவர்களை பற்றி கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். ஐம்பதுகளில் உருவான, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன, அன்றைய காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வாக்கோடு இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக தோன்றிய வலதுசாரிக் கட்சிகள்.

"சிங்களவர்களில் இடதுசாரிகள் உண்டு... தமிழர்களில் கிடையாது..." என்ற தவறான கருத்து, தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் காலத்தில் தான் உருவாக்கப் பட்டது. சிங்கள வலதுசாரிக் கட்சிகளும், சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய இதே மாதிரியான பிரச்சாரம் செய்து வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழர்களில் இடதுசாரிகள் இருக்கலாம். ஆனால், "சிங்களவர்கள் இடதுசாரி/வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்ட விலங்குகள்" என்பது அவர்களது வாதம்.

புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஒரு முக்கியமான உண்மையை வேண்டுமென்றே மறைப்பார்கள். எப்போது புலிகள் தமிழீழ அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்களோ, அப்போதே அங்கே இடதுசாரி, வலதுசாரி பிரிவினையும் தோன்றி விட்டது. அரசியல் பிரிவில் வெளிப்படையாக தெரிந்தது. போராளிகள் மத்தியில் மறைமுகமாக இருந்தது.

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் புலிகளை ஆதரித்து வந்த படியால், அவர்களது பிரசுரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விநியோகிக்கப் பட்டன. ஈழத்தில் புதிய தலைமுறையினர் மத்தியில், இடதுசாரி, பெரியாரிய கருத்துக்கள் பரவுவதற்கு, தவிர்க்க முடியாமல் புலிகளும் ஒரு காரணமாக இருந்தனர்.

எண்பதுகளில் புலிகளுக்கு ஆதரவான பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட தளிர் தொடர்ந்தும் இடதுசாரி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளியீடுகள் அடிக்கடி பிடல் காஸ்ட்ரோவையும், கியூப புரட்சியையும் மேற்கோள் காட்டி எழுதி வந்தன. யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர், போராளிகள், ஆதரவாளர்களின் மனோதிடத்தை உயர்த்துவதற்கு, லெனின்கிராட் முற்றுகை பற்றிய தகவல்கள் உதவின.

தமிழ் தேசியமும், இடதுசாரியமும் முரண்பாடான கொள்கைகள் அல்ல.

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன. இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: India Responsible for Dividing Sri Lanka, Training LTTE Terrorists - JR former SL President 1985) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

Friday, April 06, 2018

"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்


"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்

இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம். 
  • - "இவர் யார்?" 
  • - "சிங்கள - பௌத்த பேரினவாதி." 
  • - "இவர் இங்கே என்ன செய்கிறார்?" 
  • - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
  • - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
  • - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"

இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
"படம் பார், பாடம் படி!"

சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.

உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?

சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.

இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.

போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.

ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
  • "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
  • "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
  •  "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
  •  "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"


இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.

இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.

இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

புத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு? க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.

படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan

பிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.// 


Monday, October 03, 2016

பரிசுத்த தமிழ்த் தேசிய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் எடுத்த இடதுசாரிகள்!


லண்டனில் வசிக்கும் இரவி அருணாச்சலம் என்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர், முன்னொருகாலத்தில் இடதுசாரியாக இருந்து ஞானஸ்நானம் எடுத்து பின்னர் வலதுசாரியாக மாறியவர். அதன்விளைவாக,புலிகளுக்கு சார்பான தமிழ்த்தேசியம் பேசும் "ஒரு பேப்பர்" பத்திரிகையின் ஆசிரியராகும் பாக்கியம் பெற்றவர். அவர் பேஸ்புக் விவாதம் ஒன்றில், "வர்க்கப் போராட்டம் காலாவதியாகி விட்டது என்றும், தேசியவாதப் போராட்டமே நிரந்தரம் என்றும் கருத்துக்களை உதிர்த்துள்ளார்.

"ஏன் இடதுசாரிகள், பரிசுத்த தமிழ்த் தேசிய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?" 
அதற்காக வலதுசாரிகள் முன்வைக்கும் வாதங்கள் ஏற்கனவே பலரும் அறிந்தவை தான்.

//"தோசைக்கடே மசால்வடே அப்பிடட எப்பா" என்று சொன்ன இடதுசாரிகளைத் தமிழ்த்தேசிய 'வலதுசாரிகள்' மறந்தா விடடார்கள்?// - இர‌வி அருணாச்ச‌ல‌ம் 

தென்னிலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிங்கள இடதுசாரிகள், "தோசைக்க‌டே வ‌டே அப்பிட்ட‌ எப்பா" (த‌மிழ‌ரின் உண‌வான‌ தோசை, வ‌டை எம‌க்கு வேண்டாம்.) என்று கோஷமிட்டனர். ஊர்வலத்தில் சென்ற சிலர் மட்டுமே அவ்வாறான இனவாதக் கோஷம் எழுப்பி இருந்தாலும், தமிழ்த் தேசியவாதிகள் அதனை இன்றைக்கும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

ஆனால், அதே தமிழ்த் தேசியவாதிகள், மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்த சட்டத்திற்கு ஆதரவாக கை உயர்த்திய ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற "இனத் துரோகிகளை" மூடி மறைத்து வருகின்றனர். ஏன்? மலையகத் தமிழர்களை நீங்கள் தமிழ்ச் சகோதரர்களாக கருதவில்லையா?

அரசுடன் ஒத்துழைத்த ஈபிடிபி போன்ற தமிழ்க் கட்சிகளை, யாராவது தமிழ்த் தேசியவாதிகள் என்று அழைக்கிறார்களா? அதே மாதிரி வலதுசாரி அரசுடன் ஒத்துழைக்கும் இடதுசாரிக் கட்சிகளை மாத்திரம் இடதுசாரிகள் என்று அழைப்பது முறையாகுமா? அவர்கள் ஏற்க‌ன‌வே (சிங்க‌ள)‌ தேசிய‌வாத ஆவியின் பெயரால் ஞான‌ஸ்நான‌ம் எடுத்து வ‌ல‌துசாரிக‌ளாக‌ மாறியிருந்த‌வ‌ர்க‌ள்.

இந்த கொள்கை‌ மாற்ற‌ம் த‌மிழ் ச‌மூக‌த்திலும் ந‌ட‌ந்த‌து. வ‌ட்டுக்கோட்டை தீர்மான‌ம் எழுதிய‌ ஆன‌ந்த‌ச‌ங்க‌ரி, புலிக‌ளின் த‌த்துவாசிரிய‌ர் அன்ட‌ன் பால‌சிங்க‌ம், ஆஸ்தான‌ க‌விஞ‌ர் புதுவை இர‌த்தின‌துரை..... இப்ப‌டிப் ப‌ல‌ இட‌துசாரிக‌ளை குறிப்பிட‌லாம். மேற்குறிப்பிட்ட‌ த‌மிழ் "இட‌துசாரிக‌ளும்", (த‌மிழ்த்) தேசிய‌வாத‌ ஞான‌ஸ்நான‌ம் எடுத்து வ‌ல‌துசாரிக‌ளாக‌ மாறிய‌வ‌ர்க‌ள் தான்.

நீங்க‌ள் த‌மிழ் இட‌துசாரிக‌ளுக்கு ஞான‌ஸ்நான‌ம் கொடுத்து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக்கிக் கொண்டீர்க‌ள். அதே மாதிரி, அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இட‌துசாரிக‌ளுக்கு ஞான‌ஸ்நான‌ம் கொடுத்து சிங்க‌ள‌ தேசிய‌வாதிக‌ளாக்கிக் கொண்டார்க‌ள். த‌மிழில் ஒரு ப‌ழ‌மொழி உண்டு. "அத்தைக்கு மீசை முளைச்சா அவ‌ சித்த‌ப்பா." ஒருவ‌ர் வ‌ல‌துசாரிய‌த்தை ஏற்றுக் கொண்ட‌ பிற‌கும், அவ‌ரை இட‌துசாரி என்ப‌து உள்நோக்க‌ம் கொண்ட‌து. க‌லியாண‌ம் க‌ட்டின‌வ‌னை யாரும் பிர‌ம‌ச்சாரி என்று சொல்ல‌ மாட்டார்கள்.



//கார்ல் மார்க்ஸ் சொன்ன ஒரு வாக்கியம் உங்களுக்குத் தெரியுமா, 'தேசிய இனங்களின் விடுதலையின் பிறகே வர்க்கப் புரடசி சாத்தியமாகும்' இவ்வாக்கியங்களைத் தேடி வாசியுங்கள். வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைந்த சோவியத் யூனியன் தேசிய இனங்களின் பெயரால் பிளவுபட்டதும் வர்க்கத்தின் பெயரால் பிளவுபடட ஜெர்மனி, தேசியத்தின் பெயரால் ஒன்றுபட்ட்தும் நம் கண்முன் நிகழ்ந்த ஒன்று. தேசியம் பற்றி பேசுவோர் வலதுசாரி என்று சொல்வோரின் கண், காமாலைக் கண்.// - இர‌வி அருணாச்ச‌ல‌ம்

இது ஒரு அப‌த்த‌மான‌ திரிபுப‌டுத்த‌ல். தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லைக்குப் பிறகே வ‌ர்க்க‌ப் புர‌ட்சி சாத்திய‌மாகும் என்று கார்ல் மார்க்ஸ் எங்கே சொன்னார்? ஆதார‌ம் த‌ர‌ முடியுமா? ஐரோப்பாவில் உருவான‌ தேசிய‌ அர‌சுக்க‌ள், பேரின‌வாத‌ அர‌சுக்க‌ளாக‌ மாறிய‌தையும், பேர‌ழிவு த‌ரும் போருக்கு இட்டுச் சென்ற‌தையும் கார்ல் மார்க்ஸ் க‌ண்கூடாக‌க் க‌ண்ட‌வ‌ர். அத‌னால் போர்வெறிக்கு எதிராக‌ போராடிய‌வ‌ர்.

தேசிய‌வாத‌ம் முத‌லாளித்துவ‌ எழுச்சியுட‌ன் தொட‌ர்பு ப‌ட்ட‌து. ச‌ந்தைக‌ளை விரிவு ப‌டுத்த‌வும், த‌க்க‌ வைக்க‌வும் தேசிய‌வாத‌ம் அவ‌சியமாகிற‌து. அது வ‌ள‌ர்ச்சிய‌டையும் பொழுது, தேசிய‌ அர‌சுக்க‌ள் வ‌ள‌ங்க‌ளுக்காக‌ மோதிக் கொள்ளும். அத‌ன் விளைவு தான் 1ம், 2ம் உல‌க‌ப் போர்க‌ள்.

அந்த‌ வ‌கையில் "தேசிய‌த்தால் ஒன்றுசேர்ந்த‌" ஜேர்ம‌னியும், இன்னொரு உல‌க‌ப் போருக்கு இட்டுச் செல்லும்.‌ தேசிய‌ம் க‌ட‌ந்த‌ ஐரோப்பிய‌ ஒன்றிய‌ம்(EU) என்ற‌ பெருந்தேசிய‌ அமைப்பில் ஜேர்ம‌னி தான் த‌லைமை தாங்குகிற‌து. ஹிட்ல‌ர் ப‌டை ப‌ல‌த்தால் ஆக்கிர‌மித்த‌ நாடுக‌ளை, EU ப‌ண‌ ப‌ல‌த்தால் ஆக்கிர‌மிக்கிற‌து.

பல்வேறு தேசிய‌ங்க‌ளாக‌ பிரிந்த‌ சோவிய‌த் யூனிய‌ன், தீராத‌ போர்க‌ளுக்குள் அக‌ப்ப‌ட்டு சீர‌ழிந்தது. உதார‌ண‌ம் வேண்டுமா? தேசியங்களுக்கு இடையில் நடந்த போர்களின் விபரம்: 

  1. ஆர்மேனியா - அஸ‌ர்பைஜான் எல்லைப் போர் 
  2.  அஸர்பைஜான் (நாகார்னோ - கரபாக்) 
  3. ஜோர்ஜியா(அப்காசியா மற்றும் தெற்கு ஒசேத்தியா) 
  4. ர‌ஷ்யா (செச்னியா) 
  5.  உக்ரைன் (ரஷ்ய சிறுபான்மையினர்) 
  6. மால்டாவியா (திரான்ஸ் நிஸ்திரியா) 
  7. தாஜிகிஸ்தான் (இஸ்லாமிய அடிப்படைவாதிகள்)


பல்வேறு தேசியங்களாக பிரிந்த யூகோஸ்லேவியாவில் நடந்த போர்களின் விபரம்: 

  1. ஸ்லோவேனியா 
  2. குரோவாசியா 
  3. பொஸ்னியா 
  4. கொசோவோ


சோவியத் யூனியனும், யூகோஸ்லேவியாவும், தற்போதும் வர்க்கத்தின் பெயரால் ஒன்றிணைந்து இருந்திருந்தால், ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட தீர்க்கப் பட்டிராது. பல்லாயிரக் கணக்கான மக்களை பலி கொண்ட இனப்படுகொலைகளும் தவிர்க்கப் பட்டிருக்கும்.

இதிலே ஒரு வேடிக்கையான முரண்நகையை அவதானிக்கலாம். வர்க்கத்தால் ஒன்று சேர்ந்திருந்த யூகோஸ்லேவியாவில் இருந்து, பேரழிவு தந்த யுத்தங்களின் பின்னர் பிளவு பட்ட தேசிய இனங்கள், இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு போட்டி போடுகின்றன!

"வ‌ர்க்க‌ சோவிய‌த் யூனிய‌ன்" கூட்ட‌மைப்பில் இருந்து பிரிந்த‌ பால்ட்டிக் நாடுகள் முத‌லாளித்துவ‌ சோவிய‌த்தில் (ஐரோப்பிய‌ ஒன்றிய‌ம்) கூட்டுச் சேர்ந்துள்ள‌ன‌. மேலும் நேட்டோவில் சேர்ந்து புதிய‌ உல‌க‌ப் போருக்கு த‌யாராகி வ‌ருகின்ற‌ன‌.

அதாவ‌து ச‌ட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்துள்ள‌ன‌. இது தானா "தேசிய‌ இன‌ங்களின் விடுத‌லை"?

"முதலாளி வர்க்கத்தினரின் தேசியவெறி ஒரு அகந்தை. அவர்களுடைய பாசாங்குகள் அனைத்துக்கும் தேசியம் ஒரு உடை மட்டுமே. அது நிரந்தரமான இராணுவங்களை கொண்டு சர்வதேசப் போராட்டங்களை நிரந்தரப் படுத்துவதற்கு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள உற்பத்தி செய்பவர்களை மற்ற நாடுகளில் உள்ள சகோதரர்களுக்கு எதிராகப் போராடச் செய்து அவர்களை அடிமைப் படுத்துவதற்கு ஒரு வழியே. தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையின் முதல் நிபந்தைனையான சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பதற்கு ஒரு வழியே." 
-கார்ல் மார்க்ஸ் (சோஷலிஸ்ட் புரட்சி, பக்கம் 220)

Monday, August 03, 2015

"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்


இந்தக் காலத்திற்கும் வழிகாட்டும் லெனின் எழுதிய சிறு நூல்: "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு". தற்காலத்திற்கும் பொருந்தும் பல ஆலோசனைகள் அந்த நூலில் உள்ளன. (1920 ம் ஆண்டு எழுதப் பட்டது.)

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் இயங்கும் முற்போக்கான நண்பர்களுக்கும் இந்த ஆலோசனை தேவையானது. மக்களை எப்படி அணுகுவது? இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமானது தான். அதை விட, நாங்கள் பிற்போக்காளர்களின் ஒன்றுகூடல் என்று ஒதுக்கும், மத நிறுவனங்கள் மற்றும் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும்.

"ஏன் பெரும்பான்மையான மக்கள், பாராளுமன்ற பிழைப்புவாதிகளை நம்பி இருக்கிறார்கள்? பிற்போக்கான அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவற்றை நம்புகிறார்கள்?" 

இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆகியன, எந்தளவு பிற்போக்கானதாக, முதலாளித்துவ பிழைப்புவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், நாங்கள் அவற்றிற்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். ஏனென்றால், மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.

லெனின் இந்த நூலில், ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். வழமையான தொழிற்சங்கங்களில் இருந்து விலகி நின்று, தூய்மையான தொழிற்சங்கம் கட்டுவதும், பாராளுமன்ற தேர்தல்களை முற்று முழுதாக நிராகரிப்பதும் "தீவிர இடதுசாரி தன்மை" ஆகும்.


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது. ஒரு பக்கம், இரகசியமான சட்டவிரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தது. மறு பக்கம், வெளிப்படையான சட்டபூர்வமான பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டது. இவை இரண்டும் அவசியம் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

லெனின் இந்த இடத்தில், மலினோவ்ஸ்கி என்ற போல்ஷெவிக் கட்சி உறுப்பினரின் உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த மலினோவ்ஸ்கி, சார் அரசினால் அனுப்பப் பட்ட ஊடுருவலாளர். அவர் கட்சிக்குள் இயங்கிய பல செயலூக்கம் கொண்ட உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து வந்தார். அவரது காட்டிக்கொடுப்புகள் கட்சிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. அவரால் பல தோழர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், கட்சியின் நன்மதிப்பை பெறுவதற்காக, மலினோவ்ஸ்கி ஏற்கனவே சட்டபூர்வமான பிரச்சார வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சார் அரசின் அனுமதி பெற்ற சட்டபூர்வ ஊடகமான பத்திரிகை ஒன்றை ஸ்தாபித்ததன் மூலம், ஆயிரக் கணக்கான புதிய உறுப்பினர்கள் சேரவும் காரணமாக இருந்தார். உலகின் பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட, அரசு பல உளவாளிகளை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவ வைக்கும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, சட்டபூர்வமான வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் திறமையாக கையாள வேண்டும்.

இன்றைக்குள்ள தமிழ் மக்களை, அன்றைக்கிருந்த ரஷ்ய, ஜெர்மனிய மக்களுடன் ஒப்பிடலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். பிற்போக்கான அரசியல் செய்பவர்களுக்கு பின்னால் தான் செல்கிறார்கள். அது அவர்களது அறியாமை.

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் நம்பும் அதே பாராளுமன்ற அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் அங்கே தான் போக வேண்டும். அதன் அர்த்தம் நாங்கள் பிற்போக்காளர்களின் தரத்திற்கு இறங்கிச் செல்வது என்பதல்ல. ஆனால், மக்களை அங்கிருந்து தான் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நூல் எழுதப் பட்ட காலகட்டத்தை மேலெழுந்தவாரியாக பார்ப்பது, இன்னும் அதிக தெளிவைக் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளில் அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக ஆரம்பித்தன. அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் தான் மார்க்சியக் கட்சிகளாக இருந்தன. ஆனால், அவை நடைமுறையில் உள்ள, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள், புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரலாம் என்று நம்பின, இப்போதும் நம்புகின்றன.

சர்வதேச அமைப்பான இரண்டாம் அகிலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. அதற்கு மாறாக லெனின் தலைமையில் உருவான மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதலாளித்துவ அரசுக்களுக்கு முண்டு கொடுத்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபித்தார்கள். அதனால், அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாராளுமன்ற முறைமை குறித்து அதிருப்தி காணப்பட்டது. 

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் போரை ஆதரித்தன. லெனின் அவர்களை "சமூக - பேரினவாதிகள்" (சோஷல் - ஷோவினிஸ்ட்) என்று சாடுகின்றார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவுட்ஸ்கி, லெனினால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றார். சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையானது "வலதுசாரியம்" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

வலதுசாரிய சமூக - பேரினவாதிகளை நாங்கள் இன்றைக்கும் பல நாடுகளில் காணலாம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான போரை ஆதரித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்களை, சமூக- பேரினவாதிகள் என்ற பிரிவுக்குள் அடக்கலாம். (ஈழத்தில் வலதுசாரி தமிழ் தேசியர்கள், இவர்களை வேண்டுமென்றே "இடதுசாரிகள்" என்று தவறாக விளிப்பதன் மூலம் இடதுசாரியத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.)

சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிய கொள்கை எந்தளவு ஆபத்தானது என்பது தெரிந்தது தான். ஆகவே, லெனின் இந்த நூலில், கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள தீவிர இடதுசாரிய போக்கை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். வலதுசாரியத்துடன் ஒப்பிடும் பொழுது, இடதுசாரிய குறைபாடு மிகவும் சிறியது. அது இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே, இந்த நோயை குணப்படுத்துவது இலகுவானது என்பது தான் லெனினுடைய வாதம். அதற்காகத் தான் இந்த நூலுக்கு "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு" தலைப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெர்மனியில், கவுட்ஸ்கி போன்றோரின் சமூக - பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து தான் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் "இடதுசாரிய" நிலைப்பாடு எடுத்தனர். (அவர்கள் இருவரும் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தனர்.) "ஜெர்மன் தொழிலாளர்கள் பெருமளவில், பிற்போக்குவாத கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பிரயோசனமற்றது, நேரடியாக தொழிலாளர் சோவியத்துகள் அமைப்பது பற்றி ஆராய வேண்டும்" என்பது அவர்களது வாதம். அதையே லெனின் இங்கு "இடதுசாரியம்" என்று சாடுகின்றார்.

லெனின் அந்த வாதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கேட்கிறார்:"இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சியாளர்களான கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், ஜெர்மனியில் பாராளுமன்ற முறைமை இன்னும் காலாவதியாகவில்லை என்று தானே அர்த்தம்? பாராளுமன்ற முறைமை வரலாற்று ரீதியாக காலாவதியாகி விட்டது, அரசியல் ரீதியாக அல்ல. அதனை உலக வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான சகாப்தம் ஆரம்பமாகி விட்ட காலத்தில், முதலாளித்துவ பாராளுமன்ற முறைமை முடிந்து விடும். ஆனால் அது இன்று அரசியல் ரீதியாக காலாவதியாகி விட்டதா என்பதே கேள்வி."

பாராளுமன்ற முறைமை அரசியல் ரீதியாக காலாவதியாகாமல் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு தேர்தல்களில் பங்கெடுப்பது அவசியமாகின்றது. மதகுருக்களால் முட்டாள்கள் ஆக்கப்பட்ட மக்களை, பிற்போக்கு நிறுவனங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமைப்பையும், அது சார்ந்த பிற்போக்கான நிறுவனங்களையும், எம்மால் கலைக்க முடியாமல் உள்ள இன்றைய நிலையில் இது அவசியமானது. அவற்றிற்குள் ஊடுருவி வேலை செய்தால் தான், அங்குள்ள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியும்.

லெனின் தனது வாதத்திற்கு வலுச் சேர்பதற்காக, பாரிஸ் கம்யூன் காலத்தில் எங்கெல்ஸ் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார். உண்மையில், பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தான் மார்க்சிய காலகட்டம் தோன்றியது. அதாவது, பாரிஸ் கம்யூனை ஆதரித்தவர்களிடையே கருத்து முரண்பாடு தோன்றியது. பிளாங்கிஸ்டுகள் எனப்படுவோர் பிற்காலத்தில் அனார்க்கிஸ்டுகள் (அராஜகவாதிகள்) என்று அறியப் பட்டனர். 

பிளாங்கிஸ்டுகள் கூட தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், இடையில் உள்ள எந்தவொரு அமைப்பையும் சார்ந்திராமல், நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல விரும்புகின்றனர். அதாவது, இன்றைக்குள்ள பாராளுமன்ற அமைப்பு முறையை அவர்கள் கணக்கில் எடுக்காமல் கடந்து செல்லப் பார்க்கின்றனர். இதனை சிறுபிள்ளைத்தனம் என்று சாடும் எங்கெல்ஸ், நடைமுறை அமைப்புகளை புறக்கணித்து விட்டு, நாளைக்கே கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது என்று கூறியுள்ளார். 
(Fr. Engels, "Programme of the Communists- Blanquists)

மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற விரும்பினால், எதிர்நோக்கும் தடைகளையும், கஷ்டங்களையும் எண்ணி நாம் அஞ்சக் கூடாது. "மக்களின் தற்போதைய தலைவர்கள்", எங்களைப் பார்த்து ஏளனமாக பேசினாலும், அவமானப் படுத்தினாலும், எதற்கும் கலங்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். எங்கெங்கு மக்கள் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் சென்று மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். எந்த விதமான அர்ப்பணிப்புக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களை எழுச்சியடைய வைக்கும் பரப்புரைகளை படிப்படியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் செல்லுமிடம் மிக மோசமான, படு பிற்போக்கான ஸ்தாபனமாக இருந்தாலும், அங்கெல்லாம் பாட்டாளி வர்க்க மக்களைக் காணலாம். பாட்டாளி வர்க்க மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கும். அதாவது பாட்டாளி வர்க்கத்தில் உள்ள வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, எங்கள் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும், சமூக - பேரினவாதிகளுக்கும் எதிராக போராடி, உழைக்கும் வர்க்க மக்களை எமது பக்கத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, August 01, 2015

இலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்


ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல தசாப்த காலமாகவே மக்களுக்கான இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எழுபதுகளில் எழுந்த இலவச சைக்கிள் திட்டம் உலகப் புகழ் பெற்றது. (அன்றைய பொலிஸ் நிர்வாகம், இலவச சைக்கிள்களை பறிமுதல் செய்து வந்த படியால், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.)

அண்மைக் காலமாக, "இலவச நூலகத் திட்டம்", ஆம்ஸ்டர்டாம் நகரின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றது. பலர் தமது வீடுகளுக்கு அருகில், தெருவோரமாக புத்தக அலுமாரிகளை வைக்கின்றனர். அவற்றில் பாவித்த புத்தகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துச் சென்று வாசிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து முடித்து விட்டு, திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற உணர்வில், பலர் நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஒரு பரிமாற்றமாக நடப்பதால், எல்லோருக்கும் வெவ்வேறு தலைப்புகளினான நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. நூல்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் இவ்வாறு பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலவச நூலகத் திட்டத்தின் நோக்கம் என்ன? மேலை நாடுகளிலும் மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. அதனால், இது போன்ற திட்டங்கள் வாசிப்பை தூண்டலாம். அதை விட மிக முக்கியமானது இடதுசாரிகளின் பாரம்பரிய சிந்தனை மரபு. அதாவது, பூமியில் உள்ள அத்தனை வளங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது இடதுசாரிய சிந்தனை. 

முதலாளிகள் இலாபம் கருதி, எல்லாவற்றையும் சந்தைப் படுத்தும் நடைமுறை, இன்று தண்ணீரையும், வெகு விரைவில் காற்றையும், விற்பனை செய்யுமளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதனால், முதலாளித்துவ பொருளாதாரம், பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பதில் வியப்பில்லை. இருப்பினும், ஒரு சிலரே மாற்று வழி என்னவென்று தேடுகின்றார்கள்.


ஆம்ஸ்டர்டாம் நகரிலும், பிற நகரங்களிலும் வீட்டுத் தோட்டம் செய்யும் நடைமுறையும் பெருகி வருகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளிலும், (கியூபாவில் இன்றைக்கும் உள்ளது), வீட்டுத் தோட்டம் வைத்திருப்பது ஊக்குவிக்கப் பட்டது. அதாவது, நாங்களே சில காய்கறிகளை வீட்டில் வளர்க்கலாம். பூஞ்சாடிகளில் பூக்களுக்கு பதிலாக, காய்கறிகளை வளர்க்குமாறு அரச மட்டத்திலான பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொருவரும் தமது உணவுத் தேவையில் ஒரு பகுதியை, தாமாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது தான் அதன் நோக்கம்.

முதலாளித்துவ நாடுகளில், பல தசாப்த காலமாக, வீடுகளுக்குள் பூஞ் செடிகளை வைப்பது தான் "வழமையாக" இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், காய்கறிகளை வைக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். அதனால், தோட்டம் வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. 

ஆனால், நகரசபையில் உள்ள இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் உருவாகின. நகரசபை நிர்வாகம், அதற்கான நிலம் ஒதுக்குவதுடன், விதைகளையும் இலவசமாக வழங்கியது. யார் வேண்டுமானாலும் தோட்டம் செய்ய உரிமையுண்டு. இருப்பினும், நிலப் பற்றாக்குறை காரணமாக, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரப் படுகின்றது. சில இடங்களில் சுழற்சி முறையில், பலருக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது.

இவற்றைத் தவிர, பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் சிற்பக் கலைஞராக இருக்கலாம். ஒருவர் கற்பிக்கும் திறமை கொண்டவராக இருக்கலாம். எதுவும் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக உழைக்கக் கூடியவராக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதற்கு செலவிட்ட நேரத்தையும், "பணத்தையும்" குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவையை பெற்றவர் அதற்கு உடன்பட்டு கையெழுத்திட்டு கொடுப்பார். எதிர்காலத்தில் உங்களுடைய வீடு திருத்த வேண்டியிருக்கலாம். அதற்கு அவரைக் கூப்பிடுகிறீர்கள். அவர் வந்து செய்த வேலையை, அதே மாதிரி நேரத்தையும், "பணத்தையும்" கணக்கிட்டு குறித்துக் கொள்கிறார். 

இங்கே "பணம்" என்பது, நாம் கண்ணால் காணும் பண நோட்டுக்கள் அல்ல. உழைப்பை அளவிடும் கருவி மட்டுமே. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மனிதர்கள் தமது உழைப்பை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் பலர், "இதெல்லாம் உண்மையா?" என்று திகைப்படையலாம். நெதர்லாந்தில் பல நகரங்களில், இது பல தசாப்த காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பணமற்ற சமுதாய அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எந்த சந்தர்ப்பத்திலும் பணம் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. 

தவிர்க்க முடியாத சில விடயங்களுக்கு மட்டும் பணம் செலவிடப் படுகின்றது. உதாரணத்திற்கு, முன்னர் இதற்காக ஒரு மாத இதழ் வெளியிட வேண்டி இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தமக்கு என்னென்ன வேலை தெரியும் என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கு ஒரு சிறிய கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. மற்றும் படி, சேவைகள் யாவும் "இலவசம்". அதாவது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!
மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்

Saturday, June 14, 2014

தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிகளின் பிரச்சாரங்கள்




"எங்கெல்லாம் அநியாயம் நடக்கிற போது, உன் ரத்தம் கொதித்தால், நீயும் நானும் நண்பனே." - சேகுவேரா

ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்து கொண்டே, முதலாளித்துவத்திற்கு எதிராக பேசலாமா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஒரு சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வாழும் மக்கள், சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக பேசக் கூடாதா?

தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரான, மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் பரப்புரைகளில் ஒன்று. (எனது நண்பர் ஒருவர் என் மேல் தொடுத்த விமர்சனம்.)

//நான் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. அப்படியே எதிர்ப்பது என்றாலும், அதனை ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் ஒரு மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிசம் சம்பந்தமான தகவல்களை வழங்க முடிகின்றது!!!//

ஒரு தவறான அனுமானம். தவறான புரிதல். 
"ஒரு கம்யூனிச நாடு" என்பதற்கு எதிர்ச் சொல்லாக, "ஒரு மேற்கத்திய நாடு" என்று எழுதுவது, அறியாமல் நேர்ந்த தவறாக தெரியவில்லை. முதலில், கம்யூனிஸ்ட் நாடு என்ற ஒன்று உலகில் எங்கேயும் இருக்கவில்லை. மனித வரலாற்றில் கம்யூனிஸ்ட் சமுதாயங்கள் இருந்தன. ஆனால் ஒரு தேசக் கட்டமைப்பு இருக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் இருந்தவை எல்லாம் "சோஷலிச நாடுகள்". சோஷலிசம் என்பது ஒரு அரசியல்- பொருளாதாரக் கொள்கை. அதற்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. மார்க்சியம் கூறுவதன் படி, உலகில் முதலாளித்துவ நாடுகள் இல்லாமல் அழிந்து போன பின்னர், சோஷலிச நாடுகள் உருவாகும். அது ஒரு சமூக விஞ்ஞான நியதி. ஆகவே, இதற்கு முன்னர் இருந்த சோஷலிச நாடுகள் பரிசோதனை முயற்சியாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிசம் பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்கிறார்களே என்று நீங்கள் ஆதங்கப் படுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உழைத்து வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்க மக்கள் தமது சித்தாந்தம் கம்யூனிசம் என்று சொன்னால், அதை தடை செய்யும் நிலையில் முதலாளித்துவ நாடுகள் இல்லை. ஏனென்றால் அது முடியாத காரியம். உலக நாடுகள் எல்லாவற்றிலும், உழைக்கும் வர்க்க மக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.

ஒரு சோஷலிச நாட்டில், முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது உங்களது மனக்குறையாக உள்ளது. அதை நீங்கள் கம்யூனிச எதிர்ப்பு வாதம் என்று குறிப்பிடலாம். ஆனால், உங்களது கூற்றிலேயே முரண்பாடு உள்ளது. முதலாளித்துவ நாட்டில் வாழும் ஒருவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்றால், சோஷலிச நாட்டில் வாழும் ஒருவர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்று எழுதி இருக்க வேண்டும்.

சோஷலிச நாடு என்பது, இதற்கு முன்பிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் உருவானது. ஆகவே, புரட்சிக்குப் பின்னர் முந்திய அரசு ஆதரவாளர்களுக்கு தடை விதிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. உலக வரலாற்றில் நடந்துள்ள எல்லாப் புரட்சிகளிலும் அது தான் நடக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், தாராளவாதமும், குடியரசுவாதமும் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆகின. புரட்சிக்கு முன்பிருந்த மன்னராட்சியை ஆதரித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நாங்கள் உலக வரலாற்றை, சமூக விஞ்ஞானத்தை படித்து அறிந்து, அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது தான் முறை.

//கம்யூனிசம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது//

"ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லை" என்று ஒரு சிங்களவர் சொல்வது போன்றுள்ளது உங்களது கூற்று. கம்யூனிசம் ஒரு Utopia என்று நீங்கள் கருதலாம். அதாவது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற ஒரு கற்பனை சமுதாயம். வசதி இல்லாதவர்கள், அத்தகைய சமுதாயத்திற்காக கனவு காண்பது மட்டுமல்ல, அதற்காக போராடவும் செய்யலாம். அது அந்த மக்களின் உரிமை. அந்த உரிமையை மறுப்பதற்கு நாங்கள் யார்?

உங்களைப் பொறுத்த வரையில், தமிழீழம் கூட ஒரு Utopia தான். //பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது// ஆனால், ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர், தமிழீழம் அமைப்பதற்காக போராட விரும்பினால், அதைத் தடுப்பதற்கு நாங்கள் யார்?

******

"நான் தமிழருக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் பேசும், சில சிங்கள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அதே மாதிரி, "நான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள்.

முகநூலில் ஒரு அறிவுஜீவி பகிர்ந்து கொண்ட கம்யூனிச எதிர்ப்பு நிலைத் தகவல்:

//அப்பா, கொம்யூனிஸ்ட் என்றால் யார்? மகனே, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துக் கிழித்தவர்கள். அப்ப, anti-கொம்யூனிஸ்ட் என்றால் யார்? கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துச் சரியாகப் புரிந்தவர்கள்.//

"கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதியதை படித்தவர்கள் மட்டும் தான் கம்யூனிஸ்டுகள்" என்று இவர்கள் எங்கே கற்றார்கள்? புத்தகங்களை மட்டுமே படிப்பது அறிவுஜீவித் தனம். அதைத் தான் நமது சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பரீட்சையில் சித்தி பெற வேண்டும், உத்தியோகம் பார்க்க வேண்டும், என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் புத்தகங்களை விழுந்து விழுந்து படிப்பார்கள்.

அவர்களது நோக்கம் நிறைவேறியதும், குறைந்த பட்ச அறிவுத் தேடலுக்காக கூட நூல்களை படிக்க மாட்டார்கள். அத்தகைய மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளினால் சமூகத்திற்கு என்ன பிரயோசனம்? அதனால், தங்களது அறிவுஜீவி மனோபாவத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளாதார உற்பத்தி முறையான கம்யூனிசத்தையும் வெறும் நூல்களாக மட்டுமே பார்ப்பதில் வியப்பில்லை.

ஆதி கால தமிழர்கள் மத்தியில் இருந்த கம்யூனிச பொருளாதார அமைப்பு பற்றி, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்கள். ஆதி கால கிறிஸ்தவர்களும், கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயமாக இயங்கினார்கள். நமது கால அரசியலில், அவர்களையும் கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கலாம். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யாரும், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய நூல்களை படித்திருக்க வாய்ப்பில்லை.

******

முன்னாள் தமிழ் தேசியவாதிகளான DMK, EPDP, TMVP ஆகிய குழுக்களின் அடாவடித்தனங்கள், "தமிழ்தேசியவாதிகளின் செயல்கள்" ஆகாது. அந்தக் கட்சிகளின் பெயரிலும் ஈழம், தமிழ் என்றெல்லாம் இருக்கின்றன. அதை சுட்டிக்காட்டி, அவை எல்லாம் தமிழ் தேசியவாத கட்சிகள் என்று யாரும் சொல்வதில்லை. பாராளுமன்ற அரசியலில் பங்கெடுக்கும் தமிழ் தேசியவாத கட்சிகளை, எவனும் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் தேசியவாதிகளான புலிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டான்.

ஆனால், கம்யூனிச எதிர்ப்பாளர்களிடம் மட்டும் அப்படிப் பிரித்து அறியும் தன்மை இல்லாமல் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் திரிபுவாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரிகின்றன. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு, சிவப்பாக தெரிவதெல்லாம் கம்யூனிசம் தான். அது அவர்களது அறியாமையா அல்லது மக்களை முட்டாள்களாக வைத்திருக்கும் நோக்கில் செய்யப்படும் அரசியல் பிரச்சாரமா?

******

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமின்னும் ஒரு காலத்தில் தேசியவாதிகளாகத் தான் இருந்தார்கள். ஆயுதமேந்திய கெரில்லாப் போராட்டத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியதும், தங்களது விடுதலை இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆக்கினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்தார்கள். சோஷலிச பொருளாதார திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.

ஒரு பேச்சுக்கு, கியூபா, வியட்நாம் மாதிரி, ஈழத் தேசியவாதி பிரபாகரனின் கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்று, தமிழீழமும் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். புலிகள் தங்களது இயக்ககத்திற்கு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்கின்றனர். தமிழீழத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்து விட்டு, சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

அப்படியான தருணத்தில், இன்று புலிகளை தீவிரமாக ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும், வசதியான நடுத்தர வர்க்க தமிழர்களில் எத்தனை பேர், அப்போதும் புலிகளை ஆதரிப்பார்கள்? அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கேள்வி இது. 

தமது வர்க்க நலன்களுக்கு விரோதமாக நடந்தால், இன்று புலிகளை ஆதரிக்கும் தமிழ் மேட்டுக் குடியினர், நாளைக்கு அதே புலிகளை எதிர்ப்பார்கள். ஏனென்றால், அவர்களது "புலி ஆதரவு அரசியல்" பூர்ஷுவா வர்க்க அடிப்படை கொண்டது. என்றைக்கோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும்.

*******


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Monday, November 11, 2013

தமிழ் தேசியவாதிகளும் இடதுசாரிகள் ஆகலாம்

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன.

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர், இடதுசாரி எதிர்ப்பை தமது நாளாந்த கடமையாக கொண்டுள்ளனர். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் இடதுசாரி எதிர்ப்பாளர்கள் அல்ல. அப்படிப் பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் யாருமே ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பலர், ஒன்றில் அந்த நாடுகளின் குடியுரிமை, அல்லது வதிவிட உரிமை வைத்திருப்பதால், அந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் ஓட்டுப் போடும் வாக்குரிமை பெற்றிருக்கின்றனர். 

அன்றும், இன்றும் பெரும்பான்மையான புலம்பெயர்ந்த தமிழ் வாக்காளர்கள், தேர்தல் வந்தால், எப்போதும் இடதுசாரிக் கட்சிகளுக்கே ஓட்டுப் போடுவது வழக்கம். "தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த", தமிழ் நகரசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட, இடதுசாரிக் கட்சிகளில் சேர்ந்து போட்டியிட்டு வென்றவர்கள் தான். இன்னொருவிதமாக சொன்னால், தமிழ் இடதுசாரி அரசியல்வாதிகள் தான், தமிழினத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்கள்.

இணையத்தில் இடதுசாரி எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்பவர்கள் கூட, தனிப்பட்ட வாழ்வில் இடதுசாரிகளை ஆதரிக்கின்றனர். அதாவது, தேர்தல் காலங்களில், அவர்களும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதுடன், இடதுசாரிக் கட்சி சார்பாக போட்டியிடும் (தமிழ்) வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே, பல்லினக் கலாச்சாரத்தை ஆதரிக்கின்றன. வலதுசாரிக் கட்சிகள் எப்போதும் அதனை வெறுப்புடன் நோக்குகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையில் வலதுசாரிகளை ஆதரிக்காதவர்கள், இணையத்தில் மட்டும் இடதுசாரிகளை எதிர்த்துப் பேசுவது வேடிக்கையானது. அது அதிசயம் மட்டுமல்ல, ஆபத்தானது. அரசியலில் அதற்குப் பெயர் கருங்காலித்தனம்.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: http://www.youtube.com/watch?v=Cvf_YDTst_I) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.