Showing posts with label அரபுக்கள். Show all posts
Showing posts with label அரபுக்கள். Show all posts

Friday, September 27, 2019

அரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் "இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்"?

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.


இபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். "ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், "அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.

யேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், "படித்தவர்கள்" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த "முதலாளிகள்", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

"அசாபியா" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் "தேசியம்" அல்லது "தேசிய இனம்" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

இபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.

மனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.

Friday, October 23, 2009

அலிபாபாவும் ஹாலிவூட் பரப்புரையாளர்களும்

அமெரிக்க ஹாலிவூட் திரைப்படங்களில் அரபுக்களை (அல்லது முஸ்லிம்களை) வில்லன்களாக சித்தரிக்கும் தப்பெண்ணம் சினிமாத் துறையின் ஆரம்பகாலங்களில் இருந்து நிலவி வருகின்றது. திரைப்படங்கள் மூலமாக செய்யப்படம் அரசியல் பிரச்சாரம், அமெரிக்க அரசின் வேலையை இலகுவாக்குகின்றது. நாசி பரப்புரையாளர் கோயபல்ஸ் யூதர்களைப் பற்றி சித்தரித்தமைக்கு சற்றும் குறைந்தனவல்ல ஹாலிவூட் திரைப்படங்களின் பிரச்சாரம். அரபுக்கள் அனைவரும் ஒரே தன்மை உடையவர்களாக பொதுமைப்படுத்துவதும், "எமது எண்ணை", "எமது பணம்", "எமது பெண்கள்" அவர்களால் அபகரிக்கப்படுவதாக காட்டுவதும் இந்த (இனவாத) பிரச்சார சினிமாவின் நோக்கம்.

Jack Shaheen என்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் அரபுக்களுக்கு எதிராக ஹாலிவூட் பயன்படுத்தும் பிரச்சார உத்திகளை அலசுகிறார். Jack Shaheen ஒரு லெபனான்-அமெரிக்கர். இலினோய் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு ஊடகங்கள் பற்றிய விரிவுரையாற்றுபவர்.