இந்த வரலாற்றை மறுப்பவர்கள் கூறும் (வழமையான) காரணம், இந்த குற்றச்சாட்டு தமிழர்களை "பிளவு படுத்துகிறது"(!) என்பது தான். இப்படி பேசுவோர், "தமிழர்கள் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்..." என்ற இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் அதை சொல்கிறார்கள். உண்மையில் அது ஒரு கற்பனை (myth). உலகில் உள்ள ஏனைய இனங்கள் போன்று தமிழர்களும் "ஒரே இனமாக, ஒற்றுமையாக" வாழவில்லை. பகை முரண்பாடு கொண்ட சமூகங்களாக பிரிந்து நின்றனர். இன்றைக்கு அதில் பெருமளவு மாற்றம் வந்திருந்தாலும் வர்க்க முரண்பாடு மாறவே மாறாது. காரணம், இவர்கள் வாழும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு.
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களை அழைத்து வரும் போதே கங்காணிகளையும் கொண்டு வந்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அப்படி நடந்திருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் பிரித்தாளும் கொள்கையில் சிறந்த பிரிட்டிஷ்காரர்கள் காலப்போக்கில் யாழ்ப்பாண கங்காணிகளை பணியில் அமர்த்தினார்கள்.
அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:
1. இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை விட தனித்துவமான வரலாறு, பண்பாட்டை கொண்டவர்கள்.
2. இரண்டு வகை தமிழர்களுக்கு இடையில் உள்ள சாதி வேறுபாடு. அந்தக் காலத்தில் யாரிடமும் மொழி உணர்வு அல்லது இன உணர்வு இருக்கவில்லை. சாதிய உணர்வே மேலோங்கி இருந்தது.
3. யாழ்ப்பாணத் தமிழர்கள் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இது மிக முக்கியமானது. எந்த அதிகார வர்க்கமும் தமக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினருக்கு பதவிகளை கொடுக்கும்.
பொதுவாக முதலாளித்துவ கட்டமைப்பு எவ்வாறு இயங்குமோ அவ்வாறு தான் மலையகத்தில் நிலைமை இருந்தது.
அதாவது முதலாளித்துவ சமுதாயத்தில் 3 வகையான வர்க்கப் பிரிவினைகள் இருக்கும்:
1. பெரும் முதலாளிகள். மலையகத்தில் பெருந்தோட்ட முதலாளிகள். அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேய அல்லது ஐரோப்பிய இனத்தவர்கள்.
2. முதலாளிகளுக்கு சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் அல்லது குட்டி முதலாளிய வர்க்கம். மலையகத்தில் கங்காணிகள், கீழ் மட்ட மனேஜர்கள், அலுவலக ஊழியர்கள். அவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள்.
3. அடித்தட்டு பாட்டாளி வர்க்கம். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்ட தொழிலாளர்கள். தமிழ் பேசினாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர். அதைவிட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக் கொள்ள தயாராக இருந்தவர்கள்.
இவ்வாறு மூன்று வர்க்கப் பிரிவுகளாக மலையகம் இருந்தது. இவர்களுக்குள் இணக்கப்பாடுகள் மட்டுமல்ல முரண்பாடுகளும் இருந்தன. அவற்றைப் பற்றி பேசாமல் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கடந்த கால வர்க்கப் போராட்ட வரலாற்றை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டு இனவாதக் கண்ணோட்டத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவது அதிகார வர்க்க ஒத்தோடித்தனம் அல்லாமல் வேறென்ன? இதைத் தான் தமிழ்த் தேசியம் காலாகாலமாக செய்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment