Monday, April 15, 2024

"இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்த ஜே.வி.பி!" நடந்தது என்ன?

ஜேவிபி க்கு எதிராக தமிழ் தரப்பில், தமிழ் வலதுசாரிகள், முன்வைக்கும் குற்றச்சாட்டு: "யுத்தம் நடந்த காலத்தில் ஜேவிபி யினர் கிராமம் கிராமமாக பிரச்சாரமும் செய்து இராணுவத்திற்கு ஆள் சேர்த்து கொடுத்தனர்!" 

இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் கூட அதை இனவாதக் கண்ணோட்டத்தில் தான் சொல்கிறார்கள். 

1. புலிகளின் காலத்தில், அவ‌ர்களது பிரச்சாரங்களில், "இராணுவம் என்பது தமிழர்களின் இரத்தம் குடிக்க காத்திருக்கும் காட்டேரிகள்" என்று தான் சித்தரிக்கப்பட்டது. உ‌ண்மையான விடுதலைப் போராட்டம் என்றால் இராணுவத்தை வென்றெடுக்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் அதை விடுத்து தமிழர்களுடன் எந்தப் பகைமையும் காட்டாத இராணுவ வீரர்களையும் எதிரிகள் ஆக்கியது தான் புலிகளின் "சாதனை". 


2. வி.பு. தலைவர் பிரபாகரன் "துப்பாக்கிக் குழலிருந்து அதிகாரம் பிறக்கிறது" என்ற மாவோவின் மேற்கோளை சொல்லிக் காட்டுவார். அவர் உண்மையில் மாவோ எழுதிய "தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்புகள்" என்ற நூலை வாசித்து அறிந்து இருந்தால், சிறிலங்கா இராணுவத்தை தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பார். இந்த விஷயத்தில் புலிகள் விட்ட தவறை ஜேவிபி பயன்படுத்தி கொண்டது. 


3. ஜேவிபி தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு விஷயத்தை கவனிக்கவும்: "கிராமம் கிராமமாக இராணுவத்திற்கு ஆள் சேர்த்தார்க‌ள்." கவனிக்கவும்: நகரம் நகரமாக அல்ல "கிராமம் கிராமமாக". இலங்கையின் கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால், வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்களுக்கு  இராணுவத்தில் சேர்வது வறுமையில் இருந்து மீள்வதற்கு ஒரு தெரிவாக உள்ளது. 


4. ஜேவிபி அன்று நடந்த போரை பயன்படுத்தி தனக்கு ஆதரவான ஆட்களை இராணுவத்திற்குள் சேர்த்து விட்டால் பிற்காலத்தில் உதவும் என்று கணக்குப் போட்டதில் தப்பில்லை. ஆ... வந்து... என்று இழுப்பவர்கள் பிரபாகரன் மேற்கோள் காட்டிய மாவோவின் படைப்புகளை வாசித்து விட்டு வாருங்கள். அரச இயந்திரமான இராணுவத்தை கொள்கை ரீதியாக வென்றெடுப்பது விடுதலைப் போராட்டத்தில் அரைவாசி வெற்றியை அடைந்ததற்கு சமன். தற்போது இராணுவத்திற்கு உள்ளே ஜேவிபி ஆட்கள் இருப்பதால் எதிர்காலத்தில் அரசு ஜேவிபி யை ஒடுக்கி அழிப்பது மிக கடினமாக இருக்கும். 


5. வழமையாக ஜேவிபி புலிகளை எதிர்த்து ஏதாவது பேசி விட்டால் அதை தமிழர்களுக்கு எதிராக பேசியது போன்று திரித்து செய்தி வெளியிடுவது வலதுசாரி தமிழ் ஊடகங்களின் வாடிக்கை. பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. சுனாமி கட்டமைப்பு ஒப்பந்தம் அந்நிய நிதி உதவி மூலம் புலிகளை பலப் படுத்தி விடும் என்று ஜேவிபி எதிர்த்தது. ஆனால் அதை தமிழர்களுக்கு எதிரானதாக தமிழ் ஊடகங்கள் சித்தரித்தன. 

1989 ம் ஆண்டு நடந்த ஜேவிபி அழித்தொழிப்பில் புலிகள் அரச படையினருடன் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டனர். தமிழ்த் தேசியவாதிகளுக்கு புரியும் மொழியில் சொன்னால் "அன்று புலிகள் ஒட்டுக் குழுவாக செயற்பட்டு இனப் படுகொலையில் பங்கெடுத்தனர்!" 

அதன் விளைவு: பழிக்கு பழி வாங்குவது மாதிரி பிற்காலத்தில் புலிகளை அழிக்க ஜேவிபி அரச படையினருடன் ஒத்துழைத்தது. இதை சரியென்று சொல்ல வரவில்லை. மேலே வீசுவது தான் கீழே வரும். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதே தான் உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும்.

No comments:

Post a Comment