Sunday, February 16, 2020

அல்பேனியாவில் விழுந்த அமெரிக்க உளவு விமானம் (அல்பேனிய பயணக்கதை - 4)


(பாகம் : நான்கு)

பண்டைய காலத்தில் அல்பேனியர்கள் தமிழகத்திற்கு வந்திருப்பார்களா? அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்திருக்குமா? தற்காலத்தில் இது ஒரு விசித்திரமான, பைத்தியக்காரத்தனமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய அல்பேனியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கிரேக்க மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக சாரன்டே(Sarandë), ஜீரோகஸ்டர்(Gjirokaster), கோர்ஷே(Korçë) ஆகிய நகரங்களிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் கிரேக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் அந்தப் பகுதியை இணைப்பதற்கு கிரேக்க குடியரசு கடுமையாக முயற்சித்தது. கிரேக்க பிராந்தியத்திற்கு பிரிவினை கோரும் ஆயுதபாணி இயக்கம் ஒன்றும் இயங்கியது.

பண்டைய காலத்தில் அல்பேனியாவின் தென் கிழக்குப் பிரதேசம், பண்டைய காலத்தில் கிரேக்க மாநிலமான இயோனியாவுடன் சேர்ந்திருந்தது. ஏன் அல்பேனியா முழுவதும் ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்துள்ளது என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த ரோமர்கள் "யவனர்கள்" என அழைக்கப் பட்டனர். அநேகமாக இன்றைய இயோனியா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யவனர்கள் என அழைக்கப் பட்டிருக்கலாம். ஆகவே, யவனர்கள் என்ற பெயரில் ஒரு சில அல்பேனிய வணிகர்களும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.

தேசிய இன உணர்வு இல்லாதிருந்த அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் பிரதேச உணர்வு இருந்துள்ளது. அதை இன்று நாம் பிரதேசவாதம் என்று அழைத்தாலும், அன்று அது சாதாரணமான விடயம். இதற்கு வரலாற்றில் இன்னொரு உதாரணம் காட்டலாம். டச்சுக்காரர் பிற நாடுகளில் ஹோலந்து நாட்டவர் என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஹோலந்து என்பது இன்றைய நெதர்லாந்து தேசத்தில் ஒரு மாகாணத்தின் பெயர். பண்டைய காலத்து டச்சுக் கடலோடிகள் பெரும்பாலும் ஹோலந்தில் இருந்து சென்ற படியால், அவர்கள் தமது பிரதேசத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு வந்தனர்.

சோஷலிச அல்பேனியாவை நாற்பது வருடங்கள் ஆண்ட கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷா தென் பகுதி கிரேக்க நகரமான ஜீரோகஸ்டரில் பிறந்தவர். அதற்கு அருகில் உள்ள இன்னொரு கிரேக்க நகரமான கோர்ஷேயில் கல்வி கற்றவர். பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் பெற்று பிரான்ஸ் சென்றவர், பொதுவுடைமை அரசியலில் ஈடுபாடு கொண்டு படிப்பைக் குழப்பினார். இருப்பினும் தாயகம் திரும்பிய பின்னர் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது.

இளம் வயது என்வர் ஹோஷா ஆசிரியர் தொழில் செய்த பாடசாலையும் கோர்ஷேயில் தான் இருந்தது. அப்போது அங்கே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்து வந்த வருடங்களில் அல்பேனிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்களில் கோர்ஷே குழுவினரின் பங்களிப்பு முக்கியமானது. 


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அல்பேனியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், ஒரு கம்யூனிச இயக்கம் கட்டி எழுப்புவது இலகுவான காரியம் அல்ல. நாட்டுப்புறங்களில் துருக்கி நிலப்பிரபுக்களான பாஷாக்களின் அதிகாரம் எல்லை கடந்தது. அவர்கள் இயற்கை வளம் குறைந்த அல்பேனியாவை எந்த அபிவிருத்தியும் செய்யாமல் மத்திய காலத்தில் வைத்திருந்தனர். இஸ்லாமியப் பெண்கள் முக்காடு அணிந்து செல்வதும், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதும் சர்வசாதாரணமான விடயங்கள்.

இன்றைக்கு "கம்யூனிச சர்வாதிகாரம், பலகட்சி ஜனநாயகம்" என்று அரசியல் பேசும் யாரும் அல்பேனியா அன்றிருந்த நிலைமையை எண்ணிப் பார்ப்பதில்லை. பின்தங்கிய நிலப்பிரபுத்துவ- பழமைவாத சமுதாயத்தை நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது இலகுவான காரியம் அல்ல. அந்தக் காலகட்டத்தில் எந்தவொரு பால்கன் பிரதேச நாட்டிலும் பல கட்சித் தேர்தல் நடக்கவில்லை. ஏன் கட்சியே இருக்கவில்லை. அந்த வகையில் அல்பேனியாவில் உருவான முதலாவது அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான்.

அந்தக் காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் மட்டும் இத்தாலி காலனியாதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. Balli Kombëtar (தேசிய முன்னணி) என்ற இன்னொரு இயக்கமும் இருந்தது. ஆனால் அது ஒருபோதும் கட்சியாக பரிணமிக்கவில்லை. பள்ளி கொம்பேட்டர் என்பது உள்ளூர் நிலப்பிரபுக்களின் நிதியில் இயங்கிய ஒரு தேசியவாத இயக்கம். இத்தாலி பாசிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நேரம், சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் போட்டிருந்தனர். ஆனால் அந்த ஒற்றுமை அதிக காலம் நீடிக்கவில்லை.

இதற்கிடையே, 1943 ம் ஆண்டளவில், இத்தாலியில் முசோலினி பதவியிறக்கப் பட்ட படியாலும், இத்தாலி தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவும், அல்பேனியாவை ஆக்கிரமித்த இத்தாலிப் படைகள் வெளியேறி விட்டன. அந்த வெற்றிடத்தை ஜெர்மன் நாஸிப் படைகள் நிரப்பின. அப்போது பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தினர் நாஸிகளுடன் கூட்டுச் சேர்ந்து கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். அந்த நேரம் எதிரணியில் இருந்த பிரிட்டிஷ் படையினரும் பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தை ஆதரிந்து வநதனர்.

பள்ளி கொம்பேட்டர் இயக்கம் ஓர் அகண்ட அல்பேனியாவை குறிக்கோளாக கொண்டியங்கியது. அதாவது, அவர்கள் வெறுமனே அல்பேனிய தேசியவாதிகள் மட்டுமல்ல, அல்பேனிய பேரினவாதிகளும் கூட! ஆகையினால் யூகோஸ்லேவியாவில் அல்பேனியரை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலத்திலும் செயற்பட்டு வந்தனர். அங்கு முன்னேறிக் கொண்டிருந்த டிட்டோவின் கம்யூனிசப் படையினரால் தோற்கடிக்கப் பட்டனர். அந்தத் தோல்விக்குப் பின்னர் கொசோவோவில் இருந்து வெளியேறிய பள்ளி கொம்பெட்டர் இயக்க உறுப்பினர்கள் (அல்லது ஆதரவாளர்கள்) அல்பேனியாவுக்குள் நுழைந்தனர்.

ஆனால், அப்போது அல்பேனியா முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டிருந்தது. அவர்களும் அங்குள்ள பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்று கொண்டிருந்தனர். அதனால் கொசோவோவில் இருந்து தப்பி வந்த அல்பேனிய தேசியவாதிகளை பிடித்து மொன்டிநீக்ரோவில் இருந்த யூகோஸ்லேவிய கம்யூனிசப் படைகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்.

அன்று நடந்த வரலாற்று சம்பவத்தை நினைவுகூரும் இன்றைய முதலாளித்துவ ஊடகவியலாளர்கள், அதை இனவாதக் கண்ணோட்டத்துடன் திரித்து சொல்லி வருகின்றனர். அதாவது, கொசோவோ அல்பேனியர்களை யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சி படுகொலை செய்தமைக்கு, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி உடந்தையாக இருந்தது என்று கூறுகின்றனர். சுருக்கமாக சொன்னால் "இனத்துரோகம்"!

நான் இந்த சம்பவத்தை இங்கே விவரித்துக் கூறக் காரணம் இருக்கிறது. பால்கன் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள் குறித்து வெளியுலகில் உள்ள பலருக்கு சரியான புரிதல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எந்த மொழி பேசும் தேசியவாதியாக இருந்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டுடன் இருந்தனர். ஸ்லோவேனியா முதல் அல்பேனியா வரையில் பால்கன் பிராந்தியம் எங்கும் இது தான் நிலைமை. அதாவது, தேசியவாதிகளின் எதிரிகள் கம்யூனிஸ்டுகள். அதனால் அன்று எல்லா நாடுகளிலும் "சகோதர யுத்தங்கள்" நடந்தன.

அல்பேனியாவில் கம்யூனிஸ்ட் அரசமைந்த பின்னர் ஆயிரக்கணக்கான தேசியவாதிகள் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறுகிய கால நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கணக்கான பள்ளி கொம்பேட்டர் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரினார்கள். குறிப்பாக ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை சி.ஐ.ஏ. சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்கு இத்தாலியில் இருந்த அமெரிக்க படைத்தளத்தில் இராணுவ பயிற்சி அளிக்கப் பட்டது.

பனிப்போர் காலத்தில் முன்னாள் அல்பேனிய தேசியவாதிகள், அமெரிக்காவின் ஒட்டுக்குழுவாக மாற்றப் பட்டனர். அவர்களை அல்பேனியாவுக்குள் ஊடுருவ வைத்து கம்யூனிச அரசுக்கு எதிரான கிளர்ச்சியை உண்டாக்குவதே அமெரிக்காவின் திட்டம். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா அனுப்பிய ஊடுருவல்காரர்கள் எல்லோரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களிடமிருந்த அமெரிக்க நவீன ஆயுதங்களும் பிடிபட்டு விட்டன. நீண்ட காலமாக அமெரிக்கா இந்தத் தகவல்களை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மூடி மறைக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் "கம்யூனிச சர்வாதிகாரத்திற்கு பலியானவர்கள்" என்று பிரச்சாரம் செய்கின்றன. 1944 ம் ஆண்டு, அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்னர் தம்மை எதிர்த்து போரிட்ட பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தின் எஞ்சிய உறுப்பினர்களை தேடிப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த விடயம் அத்துடன் முடியவில்லை. சி.ஐ.ஏ. அனுப்பிய ஒட்டுக்குழுவினரும் முன்னாள் பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்கள் தானே? ஆகவே உள்நாட்டில் இன்னமும் அதன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவிகள் அல்ல. 


நான் இங்கு கூறிய முன்கதை தான் என்னை ஜீரோகாஸ்டர் நோக்கி பயணம் செய்ய உந்தித் தள்ளியது. அது திரானாவில் இருந்து தெற்கே முன்னூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்வதென்றால் தொலைதூர நகரங்களுக்கு செல்லும் மினிபஸ் பிடிக்க வேண்டும். அதற்கு முதலில் திரானா நகர மத்தியில் இருந்து காமேஸ்(Kamez) எனும் இடத்திற்கு செல்ல வேண்டும். அல்பேனியாவின் பொதுப் போக்குவரத்து வண்டிகளில் இன்னமும் ஒரு கண்டக்டர் டிக்கட் கிழித்துக் கொடுக்கிறார். நகரத்தின் உள்ளே பயணம் செய்வதற்கு பஸ் கட்டணம் மிக மிகக் குறைவு. நாற்பது லெக்(0.30 யூரோ சதம்). திரானாவிலிருந்து ஜீரோகஸ்டர் பயணச்சீட்டு 1000 லெக்(8 யூரோக்கள்).

ஜீரோகஸ்டர் செல்லும் நான்கு அல்லது ஐந்து மணிநேரப் பயணத்தில் வழியில் நிலவமைப்பு மாறுவதைக் காணலாம். முதலில் கடற்கரையோரமாக பயணம் செய்யும் பொழுது ஏராளமான டூரிஸ்ட் ரிசொர்ட்டுகள் இருப்பதையும், புதிதாக பல கட்டப் பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இரண்டு, மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் சனநெருக்கடி மிக்க கரையோரப் பிரதேசம் மறைந்து, மனித நடமாட்டமே இல்லாத மலைப் பகுதிகள் தென்படும். 


ஜீரோகாஸ்டர் ஒரு மலைப் பிரதேசத்தில், கிரீஸ் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய நகரம். அங்குள்ள மத்திய காலத்து கோட்டை தான் எனது பயணத் திட்டத்தில் அடங்கி இருந்தது. அது நகர மத்தியில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு குன்றின் மீது உள்ளது. booking.com மூலம் தேடிப் பிடித்த ஹொஸ்டல், கோட்டையின் பின்புறத்தில் இருந்தது. அங்கு சென்ற பின்னர் தான் அது ஒரு முட்டாள்தனமான தெரிவு என்று தெரிந்தது. ஏனெனில் நகர மத்தியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மலைக் கிராமத்தில் அந்த ஹொஸ்டல் இருந்தது. 

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளுக்குப் பின்னால் ஏதாவதொரு பயனுள்ள அனுபவம் காத்திருக்கும். அன்று அந்தக் ஹொஸ்டலில் நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி. ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணும், அவரது வயோதிப தாயாரும் அந்த ஹொஸ்டல் நடத்துகிறார்கள். அது அவர்களது வீட்டுக்குப் பின்னால் உள்ளது.

அந்தப் பெண்களுக்கு ஆங்கிலம் ஒரு சொல் கூடத் தெரியாது. இருப்பினும், "டூரிஸ்ட்" என்ற ஒரு சொல் போதுமாக இருந்தது. என்னைக் கூட்டிச் சென்று தங்கும் அறையையும், குளியல் அறையையும் காட்டி விட்டார்கள். மேலதிக விபரங்களுக்கு, அந்தப் பெண்மணி தனது ஆங்கிலம் பேசத் தெரிந்த மகனை தொலைபேசியில் அழைத்து பேச வைத்தார். அடுத்த நாள் காலைச் சாப்பாடு கொடுத்து நன்றாக உபசரித்து அனுப்பினார்கள். அல்பேனிய பாரம்பரிய உணவு கிட்டத்தட்ட ஆடிக் கூழ் மாதிரி இருந்தது. குடிப்பதற்கு சுத்தமான பசும் பாலும், தேனும் தந்தார்கள். எமது ஊரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையில் இன்று நாம் இயந்திரமயமாக்கப் பட்ட மேற்கத்திய நகர வாழ்க்கையில் இவற்றின் சுவை கூட தெரியாமல் வாழ்கிறோம்.


நான் அங்கு மதிய வேளை சென்ற படியால் எனது பயணப் பொதியை அறையில் வைத்து கதவை சாத்தி விட்டு வெளியே இடம் பார்க்க சென்றேன். கவனிக்கவும், ஹொஸ்டல் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நம்பகத்தன்மை மிக உயர்வாக இருந்தது. அவர்கள் எனது பாஸ்போர்ட் வாங்கிப் பார்க்கக் கூட இல்லை. என்னைப் பற்றிய எந்த விபரமும் பதிவு செய்யவில்லை. நான் போவதும் வருவதும் கூடத் தெரியாது. அடுத்த நாள் காலையில் நானாகவே அவர்களது வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். இந்த தகவலை எனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட போது நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார். பெரும்பாலான வறிய நாடுகளில் நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் நேர்மையானவர்கள். கள்ளங்கபடம் அற்றவர்கள். அத்துடன் அவர்கள் வெளிநாட்டவர்களை நம்புகிறார்கள். 


நான் தங்கி இருந்த ஹொஸ்டலில் இருந்து ஜீரோகஸ்டர் கோட்டை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. அப்படி இலகுவாக சொல்லி விடலாம். ஆனால் செல்லும் வழி கரடுமுரடாக இருந்தது. ஒரு மலையில் இருந்து இறங்கி இன்னொரு மலையில் ஏற வேண்டும். இரண்டுக்கும் நடுவில் ஓடும் ஆற்றை ஒரு குட்டிப் பாலத்தில் கடக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல தேகாப்பியாசம் தான். தூய்மையான மலைக் காற்றை சுவாசிப்பது ஒரு சுகமான அனுபவம். மேலும் மலையில் ஏறி இறங்குவதற்கு கருங்கல்லால் கட்டப் பட்ட படிகள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவை. நாம் தான் மிகவும் அவதானமாக நடந்து செல்ல வேண்டும். அநேகமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டிய படிகள் இப்போதும் பாவனையில் இருப்பதைப் போலிருந்தது. அந்தப் பகுதியில் நடக்கும் பொழுதே காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று பண்டைய காலத்தில் நடமாடுவது போன்ற உணர்வு தோன்றியது. 



ஜீரோகஸ்டர் கோட்டை, ஒரு காலத்தில் அல்பேனியாவை பல்வேறு குறுநில மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப் பட்டது. ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மலைப் பிரதேசங்களில் குட்டி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவை வெளியுலகுடன் தொடர்பு வைக்கவில்லை. குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே அதிகாரம் செலுத்திய குட்டி ராஜ்ஜியங்களில் தான் அல்பேனியரின் தனித்துவமான கலாச்சாரம் பேணப்பட்டு வந்தது. துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர், அல்பேனியா மீண்டும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் பகுதியாகியது. 


ஜீரோகஸ்டர் கோட்டையை ஓட்டோமான் படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றுவதற்கு தயாரான நேரம், எதிரிப் படைகளிடம் அகப்பட விரும்பாத இளவரசி தனது குழந்தையுடன் மதிலில் ஏறிக் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், குழந்தை மட்டும் உயிர் தப்பியதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றதாம். இந்தத் தகவல் இளவரசி குதித்ததாக சொல்லப்படும் இடத்தில் உள்ள கோட்டை மதில் பகுதியில் எழுதப் பட்டுள்ளது. தற்போதும் கோட்டையின் மேல் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கட்டையானது. அருகில் செல்லாமல் அவதானமாக இருக்குமாறு அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. 


அந்தக் கோட்டை மிகப் பிரமாண்டமானது. ஒரு காலத்தில் அதுவே ஒரு சிறிய நகரமாக செயற்பட்டு வந்தது. தற்போது அங்குள்ள மைதானத்தில் வருடம் ஒருமுறை கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அந்தக் கோட்டை ஓட்டோமான் ஆட்சியின் கீழிருந்த நேரம் பயன்பாட்டில் இருந்த ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகம் இன்னமும் உள்ளது. அங்கு தான் படையினருக்கும் உணவு தயாரிக்கப் பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், அந்தக் காலத்தில் பயன்படுத்திய கனரக ஆயுதங்களை கோட்டையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். ஆர்ட்டிலறி கருவிகள், மோட்டார் குழாய்கள் போன்ற ஆயுதங்களை கிட்ட நின்று பார்த்து இரசிக்கலாம். இத்தாலிப் படையினர் பாவித்த சிறிய ரக தாங்கி ஒன்றும் அங்கே வைக்கப் பட்டுள்ளது.

கோட்டையின் மேல் மாடத்தில் ஒரு சிறிய விமானம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. அது ஓர் அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க விமானம் எவ்வாறு அல்பேனியாவுக்கு வந்தது என்று ஆச்சரியப் படுவோர், நான் இங்கு எழுதிய முன்கதைச் சுருக்கத்தை வாசிக்கவும். அதாவது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அமெரிக்கா பல்வேறு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தாலியில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தில் கிளம்பும் விமானங்கள் அல்பேனிய வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவி வேவு பார்த்து வந்தன. உளவுத்தகவல்கள் சேகரிப்பது மட்டுமல்லாது, சி.ஐ.ஏ. யால் அனுப்பப் பட்டு அல்பேனியாவினுள் ஊடுருவியுள்ள கம்யூனிச விரோத ஒட்டுக்குழுவினருக்கு ஆயுதங்கள் விநியோகிப்பது, தகவல் பரிமாறுவது போன்ற வேலைகளிலும் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டன. அது பனிப்போர் காலம் என்பதால் இந்த நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. 



அவ்வாறு இரகசிய பறப்பில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் ஒன்று அல்பேனிய இராணுவத்தால் பலவந்தமாக தரையிறக்கப் பட்டது. சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இரகசியமாக வைத்திருந்த அமெரிக்கா சில மாதங்களின் பின்னர் தனது விமானம் ஒன்றைக் காணவில்லை என்று அறிவித்திருந்தது. அல்பேனியர்களும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னர் இத்தாலியில் உள்ள அமெரிக்கப் படைத் தளத்துடன் தொடர்பு கொண்டு தம்மிடம் பிடிபட்ட அமெரிக்க விமானியை ஒப்படைக்க சம்மதித்தனர். அப்படியே விமானியை மட்டும் திருப்பி அனுப்பி விட்டு, விமானத்தை இந்தக் கோட்டையில் கொண்டு வந்து வைத்து விட்டனர். இந்தத் தகவல் அன்றைய அமெரிக்க தினசரிப் பத்திரிகைகளில் வெளியானது. 

என்வர் ஹோஷா பிறந்த வீடு

ஜீரோகஸ்டர் கோட்டையை பார்த்து முடிந்து வெளியே வந்த பின்னர் தான், அங்கே இன்னும் பல சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள் இருப்பது தெரிய வந்தது. அங்கெல்லாம் செல்ல நேரம் இருக்கவில்லை. நேரம் ஐந்து மணியான படியால் பூட்டியிருந்தார்கள். கோட்டையில் இருந்து நகர மத்தியை நோக்கி செல்லும் வழியில் தான் என்வர் ஹோஷா பிறந்த வீடு இருக்கிறது. முன்பு அது ஒரு சிறிய வீடாக இருந்து விபத்தொன்றில் எரிந்து விட்டதாம். பிற்காலத்தில், அதாவது கம்யூனிச ஆட்சிக் காலத்தில் அது பெரிதாக கட்டப்பட்டு என்வர் ஹோஷாவின் அருமை பெருமைகளைக் கூறும் மியூசியமாக இருந்தது. ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு அங்கிருந்த ஹோஷாவின் படங்கள், நினைவுச் சின்னங்களை எல்லாம் அகற்றி விட்டார்கள். தற்போது அது அல்பேனிய இனத்துவ - கலாச்சார அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. 


அது ஒரு நகர்ப் பகுதியாக இருந்த போதிலும் கருங்கல் கற்களால் செதுக்கப்பட்ட பாதைகள் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. சில இடங்களில் செங்குத்தாக இறங்கின. மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது. ஹொஸ்டல் திரும்பும் வழியில் துரித உணவுக் கடை ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன். அல்பேனிய துரித உணவு கிட்டத்தட்ட கிரேக்க கீரோஸ், அல்லது துருக்கி கெபாப் போன்று இருக்கும். சிறு துண்டுகளாக சீவப்பட்ட இறைச்சித் துண்டுகள், உருளைக்கிழங்கு பொரியல், சலாட்டுடன் சேர்த்து, ஒரு ரொட்டியில் சுற்றித் தருவார்கள். மூன்று யூரோவுக்கு வயிறு நிறைய சாப்பிடலாம்.

அடுத்த நாள் மீண்டும் திரானா திரும்பி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. மீண்டும் திரானா அன்னை தெரேசா சர்வதேச விமான நிலையம். கெடுபிடி இல்லாத அமைதியான விமான நிலையத்தை நான் வேறெங்கும் காணவில்லை. குடிவரவு அதிகாரிகளும் சில நிமிடங்களில் பாஸ்போர்ட் பார்த்து தந்து விடுகிறார்கள். அந்த விமான நிலையத்தில் அல்பா விங்க்ஸ் விமான சேவை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் தென்பட்டன. அது அண்மைக் காலத்தில் உருவான தனியார் விமான நிறுவனம். அது பெரும்பாலும் இத்தாலி நகரங்களை நோக்கித் தான் பறக்கின்றது.

முன்பு அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் வான் வழிப் போக்குவரத்து மிக மிகக் குறைவாகவே நடந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தலைவர்கள் பயணம் செய்வதற்கென சில விமானங்கள் இருந்தன. அவர்களும் சோவியத் யூனியனுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர் எந்தவொரு நாட்டிற்கும் பயணம் செய்யவில்லை! அந்நேரம் சோவியத் செம்படை செக்கோஸ்லோவாக்கியா கிளர்ச்சியை ஒடுக்கியதை அல்பேனியா கண்டித்திருந்தது. அதன் விளைவாக வார்ஷோ ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகியது. அந்தத் தருணங்களில் சோவியத் படைகள் அல்பேனியா மீது படையெடுத்து வரலாம் என்றும் அஞ்சினார்கள்.

1960 ம் ஆண்டு தான், அதிபர் என்வர் ஹோஷாவின் கடைசி வெளிநாட்டுப் பயணம் இடம்பெற்றது. அதுவும் சோவியத் யூனியனுக்கு தான். கொமின்தேர்ன் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொஸ்கோ சென்றிருந்த என்வர் ஹோஷா, ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக குருஷேவுடன் முரண்பட்ட படியால், அன்றிலிருந்து சோவியத் யூனியனுடனான தொடர்புகள் யாவும் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதன் பின்னர் இரு தசாப்த காலம் மாவோவின் சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தனர். அப்போது அல்பேனியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சீனா பெருமளவு பங்களிப்பை வழங்கி இருந்தது. அந்தக் காலங்களில் சீன விமானங்கள் அடிக்கடி வந்து சென்றன.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் அல்பேனிய மக்கள் மட்டுமல்ல, தலைவர்கள் கூட வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டில் முடங்கிக் கிடந்தனர். அல்பேனியா பல தசாப்த காலமாக எந்தவொரு உலக நாட்டுடனும் சேராமல், முற்றிலும் தனிமைப் பட்டிருந்தது. அயல் நாடுகளுடனான எல்லைகள் யாவும் மூடப் பட்டிருந்தன. ஏன் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஒருவேளை, 1999 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியின் பின்னர் நடந்த சம்பவங்களில் இதற்கான விடை கிடைக்கலாம். 

தொண்ணூறுகளில் முதலாளித்துவம் என்றால் என்னவென்று அறிந்திராத ஒரு சமூகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்தன. அது பிரமிட் மோசடி என்று அழைக்கப் படுகின்றது. சேமிப்புப் பணத்திற்கு ஐம்பது சதவீத வட்டி கிடைக்கும் என்று விளம்பரத்தை நம்பிய அப்பாவி மக்கள் தம்மிடம் இருந்த காணிகளை கூட விற்று பணம் போட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனங்கள் திவாலாகி விட்டதாக அறிவிக்கப் பட்டன. அல்பேனிய மக்கள் அனைவரும் ஒரே நாளில் தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர்.

இந்த பிரமிட் மோசடியில் ஆளும் ஜனநாயகக் கட்சி அரசாங்கமும் உடந்தை என்பதை அறிந்த மக்கள் கிளர்ந்தெழுந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர சபைக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. பொலிஸ், இராணுவம் எதுவும் அரசைக் காப்பாற்ற முன்வரவில்லை. அது மட்டுமல்ல, ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் நிலையங்களை தாக்கிய நேரம் போலீஸ்காரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து கொண்டனர். இராணுவ முகாம்களிலும் இதே கதை நடந்தது.

முன்பு கம்யூனிச காலகட்டத்தில் நடந்தது மாதிரி, அல்பேனிய இராணுவம் தம்மிடமிருந்த ஆயுதங்களை மக்களிடம் பங்கிட்டுக் கொடுத்தது. சில இடங்களில் மக்கள் ஆயுதக் களஞ்சியங்களை கொள்ளையடித்த நேரம் இராணுவம் தடுக்கவில்லை. அன்று மக்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அரசு நிராயுதபாணியாக இருந்தது. அல்பேனியா ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றது. இறுதியில் இத்தாலியில் இருந்து நேட்டோ இராணுவம் படையெடுத்தது. அல்பேனிய அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கிய பின்னர் தான் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தத் தகவல்கள் இப்போது தான் உங்களுக்கு தெரியும் என்றால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. நீங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும், எதை அறிந்து கொள்ளக் கூடாது என்பதை மேற்கத்திய ஊடகங்களே தீர்மானிக்கின்றன.

(முற்றும்) 

No comments:

Post a Comment