Wednesday, January 17, 2018

முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் சோஷலிசக் கரு தோன்றும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்
 (பாகம் - மூன்று) 

முதலாளித்துவ அரசை தூக்கி எறிவதற்கு ஓர் ஆயுதப் புரட்சி அவசியமா? பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய ஆயுதமேந்திய மக்கள் எழுச்சி எந்தக் காலகட்டத்தில் தோன்றும்? அதன் அரசியல் சமூகப் பின்னணி என்ன? நட்பு சக்திகள் எவை? பகைச் சக்திகள் எவை? ஏகபோக முதலாளித்துவ அரசின் குணங்குறிகள்...

இந்தக் கட்டத்தில், உழைக்கும் வர்க்கமும் அதன் நட்பு சக்திகளும் முன்னரங்கிற்கு வந்து போராடுகின்றன. அந்தப் போராட்டத்தை எந்தளவு வன்முறை பிரயோகித்தும் அடக்கி விட முடியாது. உழைக்கும் வர்க்கம் தனது தற்காப்புக்காக ஆயுதமேந்தி இருக்கும். மிகப் பெரிய அளவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் காரணமாக மோதல்கள் இடம்பெறும். முதலாளித்துவ அரசுக்கெதிரான அதிகாரத்திற்கான ஆயுத மோதல்கள் ஓர் உள்நாட்டுப் போராக காணப்படும். கம்யூனிசக் கருத்துக்கள் பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களினால் உள்வாங்கப் பட்டு, இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளிய வர்க்கம் தப்ப வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும். ஏகபோக முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வந்த கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டிருக்கும். அரசு இயந்திரம் இயங்க இயலாமல் போய் விடும். அறிவுஜீவிகளான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தினால் வென்றெடுக்கப் பட்டிருப்பார்கள், அல்லது நடுநிலை வகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருப்பார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நேரடி செயற்பாட்டுக்கான கோஷங்களின் மூலம் ஆயுதப் போராட்டக் களத்தில் குதிக்கும். அது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் உச்சகட்டமாக கருதப்படும். இந்த போராட்ட வடிவத்தில் உத்திகளும், தந்திரோபாயங்களும் மாறுபடும். கட்சியும், உழைக்கும் வர்க்கம், இந்தக் கட்டத்தில் ஏற்படும் அனுபவ பாடங்களில் இருந்து புதிய படிப்பினைகளை பெற வேண்டி இருக்கும்.

வர்க்கப் போராட்டமானது, எவருடைய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால் தூண்டப் படுகின்றது. உழைக்கும் வர்க்கம் தீர்மானகரமான முடிவெடுக்க வைக்கும் காலகட்டம் எவ்வாறு உருவாகின்றது என்பதை இப்போது பார்ப்போம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில், மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் முதலாளித்துவத்தின் சுதந்திரமான போட்டியை ஆராய்ந்து எழுதியுள்ளனர். இருப்பினும், முதலாளித்துவமானது சுதந்திர வர்த்தகப் போட்டி என்ற காலகட்டத்துடன் நின்று விடவில்லை. அதற்கும் அப்பால் வளர்ச்சி அடைந்தது. அது ஏகபோக முதலாளித்துவம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தது. அது பின்னர் ஏகபோக முதலாளித்துவ அரசாக பரிணமித்தது.

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" நூலில் லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 
//போட்டியானது ஏகபோகமாக மாற்றப் பட்டது. அதன் விளைவாக உற்பத்தி பெருமளவில் சமூகமயமாக்கப் பட்டது. விசேடமாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும், அதன் வளர்ச்சியும் சமூகமயமாக்குவதற்கு உதவின. இது ஏதோ ஒரு வகையில் சுதந்திரமாக போட்டியிடும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாறுபடுகின்றது. அவர்கள் ஒருவரை மற்றவர் அறியாமல் பரவி இருந்ததுடன், வெளித்தெரியாத சந்தை ஒன்றுக்காக உற்பத்தி செய்தனர்..... ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்த முதலாளித்துவமானது உற்பத்தியை சமூகமயமக்கும் கட்டத்திற்கு நேரடியாக வழிநடத்திச் செல்கின்றது. அதன் அர்த்தம், எல்லா முதலாளிகளையும், அவர்களது விருப்பத்திற்கு மாறாக, புதியதொரு சமூக ஒழுங்கமைப்பை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. அது முழுமையான சுதந்திர (வர்த்தகப்) போட்டியில் இருந்து முழுமையான சமூகமயமாக்கும் கட்டத்திற்கு மாற்றமடைகின்றது.// - லெனின்

லெனினின் கூற்றை நாம் இலங்கை, இந்திய நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த நாடுகள் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்த காலத்திற்குப் பிறகு, சுதந்திரமாக போட்டியிடும் முதலாளித்துவ நடைமுறையை கொண்டிருந்தது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த மாதிரியான காலகட்டம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாட்டில் மட்டுமல்லாது, ஒவ்வொரு பிரதேசத்திலும் வித்தியாசமான பொருட்கள் உற்பத்தியாகி சந்தைக்கு வந்தன.

அது மட்டுமல்லாது, மேற்குலகில் சந்தைக்கு வந்த புதிய தொழில்நுட்பமானது, இலங்கை, இந்தியாவில் பாவனைக்கு வருவதற்கு பல வருடங்கள் எடுத்தன. ஆனால், இப்போது நிலைமை அப்படி அல்ல. கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, அனைத்து புதிய தொழில்நுட்பக் கருவிகளும் உடனுக்குடன் வாங்கக் கூடியதாக உள்ளது.

அதன் அர்த்தம், ஏகபோக முதலாளித்துவம் மேலாதிக்கம் செலுத்துவதால் உற்பத்தி உலகமயமாகியுள்ளது. முதலாளிகள் விரும்பியோ, விரும்பாமலோ, உற்பத்தி சமூகமயமாகி விட்டது. அதாவது, உற்பத்தி சமூகமயமாகும் போதே சோஷலிசத்தின் கரு உருவாகி விட்டது.

முதலாளித்துவத்தின் இந்த வளர்ச்சிக் கட்டம் இன்றியமையாதது. இது சமூகத்திற்கான உற்பத்திக்கும், தனியார் கையகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கிறது. இத்தகைய புதிய சமுதாய மாற்றம் ஏற்படும் நேரத்தில், முதலாளித்துவத்தின் உள்ளே சோஷலிசம் என்ற புதிய சமுதாய அமைப்பு தோன்றுகின்றது.

இந்த வளர்ச்சிக் கட்டத்தில், சோஷலிசம் முற்றிலும் புதியதொரு பாத்திரத்தை ஏற்கிறது. அரசு என்பதன் மூன்று வகை வளர்ச்சிக் கட்டங்கள்: 
  1. சுதந்திர வர்த்தகப் போட்டி கொண்ட முதலாளித்துவ காலகட்டத்தில், அரசு முதலாளிய வர்க்கம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தியது. 
  2. முதலாளிய வர்க்கத்தில் ஒரு பிரிவினர் ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர். அத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலத்தில், வர்த்தகத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் அரசை தமக்கு அடிபணிய வைத்தன. 
  3. ஏகபோக அரசு அமையும் காலத்தில், அரசு முற்றுமுழுதாக ஏகபோக மேலாண்மை பெற்ற நிறுவனங்களின் கருவி ஆகின்றது.

இன்னும் விரிவாக, "ஏகபோக முதலாளித்துவ அரசு" என்றால் என்ன?

ஏகபோக முதலாளிய அதிகாரம், அரச கட்டமைப்புடன் ஒன்று சேரும். அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், ஏகபோக பொருளாதார - அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும். அந்த வகையில், இன்று பல மேற்கத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவ அதிகாரக் கட்டமைப்பே உள்ளது. அது சிறு வணிகர்களையும், சிறு முதலாளிகளையும் அடக்கியொடுக்கி அழித்து விட்டது.

உதாரணத்திற்கு, எந்த மேற்கத்திய நாட்டிலும் பெட்டிக் கடைகள், தனியார் மரக்கறிக் கடைகள் போன்றவற்றை காண்பதரிது. ஏகபோக முதலாளிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகள் அந்த இடத்தை பிடித்து விட்டன. பெட்டிக் கடைகள் கூட நாடளாவிய பெரிய நிறுவனம் ஒன்றின் கிளைகளாக மாறி விட்டன. இந்த மாற்றம் தற்போது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் விரைவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஏகபோக முதலாளித்துவ அரசு என்ற கட்டத்தை அடைவது, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இறுதிக் கட்டம் ஆகும். இதை லெனின் ஏற்கனவே கண்டறிந்ததுடன், அதை வர்க்கப் போராட்டத்திற்கான தீர்மானமாகவும் எடுத்துரைத்தார்.

//முதலாளித்துவமானது ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதாவது ஏகபோக முதலாளித்துவம். (உலகப்)போரின் விளைவாக ஏகபோக முதலாளித்துவ அரசு உருவானது. நாங்கள் தற்போது சோஷலிசத்திற்கான படிக்கட்டை கொண்ட உலகப் பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில் நிற்கிறோம்.// - லெனின்

ஆகையினால், இன்றுள்ள ஏகபோக முதலாளித்துவ அரசு கட்டமைப்பை, சோஷலிசத்திற்கு செல்வதற்கான படிக்கட்டாக நாம் கருத வேண்டும். அதன் குணங்குறிகளை நாம் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

  • தொழிநுட்ப வளர்ச்சியானது இன்று பலமடங்கு விரிவடைந்துள்ளது. கணணி மயமாக்களில் இருந்து மிகச் சிறிய இலத்திரனியல் கருவிகள் பாவிக்கும் அளவிற்கு வந்து விட்டது. அதாவது, மிகத் தீவிரமாக உற்பத்திகள் சமூகமயமாக்கப் பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இன்று ஸ்மார்ட் போன் பாவனை உலகம் முழுவதும் கிராமங்களில் கூட நுழைந்து விட்டது. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மேற்கத்திய நாடுகளில் அறிமுகமாகும் அடுத்த நாளே, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கின்றன. இது எந்தளவு தூரம் உற்பத்தி சமூக மயமாகியுள்ளது என்ற உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதன் அடுத்த படியாக, உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்கும் கட்டத்தை (சோஷலிசம்) நோக்கி நகர வேண்டும்.

  • புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆவன, மிகப் பெரிய, உறுதியாக வளரக் கூடிய நிறுவனங்களில் தங்கியுள்ளன. அது கார்பரேட் நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. இதெல்லாம் திட்டமிட்ட பொருளாதார செயற்பாட்டை கொண்டுள்ளன. முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த திட்டமிட்ட பொருளாதாரத்தை பார்த்து கேலி பேசியவர்கள், இன்று கார்பரேட் நிறுவனங்களின் திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிக்கும் முரண்நகையை காணலாம். இரண்டு இடங்களிலும் திட்டமிடல் பொருளாதாரம் என்பது ஒரே விடயமாக இருந்த போதிலும், கார்பரேட் நிறுவனங்களால் செயற்படுத்தப் படும் பொழுது அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே, நாம் இனி வருங்காலத்தில் சுரண்டலற்ற திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை வருகின்றது. ஏகபோக முதலாளித்துவ அரசு, தானாக பதவி விலகி அதிகாரத்தை கைவிட்டு விடும் என்று எதிர்பார்க்க முடியாது. பாட்டாளிவர்க்கம் கேட்டவுடன் ஏகபோக முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்து விடும் என்று யாராவது நம்பினால், அவர் கனவு காண்பவராக இருப்பார். இந்தக் கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோளானது, அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.


(பிற்குறிப்பு: ஒரு மார்க்ஸிய வகுப்பிற்காக தயார் படுத்திய குறிப்புகளைக் கொண்டு எழுதிய  கட்டுரை. Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. மேலதிக விளக்கம் தேவைப் படுவோர் அந்த நூலை வாசிக்கலாம்.)



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

2 comments:

  1. சிறிய சந்உதேகம்ற்தான் தோழர். உற்பத்தி சமூக மயமாக்கல் என்பது, தொழில்நுட்பம் தற்எபோது எல்லோர் கைகளிலும் இருப்பதே என்று பொருள் படுகிறது. இது சரியா. உற்பத்திக்கான பொருள் பல இடங்களிலிருந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒன்று சேர்க்கப்படுவதல்லவா. உதாரனம் காருக்கான உதிரி பாகங்கள் தொடங்கி இருதியாக உருவாகும் இடம். இதுவல்லவா உற்சபத்தி சமூகமயமாக்கல்.... தவறு எனில் சரி செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்ன உதாரணம் பொதுவாக ஒரு முதலாளித்துவ நிறுவனம், உற்பத்தியை பிற நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுப்பது பற்றியது. அது வேறு விடயம். வேலைப் பிரிவினை மாதிரி உற்பத்திப் பிரிவினை. ஆனால் கட்டுரை கூறும் சமூகமயமாக்கல் வேறு. அது அத்தியாவசிய அல்லது ஆடம்பர பொருட்க‌ள் அனைவருக்கும் கிடைப்பது. உதாரணமாக, மேற்கத்திய நாடுகளில் சாதாரண தொழிலாளியும் கார் வைத்திருக்கிறார். இந்தியாவில் மோட்டார் சைக்கிள் பாவனை கணிசமான அளவு கூடியுள்ளது. கிராமங்களிலும் சர்வசாதாரணம். அதன் அர்த்தம், அந்தப் பொமுட்கள் அனைவரும் வாங்கக் கூடிய விலைக்கு விற்கப் படுகின்றது. இங்கு உற்பத்தி சமூகமயமாகி உள்ளது. அதாவது ஏழை, பணக்காரன் பேதமின்றி எல்லோருக்காகவும் உற்பத்தி செய்கிறார்கள்.

    ReplyDelete