Friday, December 29, 2017

எழுபதுகளில் இத்தாலியை உலுக்கிய கம்யூனிச கெரில்லா இயக்கம்


எழுபதுகளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச இளைஞர்களின் ஆயுதக் குழுக்கள் இயங்கின. பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் ஆதரவுத் தளம் கொண்டிருந்த இயக்கங்கள், அரசுக்கு எதிரான கெரில்லா யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இத்தாலியில் இருந்த இயக்கத்தின் பெயர் பிரிகாட்டே ரோசே (Brigate Rosse : செம் படைப் பிரிவு). 1970 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட இயக்கம் மாரியோ மொறேத்தி என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.

இத்தாலிய செம்படை தோன்றிய காரணத்தை புரிந்து கொள்வதற்கு, நாம் இத்தாலிய வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலேயே, இத்தாலிய கம்யூனிஸ்ட் போராளிகள் வட இத்தாலியின் பல பகுதிகளை சொந்தப் பலத்தில் விடுதலை செய்திருந்தனர். சிலநேரம், பிரிட்டிஷ், அமெரிக்கப் படைகள் வந்திரா விட்டால், அன்றே இத்தாலியும், அயல்நாடான யூகோஸ்லேவியா போன்று ஒரு சோஷலிச நாடாகி இருக்கும்.

அப்போது இலட்சக்கணக்கான துடிப்பான இளைஞர்கள் சோஷலிசப் புரட்சிக்குத் தயாராக இருந்த போதிலும், திருத்தல்வாதிகளாக மாறியிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அதற்கு உடன்படவில்லை. இத்தாலி சோஷலிச நாடானால், நேட்டோ இராணுவம் படையெடுத்து புரட்சியை நசுக்கி விடும் என்று காரணம் கூறினார்கள். அன்றிலிருந்து, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) அரசுக்கு ஆதரவாக முண்டுகொடுக்கும் திருத்தல்வாதப் பாதையை தேர்ந்தெடுத்தது.

உலகப்போருக்கு பிந்திய காலங்களில், குறிப்பாக ஐம்பதுகளுக்கு பின்னர் வளர்ந்து கொண்டிருந்த இத்தாலி பொருளாதாரம், எழுபதுகளில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டது. நாடு முழுவதும் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. குறிப்பாக, படித்து முடித்த வாலிபர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள். 

படித்தாலும் வேலை கிடைக்காது என்ற விரக்தி காரணமாக பல மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தினார்கள். அத்தகைய சமூகப் பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயார் படுத்துவது எப்படி என்று பலர் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இத்தாலி முழுவதும், மாணவர்கள் மத்தியில் மார்க்ஸ், லெனின் நூல்களைப் படிப்பதும், அதைப் பற்றி விவாதிப்பதும் பிரதானமான செயற்பாடானது. பல்கலைக்கழகங்களில் அடிக்கடி நடந்த மார்க்சிய வகுப்புகள், கூட்டங்களில்  பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தான், ஆயுதமேந்திய கம்யூனிச இயக்கம் ஒன்றுக்கான ஆதரவுத் தளம் உருவானது.

திரிபுவாத இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் இணக்க அரசியலில் நம்பிக்கையிழந்த மாணவர்கள், புதிதாக ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் ஆரம்பித்து ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதைப் பேச்சளவில் வைத்துக் கொள்ளாது நடைமுறையில் கொண்டு வர விரும்பினார்கள். அப்போது உருவாக்கப் பட்டது தான் பிரிகாட்டே ரோசே. அதற்கு நாடு முழுவதும் குறைந்தது ஆயிரம் உறுப்பினர்கள் இருந்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மிகவும் இரகசியமாக இயங்கினார்கள்.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, இத்தாலியிலும் இடதுசாரி, வலதுசாரி வேற்றுமை, ஒரு கட்டத்தில் பகை முரண்பாடாக மாறி வன்முறை வடிவமெடுத்தது. ஆர‌ம்ப‌த்தில், வ‌ல‌துசாரிக‌ளான‌,  (முசோலினியின் பாசிச கட்சியை பின்பற்றும் புதிய தலைமுறை) நவ- பாசிஸ்டுகள், இடதுசாரி மாணவர்களை தாக்குவதும், அவர்களது கூட்டங்கள், பேரணிகளை குழப்புவதும் நடந்து கொண்டிருந்தது. சிலநேரம், நவ- பாசிஸ்டுகள் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. 1980ம் ஆண்டு, போலோய்னா நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப் பட்ட சம்பவம் பாசிச வன்முறையின் உச்சம் எனலாம்.

தொடக்கத்தில் பாசிச வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய செம்படை இயக்கம், சில வருடங்களில் துணிகரமான தாக்குதல்கள் நடத்தும் அளவிற்கு வளர்ந்தது. தமது எதிராளிகளான பாசிஸ்டுகளை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றவர்கள், பிற்காலத்தில் அரசு இயந்திரத்தை ஆட்டிப் படைத்தனர். 

நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். ஒரு தடவை, அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரையும் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்தார்கள்.  இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோரை கடத்திச் சென்று கப்பம் கேட்பதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தன. நிதித் தேவைக்காக வங்கிகளை கொள்ளையடித்தார்கள். அப்போது தடுக்க முயன்ற காவலர்களை சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. பத்து வருட போராட்டக் காலத்தில், 73 கொலைகள் நடந்துள்ளன.

16 மார்ச் 1978 ம் ஆண்டு, இத்தாலிய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த இத்தாலிப் பிரதமர் அல்டோ மோரோ, தலைநகரில் பட்டப் பகலில் கடத்திச் செல்லப் பட்டார். ரோம் நகரின் பிரதான வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த பிரதமரின் வாகனத்தை வழிமறித்த ஆயுதபாணிகள், மெய்ப்பாதுகாவலர்களை சுட்டுக் கொன்று விட்டு பிரதமரை கடத்திச் சென்றனர். தாக்குதல்தாரிகள் அலித்தாலியா விமான நிறுவனத்தின் சீருடை அணிந்திருந்த படியால் யாரும் அவர்களை சந்தேகப் படவில்லை.

ஏற்கனவே, பிரிகாட்டே ரோசே வங்கிக் கொள்ளையடித்த பணத்தில் ஒரு வீட்டை வாங்கி மறைவிடமாக வைத்திருந்தனர். அந்தப் புதிய வீட்டில் தான் பிரதமர் பணயக் கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். அவர் வாசிப்பதற்கு மார்க்ஸ், லெனின் நூல்கள் கொடுக்கப் பட்டன. அந்த வீட்டில், கடத்தியவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் தத்துவார்த்த வாதங்களும் நடந்தன. பிரதமரின் மார்க்சிய அறிவு அவர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது.

எது எப்படியோ, பிரதமர் அல்டோ மோரோ தன்னைக் கடத்தியவர்களுடன் முரண்டு பிடிக்காமல் இணக்கமாக நடந்து கொண்டார். எப்படியும் ஒரு சில நாட்களில் தான் வெளியே வந்து விடுவேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். ஆனால், அரச மட்டத்தில் தனக்கெதிராக சதி நடக்கிறது என்ற விடயத்தை அன்று பிரதமர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிகாடே ரோசே பிரதமரின் கடத்தலுக்கு உரிமை கோரினார்கள். il Messaggero பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், போட்டோகொப்பி இயந்திரத்தின் அருகில் ஒரு கடிதமும், அல்டோ மோரோவின் புகைப்படமும் இருப்பதாக அழைத்த குரல் கூறியது.

அந்த உரிமை கோரும் கடிதத்தில், "பிரதமர் மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி விசாரிக்கப் படுவார்" என்று எழுதப் பட்டிருந்தது. மேலும், அல்டோ மோரோவை விடுதலை செய்வதென்றால், சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் தமது இயக்க உறுப்பினர்களை, அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

பணயக் கைதியான பிரதமர், தனது குடும்பத்தினருக்கும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர்களுக்கும் உருக்கமான கடிதங்கள் எழுதி அனுப்ப அனுமதிக்கப் பட்டார். குறைந்த பட்சம், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக, அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், பிரிகாடே ரோசே எதிர்பார்த்ததற்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தன. "பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" என்று அரசு ஒரேயடியாக மறுத்து விட்டது. அரசுடன் நல்லுறவு பேணிய, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அதையே எதிரொலித்தார். ஆளும் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர், தமது பிரதமர் தானே என்று கூட எந்த நெகிழ்வுப் போக்கையும் காட்டவில்லை.

அல்டோ மோரோ பணயக்கைதியாக தடுத்து வைக்கப் பட்டு ஐம்பது நாட்களாகியும் இத்தாலி அரசு எந்தவொரு சமரசத்திற்கும் வரவில்லை. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டார்களே என்று பிரதமரும் தனது இறுதிக் கணங்களில் கலங்கி நின்றார். குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு கட்சி செவி சாய்க்கவில்லை. 

இடையில் ஒரு தடவை, பிரதமர் கொல்லப் பட்டு விட்டார் என்று வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பிப் பார்த்தனர். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் எதுவும் நடக்காது என்பது உறுதியானதும், 54 வது நாள் அல்டோ மோரோ சுட்டுக் கொல்லப் பட்டார். அவரது சடலம் வைக்கப் பட்டிருந்த கார், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காணப்பட்டது.

எதற்காக ஒரு பிரதமரை உயிரோடு விடுதலை செய்வதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? உண்மையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்குள் கூட அவர் வேண்டாப் பொருளாகக் கருதப் பட்டார். அவர் கொல்லப் பட வேண்டும் என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் பலர் எதிர்பார்த்தனர். இத்தாலி அரசில் இருந்த தீவிர வலதுசாரிகளும், நேட்டோ இராணுவத் தலைமையும் அல்டோ மோரோ அகற்றப் படுவதை விரும்பினார்கள்.

என்ன காரணம்?

உண்மையில் அல்டோ மோரோ ஒரு நேர்மையான அரசியல்வாதி. பொருளாதாரப் பிரச்சினைகளால் சீரழிந்து கொண்டிருந்த நாட்டை காப்பாற்றும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைக்க முன்வந்தார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தனது கட்சிக்குள் இருந்த கடும்போக்கு கம்யூனிச எதிர்ப்பாளர்களையும் ஒத்துக் கொள்ள வைத்திருந்தார்.

இத்தாலி வரலாற்றில் முதல் தடவையாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்க இருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்து, உடன்படிக்கை கைச்சாத்திடுவது மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், எதிர்பாராத விதமாக வழியில் வைத்து அல்டோ மோரோ கடத்தப் பட்டார்.

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், இத்தாலி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுப்பதை நேட்டோ தலைமை விரும்பவில்லை. அதே நேரம், இத்தாலி அரசியல் மட்டத்திலும் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டரசாங்கம் அமைப்பதை, தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, தீவிர இடதுசாரிகளும் விரும்பவில்லை. பிரதமர் கடத்தல் சம்பவத்தின் நேரடி விளைவாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒருபோதும் கைச்சாத்திடப் படவில்லை. இது உண்மையில் கடும்போக்காளர்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றி.

"கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி கம்யூனிசத்திற்கு அடிபணிந்து விட்டது" என்று தீவிர வலதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம், "கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்து விட்டது" என்று தீவிர இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள். பிரிகாடே ரோசேயின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. முதலாளித்துவ அரசுக்கு முண்டு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை துரோகிகளாக பார்த்தனர். கூட்டரசாங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கை துரோகத்தின் உச்சமாக கருதப் பட்டது.

பிரதமர் அல்டோ மோரோவின் கடத்தலும், கொலையும், பிரிகாடே ரோசே இயக்கத்தின் அழிவுக்கு வித்திட்டது எனலாம். அதற்குப் பிறகு நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். பிரிகாடே ரோசெயின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். இதே நேரம், பிரிகாடே ரோசே இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை எதிரியாக்கியதால், தொழிலாளர் வர்க்கத்தினரின் ஆதரவையும் இழந்தது. குறிப்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்ற படியால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான தொழிலாளர்களை பகைத்துக் கொண்டனர்.

1980 ம் ஆண்டு, பிரிகாடே ரோசே இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், முக்கிய உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டு விட்டனர். ஆயிரக் கணக்கான இளைஞர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சில நூறு உறுப்பினர்கள், அயல் நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று அகதித் தஞ்சம் கோரினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களை நாடுகடத்துமாறு இத்தாலி அரசு, பிரெஞ்சு அரசிடம் கோரி இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் இறுக்கமாக வந்திருக்கவில்லை என்பதால் பிரெஞ்சு அரசு மறுத்திருந்தது. 

குறைந்தது முன்னூறு பிரிகாடே ரோசே உறுப்பினர்களாவது, பொலிஸ் கையில் அகப்படாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். சிலர் கியூபாவிலும், மெக்சிகோவிலும், அன்று சோஷலிச நாடாக இருந்த   நிகராகுவாவிலும் தஞ்சம் கோரியிருந்தனர். இப்போதும் அவர்கள் இத்தாலிக்கு திரும்பி வந்தால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்பதால் புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர். 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments:

Post a Comment