Saturday, November 18, 2017

போதுமென்ற மனமே கம்யூனிசம் சொல்லும் மருந்து


[சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்] 
(பாகம் - 2)

கம்யூனிச சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனை இல்லாமல் இல்லை. சோஷலிச நாட்டில் சந்தைப் பொருளாதாரம் இருக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? புதிய கார் வாங்க வேண்டுமென்றால், பதிவு செய்து விட்டு வருடக் கணக்கில் (5-10 வருடங்கள்) காத்திருக்க வேண்டி இருந்தது. 

உங்களால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கிறது பழைய கார். யாராவது பாவித்த ஒரு கார் வாங்கி ஓடலாம். சிலநேரம் பழைய காரின் விலை, புதிய காரை விட அதிகமாக இருக்கும். அதாவது "கேள்வி - வழங்கல்" முறையில் இயங்கும் சந்தைப் பொருளாதாரம். 

சோவியத் யூனியனில் சந்தை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் சந்தை பெருந்தெருக்களின் ஓரத்திலேயே இருந்தது. கோர்பசேவ் பதவிக்கு வர முன்னரே அங்கு தனியார் துறை இருந்தது. கம்யூனிச சமூகத்தில் அந்தளவு நெளிவு சுளிவுகள் இருந்தன.

பொருட்கள் விரைவில் பழுதடைவதா அல்லது தட்டுப்பாடு நிலவுவதா? பொருளாதாரத்தில் எது மிக மோசமானது என்பது எமக்குத் தெரியாது. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அடிக்கடி பொருட்களுக்கு தட்டுப்பாடு வருவதை தவிர்க்க முடியாது. நுகர்வோரின் தேவையை முன்கூட்டியே அறிந்து செயற்படுவதற்கு பொருளியல் அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அது எப்போதும் இலகுவானதல்ல. 

கம்யூனிச காலத்தில் அது ஒரு தவறாக இருந்தது. எல்லா இடங்களிலும் தையல் மெஷின் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், பிறகு ஊசி வாங்கக் கிடைக்காது என்பது மாதிரி. திருத்த வேலை செய்வதற்கு சில பகுதிகளை வாங்கிப் பொருத்த வேண்டி இருக்கும். ஆனால், அது கடையில் இருக்காது. நெதர்லாந்து வந்த பின்னர், "நீங்களே செய்து பாருங்கள்" (Do it yourself) கடைக்கு சென்று பார்த்தேன். அங்கே எல்லாம் தயார் நிலையில் பொருத்தக் கூடிய உபகரணங்களாக இருந்தன. அதெப்படி, நாங்களாகவே செய்து கொள்வதாகும்?

முதலாளித்துவமா, அல்லது கம்யூனிசமா, மனிதர்களின் படைப்புத் திறனை வளர்க்கிறது என்ற பட்டிமன்ற விவாதத்தில், ஏற்கனவே கம்யூனிசமே வென்று விட்டது. பற்றாக்குறை நிலவும் பொழுது, மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தடவை எமக்கு புல்வெட்டும் கருவி தேவைப் பட்டது. 

நிச்சயமாக அதற்கும் தட்டுப்பாடு தான். எனது அப்பா ஒரு வேலை செய்தார். நான் குழந்தையாக இருந்த நேரம் பாவித்த தள்ளுவண்டியின் அடிப்பாகத்தையும், பழைய சலவை இயந்திரத்தின் மோட்டாரையும் இணைத்து ஒன்றை உருவாக்கி விட்டார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் நன்றாக வேலை செய்கிறது.

சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாது. இரட்டைத் தொலைபேசி இணைப்பு (Duplex line) அதில் ஒன்று. (ஒரே இணைப்பு இரண்டு வீடுகளுக்கு செல்லும்) நாங்கள் தொலைபேசினால் பக்கத்து வீட்டுக்காரர் பேச முடியாது. எனது சகோதரி மணித்தியாலக் கணக்கில் தனது காதலனுடன் வம்பளந்து கொண்டிருப்பாள். எரிச்சலில் மேல் வீட்டுக்காரி தொம் தொம் என்று நிலத்தில் குத்துவாள். மணித்தியாலக் கணக்காக வம்பளந்து கொண்டிருக்க அவளுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கலாம். 

பக்கத்து வீட்டுக்காரர் அறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எமக்கு தொலைபேசி பாவிக்க வேண்டி இருந்தால் ஒரு வேலை செய்வோம். இரகசியமாக சென்று Duplex பெட்டியில் குத்தி விட்டால் இணைப்பு துண்டிக்கப் பட்டு விடும். நிச்சயமாக, அன்று நாடு முழுவதும் இணைப்பு திடீரென துண்டிக்கப் படுவது அடிக்கடி நடக்கும்.

கம்யூனிச காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா தலைமுறைகளிலும், நாங்கள் வாழ்ந்த காலம் தான் சிறப்பானது. பொது இடத்தில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொன்னால், அதிக பட்சம் அவரது உத்தியோகத்திற்கு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆனால், ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டி வராது. அரசியல் கைதிகளுக்கான மீள் படிப்பு முகாம்கள் எல்லாம் கடந்த காலம். அதெல்லாம் முந்தி இருந்தன. சிலநேரம், ஒருவர் அமெரிக்க டாலர் சின்னம் வரைந்திருந்தால் கூட சந்தேகிக்கப் பட்ட காலம் ஒன்று இருந்தது.

கம்யூனிசத்தின் ஆரம்ப காலங்களில் சில அற்பமான விடயங்களையும் அவதானித்தார்கள். எனது அம்மா குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியே போனால், முழங்காலில் கரும் புள்ளி குத்தி விடுவார்கள். அதே மாதிரி,அப்பா இறுக்கமான காற்சட்டை அணிந்து சென்றால் இடுப்புக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டி விடுவார்கள். 

அனேகமாக இப்படியான வேலைகளை செய்வது பொலிஸ்காரர்கள் அல்ல. சாதாரண பொது மக்கள். அதற்கென கையில் சிவப்புப் பட்டி அணிந்த தொண்டர்கள் இருந்தனர். இறுக்கமாக காற்சட்டை அணிவது முதலாளித்துவ நாகரிகம். ஆகையினால் அதைக் கண்டால் வெட்டி விட்டார்கள்.

ஒரு தலைமுறைக்கு பிறகு சமுதாயம் மாறி விட்டது. அப்போதும், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசலாம், செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. இருப்பினும், நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தோம். எல்லோருக்கும் வேலை இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி என்பன இலவசமாக கிடைத்தன. 

பெரும்பாலான மக்கள் போதுமான அளவு சம்பாதித்தார்கள். அத்துடன் விடுமுறைக்காக கொஞ்சப் பணம் சேமித்து வந்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், இரண்டாம் வருடம் சம்பளம் இல்லாத விடுப்பும் கிடைத்தது. 

பெரிய நகரங்களில் உள்ள தெருக்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கழுவித் துப்பரவாக்கப் பட்டன. பூங்காக்கள் அழகாகவும், பசுமையாகவும் இருந்தன. எங்கேயும் நாசவேலைகள் நடக்கவில்லை. போதைவஸ்து பாவனை இருக்கவில்லை. அத்துடன் சமூகத்தில் பதற்றமும் நிலவவில்லை.

பள்ளிக்கூடங்களில் மனித இன வரலாற்றின் வித்தியாசமான காலகட்டங்கள் பற்றி சொல்லித் தந்தார்கள். அந்த அடிப்படையில், இப்போது நாங்கள் "அபிவிருத்தி அடைந்த சோஷலிச சமுதாயத்தில்" வாழ்வதாக சொன்னார்கள். இப்போதுள்ள குறைபாடுகள் எல்லாம், கம்யூனிச காலகட்டத்தை அடையும் பொழுது தான் பூர்த்தியாக்கப் படும் என்றார்கள். அப்போது மனிதர்களின் தேவைக்கு ஏற்றவாறு எல்லாம் கிடைப்பதுடன், கடைகளில் பணம் இல்லாமல் எதுவும் வாங்கலாம் என்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் சொல்வதைப் போன்று நடக்குமாக இருந்தால் அழகாகத் தானிருக்கும்.

நேர்மையாகத் தான் சொல்கிறேன். அமெரிக்காவில் நூறில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்த நேரம், எங்கள் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடந்தன. அதற்குக் காரணம், சர்வாதிகாரமானது அயோக்கியர்களையும் அடிபணிய வைத்திருக்கலாம். சிலநேரம், யாருமே பணக்காரர் இல்லாத ஒரு தேசத்தில் திருடுவதற்கு எதுவும் இல்லை என்று திருடர்கள் நினைத்திருக்கலாம்.

விடுமுறையை கழிப்பதற்கு கருங்கடல் ஓரம் நிறைய கம்யூனிச இளைஞர் விடுதிகள் இருந்தன. அங்கு தங்குவது மிகவும் மலிவானது. ஒரேயொரு குறை என்னவெனில், விடியற் காலையில் எழுந்து நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாட வேண்டும். அணிவகுக்க வேண்டும். சில பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். 

ஆனால், மாலை நேரம் நெருப்புத் தணலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நேரம், எவராலும் காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான், எனது பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் அவர்களது கடும் கண்காணிப்பில் இருந்து தப்புவதுடன் கர்ப்பமாக வீடு வந்து சேருவேன் என்று அஞ்சினார்கள்.

ஆகையினால், நான் "பிரிகேட்" பணி செய்ய செல்லும் காலங்களில் அரும்பும்   காதல்களுடன் திருப்திப் பட வேண்டும். பிரிகேட் பணிக் காலத்தில் நாங்கள் வயல்களில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நிச்சயமாக, அது விடுமுறை அல்ல. ஆனால், எனக்கு அப்படித் தெரிந்தது. ஆளரவம் இல்லாத மூலையில் ஒரு இளைஞனும், யுவதியும் செய்யும் குறும்புகளை மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இளம் வயதினர் தானே.

அப்படியான பிரிகேட் போவதற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரும். அதற்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று, மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதப் பட்டிருக்கும். என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தொண்டர் படையணிக்கு ஒருவர் தவறாமல் எல்லோரும் நேரத்திற்கு வந்து விடுவார்கள்.

எல்லா கம்யூனிச நாடுகளிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது வழக்கம். போலந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த படியால், அங்கே ஒவ்வொரு வருடமும் உருளைக்கிழங்கு தோண்டுவது தான் வேலை. பல்கேரியாவில் வித்தியாசம். திராட்சைப் பழம், செரி பழம், அல்லது ஆப்பிள் பிடுங்க வேண்டி இருக்கும். கடலை பறிப்பது  என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு. நிலத்தை தோண்டி விரல்கள் கறுத்து விடும். முதுகு வலி வரும். அத்துடன் மழை பெய்தால் அந்த மண் சேறாகி விடும். 

அதை விட மோசமான விடயம், குறிப்பிட்ட அளவு செய்து முடிக்கவில்லை என்றால், மேற்பார்வையாளர் எல்லோருக்கும் முன்னால் திட்டுவார். அதற்காக நான் ஒரு வேலை செய்வேன். வாளியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போட்டு வைத்திருப்பேன். நிறுக்கும் பொழுது கடலையை விட மண்ணின் நிறை அதிகமாக இருக்கும்.

நமது காவியத்திற்குள் யாராவது வந்து குழப்பி விடுவார்களா? ஆம், சில நேரம் கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் செய்வார்கள். அந்த நேரம் பாதையை கூட்டி, அருகில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்ட வேண்டும். ஊத்தையான குப்பை வாளியை அகற்ற சொன்னார்கள். எங்கே கொண்டு போய் வைப்பது என்று மேற்பார்வையாளருக்கு தெரியவில்லை. அந்த இடம் கூடாது, இங்கே வேண்டாம் என்று சொல்லி சொல்லி ஆறு தடவைகளுக்கு மேல் அலைக்கழிக்கப் பட்டோம். கடைசியில் அது முதலில் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அப்படியான தருணத்தில் அங்கு வருகை தரும் அரசியல்வாதி பற்றி நமக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், பொதுவாக சொன்னால், நாங்கள் ஒரு நாளும் அரசியல் பற்றிப் பேசுவதில்லை. இந்த கம்யூனிச தலைவர்கள் ஐந்தாண்டு திட்டத்தில் என்னவெல்லாம் புனைந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை.

எங்களுடைய ஆர்வம், கவலை எல்லாம் எதிர்ப் பாலினத்தவர் பற்றியதாகவே இருந்தது. அவர்களது நடையுடை, தோற்றம் பற்றியதாகவே இருந்தது. ஆண், பெண் இனக்கவர்ச்சி பற்றியே அதிக அக்கறை கொண்டோம்.

யாரையாவது கவரும் வகையில் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டி இருந்தது. பிரபல அமெரிக்க பாடகி Tina Turner மாதிரி முடி அலங்காரம் அந்தக் காலத்து நாகரிகம். இதெல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியில் யாரும் என்னைக் கேட்க முடியாது.

அந்தக் முடி அலங்காரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, அப்பாவின் ஷேவிங் கிறீம் எடுத்து பூசிக் கொள்வேன். ஏன் தனது ஷேவிங் கிறீம் அடிக்கடி முடிகிறது என்று அப்பாவுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலங்களில் தலைக்கு வைக்கும் ஜெல் கடைகளில் விற்பதில்லை. ஆகவே, எனக்கும் வேறு வழியில்லை. ஒரேயொரு குறை. மழை பெய்தால் எல்லாம் கரைந்து வழிந்து விடும்.

"உங்கள் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது?" எனது துணைவர் பிராங் இடையிடையே இப்படி விசித்திரமான கேள்விகள் கேட்பார்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நிறையப் பேரை பிடித்து அர்த்தமில்லாத வேலைகளையும் செய்ய வைத்தால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்து விடும். கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து சாதனை படைக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதுகின்றன.

நிறையப் பேர் தாம் வேலை செய்யும் தொழிலகங்களில் உள்ள பொருட்களை கொண்டு சென்று அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்வார்கள். அதனால் சிலநேரம் உற்பத்தி தடைப் படும். அதற்காக யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது. செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென்றாலும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இது தான் கம்யூனிசத்தின் பொருளாதார சுழற்சி.

மேற்குலக பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது : 
  • உற்பத்தி குறைவு: தொலைந்து போ! 
  • கேள்வி அதிகரிக்கிறது : உற்பத்தி முழுவதையும் சீனாவுக்கு கொண்டு போ! 
  • சீனாவில் செலவு அதிகம்: உற்பத்தியை மலேசியாவுக்கு இடம் மாற்று! 
  • எதிர்ப்புப் போராட்டம் : இன்னமும் உயிரோடு இருக்கிறாயா? 
  • உச்ச கட்ட சம்பளம் : வங்கியில் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்லு!
  • பொருளாதார நெருக்கடி : நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கு ஆதரவளி. செலவை மக்கள் தலையில் கட்டி விடு!

உண்மையை சொன்னால், எந்த பொருளாதார சுழற்சி நல்லது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கம்யூனிசத்தில் மக்களுக்கு பெருமளவு திருப்தி கிடைத்தது. மேற்குலகில் மரணப் போட்டி நிலவுகிறது. இரும்புத் திரைக்குப் பின்னால் போட்டி என்ற சொல்லை யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒரு அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம். அது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து மேலதிக பணத்தை எடுக்கிறது. எங்கள் நாட்டில் விளம்பரங்களால் மூழ்கடிக்கப் படாத படியால் தொடர்ந்து புதிய பொருட்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் பல விடயங்கள் இலகுவாக நடந்தன.

உன்னுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லையா? நல்லது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். ஒரு கார் வாங்குவதற்காக பதிவு செய்து விட்டு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? அது பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையில் நல்ல பக்கத்தை பாருங்கள். "வாகன வரி கட்டத் தேவையில்லை. காற்றுப் போன டயர் மாற்றத் தேவையில்லை. சேர்விஸ் செலவு இல்லை..."

மொத்தத்தில் நிறைய நேரம் மிச்சம் பிடிக்கலாம். கம்யூனிச காலகட்டத்தில் "மாற்றி யோசிக்க" கற்றுக் கொண்டோம். மேற்குலக பொருளாசை தரும் போதைக்குள் மூழ்குவதற்கு முன்னர் இது ஒரு நல்ல பயிற்சி.

1 comment:

  1. இந்த காலகட்டத்தில் பதிவிட்டமைக்கு நன்றி...வேலையின்மை என்பது இன்றைய பிரதானமான பிரச்சினை.ஆனால் நூலாசிரியர் எளிமையாகவும் கிண்டலாகவும் கூறுகிறார்...அது சோசலிசத்தின் எளிமையல்லவா!

    ReplyDelete