பல்கேரியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில் தனது இளம் பிராயத்தை கழித்த மரியா ஜெனோவா, தற்போது நெதர்லாந்தில் வாழ்கிறார். அவர் சோஷலிச பல்கேரியாவையும், முதலாளித்துவ நெதர்லாந்தையும் ஒப்பிட்டு, இரண்டிலும் உள்ள குறை நிறைகள் பற்றி ஒரு நூல் (Dansen op de Muur) எழுதி இருக்கிறார்."உண்மையைச் சொல்வதென்றால் நான் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் பிறந்து வளர்ந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்." என்று கூறுகின்றார். அந்தக் காலத்தில் தனக்கும் நண்பர்களுக்கும் அரசியல் ஆர்வம் இருக்கவில்லை என்கிறார். தனது அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். அவரது நூலின் சில பகுதிகளை கீழே மொழிபெயர்த்து எழுதி இருக்கிறேன்.
நூலில் இருந்து....
அப்போதும் அரசியல்வாதிகள் நிறைய வாக்குறுதிகள் அளிப்பார்கள். யார் அதைப் பற்றி கவலைப் பட்டார்கள்? அவற்றில் ஒன்று: "உண்மையான கம்யூனிச சமுதாயம் உருவான பின்னர், கடைகளில் பணம் கொடுக்காமலே பொருட்களை வாங்கலாம்."
அதன் அர்த்தம், தற்போது வங்கி அட்டையில் பணம் செலுத்துவது மாதிரியான அமைப்பு. பிற்காலத்தில் முதலாளித்துவம் வந்த பின்னர் அந்த வசதியும் வந்தது. ஆனால், சிலர் "காசு கொடுக்காமல் வாங்கும் முறையை" தவறாகப் புரிந்து கொண்டனர் போலிருக்கிறது.
கிரிமினல் குற்றங்கள் பல்கிப் பெருகின. நாடு முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவிய நேரம், மாபியாக்கள் மட்டும் ஒழுங்காக இயங்கினார்கள். இது தானா நாங்கள் கனவு கண்ட முதலாளித்துவம்?
நான் சிறுமியாக இருந்த நேரம், ஒரு தடவை பள்ளிக்கூடத்தில் ஆசிரியை கூப்பிட்டுக் கேட்டார்:
"என்ன மரியா இது? தலைமுடி காடு மாதிரி வளர்ந்திருக்கு? கவனிக்க மாட்டாயா?" என்று கேட்டு கத்தரிக்கோலால் வெட்டி விட்டார். அதைக் கண்டு வகுப்பில் பிற மாணவர்கள் சிரிக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. ஏனெனில் இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இடைவேளை நேரத்தில் நக்கல் குரூப்பில் ஒன்று வந்து கேட்டது: "அடியே, உனது தலை கார்ச் சக்கரத்தில் அகப்பட்ட பூசணிக்காய் மாதிரி இருக்குடி!"
வீட்டுக்கு சென்ற பின்னர் அம்மாவுக்கு மாரடைப்பே வந்து விட்டது.
"என்னடி இது? என்ன நடந்தது?"
"தோழர் டிமித்ரோவா (ஆசிரியை) எனது தலை முடி நீளம் என்று சொல்லி வெட்டி விட்டார்."
"தோள்பட்டை அளவு கூட வளரவில்லை... அது நீளமாமா?"
எனது அம்மா கடுங் கோபத்தில் இருந்தார். இருந்தாலும் அவர் பள்ளிக்கூடம் சென்று விசாரிக்கவில்லை. காரணம், ஆசிரியர்கள், அரச உத்தியோகஸ்தர்களை எதிர்த்துப் பேச முடியாது. அவர்கள் எப்போதும் ஏதாவது எழுதப் படாத சட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். கட்சித் தலைவர்கள் அதை விட மோசம். அந்த விதிகள் எங்காவது எழுதி இருந்தால், நாமும் தயார் படுத்துக் கொள்ளுவோமே?
அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய (சோஷலிச) நாடுகள், ஒவ்வொன்றுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. அதே நேரம் ஒற்றுமைகளும் இருந்தன. எல்லாம் வல்ல கட்சி, அணிவகுப்புகள், அரைகுறையாக நிரப்பப் பட்ட கடைகள், வரிசைகள், தகவல் கொடுப்பவர்களைப் பற்றிய அச்சம்... இவையெல்லாம் ஒரே மாதிரி இருந்தன.
அது மட்டுமல்ல, செக்கோஸ்லோவாகியாவின் அதே மின் விளக்குகள், போலந்து அலுமாரிகள், கிழக்கு ஜெர்மன் தொலைபேசிகள் தான் பல்கேரியாவிலும் இருந்தன. திருத்தப் படாத பெருந்தெருக்கள் குண்டும் குழியுமாக இருந்தன. வாகனம் ஓட்டுவோர் பள்ளத்திற்குள் இறங்கக் கூடாது என்று எச்சரிக்கையாக தெருவோரமாக திருப்பினால், அந்தப் பக்கம் சிலநேரம் எதிர்த் திசையில் இருந்து வாகனம் வரலாம். வந்தால் அதோ கதி தான். எனது மாமா ஒரு தடவை பள்ளத்திற்குள் வண்டியை விட்டு ஸ்டேயரிங் வீலை கையில் கழற்றி வைத்திருந்தார்.
மேற்குலக எதிர்ப்பு பிரச்சாரங்களும் ஒரே மாதிரித் தான் அமைந்திருந்தன. மேற்கத்திய நாடுகளில் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர்கள் தறிகெட்டு செல்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்தனர். எங்களது நாட்டில் போதைவஸ்து எங்கேயும் கிடைக்காது, அதனால் அந்தப் பிரச்சினையும் இல்லை. மேற்கத்திய இளைஞர்களுடன் ஒப்பிடும் பொழுது, நாம் பொருளாசை குறைந்தவர்களாக இருந்தோம். சிலநேரம், "கிட்டாதாயின் வெட்டென மற" என்று மனதை தேற்றிக் கொண்டிருப்போம்.
அதற்காக எதுவுமே கிடைக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. அருகில் இருக்கும் கம்யூனிச யூகோஸ்லேவியா நாட்டவர் மீது எங்களுக்கு பொறாமை இருந்தது. காரணம், அவர்களது கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும், டெனிம் ஜீன்ஸ் வாங்கவும் அனுமதித்திருந்தது. யூகோஸ்லேவியா காரர்கள், மூன்று மடங்கு விலை வைத்து எங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் விற்று வந்தனர்.
பள்ளிக்கூடங்களில் நாம் எல்லோரும் சமர்த்துப் பிள்ளைகளாக நடந்து கொண்டோம். சல்யூட் அடிக்கவும், போராட்டக் கோஷம் எழுப்பவும் பழகி இருந்தோம். அதை யாரும் அதிசயமாக பார்ப்பதில்லை. "Budete gotovi! Vinagi gotov!" என்ற பல்கேரிய கோஷத்தை மொழிபெயர்த்தால் "நாங்கள் தயாராக இருக்கிறோம்!" என்று அர்த்தம் வரும். எதற்குத் தயாராக இருக்க வேண்டும்? அதைப் பற்றி யார் கவலைப் பட்டார்கள்?
பாடசாலை மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து வர வேண்டும். முதலில் நீலம் பின்னர் சிவப்பு கழுத்துப் படி அணிந்திருந்தோம். நாம் விரும்பிய படி சீருடையில் சிறிது மாற்றம் செய்யவும் தடை இருந்தது. சக மனிதனை விட நான் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது தவறானது. எங்களுடைய இலட்சியமான, ஏழை பணக்காரர் இல்லாத நீதியான வருங்காலத்தை எண்ணிக் கொண்டோம்.
இருப்பினும், வர்க்கமில்லாத சமுதாயம் என்பது சிலநேரம் எழுத்தில் மட்டும் இருந்தது. நான் ஒரு தொழிலாளியை அல்லது விவசாயியை திருமணம் செய்வதற்கு எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். அதற்கான காரணம், அவர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. வழமையாகவே, ஒரு பட்டதாரி மணமகனை தான் அவர்கள் தேடி இருப்பார்கள்.
பல்கேரியாவில் ஏற்கனவே பொருளாதார ரீதியான சமத்துவம் எட்டப் பட்டு விட்டது.ஏறக்குறைய எல்லோரும் சமமாக சம்பாதித்தனர். ஒரு கட்டிடத் தொழிலாளிக்கும், ஒரு பேராசிரியருக்கும் கிடைக்கும் சம்பளத்தில் வேறுபாடு இருக்காது. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த வித்தியாசம் ஒன்றிருந்தது. கட்சி முக்கியஸ்தர்கள் தனியாகக் கவனிக்கப் பட்டனர். புது வீட்டுக்கு காத்திருக்கும் பட்டியலில் அவர்களது பெயர் வராது. மருத்துவ சிகிச்சைகளும் விசேடமாக கிடைக்கும். ரஷ்யாவில் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்குவதற்கு தனியான விற்பனை அங்காடிகள் இருந்தன.
கட்சி முக்கியஸ்தர்கள் விசேட சலுகைகள் பெறுவது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், எங்களுக்கு எல்லாம் கிடைத்து வந்த படியால், சாதாரண மனிதர்களான நாமும் திருப்திப் பட்டோம். விளையாட்டுக் கழகங்கள், விடுமுறை விடுதிகள் என்று, சிறுவர்கள், இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான அனைத்தும் மிகக் குறைந்த விலையில் கிடைத்தன.
அநேகமான நிறுவனங்கள், மலையடிவாரங்கள், கடற்கரைகளில், தமக்கென சொந்தமாக சுற்றுலா விடுதிகள் வைத்திருந்தன. அந்த நிறுவனங்களில் வேலை செய்வோர், மிகக் குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, வேலை நேரங்களில் கூட களைத்துப் போனால் சிறிது ஓய்வெடுக்கலாம். யாரும் அவர்களை தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கவில்லை.
"சுதந்திரம் இன்மை, வறுமை, எந் நேரமும் கவனித்துக் கொண்டிருக்கும் புலனாய்வுத்துறை... அப்படியான ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்ததையிட்டு வேதனைப் படுகிறேன்." இப்படிக் கூறினான் எனது டச்சு காதலன் ஃப்ராங்.
"நிறுத்து!" நான் எரிச்சலுடன் கத்தினேன். இத்தகைய கறுப்பு - வெள்ளைப் படங்களை போதுமான அளவு பார்த்து விட்டேன். எனது இளமைக் காலம் இனிதாக அமைந்திருந்தது. நான் ஒரு நாள் கூட வறுமையில் வாழ்வதாக உணரவில்லை. அத்துடன் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியும் எங்களை எந்த நேரமும் கவனித்துக் கொண்டிருக்கவில்லை.
ஏதோ நீங்கள் சுதந்திரமாக வாழ்கிறீர்கள் போலும். எத்தனை ஆயிரம் கமெராக்கள் உளவு பார்க்கின்றன? NSA உங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை வாசிக்கின்றன. உன்னை மாதிரி நல்லொழுக்கம் மிக்க குடிமக்களை உளவு பார்க்கும் புலனாய்வுத்துறை செய்வதில் நூற்றில் ஒரு பங்கு கூட எங்கள் நாட்டில் நடக்கவில்லை."
மேற்கத்திய நாட்டவர்கள் சர்வாதிகாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது. எனது கம்யூனிச இளம்பருவக் காலங்கள் இனிமையானவை. இன்னும் சொன்னால், "எனது இளம்பருவத்தை சுதந்திர மேற்குலகில் கழிக்கவில்லையே" என்று நான் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை.
தங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்தலையும் நெதர்லாந்து இளைஞர்களை பார்த்தாலே போதும். அளவு கடந்த தெரிவுச் சுதந்திரம் அவர்களை எந்த முடிவுக்கும் வர விடாமல் தடுக்கிறது. அத்துடன் மன உளைச்சலும் உண்டாகிறது.
இலட்சக் கணக்கான டச்சுக் காரர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப் பட்டு அதற்காக மருந்து (Antidepressants) குடிக்கிறார்கள் என்பதை முதல் தடவையாக கேள்விப் பட்ட நேரம், முதலில் அது ஒரு ஜோக் என்று நினைத்தேன். ஒரு மில்லியன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மன உளைச்சல் தடுப்பு மருந்துக் குளிசையை உபயோகிக்கிறார்கள்!
மேற்குலக மன உளைச்சல் தடுப்புக் குளிசை விழுங்கிகள் எல்லாம், "நாங்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் வாழ்ந்த படியால் மகிழ்ச்சியை காணாதவர்கள்" என்று நினைத்துக் கொள்கிறார்கள்! நல்லது, நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களைப் போல மகிழ்ச்சியை மருந்துக் குளிசையாக வாங்கிக் குடிக்கவில்லை.
நாங்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அதைவிட அதிகமாக மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்பது புரிகின்றது. முதலாளித்துவம் சிறந்தது என்றும், எங்களது நாட்டில் எல்லாமே நாசமாகப் போனவை என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.
"முன்னாள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த மிகப் பெரிய வறுமையை பார்த்தால் என்ன என்ன சொல்லத் தோன்றும்." என்று சொன்னான் பிராங்.
ஒரு நாட்டில் எல்லோரும் வறுமையில் வாழ்ந்தால் யார் அதை உணரப் போகிறார்கள்? நம்பினால் நம்புங்கள். நான் எந்தக் காலத்திலும் வறுமையை உணரவில்லை. எங்களுக்கு போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. பெரும்பாலானவர்கள் கோடைகால விடுமுறையை கழிப்பதற்காக இன்னொரு வீடு வைத்திருந்தார்கள். எல்லோரும் கருங்கடல் பகுதி கடற்கரைக்கு சுற்றுலா சென்று வந்தனர்.
எந்தவொரு தருணத்திலும் எங்கள் நாட்டில் காசில்லாதவர்களுக்கு உணவளிக்க கஞ்சித் தொட்டி இருக்கவில்லை. வேலையிழந்தாலும் அரசு அவர்களுக்கு இன்னொரு இடத்தில் வேலை எடுத்துக் கொடுத்தது.
"இது தான் பிரச்சினையே," என்றான் பிராங். "அரசு மக்களை பார்த்துக் கொள்ளலாம். ஆனால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருக்காது தானே?"
எங்கள் நாட்டில் இருந்தது. இது பற்றி மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கு உலாவியது: "ஒவ்வொரு தொழிலகத்திலும் மூன்று பேரை வேலைக்கு போட வேண்டும். வேலை செய்ய ஒருவர். அதை மேற்பார்வை பார்க்க மற்றவர். மூன்றாவது நபர் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கி விடுவார்."
பிராங் புருவத்தை உயர்த்திக் கேட்டான்: "அப்படி எல்லாம் செயல்பட வைக்க முடியுமா?"
"நிச்சயமாக செயற்படுத்த முடிந்தது. பெரும்பாலானவர்கள் தமது வேலையில் திருப்தி கண்டனர். அத்துடன் வேலை நேரத்தில் வெளியே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் நேரம் ஒதுக்கினார்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் எந்த நேரத்திலும் விற்று முடிந்து விடலாம். நேரத்திற்கு சென்று வாங்கி வைத்து விட வேண்டும்."
"அப்படிப் பார்த்தாலும் அது நல்லதில்லை தானே? நீ ஏதாவது வாங்கப் போனால், அது அங்கே இருக்காது?" - பிராங்
நிச்சயமாக, அது நல்லதில்லை தான். ஒரு பொருளை திரும்பவும் எப்போது விற்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும். பண்டமாற்று பொருளாதாரம் சிறப்பாக இயங்கியதால், யாரும் பற்றாக்குறையுடன் வாழவில்லை.
எனது வாழ்க்கையில் முதல் தடவையாக நெதர்லாந்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றைக் கண்டவுடன் வாயடைத்துப் போனேன். பத்து வகையான அரிசி, ஏழு வகையான சீனி, எட்டு வகையான கழிவறைக் கடதாசிகள். எந்த நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை கண்டவுடன் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி உண்டானது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாளர்கள் சிரிக்க மாட்டார்கள். எந்த நேரமும் முறைத்துப் பார்ப்பார்கள். நாங்கள் வாங்கத் தானே வந்திருக்கிறோம்? களவெடுக்கப் போகிறோமா? கொஞ்சம் சிரிக்கலாம் தானே? அதற்கு மாறாக மேற்கத்திய நாடுகளில் செயற்கையாக சிரிக்கிறார்கள்.
ஒரு தடவை அமெரிக்கா சென்ற நேரம் வாடிக்கையாளர்களை "How are you today?" என்று நலம் விசாரிப்பதை பார்த்தேன். என்னவோ எங்கள் சுகநலம் குறித்து அவர்களுக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் நடிப்பு தானே?
நெதர்லாந்து வந்த பின்னர் தான், நாம் ஒருவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசவும் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் குறித்து வைக்கும் வழக்கத்தை கண்டேன். இதை எனது அம்மாவுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை.
"அப்படியா? டச்சுக்காரர்கள் எல்லாவற்றையும் டயரியில் எழுதி வைப்பார்களா?"
"ஆமாம் அம்மா, சந்திப்பதற்கு முன்னர் அதை ஒரு டயரியில் குறித்துக் கொள்வார்கள். நினைத்த நேரத்தில் யார் வீட்டுக்கும் போக முடியாது. அவர்கள் ரோபோ மாதிரி இயங்குகிறார்கள். எல்லாற்றையும் முன்கூட்டியே திட்டமிடுவார்கள். மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்று மருந்து வாங்கிக் குடிப்பார்கள். இயற்கையை காசு கொடுத்து அனுபவிப்பார்கள்."
இந்தக் கதை எல்லாம் கேட்டால் அம்மாவின் மண்டை விறைத்து விடும் என்பது தெரியும். வேறு வழியில்லை. நானும் சொல்லியே ஆக வேண்டும். முதல் தடவையாக எனது துணைவர் பிராங் மணல் திட்டுக்கு போவதற்கு டிக்கட் வாங்கியதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன்.
"நாங்கள் இயற்கையை தேடித் தானே போகிறோம்?"
"ஆம்"
"அதற்கு ஏன் காசு?"
"மணல் திட்டில் நடப்பதற்கு காசு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் கட்ட வேண்டும்."
"ஆம்"
"அதற்கு ஏன் காசு?"
"மணல் திட்டில் நடப்பதற்கு காசு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டம் கட்ட வேண்டும்."
ம்ஹ்ம்... இயற்கையை அனுபவிக்க காசு கொடுக்காமல் சென்றால் தண்டப் பணம் கட்ட வேண்டுமாம். எனது பல்கேரிய மண்டைக்கு இது புரியவே இல்லை.
எமக்கு இடையில் பெருமளவு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும், எமது இல் வாழ்வில் எந்த இடையூறும் இருக்கவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. என்னால் முடிந்தளவு விளக்க முயற்சித்தேன்.நாங்கள் ஒரு நாளும் சர்வாதிகாரத்தின் கீழ் அல்லல் படவில்லை என்ற உண்மையை அவனுக்கு உணர வைக்க வேண்டி இருந்தது.
முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் கம்யூனிசத்தின் வெற்றியை கொண்டாடும் அணிவகுப்புகளில் கலந்து கொண்டு கையசைத்து வந்தோம். நிச்சயமாக, நாங்கள் இன்னும் வெல்லவில்லை. பனிப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருப்பினும், என்றோ ஒரு நாள் நாங்கள் வெல்வோம் என்று நம்பினோம்.
பாடசாலைகளில் எமக்கு துப்பாக்கியால் சுடுவதற்கு கற்றுக் கொடுத்தார்கள். அணுகுண்டு வெடித்தால் பதுங்குகுழிக்கு செல்வது எப்படி என்று பழக்கினார்கள். ஏனென்றால், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. அமெரிக்கர்களை நம்ப முடியாது.
எதிரிகள் எங்களது கம்யூனிச சொர்க்கத்தை அழிக்கும் நோக்கில் எந்நேரமும் படையெடுக்கலாம். தாய்நாட்டை பாதுகாப்பதற்காக போரிட வேண்டி இருக்கும். எதிரிகள் எமது பொன்னான கம்யூனிச இலட்சியங்களை அழிக்க விரும்பினார்கள். அவர்கள் சமத்துவத்தில் நம்பிக்கை அற்றவர்கள்.
எமது சமுதாயம் பூரணத்துவம் அடைந்தது என்று சொல்லவில்லை. ஆனால், பூர்த்தி செய்ய முயற்சித்தார்கள். எப்போதாவது ஒரு தடவை விவசாய விளைச்சல் குறைவடைந்தால், பத்திரிகையில் அமோக விளைச்சல் என்று மிகைப் படுத்தி எழுதினார்கள். (இது ஒரு உளவியல் ஊக்குவிப்பு. பரீட்சையில் தோற்ற மாணவர்களின் மனம் தளர விடாமல் பாராட்டி படிக்க வைப்பது போன்றது.)
நாம் கையில் கிடைக்கும் குறைந்தளவு உபகரணங்களை கொண்டு திருத்தவும், உருவாக்கவும் கற்றுக் கொண்டோம். மேற்குலகை விட, கிழக்கு ஐரோப்பாவில் தான் அதிகளவு கண்டுபிடிப்பாளர்கள் இருந்தார்கள். இதற்காக நான் பந்தயம் கட்டுவேன். உதாரணத்திற்கு, மேற்கத்திய சமையலறையில் ஏதாவதொன்று குறைந்தாலும் சமைக்கத் தெரியாமல் தவிப்பார்கள். நாங்களோ இருப்பதை பாவித்து புதியதொரு உணவு வகையை உருவாக்கி இருப்போம்.
(தொடரும்)
No comments:
Post a Comment