தேசியவாதம் என்ற கொள்கை, முதன்முதலாக ஐரோப்பாவில் தோன்றியது. இன்று நமது தமிழ் தேசியவாதிகள், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொழி அடிப்படையிலான தேசிய அரசுக்களை, அடிக்கடி உதாரணமாகக் காட்டுவார்கள். ஆனால், உண்மையில் அவற்றை தேசியவாத அரசுகள் என்று அழைப்பதை விட, பேரினவாத அரசுகள் என்று அழைப்பதே பொருத்தமானது.
ஒரு காலத்தில், ஐரோப்பிய தேசியவாதிகள், சிங்களவர்களை விட படு மோசமான பேரினவாதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஏதாவதொரு சிறுபான்மை மொழி பேசும் இனம் ஒடுக்கப் பட்டது, இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டது. இன்று, சிறந்த மனிதநேய வாதிகள் என்று காட்டிக் கொள்ளும், ஸ்கன்டிநேவிய நாடுகளும் அதற்கு விதி விலக்கல்ல.
நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளும், எவ்வாறு "சாமி" என்ற மொழிச் சிறுபான்மையின மக்களை ஒடுக்கினார்கள் என்பதை விபரிக்கும் ஒரு ஆவணப் படத்தை பார்க்க கிடைத்தது.
எழுபதுகளில், இலங்கையின் சிறுபான்மை தமிழ் இனத்தின் ஈழப்போராட்டம் தொடங்கி விட்டது. அதே கால கட்டத்தில், "நாகரீகமடைந்த" வட ஐரோப்பாவில், ஒரு கொடுமையான இனச் சுத்திகரிப்பு நடந்து கொண்டிருந்தது. ஐரோப்பியக் கண்டத்தின், வட முனைப் பகுதியில் வாழ்ந்த சாமி இன மக்கள், பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.
சாமிகள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த, பனிப்பிரதேசத்திற்கு உரிய பூர்வீக மக்கள் ஆவர். சாமி மொழி பேசும் மக்கள், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். சர்வதேச எல்லைகள், அவர்களின் வாழ்விடங்களை ஊடறுத்துச் செல்கின்றன.
நோர்வே, சுவீடன், பின்லாந்தை சேர்ந்த பேரினவாத ஆட்சியாளர்கள், சாமி இன குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து, பிரித்தெடுத்துக் கொண்டு சென்றார்கள். அவர்களது கிராமங்களில் இருந்து, குறைந்தது ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விடுதிப் பாடசாலையில் தங்க வைக்கப் பட்டார்கள்.
அங்கே மழலைகளின் மூளைக்குள், ஆக்கிரமிப்பாளர்களின் மொழி, கலாச்சாரம் என்பன திணிக்கப் பட்டன. தாய் மொழியில் பேசுவது தடுக்கப் பட்டது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பணியாளர்களைத் தவிர வேறெந்த பெரியவர்களையும் பிள்ளைகள் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை.
நோர்வே நாட்டு எல்லைக்குள் வாழ்ந்த சாமி இன பிள்ளைகள், நோர்வீஜியர்களின் மொழி, பண்பாடு, நடை, உடை, பாவனைகளை பின்பற்ற வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர். அது போன்று, சுவீடனில் வாழ்ந்த சாமிகள், சுவீடிஷ் மொழியையும், பின்லாந்தில் வாழ்ந்த சாமிகள் பின்னிஷ் மொழியையும் பேச வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
பின்னிஷ் மொழிக்கும், சாமி மொழிக்கும் இடையில் மட்டுமே சில ஒற்றுமைகள் உள்ளன. (தமிழும், மலையாளமும் போல நினைத்துக் கொள்ளுங்கள்.) ஆனால், சாமி மொழிக்கும், நோர்வீஜிய, சுவீடிஷ் மொழிகளுக்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. (தமிழும், சீன மொழியும் போல என்று நினைத்துக் கொள்ளுங்கள்.) எந்த வித சம்பந்தமும் இல்லாத, அந்நிய மொழியை பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்த குழந்தைகள், கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டனர். கூடவே பெற்றோரை, உறவினரை பிரிந்து வாழும் வேதனை வேறு.
ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை இலகுவில் கிரகிக்க முடியாத குழந்தைகள், முட்டாள்கள் என்று சிறுமைப் படுத்தப் பட்டனர். சாமி இன மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. சாமி மக்கள் ஐரோப்பிய மனித இனங்கள் எல்லாவற்றிலும் தாழ்ந்தவர்கள் என்று, அறிஞர்கள் "ஆராய்ச்சிகள்" செய்து "கண்டுபிடித்தனர்." ஹிட்லர் பாணியிலான இனவெறி ஆராய்ச்சிக் குறிப்புகள், இன்றைக்கும் சுவீடனில் உள்ள ஊப்சலா பல்கலைக்கழகத்தில் உள்ளன.
நோர்வேயிலும், இன ஒதுக்கல் கொள்கை உச்சத்தில் இருந்ததாக, எழுபதுகளில் சாமி மக்களிடையே பணியாற்றியவெளிநாட்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அந்தக் காலங்களில், பெரும்பாலான சாமி இன மக்கள், தமது மொழியைக் கூட, எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருந்தனர்.
பொது இடங்களில், நோர்வீஜியர்கள் சாமி மக்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தி வந்தனர். கடைகளில் வரிசையில் நிற்கும் பொழுது, சாமி ஒருவர் முன்னுக்கு நின்றாலும், பின்னால் நிற்கும் நோர்வீஜியர் முதலில் செல்ல முடிந்தது. ஒரு பேரூந்து வண்டியில், முதலில் நோர்வீஜியர்கள் ஏறிய பின்னர் தான், சாமி இன மக்கள் ஏற முடியும். நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும், தற்போது சாமி இன மக்களுக்கு உரிமைகள் வழங்கப் பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்
வழக்கம்போல மிகச் சிறந்த பதிவு (ஆவணம்). மிக்க நன்றி!
ReplyDeleteவழக்கம்போல மிகச் சிறந்த பதிவு (ஆவணம்). மிக்க நன்றி!
ReplyDelete