Friday, April 21, 2017

தமிழ்த் தேசியவாதிகளுக்கு, லெனின் தேசியம் பற்றி என்ன சொன்னார்?


"தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் உண்மையான நோக்கம், "லெனின் கூட ஒரு தேசியவாதி" என்று குறுக்குவது தான். லெனின் ஒரு சர்வதேசியவாதி என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தேசியவாதம் என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம். அதற்கு மாறாக, சர்வதேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம்.

பொதுவாக தேசியவாதிகளின் உலகம் தேசியங்களால் மட்டுமே ஆனது. இந்தப் பூமியில் எல்லோருக்கும் தனித் தனி தேசங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. "ஒவ்வொரு மொழி பேசும் இனத்திற்கும் தனித்தனியாக தேசங்கள் உள்ளன. தமிழருக்கு மட்டும் தான் இன்னும் ஒரு நாடு இல்லை. அதுவும் வந்து விட்டால், உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது." இது தான் அவர்களது உலகப் பார்வை.

இதிலிருந்து தான் அவர்களது கருத்துக்களும், கேள்விகளும் பிறக்கின்றன. உலகில் உள்ள எல்லா தேசியவாதியும் தான் சார்ந்த இனத்திற்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக நினைத்துக் கொள்வான். தங்களது பிரச்சினை, உலகில் வேறெந்த மக்கள் குழுக்களுடனும் ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானது என்று கருதுவார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு தேசியவாதியும், தங்களது இனம், மொழி, இருப்பிடம் அழிக்கப் படுகின்றது என்று சொல்வார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் வாழும் தேசியவாதிகளும் அப்படித் தான் சொல்லிக் கொள்வார்கள். "தெற்காசிய, ஆப்பிரிக்க மக்கள் லண்டன் நகர் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள்... இஸ்லாம் வேகமாகப் பரவுகின்றது... ஆங்கிலம் அழிகிறது..." இவ்வாறு ஆங்கிலேய தேசியவாதிகள் முறையிடுவதைக் கேட்கலாம்.

தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்? லெனின் ஒரு தேசியவாதி அல்ல, மாறாக சர்வதேசியவாதி. பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அவரது குறிக்கோள். அதாவது, "பாட்டாளி வர்க்கத்திற்கு தேசம் கிடையாது" என்ற மார்க்ஸின் கூற்றை ஏற்றுக் கொண்ட ஒருவர் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதை நாங்கள் லெனின் என்ற தனி மனிதனின் கருத்துக்களாக பார்ப்பதை விட, போல்ஷெவிக் (கம்யூனிஸ்ட்) கட்சியின் கொள்கையாக பார்ப்பது தான் சிறந்தது. ஒரு சிலர், போலந்து, நோர்வே தொடர்பாக லெனின் எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டிப் பேசலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஐரோப்பாவில், அவை இரண்டும் சர்வதேச பிரச்சினையாக கருதப் பட்டவை.

உதாரணத்திற்கு போலந்து தேசத்தை அங்கீகரிப்பது தொடர்பான கருத்து முரண்பாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச மகாநாடுகளில் எதிரொலித்தன. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பெரியதொரு ராஜ்ஜியமாக இருந்த போலந்து, பிற்காலத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களின் விஸ்தரிப்பால் மூன்று துண்டுகளாகப் பிளவு பட்டிருந்தது.

சுருக்கமாக, இன்றைக்கு இஸ்ரேல்/பாலஸ்தீனம் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக இருப்பது மாதிரித் தான், அன்றைக்கு போலந்து இருந்தது. அன்று ஐரோப்பாவில் கூடிய சர்வதேச மகாநாடுகளில், போலந்தை விடுதலை செய்யுமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டு வந்தது. ரஷ்யாவின் போர்வெறியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த ரஷ்யக் கம்யூனிஸ்டுகள், தமது வர்க்க எதிரிகளான ரஷ்யப் பேரினவாதிகளின் நிலைப்பாட்டுக்கு மாறாக போலந்து விடுதலையை ஆதரித்து வந்தனர்.

ஆகவே, போலந்து தொடர்பாக லெனின் தெரிவித்த கருத்துக்களை, தேசியம் தொடர்பான லெனினின் பொதுவான நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அன்று போல்ஷெவிக் கட்சிக்குள், தேசியம் தொடர்பான கொள்கை வகுக்கும் வேலை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது. எதற்காக ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார்கள்? அந்தக் காலகட்டத்தில், வியன்னாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஸ்டாலின், அந்நகரில் வாழ்ந்த பல்லின மக்களுடன் தொடர்பேற்படுத்தி தேசிய இனப் பிரச்சினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.

அன்று ஆஸ்திரியாவில் மன்னராட்சி இருந்தது. அதன் கீழ் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்து வந்தன. அந்த நேரத்தில், ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும், ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி மாத்திரம், தேசிய இனங்களின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பல்லின மக்கள் குடியேறி இருந்தனர். போஸ்னியா, குரோவாசியா போன்ற பெரும்பாலான யூகோஸ்லேவிய பகுதிகள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தன. அந்தப் பிரதேசத்தில் தேசியவாத இயக்கங்கள் எழுச்சி பெற்றிருந்தன. அன்று அது சர்வதேச (ஐரோப்பிய)பிரச்சினையாக விவாதிக்கப் பட்டது.

போல்ஷெவிக் கட்சியில், தேசியம் தொடர்பாக இரண்டு வகையான நிலைப்பாடு இருந்தது. அது அன்றைய காலகட்டத்து அரசியல் - வரலாற்று - பொருளாதார நிலைமைகள் காரணமாக உருவானது. எதையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதே சிறந்தது.

தேசியத்தை குறிக்க ரஷ்ய மொழியில் இரண்டு சொற்கள் உள்ளன.
1.நரோட்னிநொஸ்க் 
2.நாட்சீ

நரோட்னிநொஸ்க் என்ற சொல், சார் மன்னன் காலத்தில் புவி இயல், மானிடவியல் அறிஞர்களால் பாவிக்கப் பட்டது. ரஷ்ய மொழியில் நரோட்னி என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே, இதை தமிழில் "மக்கள் குழுமம், இனக்குழு" என்று மொழிபெயர்க்கலாம்.

போல்ஷேவிக்குகளை பொறுத்தவரையில், நரோட்னிநொஸ்க் சைபீரியாவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களுக்கு பொருத்தமான சொல். ஆனால், போலந்து, ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளில் வாழ்ந்த மக்களை வேறுபடுத்திப் பார்த்தனர். அவர்களது அரசியல் மேற்கத்திய மயப் பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே தேசியவாத கட்சிகள் உருவாகி இயங்கத் தொடங்கி இருந்தன.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடலாகாது. தமிழில் தேசியம் என்ற கருத்தியல் மட்டுமல்ல, அதைக் குறிக்கும் எந்தச் சொல்லும் பாவனையில் இருக்கவில்லை. அது ஒரு சமஸ்கிருதச் சொல். 19 ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த தமிழருக்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. 

உண்மையில், தேசியவாதம் என்ற அரசியல் சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி ஆகும்! (தமிழ்த் தேசியவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ள சங்கடப் படுவார்கள்.) ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் தான், முதன்முதலாக தேசியவாத சிந்தனைகள் தோன்றின. பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருளாக வந்தது தான் தேசியம். பிரெஞ்சு மொழியில் nationalité என்று சொல்வார்கள். 

நெப்போலியன் நடத்திய போர்களின் விளைவாக ஐரோப்பா முழுவதும் தேசியவாதக் கருத்துக்கள் பரவின. அது பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டது. ரஷ்யா, உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் தேசியம் பற்றிய கருத்தியல் பரவியது. 

தேசியம் என்பது, ஐரோப்பிய வரலாற்று கால கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து உருவானது. ஆகையினால், லெனின் மற்றும் போல்ஷெவிக் கட்சியினர், "நாஷியோநாலிட்டே" என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்த "நாட்சீ" என்ற சொல்லை தெரிவு செய்தனர். ஜெர்மன், டச்சு போன்ற பிற ஐரோப்பிய மொழிகளிலும் "நாட்சீ" என்றே அழைக்கப் படுகின்றது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், அதற்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் இனங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் மானிடவியல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கிருந்து வெளியான அறிவியல் நூல்களும் ரஷ்யாவில் விரும்பிப் படிக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் இருந்த உலகப் பார்வை அந்தளவு விசாலமானதாக இருக்கவில்லை. நாகரிகம் தொடர்பாக ஒரு பக்கச் சார்பான கருத்துக்கள் நிலவின.

நாங்கள் இன்றைக்கு தமிழர், சிங்களவர், தெலுங்கர் என்றால் தனியான (தேசிய) இனங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இந்தியாவும், இலங்கையும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், அன்று யாரிடமும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. காலனிய மக்களை ஆய்வு செய்ய சென்ற, ஆங்கிலேய மானிடவியல் அறிஞர்கள் பார்வையில், இந்தியா அல்லது இலங்கையில் வாழ்ந்த அனைத்து மக்களும் இனக்குழுக்களாக தெரிந்தனர். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் "அவர்கள் அனைவரையும்  (ஐரோப்பிய) நாகரிகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய பழங்குடி இனமாக" கருதினார்கள். அவர்களை நாகரிக மயப் படுத்துவது, "வெள்ளையர்களின் கடமை" (White men's Burden) என்று சொல்லிக் கொண்டனர்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் புவியியல், மானிடவியல் துறைகளில் படித்தவர்களுக்கும், மொத்தம் எத்தனை மொழி பேசும் இனங்கள் உள்ளன என்ற விபரம் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. சார் மன்னனின் தீவிரமான ரஷ்ய மயமாக்கல் கொள்கை காரணமாக, பல சைபீரிய பூர்வகுடி மக்கள் ரஷ்யர்களாக மாறி இருந்தனர். புள்ளிவிபரக் கணக்கு எடுத்தால், அவர்கள் தங்களை ரஷ்யர்கள் என்றே சொல்லிக் கொண்டனர். இதிலிருந்து தேசியம் தொடர்பாக ஒரு வளர்ச்சி அடைந்த கருத்தியல் உருவானது.

தேசியம் என்பது குறிப்பிட்ட மொழி சார்ந்தது அல்ல. தேசியம் தொடர்பாக கருத்துரைத்த மானிடவியல் அறிஞர்கள், ஐரிஷ் மக்களை உதாரணமாகக் காட்டினார்கள். நீண்ட காலமாக ஆங்கிலேய காலனியாக இருந்த படியால், ஐரிஷ் மக்கள் தமது மொழியை முற்றாக மறந்து விட்டனர். அவர்கள் (இன்றைக்கும் கூட) ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பேசி வந்தனர். இருப்பினும், அந்த மக்கள் மத்தியில் தாம் தனித்துவமான கலாச்சாரம் கொண்டவர்கள் என்ற உணர்வு இருந்தது. அதுவே ஐரிஷ் தேசியம் உருவாகக் காரணமாக இருந்தது.

தேசியம் என்பது ஒரே இனத்தைக் குறிப்பதில்லை. உண்மையில், தேசிய இனம் ஆயிரமாயிரம் வருடங்களாக மாறாத தன்மை கொண்டது என்ற கோட்பாடு ஒரு ஜெர்மன் கவிஞரின் சிந்தனையில் எழுந்தது. யோஹான் ஹெர்டர் (Johann Gottfried Herder, 1744 – 1803) கூறிய வரைவிலக்கணப் படி, "Volk" (உச்சரிப்பு: Folk) என்பது மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் வெளிப்படும் பொதுவான மக்கள் குழுமத்தின் ஆன்மாவைக் குறிக்கும். இன்றைக்கு அதைத் தான் இனவாதிகள் பின்பற்றி வருகின்றனர். (நாஸிகளும் Volk என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர்.) ஆகவே, தேசிய இனம் வேறு, இனம் வேறு. இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

1913 ம் ஆண்டு, ஸ்டாலின் எழுதிய தேசியக் கோட்பாடு ரஷ்ய போல்ஷெவிக் கட்சியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆரம்பத்தில் அது விவாதத்திற்கு விடுவதற்காக எழுதப் பட்டிருந்தாலும்,பிற்காலத்தில் அதுவே கட்சியின் சித்தாந்த நூலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ரஷ்யாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளும், தேசிய கொள்கை வகுப்பாளர்களும், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்டாலின் எழுதிய நூலை படிக்கத் தொடங்கினார்கள்.

அந்த நூலில் ஸ்டாலின், "தேசியம் என்பது ஓர் இனத்தை (race) அல்லது இனக்குழுவை (tribe) குறிப்பதல்ல" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார். அதற்கு மாறாக, வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த, பல்வேறு இனங்களையும், இனக்குழுக்களையும் ஒன்று சேர்த்து உருவான சமூகம் தான் தேசியம். பொதுவான மொழி, பொதுவான கலாச்சாரம், பிரதேசத்தை கொண்ட மக்கள் சமூகத்தின் உறுப்பினர்கள், பொது மனப்பான்மை ஒன்றை பகிர்ந்து கொள்கின்றனர். அது அவர்களது கலாச்சாரத்தில் எதிரொலிக்கும்.

இருப்பினும், அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பல்வேறு இனங்களை கொண்டது ஒரு தேசியம். அதற்கு ஸ்டாலின் பிரெஞ்சு தேசியத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். ரோமர்கள், கோலியர்கள், பிரித்தானியர்கள் (இன்றைய பிரிட்டன் அல்ல), டோயட்டானியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் கலவை அது. அதே மாதிரித் தான் இத்தாலிய தேசியத்தில் ரோமர்கள், எத்ருஸ்கன், கிரேக்கர்கள், அரேபியர்கள் என்று பல்வேறு இனங்கள் ஒன்று கலந்துள்ளன.

லெனினின் கண்ணோட்டத்தின் படி, தேசியம் என்பது முதலாளித்துவ அபிவிருத்திக் காலத்திற்கு உரியது. அதாவது, ஒரு தேசிய இனம் முதலாளித்துவ பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைந்திருக்கும். அது வர்க்க முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும். சுருக்கமாக, 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேசியங்களின் மாதிரியை பின்பற்றும்.

"லெனின் என்ன சொன்னார்?" என்று கேட்கும் தமிழ்த் தேசியவாதிகள், அதற்கு முதலில் லெனினின் தர்க்கீக வாதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: 
1. தமிழர் என்பது பல்வேறு இனங்கள் கலந்து உருவான தேசிய இனம். 
2. தமிழ்த் தேசிய இனத்தில் வர்க்க முரண்பாடுகள் இருக்கும்.


No comments:

Post a Comment