வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.
லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். (ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ) இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், "கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள்.
அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளர் "இது ஒரு நுணுக்கமான இனவழிப்பு" என்று பிதற்றினார். இதைக் கூறிய நிராஜ் டேவிட் என்ற அந்த அறிவிப்பாளர் ஒரு கிறிஸ்தவர்.முன்பொரு தடவை "தமிழர்கள் யூதர்களாக (மதம்) மாற வேண்டும்" என்று ஆலோசனை கூறியவர். இஸ்ரேலையும், யூதர்களையும் புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக் குவித்தவர். முஸ்லிமாக மாறும் தமிழர்கள் "இன்னொரு இனமாகி" விடுவார்கள். அதனால் அது ஒரு "நுணுக்கமான இனவழிப்பு" என்று விளக்கம் கூறுகிறார். முன்பு நிராஜ் டேவிட்டின் ஆலோசனையை கேட்டு தமிழர்கள் யூதர்களாக மாறி இருந்தால், அது இனவழிப்பு ஆகாதா? ஏன் இந்த இரட்டை வேடம்?
பரமேஸ்வரி சீவகன் அவர்கள் தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பேட்டி கண்டுள்ளனர். இவர்களைப் போன்று பலர் இருக்கிறார்கள் என்பதை அவரே கூறி இருந்தார். அதாவது, இந்த ஆவணப் படத்தில் காட்டப் படுபவர் மட்டுமல்லாது, ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் முஸ்லிம்களாக மதம் மாறியுள்ளனர்.
அதற்கான காரணத்தை ஆராய்ந்த மனநல மருத்துவர் பின்வரும் காரணங்களை கூறினார். முன்பு அவர்கள் சார்ந்திருந்த சைவக் கோயில்களில் இது போன்ற பிரச்சனைகளை கையாளும் நடைமுறை எதுவும் இல்லை. அது ஒரு பெரிய குறைபாடு. மேலை நாடுகளில் இருப்பது மாதிரி மனோவியல் ஆலோசனைகள் வழங்கும் பொறிமுறைகளும் போதுமான அளவிற்கு இல்லை. நகர்ப் புறங்களில் வாழும் வசதி படைத்தவர்களுக்கு கிட்டும் இது போன்ற சலுகைகள், போரினால் பாதிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் மதம் மாறுவதன் மூலம் பல நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிகின்றது.
முஸ்லிமாக மாறிய முன்னாள் போராளியும் அதனை தெளிவாக குறிப்பிடுகின்றார் போரில் பாதிக்கப் பட்டு நோயாளியான அவருக்கு உதவுவதற்கு இந்து சமூகத்தில் யாரும் முன்வரவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவுடன் இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, இங்கு சமூகத்தில் ஒதுக்கப் பட்டவர்கள் ஆதரவின்மை காரணமாக மன அழுத்தங்களுக்கு ஆளாவது கவனிக்கத் தக்கது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் புறக்கணிக்கப் படும் பொழுது, அது கிடைக்கும் இடத்தை நோக்கிச் செல்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேலும் முஸ்லிமாக மதம் மாறியதால், புலனாய்வுத்துறையினரின் சந்தேகக் கண்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ முடிந்துள்ளது.
இது போன்றதொரு சம்பவத்தை எங்கள் ஊரிலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். எனது உறவினர்களில் ஒருவர், இறுதியுத்தத்திற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார். அவரைத் தேடி வீட்டுக்குச் சென்ற படையினர், கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார். அதற்குப் பின்னர், அவரது மனைவியும் பிள்ளைகளும் அநாதரவாக நின்றனர். மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த நிலைமையில், அந்தப் பெண் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.
முன்பு கிழக்கு மாகாணத்தில் பெருமளவு காணப்பட்ட அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள், தற்போது வட மாகாணத்திலும் பல்கிப் பெருகி உள்ளன. அதில் சேர்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் அல்லது ஒடுக்கப் பட்ட சமூகத்தினர். ஆவணப் படத்தில் வரும் மனோதத்துவ நிபுணர் சொல்வதைப் போல, இதன் மூலம் அவர்களுக்கு ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது. இது ஒரு மனோவியல் பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கான சமூகக் கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும். ஆனால், பாமர மக்களுக்கு தெரிந்த ஒரே வழி மதம் மாறினால் ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது என்பது தான்.
சிவசேனை போன்ற இந்து மதவாதிகள், இந்தப் பிரச்சினையை கையாளத் தெரியாமல், "மதம் மாற்றுகிறார்கள்" என்று பிற மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. மாறாக, இருக்கும் பிரச்சினையை கூர்மைப் படுத்தவே அது உதவும். இங்கே பிரச்சினை மதம் அல்ல. இலங்கை போன்ற வறிய நாடுகளில், ஆதரவற்றவர்களை தாங்கிப் பிடிக்கும் நிறுவனமோ அதற்கான நடைமுறையோ எதுவும் இல்லை.
மேற்கத்திய நாடுகளில், அரசு அதற்கான வழிவகைகளை செய்து கொடுத்துள்ள படியால், அங்கு யாரும் மதம் மாறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒரு சோஷலிச நாட்டில் அல்லதுமேலைத்தேய நலன்புரி அரசுக்களில் நடைமுறையில் இருந்தது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பு அவசியமாகின்றது. அதைப் புறக்கணித்து விட்டு, வெறுமனே "கட்டாய மத மாற்றம் நடக்கிறது" என்று குற்றம் சாட்டுவதால் பயனேதுமில்லை. இலங்கையில் உள்ள தமிழ் பேசும் சிவில் சமூகம் தொடர்ந்தும் ஏழைகளை புறக்கணித்து வந்தால், அவர்களும் தமக்குத் தெரிந்த மதம் மாறும் வழிகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது.
வாய் நிறைய தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே, தமது சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரக்கப் படாத கயவர்கள் இவர்கள். தமது இனத் துரோகத்தை மறைப்பதற்காக எந்த பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்காதவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வசதிபடைத்த புலி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு முன்னாள் புலிப் போராளிக்கு உதவி செய்தாலே போதும். அதையும் இந்த ஆவணப் படமே கூறுகின்றது.
ஈழத் தமிழர் மத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வை மூடி மறைத்துக் கொண்டே "எல்லோரும் தமிழர் என்று ஒரே இனமாக சிந்திக்கிறார்கள்" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வீணர்கள் உண்மைகளை பேசப் போவதில்லை. இன்று கைவிடப் பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.
ஈழப் போர் முடிந்தவுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த போராளிகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக ஒதுக்கப் பட்டனர். எந்த நேரமும் சந்தேகப் படும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடி ஒரு பக்கம். வேலை வாய்ப்பில்லாத படியால் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் மறுபக்கம். அதேநேரம், போர் அனுபவங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் மனநிலை பாதிக்கப் பட்டுமுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு, எந்தவொரு இந்து மத அமைப்போ அல்லது தமிழ்த் தேசிய அமைப்போ முன்வரவில்லை. அப்படியான நிலையில் அவர்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத மாற்றத்தை எதிர்ப்பவர்கள் முதலில் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். அதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுங்கள். இல்லாவிட்டால் அங்கு நடக்கும் மதமாற்றத்திற்கு, நீங்களும் ஒரு வகையில் உடந்தை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment