[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
(ஆறாம் பாகம்)
"ஈழத் தமிழர்கள் அஹிம்சா வழியில் போராடி, அடிக்கு மேல் அடி வாங்கியதால் தான் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள்..." இவ்வாறு இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அன்றைய நிலவரம் அப்படி இருக்கவில்லை. அஹிம்சா வழிப் போராட்டம் எனும் பாராளுமன்றப் பாதையை மட்டுமே நம்பியிருந்த தமிழ்த் தேசியவாதிகள், 1982 ம் ஆண்டு வரையும் பலமான சக்தியாக இருந்தனர். விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் போராட்டத்தை நம்பிய இயக்கங்கள், முதலில் அஹிம்சா வழி தமிழ்த் தேசியவாதிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டி இருந்தது.
முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், மீண்டும் பாராளுமன்ற அரசியல் பாதையை நம்பியிருக்க வைக்கப் பட்டுள்ளனர். அன்றிருந்த தலைமுறையினர் பாராளுமன்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது மாத்திரமே தமது அரசியல் கடமை என்றிருந்தார்கள். இன்றைய தலைமுறையினரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பசிக்கு தீனி போடுவது போல, ஊடகங்களும் அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பின்னர் அதுவே திண்ணைப் பேச்சாக விவாதிக்கப் படும்.
நான் இருபது வருட புலம்பெயர் வாழ்வுக்குப் பின்னர் ஊருக்கு திரும்பிச் சென்ற பொழுது, அங்கிருந்த மக்களின் அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதை நேரில் கண்டேன். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான உதயன் பத்திரிகை, யாழ் குடாநாட்டில் பிரதானமான கருத்துருவாக்கியாக இருக்கின்றது. அது உண்மையை எழுதுகிறதா, பொய் எழுதுகிறதா என்று ஆராயாமல், அப்படியே நம்பும் அளவிற்கு மக்கள் உள்ளனர்.
இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் பொழுது, எண்பதுகளில் வாழ்ந்த தலைமுறையினர் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டு சிந்தித்தனர் என்று கூறலாம். அன்றைக்கும் ஈழநாடு, சுதந்திரன் ஆகிய இரண்டு தினசரிப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் கருத்துருவாக்கிகளாக செயற்பட்டன. இரண்டுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தாலும் சிறியளவு வித்தியாசமும் இருந்தது.
ஈழநாடு யாழ் மையவாத பூர்ஷுவா வர்க்கத்தின் மனநிலையை பிரதிபலித்தது. அன்றைய நிலையில் எந்த இயக்கத்தையும், கட்சியையும் ஆதரிக்காமல் "நடுநிலையாக" நடந்து கொண்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்த போது, அது வெளிப்படையாகவே இந்திய ஆதரவு நிலை எடுத்தது. 1987 ம் ஆண்டு, புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டதும், ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.
புலிகள் நடத்தி வந்த நிதர்சனம் தொலைக்காட்சி நிலையம், ஈழமுரசு பத்திரிகை காரியாலயமும், இந்தியப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. அதற்குப் பதிலாக, புலிகள் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கு குண்டு வைத்து தகர்த்தார்கள். அந்த சமபவத்திற்குப் பின்னர் புலம்பெயர்ந்த ஈழநாடு, பாரிஸ் நகரில் இருந்து வெளியானது. அப்போது அது புலி ஆதரவு நிலை எடுத்திருந்தது.
புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னார். ஒரு (இங்கே ஈழத்திற்கான) விடுதலைப் போராட்டமும் அப்படித் தான். மனித உரிமைகள், தார்மீக ஆதரவு எல்லாவற்றையும் சரி பார்த்து போராட்டம் நடப்பதில்லை. ஒரு காலத்தில் பெரும்பான்மை ஈழத் தமிழரின் ஆதரவைப் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை புலிகள் சுட்டுக் கொல்ல முடிந்தது. அதற்குக் காரணம் அன்றைய மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மனமாற்றம் தான்.
2016 ல் தீர்வு பெற்றுத் தருவதாக சொன்ன சம்பந்தனையும், கூட்டமைப்பையும் விமர்சிக்கும் பலர் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். ஒரு சாதாரணமான பூர்ஷுவா (முதலாளித்துவ) வர்க்க அரசியல் கட்சியிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் அள்ளி வீசுவதும், வென்ற பின்னர் அதை மறந்து விடுவதும் பூர்ஷுவா கட்சிகளுக்கு வாடிக்கையான விடயங்கள். உலகம் முழுவதும் அப்படித் தான் பாராளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகின்றது.
1977 ம் ஆண்டு, கூட்டணி தேர்தலில் வென்றால் தமிழீழம் வாங்கித் தருவதாக ஏமாற்றியது. அதை விட பெரிய துரோகத்தையா இன்றைய கூட்டமைப்பு செய்துள்ளது? ஆனால், அன்று கூட்டணி சொன்னதை உண்மையென்று நம்பி வாக்களித்த மக்கள், அதுவும் வழமையான தேர்தல் வாக்குறுதி என்று அறிந்து கொண்டதும் கொந்தளித்தார்கள்.
ஒரு தடவை, எங்கள் ஊரில் நடந்த கூட்டணிக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்குமுக்காடினார்கள். அது 1982 ம் ஆண்டு என நினைக்கிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரட்ணம் பேசிக் கொண்டிருந்தார். "தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கதை என்னாச்சு?" என்று பலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த நவரட்ணம் "தம்பி மாருக்கு நிலைமை விளங்குவதில்லை.... இது கத்தி முனையில் நடப்பது போன்றது..." என்று சொல்லிச் சமாளித்தார்.
தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது சுகபோக வாழ்க்கைக்கு தேர்தல் அரசியல் அவசியமாக இருந்தது. அதனால் காலத்திற்கு காலம் புதுப்புது வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்தனர். இந்த உண்மைகள் சாதாரணமான பாமர மக்களுக்கும் தெரிய வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
1982 ம் ஆண்டு நடந்த மாவட்ட சபைத் தேர்தல் தான், ஈழப்போர் தொடங்க முன்னர் இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் ஆகும். தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கூட்டணி, மாவட்ட சபைகளை ஒரு சிறந்த தீர்வாக காட்டிக் கொண்டிருந்தது. அனைத்து ஆயுதக் குழுக்களும் அதை பகிஷ்கரித்திருந்தன. வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கா விட்டால், சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று புலிகள் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தனர்.
எமது ஊரில் மாவட்ட சபைக்கு போட்டியிட்ட கூட்டணி உறுப்பினர்கள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயமுற்றார். அவர்களை சுட்டவர்கள் புலிகள். யாழ்ப்பாணத்தில் காவல் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். புளொட் இயக்கம் அந்தத் தாக்குதலை நடத்தியது என நினைக்கிறேன். அதன் எதிர்விளைவாக, சிங்களப் பொலிசார் வெறியாட்டம் போட்டனர். யாழ் நகரில் இருந்த கடைகள் எரிக்கப் பட்டன. அப்போது தான் யாழ் பொது நூலகமும் எரிக்கப் பட்டது.
அந்தக் காலங்களில், கூட்டணிக் கட்சி இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் ஆவணப் படுத்தி வந்தது. அன்று யாழ் நகரில் நடந்த கலவரக் காட்சிகளை புகைப்படங்களாகவும், உணர்ச்சியை தூண்டும் வசனங்களாகவும் கொண்ட நூலாக வெளியிட்டது. அதன் பெயர் நினைவில்லை. அந்த நூல் வெளிவந்த உடனேயே கடைகளில் விற்றுத் தீர்ந்தது. பாடசாலையில் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அதை வாசித்தார்கள்.
சிங்களவர்களின் கொடுமைகளை கண்டு தமிழர்கள் கொதித்தெழ வைப்பது தான் இது போன்ற பிரசுரங்களை வெளியிடுவோரின் நோக்கமும். அன்று அது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்க உதவியது. பிற்காலத்தில் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு போராளிகளை சேர்க்க உதவியது. தமிழ் மக்களின் இன அடிப்படையிலான உணர்வுகளை தூண்டி விட்டால் போதும், தமிழீழம் கிடைத்து விடும் என்று கூட்டணி நம்பியது. அதையே பிற்காலத்தில் புலிகளும் நம்பினார்கள். இன்றைக்கு புலி ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும் அதே பாணியிலான அரசியலைத் தான் பின்பற்றுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். எண்பதுகளில் பாராளுமன்றப் பாதையை முற்றிலும் நிராகரித்த புதிய தலைமுறை ஒன்று உருவாகி இருந்தது. அது ஒரு புரட்சிகரமான சமூக மாற்றம். பத்து வருடங்களுக்குப் பின்னர், ஆயுதப் போராட்டத்தையும்(பாராளுமன்ற)அரசியல் போராட்டத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கப் பழகிய சமூகமாக மாறி இருந்தது. இந்த மாற்றத்தை புலிகள் கூட காலந் தாழ்த்தி தான் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் அவசர அவசரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் பலனை அனுபவிப்பதற்குள் இறுதிப் போர் வந்து எல்லாம் முடிந்து போனது.
தமிழ்த்தேசிய சித்தாந்தவாதிகள் பரப்புரை செய்வது போன்று "அஹிம்சைப் போராட்டத்தில் பொறுமையிழந்த" தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை. இது புறக் காரணிகளை கவனத்தில் எடுக்காத ஒரு குறுகிய மனப்பான்மை. தமிழ்த்தேசியவாதிகள், உள்முரண்பாடுகள் காரணமாக, "அஹிம்சாவாதிகள், ஆயுதப் போராளிகள்" என்று இரண்டாகப் பிரிந்து உட்பகை கொண்டு மோதியதை மூடி மறைப்பது ஏன்? அது மட்டுமல்ல, தலைமுறை இடைவெளியும் முக்கிய பங்காற்றியது. அன்றைய இளைய தலைமுறையினர் பாராளுமன்ற பாதையை புறக்கணித்து ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தமைக்கு சர்வதேச நிலவரமும் காரணமாக இருந்தது. இன்றும் கூட, தமிழ்க் குறுந்தேசிய வாதிகள் இது போன்ற விடயங்களை கவனத்தில் எடுப்பதில்லை. இயங்கியல் போக்கை மறுத்து, வெறும் சித்தாந்தப் பற்று மட்டுமே விடுதலையை பெற்றுத் தரும் என்பது ஒரு மாயை.
கியூபாவில் பிடல்காஸ்ட்ரோ குழுவினர் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். அதே பாணியை பின்பற்றி நிகராகுவாவும் விடுதலை அடைந்தது. இந்தியாவில் நக்சலைட்டுகளின் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் தாக்குதல்கள் பற்றி, இந்திய வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. அதே நேரம், தென்னிலங்கையில் தோல்வியுற்ற ஜேவிபி கிளர்ச்சி பற்றி, "சேகுவேராவாதிகளின் போராட்டம்" என்ற தலைப்பில் தமிழ் மக்களால் ஆய்வு செய்யப் பட்டது. இவை எல்லாம் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்தவில்லை என்று சொல்ல முடியுமா?
இந்த இடத்தில் மீண்டும் ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதுவும் ஒரு ஈழத் தேசியவாத இயக்கம் தான். ஆனால், மார்க்சிய லெனினிச கோட்பாடுகளை கற்றறிந்த படியால், ஈழப் போராட்டத்தில் புதிய ஒளியை பாய்ச்சி இருந்தனர். அறுபதுகளில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டம் தான் தமிழர்களின் முதலாவது ஆயுதப் போராட்டம் என்று கூறி வந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுதும், பொதுக் கூட்டங்களிலும், அவர்கள் அந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தனர். இன்று இவ்வாறான கடந்த கால வரலாற்றை மறந்து விட்ட அரசியலற்ற தலைமுறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
(தொடரும்)
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
No comments:
Post a Comment