Thursday, December 15, 2016

வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(இரண்டாம் பாகம்)

வர்க்கம் என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் நேரடியாகப் பதிலளிக்கப் போவதில்லை. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், "உலகில் வர்க்கங்கள் இல்லாத ஒரே இனம் தமிழினம் மட்டும் தான்!" இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள். "அதுவா? ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று இரண்டு உண்டு." என்று புரட்டிப் போடுவார்கள்.

எனது பெற்றோர் ஏழைக் குடும்பப் பின்னணியில் இருந்து சுயமாக படித்து முன்னேறியவர்கள். கொழும்பில் அரசாங்க உத்தியோகமும் கிடைத்த படியால், பாட்டாளி வர்க்கத்தில் இருந்து கீழ் மத்திய தர வர்க்கத்தில் சேர்ந்து கொண்டவர்கள். அவர்களது உறவினர்கள் பலர் இன்னமும் ஏழைகளாக பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தனர். நாங்கள் உறவுக் காரர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் சமமாக மதித்து வாழ்ந்தாலும், சமூகத்தில் வர்க்க வேற்றுமை இருக்கவில்லை என்று சொல்ல முடியாது.

நான் நன்றாக படிக்கா விட்டால் வன்னியில் மாடு மேய்ப்பதற்கு கொண்டு சென்று விட்டு விடுவதாக, எனது தந்தை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருந்தார். இதென்ன பிரமாதம்? எல்லாப் பெற்றோரும் சொல்வது தானே என்று சிலர் "நியாயம்" கூறலாம். ஆனால், "மாடு மேய்ப்பது என்பது படிக்காதவர்கள் செய்யும் இளக்காரமான தொழில்" என்ற எண்ணம் ஏன் உருவானது? இது வர்க்கம் சார்ந்த கண்ணோட்டம் இல்லாமல் வேறென்ன?

இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றில் எழுபதுகள் ஒரு முக்கியமான அரசியல் காலகட்டம். ஜேவிபி கிளர்ச்சி, விடுதலைப் புலிகளின் தோற்றம் போன்றவை இலங்கையை உலுக்கிய காலம் அது. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் சில இடதுசாரிக் கட்சிகளும் அங்கம் வகித்தன. அந்த அரசாங்கம், இந்தியாவில் இருந்த மாதிரி தேசிய முதலாளிகளின் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தது. அன்று இலங்கையில் வாழ்ந்த ஒவ்வொரு பிரஜையின் வாழ்க்கையிலும் அது தாக்கம் செலுத்தியது.

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் எந்த வகைப் பொருளாதாரத்தை பின்பற்றுவது என்பதில் குழப்பம் நிலவியது. ஏனெனில் அது வரையும் மிகப்பெரிய பிரிட்டிஷ் நிறுவனங்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளிய வர்க்கமும் வளர்ந்திருந்தது. ஐம்பதுகளில் பண்டாரநாயக்கவுடன் ஆரம்பிக்கப் பட்ட நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டம், சிறிமாவோ காலத்தில் பூரணப் படுத்தப் பட்டது.

அன்றைய காலத்தில் பலருக்கு தேசியவாதத்திற்கும், சோஷலிசத்திற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை. இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொண்டார்கள். சிறிமாவோ சோஷலிசத்தின் பெயரில் தேசியவாதப் பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தினார். பிற்காலத்தில் புலிகளும் அதே பாணியை பின்பற்றினார்கள். உலகம் முழுவதும் நவ தாராளவாத பொருளாதாரத்தை பின்பற்றிய காலத்தில், வன்னியில் புலிகள் வைத்திருந்த "தமிழீழத்தில்" இருந்த தேசியவாதப் பொருளாதாரமும் அத்தகையது தான். (இன்று சிலர் அதை "வள்ளுவம்" புதிய பெயரில் அழைக்கிறார்கள்.) அது வேறு விடயம்.

அந்தக் காலகட்டத்தில், நாங்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டிய பகுதியில் புதிதாக கட்டப் பட்ட அண்டர்சன் தொடர் மாடிக் கட்டிடத்தில் குடியேறி இருந்தோம். எனது அப்பாவும், அம்மாவும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என்பதால் அங்கே வீடு கிடைத்திருந்தது. அவை அடிப்படை வசதிகளை கொண்டிருந்தாலும் மிகவும் சாதாரணமான வீடுகள். இருப்பினும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற அதிக சம்பளம் வாங்கும் உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு வசித்தனர்.

அன்று, மத்திய தர வர்க்கத்தினருக்கு இடையில், குறைந்த பட்சம் வீட்டு விடயத்தில் சமத்துவம் நிலவியது. அதே நேரம், அங்கு வாழ்ந்த எல்லோரும் வசதியானவர்களும் அல்ல. அதே மாடிக் கட்டிடத்தில் வாழ்ந்த எனது நண்பர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடியதையும் நேரில் கண்டிருக்கிறேன். அன்றைய காலத்தில் ஓரளவு சகோதரத்துவம் நிலவியது. ஒரே மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்த படியால் வர்க்க வேற்றுமை கடந்து பழகும் வாய்ப்புக் கிட்டியது. ஆனால், இன்று அந்த நிலைமை அடியோடு மாறி விட்டது.

இன்று வெள்ளவத்தையில் ஆடம்பரமான மாடிக் கட்டிடங்கள் வந்து விட்டன. மேற்குலக நாடுகளில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் அந்த வீடுகளில் உள்ளன. வர்த்தகர்கள், பணக்காரர்கள் மட்டுமல்ல, மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற உயர் மத்தியதர வர்க்கத்தினரும் அங்கு குடியேறி வாழ்கிறார்கள். ஆங்கிலத்தில் "Gated community" என்று அழைக்கப் படும், சுற்றி வர மதில்கள் கட்டி, பாதுகாப்பு வேலிகள் போட்டு, சமூகத்தில் இருந்து தனித்து வாழும் பணக்காரர்களின் குடியிருப்புகள் அவை.

மத்திய தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்த அதே நாரஹேன்பிட்டியவில் தான் கொழும்பில் மிகப் பெரிய சேரியும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு, பள்ளிக்கூடம் செல்பவர்கள் அந்த சேரியைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதாவது, நாங்கள் குடியிருந்த அண்டர்சன் மாடிக் கட்டிடங்களுக்கு அருகில் ஏழைகள் குடியிருக்கும் சேரியும் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்களுக்கு எந்த வசதிகளும் இருக்கவில்லை.


அன்றிருந்த சிறிமாவோ அரசாங்கம், ஏழைகளை முன்னேற்றுவதற்கு எதையும் செய்யவில்லை. ஆனால், சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தது. ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஊட்டச் சத்து குறைந்திருந்த படியால், "திரிபோஷா" என்ற மாவை அறிமுகம் செய்தது. பல தானியங்களை அரைத்து தயாரிக்கப் பட்ட, சத்தான உணவான திரிபோஷா இலவசமாகக் கொடுக்கப் பட்டது.

பெரும்பாலான ஏழைகள் சத்துணவான திரிபோஷா சாப்பிடவில்லை! அதாவது, எந்த நேரமும் சோறும் கறியும் சாப்பிடும் வாய்களுக்கு அது ருசிக்கவில்லை. அதனால், சேரிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள், தமக்குக் கிடைக்கும் திரிபோஷா மாவை கொண்டு சென்று விற்பார்கள். அவர்கள் அந்தக் காசில் சத்துக் குறைந்த அரிசி வாங்கிச் சாப்பிடுவார்கள். எமது மாடிக் குடியிருப்புகளில் திரிபோஷா மாவை கொண்டு வந்து விற்கும் பிள்ளைகளிடம் அம்மா அதை வாங்குவார். ஒவ்வொரு நாளும் நாங்கள் அதைக் களி மாதிரிக் குழைத்து சாப்பிடுவோம். அதைச் சாப்பிடும் பொழுது என்னுள் ஒரு குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன்.

சிறிமாவோ காலத்தில் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது கடுமையாக கட்டுப் படுத்தப் பட்டது. தென்னிந்திய தமிழ் சினிமாப் படம் கூட, வருடத்தில் ஒன்றிரண்டு தான் வெளியானது. அதே நேரத்தில், ஈழத்து சினிமா வளர்ச்சி அடைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட சினிமாக்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்வது எமது பொழுதுபோக்காக இருந்தது. சில உள்ளூர் நடிகர்கள், பாடகர்கள் கூட எம்மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.

"இலங்கை எம்.ஜி.ஆர்." என்று அழைக்கப் பட்ட வி.பி. கணேசன் நடித்த நான் உங்கள் தோழன் திரைப்படம் நூறு நாட்கள் ஓடியது. செங்கை ஆழியானின் பிரபல நாவலை படமாக்கிய வாடைக்காற்றும் நூறு நாட்கள் ஓடியது. ஈழத்து திரைப்பட வரலாற்றில் அது ஒரு பெரிய சாதனை.  அவற்றில் வந்த பாடல்கள் பலரின் வாய்களில் முணுமுணுக்கப் படுமளவிற்கு பிரபலமாக இருந்தன.

நான் உங்கள் தோழன், மலையக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், வாடைக்காற்று வட மாகாணக் கரையோர மீனவர்களையும் முதன்மைப் படுத்தி எடுக்கப் பட்டிருந்தன. திரையுலக முதலாளிகளும் உழைக்கும் வர்க்கத்தை காட்சிப் படுத்தி தான் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமை இருந்தது.

எத்தகைய பாவனைப் பொருளானாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தால், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப் பட்டது. இதனால் உள்நாட்டு சிங்கள முதலாளிகள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து தமிழ் விவசாயிகளும் பெருமளவு இலாபம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆனார்கள். ஆனால், மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களும், மத்திய தர வர்க்க உழைப்பாளிகளும் நிறையக் கஷ்டப் பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. லக்சல, சலுசல போன்ற பெயர்களில், அரசாங்கம் நிறுவிய விநியோக மையங்களில் தான் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும். கிராமங்களில் கூட்டுறவு சங்கக் கடைகள் பிரதானமான விற்பனை மையங்களாக விளங்கின. இதனால், ஒரு பக்கம் பாவனையாளர்கள் கஷ்டப் பட்டாலும், மறுபக்கம் கூட்டுறவு இயக்கம் வளர்ந்தது.

உடைகளைப் பொறுத்த வரையில் உள்ளூர் உற்பத்தியான பருத்தியில் நெய்யப் பட்ட ஆடைகளைத் தான் அணிய வேண்டும். இன்றும் கூட இலங்கையில் எல்லாப் பெண்களும் வீடுகளில் அணியும் காற்றோட்டமான நீண்ட அங்கியும் அப்போது தான் பிரபலமானது. "பற்றிக்" என்ற பெயரிலான, இலங்கைக்கே உரிய தனித்துவமான ஆடைகள் தான் அந்தக் காலத்தில் நாகரிகம் (பேஷன்).

அந்தக் காலத்தில் ஆடம்பரமான உடைகள் அணிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பணக்காரர்கள் கூட அடக்கமாக நடந்து கொண்டார்கள். ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில், குறைந்த பட்சம் ஆடையிலாவது சமத்துவம் நிலவுகிறது என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லோரும் பருத்தி உடை அணிந்தனர். அதை மட்டும் தான் வாங்கக் கூடியதாக இருந்தது.

எனது பன்னிரண்டாவது பிறந்த நாள் அன்று, வழமை போல அப்பா ஒரு பருத்திச் சட்டை வாங்கித் தந்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வீட்டிற்கு வந்த ஒருவர், அதைக் கண்டு முகம் சுழித்தார். "பிறந்தநாளுக்கு பருத்திச் சட்டை அணிவார்களா? பட்டுச் சட்டை வாங்கவில்லையா?" என்று இளக்காரமாகக் கேட்டார். அப்போது அது வர்க்க வேறுபாட்டைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அதே நேரம், பருத்தி அணிவதை நான் ஒரு குறையாகக் கருதவும் இல்லை.

சுமாரான, கண்ணைக் கவரும் டிசைன் இல்லாத, இலகுவில் கசங்கக் கூடிய பருத்தி ஆடை, சமூகத்தில் ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினரின் உடையாக கருதப் பட்டது. தரமில்லா விட்டாலும் அது தான் மலிவானது. ஆனால், சிறிமாவோ காலத்தில் அந்நிய நாட்டு இறக்குமதி தடுக்கப் பட்டதால், எல்லோரும் உள்நாட்டு பருத்தி ஆடை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிச்சயமாக பணக்காரர்கள் அதை வரவேற்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிய விரும்பினார்கள். 

பட்டு ஆடைகளின் விற்பனை முற்றாக ஒழிக்கப் பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த எனது பெற்றோர் அந்தளவு ஆடம்பரமாக வாழ நினைக்கவில்லை. ஆனால், அவர்களது நண்பர்களும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. அதன் விளைவு தான், பன்னிரண்டாவது பிறந்தநாள் அன்று எனக்குக் கிடைத்த வர்க்க வேறுபாடு பற்றிய அறிவுரை.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். எழுபதுகளின் இறுதியில் இலங்கையில் ஆட்சி மாறியது. பிரதமராகப் பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனே நவ தாராளவாத பொருளாதாரத்தை கொண்டு வந்தார். இறக்குமதிக்கு விதிக்கப் பட்டிருந்த தடைகளை அகற்றி, தனியார்மயத்தை புகுத்தினார். அரச ஏகபோகம் நிலவிய போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வழித் தடங்களில், தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப் பட்டன.

எனது அப்பாவும் தனது சேமிப்பில் இருந்த பணத்தில் ஒரு மினிவேன் வாங்கினார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வழித்தடத்தில் அது சேவையில் ஈடுபடுத்தப் பட்டது. சம்பளத்திற்கு அமர்த்தப் பட்ட சாரதி ஒருவர் அதை ஓடிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும். மினிவேன் ஓடப் பழகி விட்ட நான், ஒரு தடவை யாழ் நகரில் இருந்த கராஜிற்கு திருத்துவதற்கு கொண்டு சென்றேன். அப்போது வழியில் வந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னைக் கண்டு விட்டார்.

நான் மினிவேன் ஓடியதைக் கண்ட அவர், அதற்காக என்னைத் திட்டத் தொடங்கினார். "நீயெல்லாம் சாரதி வேலை பார்க்கக் கூடாது" என்று கடிந்து கொண்டார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. அதாவது, மினிவேன் சாரதி வேலை அடிமட்ட பாட்டாளி வர்க்க தொழிலாளிகளுக்கானது. மத்தியதர வர்க்கத்தினர் அந்த வேலை செய்வது தடுக்கப் பட்டுள்ளது. அதாவது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதிக்கொரு தொழில் இருந்த மாதிரி, முதலாளித்துவ காலகட்டத்தில் வர்க்கத்திற்கு உரிய தொழில்கள் இருக்கின்றன.

பிற்காலத்தில், அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், நானாகவே உழைக்கும் வர்க்கத்தினர் செய்த வேலைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. நாட்டுப்புற ஏழை மக்களை அரசியல் மயப் படுத்துவதற்காக, அவர்களது வீடுகளில் தங்கியிருந்து, அவர்கள் உண்ணும் உணவை உண்டு, அவர்களுடன் சில நாட்கள் வேலைக்கு சென்றதும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதனால், வர்க்க அரசியலை நடைமுறையில் அறிந்து கொள்ள முடிந்தது.

(தொடரும்)

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments:

Post a Comment