"ஈழத் தமிழருக்கும் பொதுவுடமைக்கும் சம்பந்தம் இல்லை... அவர்களுக்கு தமிழ்த் தேசியத்தை தவிர வேறெந்த மண்ணும் தெரியாது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் நடந்த சம்பவங்களை எழுதி இருப்பதால், இதை எனது சுயசரிதையின் ஒரு பகுதியாகவும் கருதலாம்.
எனது பதினாறு வயது வரையில், அதாவது அறியாப் பருவத்தில், நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத் தான் இருந்தேன். எனது தந்தை மிகவும் தீவிரமான தமிழ்த் தேசியவாதி. அவருக்கு கம்யூனிசம் பிடிக்காது. கம்யூனிஸ்டுகள், குறிப்பாக ஸ்டாலின் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தான் அவர் எனக்கு போதித்து வந்தார்.
எனது பதினாறு வயது வரையில், அதாவது அறியாப் பருவத்தில், நானும் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத் தான் இருந்தேன். எனது தந்தை மிகவும் தீவிரமான தமிழ்த் தேசியவாதி. அவருக்கு கம்யூனிசம் பிடிக்காது. கம்யூனிஸ்டுகள், குறிப்பாக ஸ்டாலின் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தான் அவர் எனக்கு போதித்து வந்தார்.
எமது ஊரில் ஈரோஸ் எனும் ஈழப்புரட்சி அமைப்பிற்கு வேலை செய்தவர்கள் மூலமாகத் தான் மார்க்சியம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டேன். அந்த இயக்கத்தினர் மீது பலதரப் பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் தான் என்னைப் போன்ற பலருக்கு மார்க்சியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.
"கார்ல் மார்க்ஸ், கம்யூனிசத்தை மறந்து போன இரண்டு தலைமுறைகள் வந்து விட்டன..." என்று ஒரு நண்பர் கூறினார். உண்மை தான். எண்பதுகளில் இருந்த என்னுடைய தலைமுறைக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. அது எங்களது தவறா அல்லது கல்வி அமைப்பின் தவறா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.
இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் கம்யூனிசத்திற்கு இடமில்லை. பாடநூல்களில் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், குறிப்பாக சமூகக்கல்வி ஆசிரியர்கள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்கையை போதிக்கத் தயங்கவில்லை.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது, சமூகவியல் பாடத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கம்யூனிசம் பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போது, வகுப்பறையில் யாராவது ஒரு மாணவர், தப்பித் தவறி கம்யூனிசம் பற்றி மேலும் விளக்குமாறு கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் எதிர்மறையான பதில்களை கூறி வந்தனர். அரசாங்கம் அவர்களை அப்படித் தான் பயிற்றுவித்தது. (விதிவிலக்காக மலையகத்தில் ஆசிரியர்கள் தான் பொதுவுடைமை கருத்துக்களை விதைத்தார்கள்.)
அந்த எதிர்மறையான பதில்கள் எல்லா மாணவர்களையும் திருப்திப் படுத்தவில்லை. எமது ஆசிரியர் சொன்ன விளக்கத்தில் இருந்தே கேள்வி கேட்டோம். "பொதுவுடைமைக் கொள்கை சமத்துவத்தை, பகிர்ந்துண்பதை வலியுறுத்துகிறது என்றால், அது எப்படி தவறாகும்?" இந்தக் கேள்விக்கு ஆசிரியரிடம் பதில் இருக்கவில்லை. அவரே குழம்பிப் போனார்.
வீட்டிற்கு வந்து அப்பாவிடம் கேட்டேன். "ஸ்டாலின் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மை...அதற்குப் பலியான இலட்சக்கணக்கான மக்கள்..." என்றெல்லாம் விளக்கம் கூறத் தொடங்கினார். அவரது உலகப் பார்வை, மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் பெரிதும் ஒத்திருந்தது. எனது தந்தையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எனது தந்தை ஒரு பின்தங்கிய கிராமத்தில், ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்தவர். ஆனால், கடின உழைப்பின் மூலம் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பதன் மூலம் முன்னேறிய பிரிவில் ஒருவராக இருந்தார்.
எனது தந்தையின் காலத்தில், அவர்களது முன்னேற்றத்திற்கு உதவிய முதலாளித்துவ சமூக அமைப்பு சிறந்தது என்று அவர் தீர்மானித்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்தில், தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள, எனது தந்தையின் பிறந்த ஊரான சரசாலை, இன்றைக்கும் அடிப்படை வசதிகளற்ற பின்தங்கிய கிராமமாக இருக்கிறது. என்றும் மாறாத ஏழ்மை மட்டுமல்ல, ஆரம்பப் பாடசாலையைக் கூட தாண்டாத பிள்ளைகளை அதிகமாகக் கொண்ட கிராமம். ஐம்பது, அல்லது எழுபது வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
இலங்கை அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய பொருளாதார நாடு. இது "நடைமுறைக்கு உதவாத மார்க்சியக் கண்ணோட்டம்" அல்ல. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணக் கிராமங்களில் அதை நேரடியாகத் தரிசிக்க முடியும். பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருந்த உயர் சாதி நிலவுடமையாளர்கள், முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தனர்.
முதலாளித்துவம் கொண்டு வரும் வசதி வாய்ப்புகள், தம்மால் ஒடுக்கப் பட்ட சமூகப் பிரிவினர் முன்னேற வழிவகுத்து விடும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த எனது அப்பாவும், முதலாளித்துவத்தை முற்போக்கானதாக கருதியதில் வியப்பில்லை. அவர்களது அன்றைய சமூக மாற்றத்திற்கு அமைவாக தமிழ்த் தேசிய இயக்கமும் தோன்றியிருந்தது.
பலர் நினைப்பதற்கு மாறாக, தமிழ்த் தேசிய இயக்கம் ஈழத்திற்கு வெளியே கொழும்பு நகரில் தான் வளர்ந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் அதற்கான வாய்ப்புகளை வழங்கி இருக்கவில்லை. முதலாவது தமிழ்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், நிலவுடைமையாளர்கள், உயர் சாதியினரின் கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது.
உண்மையில், அன்று இடதுசாரிக் கட்சிகள் மட்டும் தான் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தின! தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த தமிழரசுக் கட்சிக்கு சவாலாக இடதுசாரிக் கட்சிகள் இருந்தன. அந்த சவாலை எதிர்கொண்டு, இடதுசாரி ஆதரவுத் தளத்தை உடைப்பதற்கு தமிழ்த் தேசியத்தை விட்டால் வேறு வழி இருக்கவில்லை.
"தமிழருக்குள் ஒற்றுமை இல்லை.... தமிழராக ஒன்று படுவோம்..." போன்ற கோஷங்கள் தமிழரசுக் கட்சிக் காலத்தில் எழுப்பப் பட்டன. பிற்காலத்தில் தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும், குறிப்பிட்ட காலம் இந்தியத் தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சி உருவானது. அதன் மூலம் அவர்களாக "தமிழரின் ஒற்றுமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இந்தக் காலகட்டத்தில் தான், அதாவது எழுபதுகளில், கொழும்பில் பணியாற்றிய எனது தந்தையும் தமிழ்த் தேசிய அரசியலை தீவிரமாகப் பின்பற்றி வந்தார்.
கொழும்பு நகரில் எந்த நேரமும் கலவரம் நடக்கலாம், தமிழர்கள் கொல்லப் படலாம் என்ற அச்சம் நிலவியது. அப்போது "தமிழரின் தாயகமான" யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வாழலாம் என்று எனது பெற்றோர் முடிவெடுத்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரும் கால இடைவெளியில், என்னை யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தேன். சுமார் ஒரு வருட காலம் விடுதியில் தங்கியிருந்த படியால், தமிழ்த் தேசிய அரசியலையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.
அன்றிலிருந்து இன்று வரையில், யாழ் இந்துக் கல்லூரி ஒரு "தமிழ்த் தேசியப் பாடசாலை" என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நான் படித்த காலத்தில், அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மாணவர்கள் அதைச் சென்று பார்வையிடுவதற்கு, பள்ளிக்கூட நிர்வாகம் ஊக்குவித்தது. "தமிழினத் தளபதி" அமிர்தலிங்கம், "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆகியோர் அங்கு உரையாற்றினார்கள். நாங்களும் அதைக் கேட்டு கைதட்டி இரசித்தோம்.
கூட்டணியினரின் உணர்ச்சிகரமான உரைகளால் ஆகர்சிக்கப் பட்ட நானும், தமிழ்த் தேசியவாதக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவற்றை எனது டயறியில் பார்த்த அப்பா, இதையெல்லாம் வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என்றார். அந்தளவுக்கு எனது கவிதைகளும் "உணர்ச்சிகரமான தமிழ் இன உணர்வு மிக்க" கவிதைகளாக இருந்தன. அப்போது எனக்கு பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது தான் இருக்கும். அரசியலை பகுத்தறியும் பக்குவமற்ற அந்த வயதில், உணர்ச்சிகரமான தமிழ்த் தேசியம் சிறந்த கொள்கை என்று நம்பியதில் வியப்பில்லை.
பதினாறு வயதான பின்னர், எல்லா வகையான நூல்களையும் வாசித்து அறியும் அளவிற்கு பக்குவம் வந்திருந்தது. ஆள் வளர்ந்த படியால் அறிவும் வளர்ந்திருந்தது. அப்போதே ஆடம்பரமான கொண்டாட்டங்களும், கோயில் திருவிழாக்களும் அந்நியத் தன்மையை உணர்த்தின. சூரன் போர் போன்ற திருவிழாக்களுக்கு குடும்பம் முழுவதும் போனாலும், நான் மட்டும் வீட்டில் தனித்திருந்தேன். காலப்போக்கில் வெள்ளிக்கிழமை கோயில்களுக்கு போவதையும் குறைத்துக் கொண்டேன். எமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு சாமியைக் கும்பிடுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை நானாகவே அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.
நூலகங்களில் பெரியாரின் பகுத்தறிவு நூல்கள் இருந்தன. பெரியார் தனது கடவுள் மறுப்புக் கொள்கையை மிகவும் எளிமையாக எழுதி இருந்தார். அதனால் வாசித்து அறிந்து கொள்ளவும் இலகுவாக இருந்தது. பெரியாரின் தர்க்க ரீதியான வாதங்கள் சரியெனப் பட்டன. அதைப் பற்றி வீட்டில் விவாதித்த பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஆனால், எனக்கு அவை சரியாகப் பட்டன. ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடும் நேரம் நான் மட்டும் ஒதுங்கி இருந்தேன். கோயிலுக்கு போவதையும் தவிர்த்து வந்தேன்.
எனது பெற்றோர் மதப்பற்று அதிகமில்லாத இந்துக்களாக (அல்லது சைவர்களாக) வாழ்ந்தவர்கள். விரதம் பிடிப்பது போன்ற பல மத சம்பிரதாயங்களை, அவர்களே தவறென நையாண்டி செய்தனர். அவர்கள் பின்பற்ற விரும்பிய இந்து மதம் விஞ்ஞான பூர்வமான மார்க்கமாக இருந்தது. ஆகவே, என்னுடைய கோயிலுக்கு போகாத, சாமி கும்பிடாத பழக்கத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது. சிலநேரம் நான் கோயில் திருவிழாவுக்கு சென்றால், "அது பக்தியால் அல்ல..." என்று அம்மாவே கிண்டல் அடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது.
1983 ம் ஆண்டிற்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியதொரு அரசியல் சூறாவளி வீசியது. அனேகமாக எல்லா இளைஞர்கள் மத்தியிலும் ஈழப் போராட்டம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட வேண்டும்.
அரசியல் என்றவுடன், "ஈழத் தமிழர்கள் எல்லோரும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" என்ற தவறான எண்ணம் நிலவுகின்றது. ஈழத் தமிழ் தேசியவாதிகள் வேண்டுமென்றே அப்படி ஒரு கருத்துருவாக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். அது அவர்களது விருப்பம். ஆனால், தமிழ் நாட்டினரும், சிங்கள முற்போக்காளர்களும் கூட அப்படி நினைத்துக் கொள்வது வேடிக்கையானது. நிச்சயமாக அது தவறு தான்.
யாழ் நகரில் உள்ள பூபாலசிங்கம் புத்தக சாலையில் மார்க்சிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. 1982 ம் ஆண்டில் கூட, அவற்றின் விற்பனை குறைவாக இருந்தது. ஆனால், ஈழப்போரின் ஆரம்பமாக கருதப் படும் 1983 ம் ஆண்டிற்குப் பின்னர் கடையில் ஒரு நூல் கூட மிச்சமில்லாமல் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன. நம்ப முடியுமா?
மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவல் எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகங்களில் அது எப்போதும் இரவல் கொடுக்கப் பட்டு வந்தது. அத்தோடு ராகுல சங்கிருத்தியான் எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலும் அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்டன. நானே மாதக் கணக்காக காத்திருந்து தான் அந்த நூல்களை வாங்கி வாசித்தேன். அந்தளவுக்கு யாழ்ப்பாண இளைய தலைமுறையினர் மத்தியில் மார்க்சியம் குறித்த தேடல் பல மடங்கு அதிகரித்திருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment