பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை (Brexit), தமிழ் வலதுசாரிகள் ஆதரிப்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், லண்டனில் வாழும் "தமிழ் இடதுசாரியான" சேனன் என்ற ட்ராஸ்கிஸ்ட் கூட அதை ஆதரித்து வருகின்றார். இது தொடர்பாக எதிர் இணையத்தளத்தில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
சேனனின் வழிகாட்டலில் உருவான, "இடதுசாரி- தமிழ் தேசிய இளையோர்" அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரான பாரதி என்ற பெண், லண்டன் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். (ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி)
அதில் அவர் தெரிவித்த Brexit ஆதரவுக் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.
முதலில் அந்தப் பெண், "வட்டுகோட்டை தீர்மானம்... தமிழ் தேசியப் போராட்டம்..." போன்றவற்றை சொல்லி தனது உரையை தொடங்கினார். ஐயர் சம்ஸ்கிருத மந்திரம் ஓதுவது போன்று, இப்போதெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் தமிழ் தேசியம் பேசி விட்டு தொடர்வது ஒரு பேஷனாகி விட்டது. அது போகட்டும். விடயத்திற்கு வருவோம்.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால், அது அகதித் தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பாக அமையும் என்ற வாதம் ஒரு "கற்பனை" என்று வாதிடுகிறார். அனேகமாக, ஒரு ஈழத் தமிழ் அகதிக் குடும்பத்தில் இருந்து வந்தவர் இப்படிப் பேசுவது அதிர்ச்சி அளித்தது.
பிரிட்டனில் அகதி தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பலருக்கு, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, பிரிட்டனின் சட்டம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பிய சட்டம் தான் மேலானது. அது ஏதாவதொரு காரணத்தால், ஒருவரின் தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினால், பிரிட்டிஷ் நீதிபதி மறுப்புக் கூற முடியாது. பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகினால் அந்த சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா?
ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரிட்டிஷ் முதலாளிகள் (பெரும் நிறுவனங்கள்) ஐரோப்பிய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து பலமாக இருப்பார்களாம். அவர்களை எதிர்த்துப் போரிடுவது கஷ்டமான காரியமாம். பிரிட்டன் பிரிந்தால், தனிமைப் படுத்தப் பட்ட முதலாளிகளை இலகுவாக எதிர்க்கலாமாம்!
பிரிட்டிஷ், அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுக்கும் ஐரோப்பிய ஒன்றியமா காரணம்? நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு. வர்த்தகக் கூட்டமைப்பு அல்ல. மேலும் பிரிட்டிஷ் - ஐரோப்பிய முதலாளிகள் ஒன்று சேர்ந்தால், தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டியது தானே? பிறகெதற்கு சேனனின் இடதுசாரி ட்ராஸ்கிசக் கட்சி இயங்குகின்றது? இன்னமும் "நிரந்தரப் புரட்சி" பற்றிப் பேசுகின்றது?
"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் தான், போலந்து, ருமேனியாவில் இருந்து குடியேறிகள் வருகிறார்கள். பிரிட்டிஷ் மக்களின் வேலை வாய்ப்புகளை, வீட்டு வசதிகளை பறிக்கிறார்கள்..." இவையெல்லாம் பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய தேசியவாதிகள்/இனவாதிகள் முன்வைக்கும் வாதங்கள். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் (வலதுசாரிகள்) அதை வழிமொழிகிறார்கள். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால் தமிழர்களின் குடியேற்றத்தையும் தடுப்பார்கள். இந்த உண்மை தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பார்கள்.
தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் பாரதி, குடியேறிகளின் பிரச்சினைக்கு இடதுசாரி சாயம் பூசுகின்றார்: "ஐயோ பாவம்! போலந்து, ருமேனிய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகிறார்கள்....வாடகை கட்ட முடியாமல் ஒரே வீட்டுக்குள் பலர் இருந்து கஷ்டப் படுகிறார்கள்..." ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால், தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று சேனன் தனது எதிர் இணையத் தளத்தில் விளம்பரம் செய்கிறார். இது அவர் சார்ந்த ட்ராஸ்கிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.
போலந்து, ருமேனியாவில் இருந்து வந்து குடியேறும் மலிவு விலைத் தொழிலாளர்கள், பிரிட்டனில் நிறைய வேலைத் ஸ்தலங்களில் இருப்பது உண்மை தான். அவர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுவதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்மை தான். ஆனால், எல்லோரும் ஒரு பொருளாதார உண்மையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.
குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப் படும் சம்பளத்தின் அளவு குறைவு. அந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் பிரிட்டனில் வாழ்க்கைச் செலவும் அதிகம். ஒரு பிரிட்டிஷ் தொழிலாளி தனது குடும்பத்தை பராமரிக்கும் அளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அதைக் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் முதலாளிகள் தயாராக இல்லை.
பிரிட்டிஷ் பிரஜைகள் பலர் "வேலையில்லாமல் சும்மா வீட்டில் இருந்தாலும்" அரசு அவர்களுக்கு மாதாந்தம் பணம் கொடுக்கிறது. (அது வாழ்க்கைச் செலவுக்கு போதாது என்பது வேறு விடயம்.) அந்தப் பணம் எங்கிருந்து வருகின்றது? புதிய குடியேறிகளான போலந்து, ருமேனிய தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் பணத்தில் ஒரு சிறிய பகுதி தான் அது.
இப்படி யோசித்துப் பார்ப்போம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறிய பிறகு, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து விடும். ஒரேயடியாக நின்று விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வேலையில்லா பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு வேலை கிடைத்து விடுமா?
இல்லை, பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து புதிய மலிவு விலைத் தொழிலாளர்களை வருவிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் அனுவித்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காது. அனேகமாக ஒப்பந்தம் முடிந்தவுடன் திருப்பி அனுப்பும் நிலையில் வைத்திருப்பார்கள்.
அது போகட்டும். போலந்து, ருமேனிய குடியேறிகள் வருவது நின்று போனால், பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு, அல்லது இலங்கையர், இந்தியருக்கு நல்ல காலம் பிறந்து விடுமா? எப்போதும் இல்லை. பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய இனவாதிகளின் அடுத்த குறி அவர்களாகத் தானிருக்கும். பிரிட்டனில் பல தசாப்த காலம் வாழ்ந்தாலும், அவர்களது உரிமைகளை படிப்படியாகப் பறிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வார்கள். பிரிட்டிஷ் அரசும் அதை ஆமோதிக்கும். அப்போது அவர்களை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரப் போவதில்லை.
தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு, தான் ஆபத்தில் இருந்து தப்பி விட்டதாக நினைக்குமாம். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் அப்படித் தான்.
Part - 2
தோழர் கலை,
ReplyDeleteBrexit விசயத்தில், அகதிகள், குடியேறிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து விட்டு, வேறு சில காரணங்களுக்காக Brexit-ஐ ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பாக Paul Craig Roberts எழுதிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில், ஐரோப்பிய ஒன்றியமே CIA உருவாகியது தான், ஐரோப்பிய நாடுகளின் மீது அமேரிக்கா அரசியல், பொருளாதார ரீதியாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்குத்தான் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
"The other powerful interest is the interest of Washington to prevent one country’s exit from leading to the exit of other countries. As CIA documents found in the US National Archives make clear, the EU was a CIA initiative, the purpose of which is to make it easy for Washington to exercise political control over Europe. It is much easier for Washington to control the EU than 28 separate countries. Moreover, if the EU unravels, so likely would NATO, which is the necessary cover for Washington’s aggression."
http://www.paulcraigroberts.org/2016/06/22/brexit-what-is-it-about-paul-craig-roberts/
இது பற்றித் தங்கள் கருத்தென்ன?
ஐரோபிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் மக்கள் வாக்களித்ததற்குக் காரணம் அகதிகள் மற்றும் குடியேறிகள் பிரச்சனை ஒன்றுதான் காரணமா?
ஸ்காட்லாந்து, லண்டன், வடக்கு அயர்லாந்து மக்கள் ஏன் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்தார்கள்?
இது தொடர்பாக கொஞ்சம் விளக்குங்களேன்.
நன்றி!