Saturday, June 25, 2016

பிரிந்தது பிரித்தானியா! தெரிந்தது வர்க்க எதிரிகளின் கோர முகம்!


அன்று உலகையே காலனிப் படுத்திய பிரித்தானியா, இன்று தனது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் காலனிப் படுத்தி விட்டதாக குமுறியதன் விளைவு தான் ‪#‎Brexit‬!

தேசங்கடந்த பெரும் வணிக நிறுவனங்களும், லிபரல் அரசியல்வாதிகளும் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு ஒரு பேரரசு (Super State) ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நாடுகள், தமது இறைமையில் ஒரு பகுதியை அடகு வைக்க வேண்டும். தேசிய சட்டங்களை விட ஐரோப்பிய (ஒன்றிய) சட்டங்கள் மேலானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் உறுப்புரிமை பெற்ற ஒரு தேசத்தின் உள்ளே நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் மூக்கை நுழைக்க முடியும்.

பல தசாப்த காலமாகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து வருகின்றனர். தேசிய முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்படுதல், குடியேறிகளின் வருகையினால் வேலை வாய்ப்புகள் பறிபோதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பொது மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

பிரிட்டனில் குடியேறிகளுக்கு எதிரான புதிய இனவாதக் கட்சியான UKIP, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தனியா பிரிய வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வந்தது. அது தேர்தலில் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கா விட்டாலும், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. அதன் தலைவர் நைஜல் பராஜ் என்ன பேசினாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அவர் கூறியவை பெரும்பாலும் வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அதே நேரம், ஆளும் கட்சியான வலதுசாரி கென்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் பலர் அந்தக் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினார்கள். சிலர் கட்சி மாறினார்கள். அதன் மூலம் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அழுத்தம் அதிகரித்தது. போதாக்குறைக்கு லண்டன் மாநகரின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சனும், பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது குறி பிரதமர் பதவியாக இருந்தது.

தற்போது பதவி விலகியுள்ள பிரதமர் டேவிட் கமெரூன் இதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டார். அதாவது, வலதுசாரிகளின் கொள்கைகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆதரிக்க வேண்டும். இந்த இரட்டை வேடம், இறுதியில் அவரது பிரதமர் பதவிக்கு ஆப்பு வைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றுள்ளதை, "ஒரு மாநிலம் சுதந்திர நாடாகி விட்டது" என்பது போல சிலர் பேசி வருகின்றனர். பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு என்றைக்குமே சீரானதாக இருக்கவில்லை. தனது தனித்துவத்தை பேணுவதற்காக யூரோவை ஏற்றுக் கொள்ளாமல், ஸ்டேர்லிங் பவுன் நாணயத்தையே தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாக அடம் பிடித்தது. அதே நேரம், குடியேறிகள், அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, செங்கண் ஒப்பந்தம் செய்ய மறுத்து வந்தது.

பிரித்தானியா ஒரு உலக அணுவாயுத வல்லரசு. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர். இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இது போன்ற காரணங்களினால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கிப் போக முடியாமல், பிரித்தானியாவுக்கு தாழ்வுச் சிக்கல் இருந்து வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தப் படி, உறுப்புரிமை பெற்ற எந்த நாடும் பிரிந்து செல்ல முடியும். ஆனால், வரலாற்றில் இதுவே முதல் தடவை. முன்பு கிரீஸ் பிரிந்து செல்ல விரும்பிய நேரம், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதற்குக் காரணம், கிரேக்கம் ஒரு கடன்பட்ட நாடு. அது மட்டுமல்ல, யூரோ பொது நாணயத்தை கொண்டுள்ளது. அது கடுமையான பொருளாதார விளைவுகளை உண்டாக்கி இருக்கும்.

பிரிட்டன் உலகிலேயே பெரிய மூலதனத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று. அத்துடன், இராணுவ வல்லரசு. அது மட்டுமல்லாது, யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்தும் பவுன் வைத்திருந்தது. மேலும், ஜெர்மன், பிரான்சுடன், பிரிட்டனும் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன. இத்தாலி தவிர்ந்த பிற சிறிய நாடுகளிடம் அந்தளவு பலம் கிடையாது. பிரிட்டன் பிரிவதை இலகுவாக்கிய காரணங்கள் இவை தாம்.

இருப்பினும், பிரிட்டனின் உதாரணத்தை பின்பற்றி பிற ஐரோப்பிய நாடுகளும் பிரிந்து செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. பிரித்தானியா கூட, அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாக தொடர்ந்தும் இருக்கும். அதற்குப் பிறகு, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மாதிரி, வேறொரு வர்த்தக உடன்படிக்கை (European Economic Area (EEA)) செய்து கொள்ளலாம்.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நோர்வே முக்கால்வாசி ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அனேகமாக பெரிய வித்தியாசம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. சுவிட்சர்லாந்து குடியேறிகள் விடயத்தில் தான் விரும்பிய நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரத்தை கொண்டுள்ளது. அதே போன்ற ஒப்பத்தங்களை, எதிர்காலத்தில் பிரித்தானியாவும் செய்து கொள்ளலாம்.

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று ஓட்டுப் போட்டவர்களின் முக்கிய நோக்கம், குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது? போலந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகம். அவர்களை வெளியேற்ற முடியுமா? அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

பல்கேரியா, ஸ்பெயின், சைப்பிரஸ் போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஓய்வூதியக்காரர்கள் வீடுகளை வாங்கி, அங்கேயே வசித்து வருகின்றனர். அது மட்டுமல்ல, இலட்சக் கணக்கான பிரிட்டிஷ் குடியேறிகள், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். பிரிட்டன் ஐரோப்பிய குடியேறிகளை திருப்பி அனுப்பினால், பதிலடியாக ஐரோப்பிய நாடுகள் பிரிட்டிஷ் குடியேறிகளை திருப்பி அனுப்பலாம்.

அப்படியானால் என்ன செய்யப் போகிறார்கள்? அனேகமாக, புதிய குடியேறிகளை அனுமதிப்பதற்கு புதிய நடைமுறை அமுலுக்கு வரலாம். பிரித்தானியாவில் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களை தருவிக்கலாம். 

உதாரணத்திற்கு, மருத்துவமனைகளில் தாதியர் (நர்ஸ்) வேலைக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. போலந்துக்காரர்கள், பாகிஸ்தான்காரர்களுடன் அந்த வேலைக்கு போட்டி போட வேண்டி இருக்கும். சுருக்கமாக, பிரித்தானியாவில் குடியேறிகளின் தேவை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பிரித்தானியா பிரிவதை பல (வலதுசாரி) தமிழர்களும் ஆதரித்தார்கள். கிழக்கைரோப்பிய குடியேறிகளின் பிரச்சினையை அதற்குக் காரணமாகக் கூறினார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், பிரிந்த பிரித்தானியாவில் அவர்களின் இருப்புக்குத் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய குடியேறிகளின் வருகையை தடுக்க முடியாது. ஆனால், தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளின் குடியேறிகளை வர விடாமல் தடுக்க முடியும். புதிய சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம். என்ன இருந்தாலும், "தமிழர்கள் கருப்பர்கள். கிழக்கைரோப்பியர்கள் வெள்ளையர்கள்."

UKIP என்ற தீவிர வலதுசாரிக் கட்சி தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. அந்தக் கட்சியின் பெயரே (UK Independence Party) அதை உறுதிப் படுத்துகின்றது.

NHS எனப்படும் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதியை அதற்கு செலவிடலாம் என்று சொல்லித் தான் UKIP கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது. தற்போது, UKIP தலைவர் நைஜல் பராஜ் தனது முன்னைய கொள்கையை மாற்றிப் பேசி வருகின்றார். "EU நிதியை NHS க்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை." என்கிறார்.

அத்துடன், பத்து வருடங்களுக்குள் அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருப்பது மாதிரி எல்லோருக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும் என்பதும் UKIP கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் ஆகும்.

"சுதந்திரம், இறைமை" பற்றிப் பேசும், UKIP போன்ற தீவிர வலதுசாரிகள், தங்களது சொந்த இன மக்களையே அடக்கி ஆளும் சுதந்திரத்தையும், தேசிய முதலாளிகளின் இறைமையையும் பற்றித் தான் கவலைப் பட்டுள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும், மக்களுக்கு ஒரு வகையில் படிப்பினை தான். ஏகாதிபத்திய கூட்டமைப்பில் ஒரு விரிசலை உண்டாக்க முடிந்துள்ளது. அதே நேரம், சொந்த இனத்திற்குள் இருக்கும் வர்க்க எதிரிகளையும் அடையாளம் காண உதவியுள்ளது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

1 comment: