Friday, April 08, 2016

கிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கிடைத்திருக்கும்!

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அகதி முகாமுக்குள் தஞ்சம் அடைந்த புதிதில், அடிக்கடி அல்லேலூயா சபைக் காரர்கள் வந்து போவார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தங்கள் பிரசங்கத்தை கேட்குமாறு சொல்வார்கள். பைபிளை உயர்த்திக் காட்டி ஜெபித்து விட்டு, பிரசங்கமும் செய்து விட்டுப் போவார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே, எப்படியோ சில ஜீவன்களை மதம் மாற்றி விட்டார்கள்.

 புதிய கிறிஸ்தவர்கள் பைபிளும் கையுமாக வந்து எமக்கு புத்தி சொல்வார்கள்: "இது கிறிஸ்தவர்களின் நாடு... இங்கே கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தான் முறையாகும்..."  தாங்கள் இப்போது கிறிஸ்தவராக மதம் மாறி விட்டதால், இலகுவாக வதிவிட அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பினார்கள்.

இன்னொரு முகாமில் எனக்கேற்பட்ட அனுபவம் இது. அகதிகள் விடயத்தில் அலசி ஆராயும் கிரிமினல் மூளை கொண்ட நண்பன் ஒருவன் இருந்தான். இந்துவாகப் பிறந்து விட்டதால் தனது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு  வந்து விட்டது. "ச்சே... இந்த வீணாப் போன புலிகள் கிறிஸ்தவ ஈழம் கேட்டிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டான்.

திடீரென ஒரு யோசனை சொன்னான். "வடக்கு கிழக்கில் கிறிஸ்தவ தமிழர்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் இருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுவோம். அதற்காக துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து வைத்திருப்போம். அவற்றை ஆதாரமாகக் காட்டுவோம்."

நல்ல வேளை, அந்த நண்பனின் திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. அப்படியே எடுத்துக் காட்டி இருந்தாலும் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஈழத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவ ஆயுதக் குழு இருந்திருந்தால், அரசும், புலிகளும் சேர்ந்தே அதை அழித்திருப்பார்கள். 

இதை நான் இங்கே நினைவுகூரக் காரணம், இப்போதும் ஐரோப்பா கிறிஸ்தவ அகதிகளை மட்டுமே வரவேற்கும் என்று நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள். "இது நம்ம நாடு!" என்று சட்டைக் காலரை உயர்த்தி பெருமைப்படும் தமிழ் கிறிஸ்தவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு சோஷலிசம் பேசினால், "ஏன் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரவில்லை?" என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களது புத்திசாலித்தனத்தை அவர்களே மெச்சிக் கொள்ளட்டும்.

அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், "இந்துக்கள் இந்தியாவிலோ, நேபாளத்திலோ தான் அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்? தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக ஐரோப்பிய மொழிகளை பேசும் வேற்றினத்தவரின் நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்?"

"வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன், சோஷலிசத்திற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் ஏராளம். அமெரிக்க தொழிலாளர்கள் தான், எட்டு மணி நேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடி, மேதினத்தை உலகிற்கு கொடுத்தார்கள். 

அமெரிக்க சோஷலிச பெண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் பலன் தான் மார்ச் 8 ல் வரும் மகளிர் தினம்.  பிரிட்டனில் கம்யூனிசப் பெண்கள் அமைப்பு நடத்திய ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பலன் தான் பெண்களுக்கான வாக்குரிமை. 

உலக வரலாற்றில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் வெடித்தது. முதன் முதலாக பிரிட்டனில் தான் சோஷலிசத்திற்கான அரசியல் அமைப்பு உதயமானது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

பிரச்சினை என்னவென்றால், இந்த உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நூறு தடவைகள் இடித்துரைத்தாலும் துளி கூட  மண்டையில் ஏறாது. எத்தனை தடவை புரிய வைத்தாலும் புரியாத மாதிரி நடித்துக் கொண்டிருப்பார்கள்.  நாய் வாலை நிமிர்த்த முடியாது. மேட்டுக்குடியை திருத்த முடியாது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகள், எமது நாடுகளை காலனிய அடிமைகளாக வைத்திருந்தன. தற்போதும் நவ காலனிய சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன. அது தான் அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான அடிப்படைக் காரணம். யுத்தம், மனித உரிமை மீறல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அது கடந்த கால பிணைப்பை நினைவு படுத்துகின்றது. சோஷலிசம் பேசினால் சோஷலிச நாடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறும் புத்திசாலிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா?

எதனால் நாங்கள் இப்போதும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கிறோம், பேசுகின்றோம்? எதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேறினார்கள்? பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசும் அல்ஜீரியர்களும், மொரோக்கர்களும் எதற்காக பிரான்சுக்கு சென்றார்கள்? ஸ்பானிஷ் பேசும் லத்தின் அமெரிக்க அகதிகள் எதற்காக ஸ்பெயின் சென்றார்கள்?

அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு காலனிய கால பிணைப்பு முக்கியமானது. அது மட்டும் ஒரேயொரு காரணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் தாராள வாத கொள்கையை பின்பற்றும் ஜனநாயக நாடுகளாக காட்டிக் கொள்ள விரும்புகின்றன.

அதன் அர்த்தம், ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கொள்கையை பின்பற்றினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை காரணமாக காட்டி நிராகரித்தால், அது பாரபட்சமான கொள்கையாக கருதப்படும். அதற்குப் பிறகு உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி வகுப்பெடுக்க முடியாது. 

அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் போலந்து, ஸ்லாவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள், முஸ்லிம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தன. அந்த நாடுகள் இந்த நிராகரிப்புக்கு பதிலாக ஆணித்தரமான காரணம் ஒன்றை தெரிவித்திருந்தன: "கிழக்கு ஐரோப்பிய நாடுகள், எந்தக் காலத்திலும் ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ காலனிகளை வைத்திருக்கவில்லை."

ஆகவே, இது காலனித்துவ கடந்த காலம் தொடர்பான பிரச்சினை. மேற்கத்திய நாடுகளுக்கும், முன்னாள் காலனிய நாடுகளுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அவற்றின் தலையீடு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 

முதலில் நீங்கள் காலனிய கடந்த காலம் காரணமாக இன்னமும் தொடரும் இனப் பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டு வாருங்கள். அதற்குப் பிறகு சோஷலிசம் பேசலாமா, சோஷலிச நாடுகளுக்கு போகலாமா என்று கேள்வி கேட்கலாம். 

சோஷலிசம் பேசினால், நீங்கள் எந்தெந்த சோஷலிச நாடுகளுக்கு போகச் சொல்லி சொல்கிறீர்களோ, அவை பெரும்பாலும் காலனிய அடிமை நாடுகளாக இருந்துள்ளன. அவை மேற்கத்திய காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள். 

ஆதாரம் வேண்டுமா?
சீனா: பிரிட்டிஷ் காலனி.
வியட்நாம்: பிரெஞ்சுக் காலனி.
கியூபா: ஸ்பானிஷ் காலனி.
வட கொரியா : ஜப்பானிய காலனி.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்....

இப்போது சொல்லுங்கள். உங்களது பிரச்சினை என்ன? நீங்கள் அடிமைகளா அல்லது சுதந்திரமான மனிதர்களா? நவ காலனிய ஆதிக்கத்தின் கீழ், மேற்கத்திய காலனிய எஜமானின் காலை நக்கிப் பிழைக்கும் அடிமை வாழ்வு சிறந்ததா? அல்லது சுதந்திரமாக எதிர்த்து நிற்கும் சோஷலிச மக்கள் குடியரசு சிறந்ததா? 

No comments:

Post a Comment