Thursday, April 07, 2016

நெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

உக்ரைனுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக, 6-4-2016 அன்று நெதர்லாந்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. ஏற்கனவே கிரீமியா பிரச்சினைக்கும் உக்ரைன் உள்நாட்டுப் போருக்கும் காரணமாக இருந்த, அதே வர்த்தக உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு தான் இது. அந்த ஒப்பந்தத்தில் இன்று வரையில் நெதர்லாந்து கையெழுத்திடவில்லை.

உக்ரைன் கருத்துக் கணிப்பில் கிடைக்கும் முடிவு உடன்படிக்கைக்கு எதிராக இருந்தால், அரசு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முப்பது சதவீத வாக்காளர்கள் ஓட்டுப் போட்டால் தான், அதன் முடிவுகள் செல்லுபடியாகும். அப்போதும் அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது மக்கள் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம் சம்பந்தமான விடயம்.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பில், அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகள் உடன்படிக்கையை ஆதரிக்கின்றன. அதனால், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு அந்தக் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இடதுசாரி சோஷலிசக் கட்சி (SP) மட்டுமே எதிர்த்து வாக்களிக்கச் சொன்னது. பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் கூட எதிர்த்து வாக்களித்தனர்.

உக்ரைன் உடன்படிக்கைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள், இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஓட்டுக்களாக கருதுகின்றனர். ஏனெனில், நிறையப் பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மீதான நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

இந்த வர்த்தக உடன்படிக்கை, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக்கலாம் என்று நினைக்கிறார்கள். (அரசு அதை கடுமையாக மறுத்து வருகின்றது.) அப்படியானால், ஐரோப்பாவிலேயே ஊழலில் மலிந்த ஒரு நாட்டை சேர்த்துக் கொண்டு, தேவையில்லாத தலையிடிகளால் அவதிப் பட வேண்டும் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில், உக்ரைனை பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் காலனியாக்குவதே திட்டம். தரகுப் பணத்திற்கு ஆசைப்படும் உக்ரைனிய மேட்டுக்குடி வர்க்கமும் அதனை ஆதரிக்கின்றது. நெதர்லாந்து அரசு, தனது செலவிலேயே உக்ரைனிய மேட்டுக்குடி இளைஞர்கள் சிலரை வரவழைத்து ஆதரவுப் பிரச்சாரம் செய்ய வைத்தது. இருப்பினும் மக்கள் அதற்கு மயங்கி விடவில்லை.

இந்த வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், உக்ரைன் நிர்வாகங்களில் தலையிட்டு ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒப்பந்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை நம்பும் நிலையில் யாரும் இல்லை. பெரும்பாலும் ரஷ்யாவுடனான பூகோள அரசியல் மேலாதிக்க போட்டியின் ஓர் அங்கமே இந்த உடன்படிக்கை என்று பலர் கருதுகின்றனர்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. 32,2% வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளதால், அதன் முடிவு செல்லுபடியாகும். பெரும்பான்மையான மக்கள் (61,1%) உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 38,1% ஆதரித்து வாக்களித்தனர். ஆகவே எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கருத்துக்கு அரசு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் இருப்பதைப் போன்று, நேரடி ஜனநாயக முறையாக கருதப் படும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தற்போது நெதர்லாந்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? நெதர்லாந்தில் அண்மையில் திருத்தப் பட்ட தேர்தல் சட்டமூலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் தகவல், இந்தியா, இலங்கையில் உள்ள அரசியல் ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

30 செப்டம்பர் 2014 கொண்டு வரப் பட்ட திருத்தச் சட்டம், பொது மக்களும் கருத்துக் கணிப்பு ஆலோசனை வழங்க அனுமதித்துள்ளது. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம் தொடர்பாக அல்லது கைச்சாத்திடவிருக்கும் உடன்படிக்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

பொது வாக்கெடுப்பில் இரண்டு வகை உண்டு. 
1. ஆலோசனை கோரும் வாக்கெடுப்பு: அரசாங்கம் நேரடியாக மக்களின் சம்மதத்தை கோரும் நடைமுறை. 
2. ஆலோசனை வழங்கும் வாக்கெடுப்பு: குறிப்பிட்ட அளவு மக்கள் அமைப்பாகக் கூடி முடிவெடுத்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு, இரண்டாவது வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் உடன்படிக்கையை எதிர்க்கும் அமைப்புகள் வாக்கெடுப்பு கோரும் கையெழுத்து வேட்டை நடத்தின. ஒரு கோரிக்கை எழுப்புவதற்கு, நான்கு வாரங்களுக்குள் 10.000 கையெழுத்துக்களை சேர்த்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால் அரசு வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவித்தல் விடுக்கும்.

அப்போதும் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பின்னர், ஆறு வாரங்களுக்குள் 300.000 கையெழுத்துக்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழு கையொப்பம் இட்டவர்களின் உண்மைத் தன்மையை ஆராயும். அதற்குப் பின்னர் பொது வாக்கெடுப்புக்கான திகதி குறிக்கப் படும்.

பொது வாக்கெடுப்பு தொடர்பான சட்ட விதிகள் மக்களுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும். அதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ பரப்புரை செய்யும் அமைப்புகள் அரசு மானியம் பெறலாம். பொது வாக்கெடுப்பில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்போது தான் அந்த முடிவு செல்லுபடியாகும். வாக்களித்தோர் எண்ணிக்கை முப்பது சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகமாக இருந்தால் அரசு மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

1 comment:

  1. பயனுள்ள தகவல்...
    பொது வாக்கெடுப்பே நல்ல ஜனநாயகத்திற்கு வழி...


    ReplyDelete