"ஈழத் தமிழர்களுக்கு, வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்பை, 1926 ம் ஆண்டே பண்டாரநாயக்க முன்மொழிந்திருந்தார். ஆனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்!" இந்தத் தகவலை, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். (Bandaranaike Proposed Federalism to Isolate Tamils, Charges Wigneswaran)
அவர் மேலும் தெரிவிக்கையில்:"பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு இருந்தனர். நாடு முழுவதும் எந்த இடத்திலும் காணி வாங்க முடிந்தது. உத்தியோகம் பார்க்க முடிந்தது. அதனால், தமிழர்களை வடக்கு- கிழக்கிற்குள் ஒதுக்கி வைக்கும் சமஷ்டி அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தலில் வியப்பில்லை. எது எப்படி இருந்தாலும், 1956 ம் ஆண்டு பண்டாரநாயக்க பிரதமரான பின்னர், தமிழ் சமஷ்டிக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. அப்போது பண்டாரநாயக்க மனதை மாற்றிக் கொண்டு விட்டார். தமிழ் அடையாளத்தை அழிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தார்." என்று கூறினார்.
அண்மையில் பேசிய ஜேவிபி தலைவர் டில்வின் சில்வா, "(விக்னேஸ்வரன் போன்ற) தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே சமஷ்டி கோருகிறார்கள்." என்று குற்றஞ் சாட்டி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாக, "பண்டாரநாயக்கவின் சமஷ்டி கோரிக்கையை" விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டி இருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினையை கருப்பு - வெள்ளையாக பார்க்க முடியாது என்பதைத் தான், விக்கினேஸ்வரனின் கூற்று தெளிவு படுத்துகின்றது. "வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழரின் தாயகம்" என்று இன்றைய தமிழ் தேசியவாதிகள் உரிமை கோருகின்றனர். ஆனால், அன்றைய தமிழ் தலைவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. தமிழீழம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றிய எண்ணக்கரு தான்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த, அரசால் திட்டமிடப் பட்ட இனக் கலவரங்கள், ஈழத் தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் முடங்க வைத்தது. தென்னிலங்கையில், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பண்டாரநாயக்கவின் சமஷ்டி திட்டம், தமிழர்களை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் ஒதுங்க வைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே பல சம்பவங்கள் நடந்துள்ளன.
1925 ம் ஆண்டு, இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று விட்டு நாடு திரும்பிய பண்டாரநாயக்க, முற்போக்கு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினார். முற்போக்கு தேசியக் கட்சி, ஆங்கிலேயக் காலனியான இலங்கையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு தன்னைத் தயார் படுத்தி வந்தது. பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டித் திட்டத்தின் படி, இலங்கை மூன்று சமஷ்டி அலகுகளாக பிரிக்கப் பட வேண்டும்.
1.கரையோர சிங்களவர்களின் தென்னிலங்கைப் பிரதேசம்.
2.முன்பு கண்டி ராஜ்ஜியமாக இருந்த மத்திய மலைநாடு.
3.வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்ட தமிழர் பிரதேசம்.
இலங்கைக்கான அரசியல் யாப்பு எழுத வந்த டொனமூர் ஆணைக்குழுவிடம் பண்டாரநாயக்கவின் சமஷ்டித் திட்டம் கையளிக்கப் பட்டது. அன்று பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கும் சென்று, தமிழர்கள் முன்னிலையில் தனது சமஷ்டித் திட்டம் பற்றி உரையாற்றினார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒழுங்கு படுத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், சமஷ்டிக்கு பெரிய வரவேற்பு இருக்கவில்லை.
முற்போக்குத் தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவின் தமிழ் நண்பர் ஜேம்ஸ் ரத்தினமும் அங்கம் வகித்திருந்தார். பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டி அமைப்பை எதிர்த்து வாக்களித்தவர்களில் அவர் முக்கியமானவர். தான் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறேன் என்று, “Ceylon Morning Leader” (19 May 1926) பத்திரிகையில் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் சமஷ்டிக் கோரிக்கை ஒற்றையாட்சியை சீர்குலைத்து விடுமென்றும், பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என்றும் வாதிட்டு இருந்தார்!
இவ்வாறு தமிழர்கள் சமஷ்டி எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கண்டிச் சிங்களவர்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இலங்கை சுதந்திரமடையும் வரையில், கண்டிச் சிங்களவர்கள் தமது சமஷ்டிக் கோரிக்கையை கைவிடவில்லை. ஒற்றையாட்சியின் கீழான இலங்கையில், கரையோரச் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவார்கள் என்று அஞ்சினார்கள். தமது பிரதேசங்களில் கரையோச் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
1927 ம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது. பல்வேறு பட்ட உள்நாட்டு அரசியல் தலைவரகள் ஆணைக்குழுவிடம் தமது பிரேரணைகளை முன்வைத்தனர். தமிழர்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன் இராமநாதன் தமிழ் லீக் கட்சி சார்பில் தனது ஆலோசனைகளை தெரிவித்திருந்தார்.
டொனமூர் ஆணைக்குழு முன்பு சாட்சியமளித்த, அன்றைய "ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர்" சேர் பொன் இராமநாதன், வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான பிரிவினையை கோரவில்லை. குறைந்த பட்சம், அன்று பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டிக் கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அரசியல் தலைமைத்துவத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
சேர் பொன் இராமநாதன், பிரதேச அடிப்படையிலான பிரதிநித்துவத்திற்கு மாறாக இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்தினார். பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்களவர்களுக்கு, மூன்றிலொன்று தமிழர்களுக்கு என்று ஒதுக்கப் பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், டொனமூர் ஆணைக்குழு அந்த யோசனையை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக பிரதேசவாரி பிரதிநித்துவத்தை ஏற்றுக் கொண்டது. அது சிங்களவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று, தமிழ்த் தலைவர்கள் ஆதங்கப் பட்டனர். ஆனால், வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அப்போது கை நழுவ விட்டிருந்தனர்.
ஏன் பிரிட்டிஷ் காலனிய காலத்திலேயே வடக்கு- கிழக்கு சமஷ்டியை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைவர்கள் தவற விட்டனர்?
அதற்குக் காரணம், தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள், தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கினார்கள். "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்ற எண்ணம் அன்று அவர்கள் மனதில் இருக்கவில்லை. அதற்கு மாறாக மேட்டுக்குடியினருக்கு உரிய மத்தியதர வர்க்க சிந்தனை மட்டுமே இருந்தது.
அன்றைய காலகட்டத்தில், தமிழ் மேட்டுக்குடியினர் கொழும்பு அல்லது தென்னிலங்கையில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்தனர். அவர்கள் ஒன்றில் அதிகம் சம்பாதிக்கும் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர்களாக இருந்தனர், அல்லது வணிகத் துறையில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டி வந்தனர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் பல காணிகளுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதிகளாக இருந்தனர். இதையெல்லாம் விட்டு விட்டு யாழ் குடாநாட்டுக்குள் முடங்கிக் கொள்ள விரும்புவார்களா?