Friday, September 18, 2015

செப்டம்பர் படுகொலைகள்: ஜோர்டானில் நசுக்கப் பட்ட பாலஸ்தீன- மார்க்சியப் புரட்சி


1970 செப்டம்பர், ஜோர்டானில் ஓர் இனப்படுகொலை நடந்தது! ஜோர்டான் மக்கட்தொகையில் அறுபது சதவீதமாக இருந்த பாலஸ்தீனர்களை குறி வைத்து அந்த இனவழிப்பு நடந்தது. CIA கைக்கூலியான மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான படையினர் நடத்திய இனவழிப்புப் போரில் இருபதாயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். இன்னொரு CIA கைக்கூலியான சியா உல் ஹாக் தலைமையிலான பாகிஸ்தானிய படைகள், ஜோர்டானியப் படைகளுக்கு உறுதுணையாக நின்று, அந்த இனவழிப்பை நடத்தி முடித்தன.

செப்டம்பர் படுகொலைகளில் கொல்லப் பட்டவர்கள் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்". அவர்களை கொன்று குவித்தவர்களும் "அரேபியர்கள் அல்லது முஸ்லிம்கள்." ஏனிந்த வன்மம்? 1970 செப்டம்பர், அமெரிக்கா உதவியுடன் அந்த இனவழிப்புப் போர் நடந்திரா விட்டால், பாலஸ்தீன மார்க்சிய விடுதலை இயக்கங்கள், ஜோர்டானின் ஆட்சியை கைப்பற்றி அதனை ஒரு கம்யூனிச நாடாக மாற்றி இருந்திருப்பார்கள்!

மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கத்துடன், அதன் பக்க விளைவாக, அயலில் ஜோர்டான் என்ற புதிய தேசம் உருவானது. இஸ்ரேலில் இருந்து விரட்டப் பட்ட பாலஸ்தீனர்கள் ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர். மன்னர் ஹுசைனின் சொந்த இனக் குழுவான ஹாஷேமித் அரபுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஜோர்டானில், வெகு விரைவில் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
1967 போருக்குப் பின்னர், ஜோர்டான் வசமிருந்த மேற்குக் கரையும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதனால் மேலும் பெருந்தொகை பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

ஜோர்டானில் நிரந்தரமான பாலஸ்தீன அகதி முகாம்கள் உருவாகின. புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மத்தியில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் ஆதரவுத் தளங்களை ஏற்படுத்திக் கொண்டன. இஸ்ரேலுடனான நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததாலும், பெருந்தொகை பாலஸ்தீனர்களின் புகலிடமாக இருந்த படியாலும், ஜோர்டான் பாலஸ்தீன கெரில்லாக்களின் விருப்பத் தெரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து இஸ்ரேலுக்குள் கெரில்லாத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆயினும், ஜோர்டான் மன்னர் ஹுசைனுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இரகசிய உறவு இருந்து வந்தது. பாலஸ்தீன கெரில்லாக்கள் தனது நாட்டை தளமாகப் பயன்படுத்துவதை அவர் விரும்பவில்லை. அப்படியான தருணத்தில், 2 நவம்பர் 1968 நடந்த சம்பவம் ஒன்று, ஜோர்டான் அரசுடன் பகை முரண்பாட்டை உண்டாக்கியது. 

இஸ்ரேல் உருவாகக் காரணமாக இருந்த பால்பூர் உடன்படிக்கையின் 51 வது ஆண்டு நிறைவையொட்டி, புதியதொரு பாலஸ்தீன இடதுசாரிக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தியது. தலைநகர் அம்மானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த, ஜோர்டானிய பாதுகாப்புப் படையினர், கலவரத்திற்கு தலைமை தாங்கியவர்களை கைது செய்தது.

நீண்ட காலமாக, பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள், ஜோர்டானுக்குள் சுதந்திரமாக நடமாடித் திரிந்தன. தற்போது ஜோர்டானிய படைகள், வீதித் தடையரண்களை அமைத்து, கெரில்லாக்களின் வாகனங்களை சோதனை போடத் தொடங்கினார்கள். பாலஸ்தீன இயக்கங்கள், மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தினார்கள். ஒரு தடவை, ஜோர்டானிய பொலிஸ் வாகனத்தை கண்ணி வெடி வைத்து தாக்கிய கெரில்லாக்கள், அதில் பயணம் செய்த பொலிஸ்காரர்களை உயிருடன் பிடித்து சுட்டுக் கொன்றனர். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற இராணுவ வீரர் ஒருவரும் கொலை செய்யப் பட்டார்.

இன்னொரு சம்பவத்தில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்ட தோழர்களை விடுவிக்குமாறு, ஆயுதங்களுடன் சென்ற கெரில்லாக்கள் மிரட்டினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில், போலீஸ்காரர்கள் காயமுற்று, ஒரு வழிப்போக்கர் கொல்லப் பட்டார். அதே நேரம், ஜோர்டானிய இராணுவமும் பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. அதில் சிக்கி பல அகதிகள் உயிரிழந்தனர்.

PLO எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல இயக்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இயங்கியது. அதில் ஒவ்வொரு இயக்கமும் தனக்கென தனியான தலைவரும், கொள்கையும் கொண்டிருந்து. அப்போது தான் PLO தலைவராக தெரிவான யாசிர் அரபாத், மன்னர் ஹுசைனுடன் சேர்ந்து பிரச்சினையை சமரசமாக தீர்த்து வைக்கப் பார்த்தார். ஆயினும், அரபாத்தின் இயக்கத்திற்குள்ளே கூட, ஜோர்டானில் ஒரு பாலஸ்தீன புரட்சி நடத்துவதற்கு ஆதரவு இருந்தது.

பிற்காலத்தில், தன் பக்க தவறுகளை மறைப்பதற்காக, புரட்சி நசுக்கப் பட்டதற்கு மார்க்சிஸ்டுகளே காரணம் என்று யாசிர் அரபாத் காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். கருத்து ஒற்றுமை இல்லாத இயக்கங்களை குற்றஞ் சாட்டினார். இருப்பினும், எதிரியை குறைவாக எடை போட்டது, அரபாத் பக்கத் தவறாக இருந்தது. அதாவது, ஜோர்டான் ஆட்சியை பாலஸ்தீன இயக்கங்கள் கைப்பற்ற நினைத்தால் அது இலகுவாக முடிந்திருக்கும் என்று நம்பினார். ஈராக்கும், சிரியாவும் ஆதரவளித்திருக்கும் என்று நம்பினார்.

உண்மையில், 1970 பெப்ரவரி வரையில், ஜோர்டானில் பாலஸ்தீன இயக்கங்களின் கை ஓங்கியிருந்தது. தலைநகர் அம்மானின் சில பகுதிகள் உட்பட, பெரும்பாலான ஜோர்டானின் பிரதேசங்கள் பாலஸ்தீன இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவர்கள் தேசத்திற்குள் இன்னொரு தேசத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 

காணுமிடமெங்கும் பாலஸ்தீன இயக்கங்களின் வீதித் தடையரண்கள், ஜோர்டானிய படைகளை எட்டத்தில் வைத்திருந்தன. தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், பாலஸ்தீன இயக்கங்கள் சொன்னது தான் சட்டமாக இருந்தது. அவர்கள் தமது பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்களை நிறுவினார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எப்படி இருந்ததோ, அதே மாதிரித் தான் ஜோர்டானில் பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது.


பாலஸ்தீனர்கள் மத்தியில், தீவிர கம்யூனிச இயக்கமாக கருதப் பட்ட PFLP, ஜோர்டானிய புரட்சியில் ஏறக்குறைய தலைமைப் பாத்திரம் வகித்தது எனலாம். அந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் ஆயுதப் போராட்டம் நடத்திய தீவிர கம்யூனிச இளைஞர்கள், PFLP முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களது ஆதரவுடன் PFLP, இதனை ஒரு சர்வதேச அரபுப் புரட்சியின் தொடக்கமாக கருதியது. 

PFLP, "அமெரிக்க- இஸ்ரேலிய கைக்கூலி ஹுசைனின், பிற்போக்கான மன்னராட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி" என்று பிரச்சாரம் செய்தது. ஜோர்டானிய தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவி, வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியது. மார்க்சிய நூல்கள், துண்டுப் பிரசுரங்கள், பரவலாக மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டன. பள்ளிவாசல்களை கைப்பற்றி, அங்கிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் கம்யூனிசப் பிரச்சாரம் செய்தார்கள்!

இதற்கிடையே, தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொண்ட யாசிர் அரபாத், ஜோர்டான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. AK-47, RPG, மோர்ட்டார் ஆகிய சிறு ஆயுதங்களைக் கொண்டு, பாலஸ்தீன கெரில்லாக்கள் துணிச்சலுடன், ஜோர்டானிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், வட கொரியா சென்ற PFLP தலைவர் ஜோர்ஜ் ஹப்பாஷ், அங்கிருந்த ஜப்பானிய செம்படையுடன் இணைந்து, சர்வதேச மட்டத்தில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார்.

"சர்வதேச புரட்சிப் படையின்" துணிச்சலான நடவடிக்கை, அன்று உலகம் முழுவதும் பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேச வைத்தது. இரண்டு மேற்கத்திய நாடுகளின் பயணிகள் விமானங்கள் கடத்தப் பட்டன. ஓர் அமெரிக்க விமானமும், சுவிஸ் விமானமும், ஆகாயத்தில் பறக்கையில் கடத்திச் செல்லப் பட்டன. கடத்திச் செல்லப் பட்ட விமானங்கள், ஜோர்டானில் உள்ள Dawsons Field விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டன. அப்போது அது "புரட்சிகர விமான நிலையம்" என்று பெயர் மாற்றப் பட்டது!

ஆறு நாட்களின் பின்னர், இன்னொரு மேற்கத்திய விமானம் அங்கு கொண்டு வரப் பட்டது. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த விமானப் பயணிகள் அனைவரையும் விடுவித்து விட்டு, மூன்று விமானங்களையும் குண்டு வைத்துத் தகர்த்தனர்.


நிலைமை எல்லை மீறிச் செல்வதை கண்டு கொண்ட அமெரிக்கா, நேரடியாகவே ஜோர்டானிய உள்விவகாரங்களில் தலையிட்டது. இஸ்ரேலிய, அமெரிக்க விமானங்கள் ஜோர்டானிய வான்பரப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாலஸ்தீன கெரில்லாக்களுக்கு உதவ வேண்டாம் என்று, ஈராக் அரசுக்கு அமெரிக்கா எச்சரித்தது.

அமெரிக்க, இஸ்ரேலிய உதவியை பெற்றுக் கொண்ட ஜோர்டானியப் படைகள், பாலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் முன்னேறின. அந்தக் காலப் பகுதியில், ஜோர்டானிய படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக நிலை கொண்டிருந்தன. பின்னாளில் பாகிஸ்தான் சர்வாதிகாரியாக வந்த சியா உல் ஹக், அன்று ஜோர்டானில் இருந்த பாகிஸ்தானிய படைகளுக்கு தலைமை தாங்கினார். 

ஜோர்டானிய - பாகிஸ்தானிய கூட்டுப் படைகள், பாலஸ்தீன அகதி முகாம்கள் மீது கண்மூடித் தனமான எறிகணைத் தாக்குதலை நடத்தின. ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப் பட்டனர். பல அகதி முகாம்கள் தரை மட்டமாக்கப் பட்டன. செப்டம்பர் மாதம் மட்டிலும், குறைந்தது இருபதாயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர்.

ஜோர்டானில் பாலஸ்தீனப் புரட்சி தோற்கடிக்கப் பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, 1971 ம் ஆண்டு வரையில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஜோர்டானுக்குள் இருந்தன. ஆனால், அவர்களை மெல்ல மெல்ல வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

இறுதியில், அனைத்து பாலஸ்தீன இயக்கங்களும், ஆயுதங்களுடன் லெபனானுக்கு தப்பியோடின. தெற்கு லெபனானில் தளம் அமைத்து, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தன. ஜோர்டானில் நடந்த செப்டம்பர் படுகொலைகளை நினைவுபடுத்தும் "கருப்பு செப்டம்பர்" என்ற பெயர், வேறொரு காரணத்தால் வரலாற்றில் நிலைத்து விட்டது.

1972 செப்டம்பர், (மேற்கு) ஜெர்மனி மியூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதற்கு வந்திருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், சில தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்து கொல்லப் பட்டனர். பாலஸ்தீன, ஐரோப்பிய தீவிரவாதிகளை கொண்ட அந்த தீவிரவாதிகளின் குழு, தம்மை "கருப்பு செப்டமபர் இயக்கம்" என்று அழைத்துக் கொண்டனர். மியூனிச் படுகொலைச் சம்பவம் உலகப் புகழ் பெற்று, கருப்பு செப்டம்பர் என்ற பெயரும் நிலைத்து விட்டது.

No comments:

Post a Comment