Wednesday, June 17, 2015

கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!


"தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்" என்று ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். கயானா நாட்டின் அரசியல் நிலவரம், அல்லது  "தமிழ்ப்" பிரதமரின் அரசியல் வரலாறு பற்றி எதுவும் அறியாமல் பரப்பப்படும் தகவல் ஆபத்தானது. அது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கே உதவப் போகின்றது.

தமிழர்களே ஏமாறாதீர்கள்! மோசஸ் நாகமுத்து ஒரு சி.ஐ.ஏ. உளவாளி! கயானாவில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள எண்ணை வளத்தை அபகரிக்கும் நோக்குடன், CIA செய்யும் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று.

மோசஸ் வீராசாமி நாகமுத்து: யார் இவர்? 
நாகமுத்து என்பது குடும்பப் பெயர். அனேகமாக, கயானாவில் காலடி எடுத்து வைத்த முப்பாட்டனின் பெயர். ஆங்கிலேயர் வாயில் நுழையாத படியால் நகமூட்டூ (Nagamootoo) என்று மாற்றி விட்டார்கள்.

மோசஸ் நாகமுத்து, கயானாவில் விம் கிராமத்தில் பிறந்தவர். அங்கு வாழும் மக்கள் சென்னையில் இருந்து வந்து குடியேறியவர்கள். இருநூறு வருடங்களுக்கு முன்னர், இவரது மூதாதையர் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றனர். இன்று அங்கே வாழும் "தமிழர்கள்" யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது. அவர்கள் ஒன்றில் ஆங்கிலம் அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள்.

உலகில் நீண்ட கால இனப்பகை முரண்பாடுகளை கொண்ட நாடுகளில் கயானாவும் ஒன்று. தென் அமெரிக்காவில், வெனிசுவேலாவுக்கு அருகில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் காலனியில், ஆப்பிரிக்க அடிமைகளும், இந்திய கூலிகளும் பெருமளவில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்களின் வம்சாவளியினர் இரண்டு பெரும்பான்மை சமூகங்களாக வாழ்கின்றனர்.

கயானாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே, பிரிட்டிஷார் அந்த நாட்டில் சுதந்திரமான பொதுத் தேர்தல்களை நடத்தினார்கள். அப்போது முற்போக்கு மக்கள் கட்சி (The Progressive People's Party) (PPP) பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. உண்மையில் PPP, ஆப்பிரிக்க, இந்திய உழைக்கும் வர்க்க மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய மார்க்சியக் கட்சியாக இருந்தது.

PPP தலைவர் டாக்டர் செட்டி ஜெகன் ஓர் இந்தியர் (இவரது முன்னோர் கூட தமிழராக இருக்கலாம்.) செட்டி ஜெகன் தன்னை ஒரு மார்க்சிய - லெனினிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். சேகுவேராவை கூட நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அன்றிருந்த நிலைமையில், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கினால், அது அடுத்த நாளே ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. செட்டி ஜெகன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது உறுதியானதும், காலனிய எஜமானான பிரிட்டன் படைகளை அனுப்பி மிரட்டியது.

அப்படி இருந்தும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் PPP தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்த படியால், பிரிட்டன் அமெரிக்காவின் உதவியை நாடியது. CIA, MI5 இரண்டும் கூட்டுச் சேர்ந்து, செட்டி ஜெகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டின.

ஓர் ஏழை நாடான கயானாவில், PPP தனது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர் மத்தியில் பேராதரவு பெற்றிருந்தது. அதனால் CIA, தனது அமெரிக்க தொழிற்சங்க கைக்கூலிகளான AFL-CIO மூலம் இரகசியமாக நிதி அனுப்பி, இனக் கலவரங்களை தூண்டி விட்டது.

1964 ம் ஆண்டு, கயானாவில் இந்தியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் இனக்கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, PPP இல் இருந்த ஆப்பிரிக்க இனத் தலைவர் போர்ப்ஸ் பெர்ன்ஹம் (Forbes Burnham) கட்சியை விட்டு விலகினார். அவருடன் ஆப்பிரிக்க உறுப்பினர்களும் வெளியேறினார்கள். அதனால், PPP இந்தியர்களின் கட்சியாகியது.

போர்ப்ஸ் பெர்ன்ஹம் தலைமையில், ஆப்பிரிக்க இனத்தவரை பிரதிநிதித்துவப் படுத்தும் People's National Congress (PNC) என்ற புதிய கட்சி உருவானது. இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரிட்டன், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கியது. 1966 ம் ஆண்டு கயானா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, போர்ப்ஸ் பெர்ன்ஹம் ஒரு சர்வாதிகாரியாக அரசாண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப் பட்டனர்.

நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் சி.ஐ.ஏ. மேலதிகாரி  Bryan Hunt (Charge´ d´ affaires) ஐ சந்தித்து பேசினார்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தான், PPP கட்சி சார்பில் மந்திரிப் பதவி வகித்த மோசஸ் நாகமுத்துவுக்கும் சி.ஐ.ஏ. க்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற காரணத்தினால், செட்டி ஜெகனால் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தார். அந்தத் தகவலை, அன்றைய அமெரிக்க இராஜதந்திரி Wayne, மற்றும் சில கயானா ஊடகவியலாளர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். மேலும், நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் முதல் வேலையாக தனது சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்தித்துள்ளார். (PM Nagamootoo meets with US Chargé d’ Affaires; http://www.kaieteurnewsonline.com/2015/05/28/pm-nagamootoo-meets-with-us-charge-d-affaires/)

தொண்ணூறுகளுக்கு பின்னர், PPP மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. கடந்தாண்டு தேர்தல் வரையில், குறைந்தது ஒரு தசாப்த காலமாக PPP ஆட்சி செய்தது. அதன் ஆட்சிக் காலத்தில், கயானாவில் எண்ணை கண்டுபிடிக்கப் பட்டதாக Exxon Mobil அறிவித்தது.



கடந்த பொதுத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிந்தாலும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான அமெரிக்க கண்காணிப்பாளர்கள் "தேர்தல் நல்ல முறையில் நடந்துள்ளதாக" கூறியுள்ளனர். PPP க்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் தான் "தமிழரான" மோசஸ் நாகமுத்து கூட்டுச் சேர்ந்துள்ளார்.

உண்மையில், எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான APNU+AFC இனை, ஆப்பிரிக்க, ஐரோப்பிய வம்சாவளியினரே பெரும்பான்மையாக ஆதரிக்கின்றனர்.  PPP இப்போதும் இந்தியர்களின் கட்சியாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

இலங்கையில், மோசஸ் நாகமுத்து போன்ற ஒரு அரசியல்வாதி, சிங்கள அரசில் அங்கம் வகித்தால், அவருக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. கயானாவிலும் அது தான் நிலைமை.


இது குறித்து மேலும் அறிய விரும்புவோருக்காக. 
கயானாவில் CIA செய்த சதி நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விபரங்கள் இந்த நூலில் எழுதப் பட்டுள்ளன:
U.S. Intervention in British Guiana: A Cold War Story 
http://www.amazon.com/U-S-Intervention-British-Guiana-History/dp/0807856398

3 comments:

  1. எல்லா நாட்டிலும் தமிழன் இழிச்ச வாயனாகத்தான் இருந்துள்ளான். இவராவது புத்திசாலியாக இருப்பது நமக்கு பெருமைதான். நல்லவனாக இருக்கப்போய் தமிழ் நாட்டிலேயே தமிழன் ஆட்சி அதிகாரம் இழந்துள்ளான். அவர் எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும். தமிழனென்றால் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. தமிழன் ஒருவன் தலைமைக்கு வந்தால்,தமிழனே பொறுக்க மாட்டான். மூவேந்தர் போர்க்குணம் இன்னும் முற்றிலும் அழியவில்லை.அரசியல் காரணிகள் ஆயிரம், இருக்கலாம்.கூலியாக சென்றத் தமிழன் , குடியாட்சித் தலைவனாக விளங்குவதைப் பாராட்டுவோம்.நன்றி

      Delete
  2. இந்தியாவில் ஆட்சி செய்யும் அனைவரும் Cia
    கைகூலிகளே இதை பற்றிம் ஒரு கட்டுரை வேளிட்டாள் நலம் திரு கலைசெல்வன்

    ReplyDelete