Sunday, June 14, 2015

பௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் கம்யூனிச தடுப்பு மருந்து


  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், முன்னாள் ஐரோப்பிய காலனிகளாக இருந்த ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்து கொண்டிருந்த காலத்தில், அந்த நாடுகளில் "கம்யூனிச அபாயம்" பரவிக் கொண்டிருந்தது. சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நாடுகளுக்கிடையில் ஒரு முக்கியமான ஒற்றுமை இருந்தது. அவை எல்லாம் "பௌத்த நாடுகள்". அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள். 
  • இலங்கையும், பர்மாவும், அவற்றைப் போன்று, பௌத்த மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் தான். சிறிலங்கா, பர்மிய ஆட்சியாளர்களும், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச பூதம் தமது நாடுகளிலும் வந்து விடும் என்று பீதியடைந்திருப்பார்கள். அதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் பௌத்த மதவெறியை தூண்டி விட்டார்கள். அது பிற்காலத்தில், பௌத்தர் அல்லாத சிறுபான்மை இன மக்கள் மீது பாய்ந்தது வரலாறு.

ஒரு தடவை, நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்த நேரம், மியான்மார் (பர்மா) நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் சக தொழிலாளியாக வேலை செய்தான். அவன், மியான்மர் சிறுபான்மை இனங்களில் ஒன்றான, ஷின் பழங்குடி இனத்தை சேர்ந்த அகதி. ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான அகதிகள், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இளைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் விசாலமான உலகப்பார்வையும் அவனிடம் இருந்தது.

ஷின் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். பர்மிய மொழி பேசும் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்களாக இருந்த படியால், காலனிய காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஷின் போன்ற பழங்குடி சமூகங்களை மட்டுமே மதம் மாற்றி இருந்தனர். கிறிஸ்தவ மதத்துடன் மேலைத்தேய பண்பாடும் போதிக்கப் பட்டது என்பதை இங்கே கூறத் தேவையில்லை.

வேலை நேரங்களில் கிடைத்த இடைவேளைகளில், பர்மா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது நான், ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி அவனது கருத்தை அறிய விரும்பினேன். அப்போது அவன் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

//"அவர்கள் தம்மை தனியாக அடையாளப் படுத்திக் கொள்வதற்காக ரோஜிங்கியா (பர்மாவில் அப்படி அழைப்பார்கள்) என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் வந்தேறுகுடிகள். ஒரு காலத்தில் பர்மிய பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. அப்போது பங்களாதேஷ் நாட்டில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். அவர்கள் இப்போது தாங்கள் பர்மிய மண்ணின் மைந்தர்கள் என்று உரிமை கோருகிறார்கள்.

எமது நாட்டில் பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு ரோஹிங்கியா மக்கள் காரணமாக உள்ளனர். சில ரோஹிங்கியா இளைஞர்கள், பர்மிய இளம்பெண்களை பலாத்காரம் செய்த கொடுமை நடந்த பின்னர் தான், மக்கள் வெகுண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் தமது தாய்நாடான பங்களாதேஷ்ஷுக்கு திரும்பிச் செல்வது நல்லது."//

நிச்சயமாக, மியான்மர் அரசு, அல்லது பெரும்பான்மை சமூகம் சார்ந்த ஊடகங்களின் பிரச்சாரம், அவனை அப்படி சொல்ல வைத்தது. மியான்மரில் ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனமான ஷின் மக்களிடமே, அப்படியான தவறான கருத்துக்கள் இருக்குமாகவிருந்தால், பெரும்பான்மை பர்மியர்களைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

அந்தக் கதைகளை கேட்கும் பொழுது, இலங்கையில் தமிழர்கள் பற்றி சிங்களவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் தான் நினைவுக்கு வந்தன. இனப்பிரச்சினை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியான குணாம்சத்தை கொண்டுள்ளது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது. ஆயினும், இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

மியான்மரில் பல தசாப்த காலமாக இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போது அந்த நாட்டில், அனைவர் மீதும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. ஆனால், அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. பர்மிய- பௌத்த பேரினவாதிகள் அவர்களை இனப்படுகொலை செய்யவில்லை.

மியான்மர் ஜனநாயக நாடாக மாறிய பின்னர் தான், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடந்துள்ளன. இலங்கையும் மிக நீண்ட காலமாக மேலைத்தேய ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றி வரும் ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இனப்பிரச்சினை, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்பன, மேலைத்தேய ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் மட்டுமே தீவிரமடைந்திருப்பதன் காரணம் என்ன? நம்மில் பலர் உணர்ந்து கொள்ளாத, மேலைத்தேய ஜனநாயகம் உற்பத்தி செய்யும் தீமைகளில் இதுவும் ஒன்று. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் "The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing"(by Michael Mann) என்ற நூலை வாசிக்கவும். 

அது என்னவோ தெரியவில்லை. நமது நண்பர்கள் சிலருக்கு, சோஷலிசம் என்ற சொல்லை எங்கே கண்டாலும் ஹிஸ்டீரியா வந்து விடுகின்றது. உடனே, "இந்தப் படுபாவிகள் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என்று திட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

அவர்கள் தமது முன்னோரின் கடந்த காலத்தை பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், அவர்களின் பெற்றோரின் காலத்தில் கூட, சோஷலிசம் என்பது எதிர்க்கப் பட வேண்டிய தீமையாக கருதப் படவில்லை. மாறாக, பெரும்பான்மை பொது மக்களின் விருப்பத்திற்குரிய அரசியல் கொள்கையாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது.

முன்னர் ஒரு தடவை, "மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை, மேலைத்தேய ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் உருவான தீமை" என்று எழுதி விட்டேன்.  ஒரு நண்பர் அதைக் கண்டவுடனே, "மியான்மர் ஒரு காலத்தில் சோஷலிச நாடாகவிருந்தது தெரியுமா?" என்று கேட்டிருந்தார்.

நீங்கள் மியான்மர் பற்றி இணையத்தில் தேடினால், 1962 - 1988 காலப்பகுதியில் Burma Socialist Programme Party (BSPP) என்ற ஒரு கட்சி ஆட்சி முறை இருந்தது என்று எழுதப் பட்டிருக்கும். அந்தக் கட்சியின் சோஷலிச பொருளாதார திட்டங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும். அதை வைத்துக் கொண்டு, அன்றைய மியான்மர் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று சொல்ல முடியாது.

அன்றைய பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள், "நாஸ்திக" மார்க்சியத்தை நிராகரித்த, "பௌத்த - சோஷலிசம்" ஒன்றை நடைமுறைப் படுத்துவதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், உண்மையான சோஷலிசத்திற்காக பாடுபட்ட பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) தலைமறைவாக இயங்கியது. இராணுவ ஆட்சியாளர்கள், பர்மிய கம்யூனிஸ்டுகளுடன் நீண்டதொரு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலகத்திற்கும், அன்றிருந்த உலகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று தெருவில் போவோர் வருவோர் எல்லாம், "ஜனநாயகம், திறந்த சந்தைப் பொருளாதாரம்" பற்றிப் பேசுவது மாதிரி, அன்றிருந்த மக்கள், அரசியல் தலைவர்கள் சோஷலிசம் பற்றிப் பேசினார்கள். அன்றைய காலங்களில், சோஷலிசம் பேசுவது தான் "பேஷன்". ஏனென்றால், அன்றிருந்த மக்களுக்கு சோஷலிசம் தான் விருப்பமாக இருந்தது.

இந்தியாவில் நேருவும் சோஷலிசம் பேசினார். இந்தியாவும் எண்பதுகள் வரையில் போலி- சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றி வந்தது. இலங்கையில் சிறிமாவோவின் காலத்திலும் போலி- சோஷலிச பொருளாதாரம் இருந்துள்ளது.

அதிகம் பேசுவானேன். நமது விடுதலைப் புலிகள் கூட, சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும் சொல்லிக் கொண்டார்கள். அதற்காக, வன்னியில் இருந்த de facto தமிழீழம் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று யாரும் சொல்வதில்லை.

எதற்காக அன்றைய காலங்களில் சோஷலிசம் பிரபலமான அரசியல் கொள்கையாக இருந்தது? முக்கியமான நோக்கம், காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும். அதனால், சோஷலிசப் பொருளாதாரம், காலனிய வல்லாதிக்கதிடம் இருந்து தம்மை முழுமையாக விடுதலை செய்யும் என்று நினைத்தார்கள்.

அன்றிருந்த அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில், தேசியவாதமும், சோஷலிசமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒரே மாதிரியான கொள்கைகளாக கருதப் பட்டன. சிலநேரம், எது தேசியவாதம், எது சோஷலிசம் என்று பிரித்தறிவது கடினமாக இருந்தது. 

இலங்கையில் பௌத்த மதம் அரச மதமாக பிரகடனப் படுத்தப் பட்டதும், பௌத்த மத வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்குவதும், அதனால் "சிங்கள - பௌத்த மேலாதிக்கம்" நடைமுறை அரசியலானதும் அனைவரும் அறிந்ததே. இந்த விடயம் தொடர்பாக பலருக்குத் தெரியாத பக்கம் ஒன்றுள்ளது.

நாட்டில் உள்ள பௌத்தர் அல்லாத சிறுபான்மை இனங்கள், அல்லது சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, அரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தது. சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் நோக்கில் பௌத்த மதவெறி வளர்க்கப் பட்டது என்றே பலரும் கருதுகின்றனர். உண்மையில் அது இரண்டாம் பட்ச காரணம் மட்டுமே. முதலாவது காரணம், பௌத்த மதவெறியை தூண்டி விட்டால், "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தலாம் என்று அரசு கணக்குப் போட்டது.

காலனிய காலத்திற்குப் பிந்திய காலகட்டத்தில், புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், கம்யூனிசமே முதலாவது எதிரியாகக் கருதப் பட்டது. இலங்கையிலும், இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு சவாலான மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வந்தன. குறிப்பாக பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில், கம்யூனிச அல்லது இடதுசாரி கொள்கைகள் வேரூன்றி பரவுவதை தடுப்பதற்கு, அரசு பல வழிகளிலும் முயன்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நிலைப்பாடு சிறந்த பலன்தரத் தக்கதாக அமைந்தது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவிலும், அதே நோக்கத்தோடு தான் பௌத்த மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டது. பௌத்த சங்கங்களுக்கு அரசு பெருமளவு நிதியை ஒதுக்கியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, அந்த நாட்டிலும் எல்லா இடங்களிலும் புதிது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்தன. அங்கேயும் இந்த நடவடிக்கை சிறுபான்மையின மக்களின் எழுச்சியை தூண்டி விட்டது.

பர்மாவில் சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாது, பர்மிய கம்யூனிஸ்டுகளும் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக, பெரும்பான்மை பர்மிய மக்கள், கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கலாம் என்ற அச்சத்தில், அரசு பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது. பெரும்பாலான புத்த பிக்குகள் கம்யூனிச எதிர்பாளர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

பர்மாவுக்கு அயல்நாடான சீனாவில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். அங்கிருந்து பர்மிய கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைத்து வந்தது. அது மட்டுமல்லாது, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய, அயலில் உள்ள பிற நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருந்தனர்.

இன்றைய உலகில், பொதுவுடமைக் கோட்பாடுகளின் செல்வாக்கு குறைந்துள்ள நேரத்தில், அதைப் பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை. ஆயினும், இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்றைக்கும் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றது. சிங்கள - பௌத்த பேரினவாதிகள், தமிழர்களையும், முஸ்லிம்களையும் எந்தளவு வெறுக்கின்றனரோ, அதற்கும் மேலாகவே கம்யூனிஸ்டுகளை வெறுக்கிறார்கள். 

No comments:

Post a Comment