Monday, November 24, 2014

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்



மூலதனம் வாசிப்பு 

கம்யூனிசத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு கூட, ஒரு தகுதி வேண்டும். அவர்கள் முதலில் முதலாளித்துவத்தை பற்றி சிறிதளவேனும் அறிந்து வைத்திருக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் முதலாவது பாகத்தின் தலைப்பு இது: "முதலாளித்துவ பொருளுற்பத்தி." 

மூலதனம் நூலை வாசித்து புரிந்து கொள்ளக் கஷ்டப் படுபவர்களுக்கும், வாசிக்க விரும்பாமல் எதிர்ப்பவர்களுக்கும் பிரயோசனப் படும் வகையில், ஒவ்வொரு பகுதியாக எடுத்து விவாதிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மூலதனம் வாசிப்பில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் எல்லோரும் ஆசிரியராகவும், மாணவராகவும் இருக்கலாம். 

முன்னாள் சோஷலிச நாடுகளில், ஒவ்வொரு தொழிலாளியும், சனிக்கிழமைகளில் பாடசாலைக்கு செல்ல வேண்டும். அங்கே பொருளியல் பாடம் படிக்க வேண்டும். அந்த எட்டு மணித்தியாலமும், வேலை நேரமாகக் கணிக்கப் பட்டு சம்பளம் கொடுத்து வந்தார்கள்.

உலகில் எந்த சர்வாதிகாரி தனது மக்களைப் படிக்க வைப்பான்? மேற்கத்திய முதலாளித்துவ "ஜனநாயக" நாடுகளில் கூட, தொழிலாளர்களுக்கு பொருளியல் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. 




(மூலதனம், முதலாம் பாகம், புத்தகம் ஒன்று)

அத்தியாயம் ஒன்று : சரக்கு 

பிரிவு 1 : பயன் மதிப்பும், மதிப்பும் 


1. பயன் மதிப்பு 

உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் பயன் மதிப்பு (use value) இருக்கும். ஒரு சடப் பொருளின் "உள்ளார்ந்த தன்மை" என்ற தத்துவத்தின் படியும் அதைக் கூறலாம். ஒரு பொருள் பயன்படுத்தப் படுவதால், அல்லது நுகரப் படுவதால் பயன்மதிப்பு உண்டாகின்றது.

ஒரு பொருள், மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால், அதற்கு பயன்மதிப்புக் கிடைக்கின்றது. உதாரணத்திற்கு, அரிசி உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றது. அதே போன்று, உடை காலநிலைக்கு ஏற்றவாறு உடலைப் பாதுகாப்பதற்கும், மானத்தை மறைப்பதற்கும் உதவுகின்றது.

அநேகமாக, எல்லாப் பொருட்களுக்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாம் சரக்கு ஆவதில்லை. பண்டமாற்றுக்கு அல்லது வர்த்தகப் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லப்படும் பொருள் மட்டுமே சரக்கு (Commodity) ஆகின்றது.

உதாரணத்திற்கு, காட்டில் இருக்கும் மாமரத்தில் காய்க்கும் மாங்கனிகளுக்கும் பயன்மதிப்பு இருக்கிறது. (அவற்றை நுகர முடியும்.) ஆனால், அவை சரக்காக மாட்டாது. ஏனென்றால், யாரும் அவற்றை பறித்துச் சென்று விற்பதில்லை. ஆனால், வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் மாமரத்தில் இருந்து கிடைக்கும் பழங்களை சந்தையில் கொண்டு சென்று விற்கின்றனர். ஆகவே, அந்தப் பழங்கள் சரக்குகள் ஆகின்றன.

பயன்மதிப்பு கொண்ட பொருட்கள், பரிவர்த்தனைக்காக எடுத்துச் செல்லப் படுகின்றன. இன்றைய காலத்தில் பணத்தின் மூலம் பரிவர்த்தனையை இலகுவாக தீர்மானிக்க முடிகின்றது. ஆனால், பணம் புழக்கத்தில் இல்லாத பண்டைய காலங்களில் பண்டமாற்று மூலம் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப் பட்டன.

வித்தியாசமான பௌதிகத் தன்மை கொண்ட பொருட்களை, ஒன்றுக்கொன்று சமமாக பண்டமாற்று செய்வது எப்படி?


2. பரிவர்த்தனை மதிப்பு

ஒரு பொருளின் பயன் மதிப்பை அறிந்து கொள்வது இலகு. அதன் பௌதிக, இரசாயனத் தன்மை மாற்றங்களைக் கொண்டு விலை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு, நமது தோட்டத்தில் பறித்த மாம்பழங்கள், அல்லது வளர்த்த கோழியை கொண்டு சென்று சந்தையில் விற்கும் பொழுது, வாங்குவோரின் நுகர்வுத் தேவையை பொறுத்து, அதன் பயன் மதிப்பை (அல்லது விற்கும் விலையை) முடிவு செய்கிறோம். ஆனால், நாணயப் புழக்கம் இல்லாத பண்டைய காலத்தில், அவற்றை வேறொரு பொருளுடன் பண்டமாற்று செய்ய வேண்டியிருந்திருக்கும்.

ஒரு விவசாயி ஒரு குறிப்பிட்ட அளவு அரிசித் தானியத்தினை, ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடை அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் பண்டமாற்று செய்து கொள்கிறார். இவை யாவும் வெவ்வேறு பயன் மதிப்புக் கொண்டவை. அது மட்டுமல்லாது, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, வேறு பட்ட அளவீடுகளை கொண்டவையாக உள்ளன.

சந்தைக்கு வந்த விவசாயி ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக, குறிப்பிட்ட அளவு இரும்பு, தளபாடம், ஆடையை கைமாற்றிக் கொண்டு செல்கிறார். அப்படியானால், குறிப்பிட்ட பொருட்களுக்கு இடையில், ஒன்றுக்கொன்று சமமாக மாற்றிக் கொள்ளத்தக்க பரிவர்த்தனை மதிப்பு ஒன்று இருக்க வேண்டும்.

கணிதத்தில், ஒரு வடிவத்தின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கு, அதனை பல முக்கோணங்களாக பிரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முக்கோணத்தையும் அளப்பதற்கு, அடிப் பாகத்தின் பாதியையும், செங்கோட்டின் உயரத்தையும் பெருக்கி விடையைத் தெரிந்து கொள்கிறோம். அந்தக் கணித சூத்திரம் கண்ணுக்குப் புலப் படாத ஏதோ ஒன்றால் பெறப் படுகின்றது.

அதே போன்று, பொருட்களுக்கு இடையிலான பரிவர்த்தனை மதிப்பையும், கண்ணுக்குப் புலப் படாத "ஏதோ ஒன்று" தீர்மானிக்கிறது. அது எது? ஒவ்வொரு சரக்கிற்கும் பயன்மதிப்பு இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வேறுபட்ட தன்மை கொண்டவை. அரிசியையும், இரும்பையும், சமப் படுத்துவது எப்படி? ஆகவே, ஒரு பொருளின் பயன் மதிப்பை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், ஒரு பொதுவான குணவியல்பு எஞ்சியுள்ளது.

ஆகவே, சரக்குகளை கைமாற்றிக் கொள்ளும் பொழுது வெளிப்படும், பொதுவான குணாம்சம் தான் உண்மையான மதிப்பு ஆகும். அந்தப் பொதுவான குணாம்சம், மனித உழைப்புத் தான். ஒரு தானியத்தை பயிரிடுவதற்கும், ஒரு தளபாடத்தை செய்வதற்கும், ஓர் ஆடையை நெசவு செய்வதற்கும் மனித உழைப்பு செலவிடப் படுகின்றது. அந்த மனித உழைப்பு தான், பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிக்கிறது.

இப்போது இன்னொரு பிரச்சினை எழுகின்றது. மனித உழைப்பின் விலையை தீர்மானிப்பது எப்படி? மணித்தியாலங்கள், நாட்கள், வாரங்கள் என்பன, ஒரு பொருளைத் தயாரிப்பதற்கு எந்தளவு மனித உழைப்பு செலவிடப் பட்டது என்பதை கணிக்க உதவுகின்றது.

அப்படியானால், ஒரு சோம்பேறி அதிக நேரம் எடுத்து ஆறுதலாக வேலை செய்து முடித்தால், குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படி நினைத்துக் கொள்வது தவறு. மனித உழைப்பு எனும் பொழுது, அது ஒரு தனி மனிதனின் உழைப்பைக் குறிப்பதல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பைக் குறிக்கின்றது.

அதாவது, ஒரு சோம்பேறி, ஒரு சுறுசுறுப்பானவன், இரண்டுக்கும் இடையிலான சராசரி தொழிலாளியின் சராசரி உழைப்புத் தான், ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பில் அடங்குகின்றது. ஒரு பொருளின் விலையை தீர்மானிக்கிறது. அதுவே, ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்பு. அதாவது ஒரு பொருளின் உண்மையான மதிப்பு.


3. மனித உழைப்பும் உற்பத்தித் திறனும் 

"கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்து, இன்றைய உலகம் எவ்வளவோ மாற்றத்தைக் கண்டு விட்டது. அதனால், அன்று மார்க்ஸ் கூறியவை இன்றைக்கு செல்லுபடியாகாது..." என்று வாதாடுவோர் பலருண்டு. அவர்கள் யாரும் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை வாசித்திருக்க மாட்டார்கள். விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவினால் பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, மூலதனம் நூலில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு காலத்தில், மடிக் கணணி, கைத் தொலைபேசி என்பன மிகவும் விலை அதிகமான ஆடம்பரப் பொருட்களாக இருந்துள்ளன. அதற்குக் காரணம், அவற்றைத் தயாரிக்கத் தேவையான கொல்த்தான் எனும் மூலப் பொருள், பூமியில் மிக அரிதாகக் கிடைத்து வந்தது. பிற்காலத்தில் கொங்கோ நாட்டில் நடந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக கொல்த்தான் உற்பத்தியை அதிகரித்தது. அதனால், மடிக் கணணி,கைத் தொலைபேசி என்பனவற்றின் விலைகளும் மட மடவென சரிந்தன.

மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் கிண்டலாக ஓர் உண்மையைக் கூறுகின்றார். "நிலக்கரியை வைரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தார்கள் என்றால், வைரத்தின் விலை செங்கல்லை விடக் குறைவாக இருக்கும்." வைரம், தங்கம் போன்ற கனிம வளங்கள், இயற்கையில் மிக அரிதாகக் கிடைப்பதால், அதைத் தேடுவதற்கான மனித உழைப்பும் அதிகரிக்கின்றது. அதனால் அதன் விலையும் அதிகமாக உள்ளது. இதிலே சுரங்கத் தொழிலாளரின் உடல் உழைப்பு மட்டுமல்ல, பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் மூளை உழைப்பும் சம்பந்தப் பட்டுள்ளது.

ஒரு சரக்கின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு மாறாது இருந்தால், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். ஒரு காலத்தில், கையால் நெசவு செய்பவரின் உழைப்பு, உடுக்கும் ஆடையில் மதிப்பாக இருந்தது. அதே உழைப்பு இன்றைக்கும் தொடருமானால், உடைகளின் விலையும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால்,நெசவு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், உடைகளின் விலை பெருமளவு குறைந்தது.

முன்பு விசைத் தறியில் நெசவு செய்த தொழிலாளர்களின் அதே உழைப்பு நேரம், பின்னர் தொழிற்சாலைகளிலும் மாறவில்லை. ஆனால் உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்தது. ஆகவே மனித உழைப்பு மட்டுமல்லாது, உற்பத்தித் திறனும் ஒரு பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. உண்மையில் இங்கிலாந்தில் தொழிற்சாலைகளில் நெசவு இயந்திரங்கள் வந்த பின்னர், உழைப்பின் நேரம் அரைவாசியாகக் குறைந்தது.

அதாவது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்தின் உழைப்புத் தான், ஒரு பண்டத்தின் மதிப்பையும், பருமனையும் நிர்ணயிக்கின்றது. பொதுவாக, உற்பத்தித் திறன் (நவீன தொழில்நுட்பம்) உயர்வாக இருந்தால், ஒரு பண்டத்தின் உற்பத்திக்கு தேவைப் படும் உழைப்பின் நேரமும் குறையும். அதன் மதிப்பும் குறையும். கடந்த தசாப்த காலமாக, கணனித் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பொருள் உற்பத்திக்கான செலவும் வீழ்ச்சி அடைந்தது. அந்த நோக்கத்தோடு தான், வருங்காலத்தில் ரோபோக்கள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

எந்த இடத்தில் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு பண்டத்திற்கு தேவைப்படும் மனித உழைப்பின் அளவும், மதிப்பும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவில் பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளியின் விலை சந்தையில் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அதை உற்பத்தி செய்வதற்கான மனித உழைப்பு அதிகம்.

அதே இந்திய சந்தையில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட தக்காளிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. அவர்களது விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அறிவு என்பன உற்பத்தித் திறனை உயர்த்தி உள்ளது. மனித உழைப்பை குறைத்துள்ளது. அதனால் விலையும் குறைந்துள்ளது.

ஒரு பயன்மதிப்பு கொண்ட பண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பு இறுகி இருப்பதாலேயே அது மதிப்பைப் பெற்றிருக்கிறது. (விற்பனைக்கான சரக்காக மாறுகிறது.) ஆயினும், பயன் மதிப்புக் கொண்ட எல்லாம், மதிப்புப் பெறுவதில்லை. காற்று, தரிசு நிலம், புல்வெளிகள் என்பன பயன் மதிப்புக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒரிசா மாநிலக் காடுகளில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனம் வரும் வரையில், அந்த இடத்தின் பயன்மதிப்புக் குறித்து யாரும் அக்கறைப் படவில்லை.

ஒரு பொருள் விற்பனைக்கான சரக்காக மாறாமலே, அது மனித உழைப்பைக் கொண்டதாகவும், மனிதர்களுக்கு பிரயோசனமானதாகவும் இருக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது தேவைக்காக, தானாகவே ஒரு மேசையை உற்பத்தி செய்கிறார். அவர் அந்தப் பொருளில் பயன் மதிப்பை உருவாக்குகிறார். ஆனால், அது விற்பனைக்கான சரக்கு அல்ல.

ஒருவர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். அதாவது, அதற்கு ஒரு சமுதாயப் பயன் மதிப்பு கிடைக்க வேண்டும். ஆயினும், நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு குடியானவன் தனது தானிய உற்பத்தியில் ஒரு பகுதியை நிலவுடமையாளருக்கும், கோயிலுக்கு தானமாகவும் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆகவே, ஒரு பொருள் உறபத்தி செய்யப் பட்டு, மற்றவர்களுக்கு பயன்பட்டாலும் எப்போதுமே அது சரக்காகி விடுவதில்லை. அந்தப் பொருளின் பயன் மதிப்பை பயன்படுத்திக் கொள்ளும் இன்னொருவருக்கு, பரிவர்த்தனை மூலம் கைமாற வேண்டும். அதாவது பண்டமாற்று செய்யப் பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பயன் எதுவும் கிடையாது. அதில் அடங்கி இருக்கும் உழைப்பும் மதிக்கப் படுவதில்லை.

பெரும்பாலும் உழைப்பாளர்களாக இருக்கும் நாங்கள், எங்களது உழைப்பை முதலாளி கொடுக்கும் பணத்துக்காக பரிவர்த்தனை செய்து கொள்கிறோம். அவ்வாறு தான், முதலாளித்துவ உற்பத்தியில், எமது உழைப்பு கூட விற்பனைச் சரக்காக மாறுகின்றது.

Saturday, November 22, 2014

சோஷலிச நாடுகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப் படுத்துவோம்

சர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம் 

கியூபாவில் வாழும் சேகுவேராவின் புதல்வியுடனான பேட்டி

கேள்வி : மேற்குலகம் கியூபாவை ஒரு சர்வாதிகார நாடாகப் பார்க்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: மேற்குலகில் இருப்பவர்களுக்கு சர்வாதிகாரம் என்றால் என்னவென்றே தெரியாது. எந்த சர்வாதிகாரியும் தனது மக்களை படிக்க வைக்க மாட்டான். ஏனென்றால், எந்தளவுக்கு அதிகமாகப் படிக்கிறார்களோ, அந்தளவுக்கு சுதந்திரமாக சிந்திப்பார்கள்.

எந்தவொரு சர்வாதிகாரியும் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப் படுத்த மாட்டான்.... எப்படிப் பட்ட சர்வாதிகாரி தனது மக்கள் ஆரோக்கியமாக வாழவும் இலவசமாக கல்வி கற்கவும் விடுவான்? எப்படிப் பட்ட சர்வாதிகாரி பிற உலக மக்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு தனது மக்களுக்கு போதிப்பான்? கியூபாவில் அது தான் நடக்கிறது. 

ஒற்றுமை, மரியாதை, பிற மக்களின் மேல் அன்பு செலுத்துதல், மற்றவர்களின் நன்மைக்கான சுய அர்ப்பணிப்பு, இந்தக் கொள்கைகள் தான் கியூப மக்களுக்கு போதிக்கப் படுகின்றன. அதை எப்படி நீங்கள் சர்வாதிகாரத்துடன் முடிச்சுப் போடலாம்?

முழுமையான பேட்டியை வாசிப்பதற்கு:
‘West has no idea what a dictatorship is’ – Che Guevara’s daughter to RT 


*********

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும் 

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.

செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசத்தில்
15 000 குழந்தைகள் பட்டினியால் மரணம் 

அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

*********

சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பது "கம்யூனிச மூளைச் சலவை"! 

இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகள்
முன்பு சோஷலிச நாடுகளில், ஆரம்ப பாடசாலை மாணவர்கள் "வழிகாட்டிகள்" (Pioneer ) எனும் சாரணர் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதில் சேருவது கட்டாயமில்லை, ஆனால் விரும்பத்தக்கது. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய அதே சாரணர் அமைப்புத் தான். ஆயினும், சோஷலிச அரசமைப்புக்கு ஏற்றவாறு சில வேறுபாடுகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளில், அதைத் திரிபுபடுத்தி "சிறுவர்களை கம்யூனிச கொள்கைக்கு ஏற்றவாறு மூளைச் சலவை செய்கிறார்கள்..." என்று (பொய்ப்) பிரச்சாரம் செய்தார்கள்.

இங்கே, முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் (DDR) இருந்த, சாரணர் அமைப்பின் ஆவணத்தை தருகிறேன். பின்வரும் இளம் வழிகாட்டிகளின் ஒழுக்க விதிகளை (Die Gebote der Jungpioniere), ஒவ்வொரு மாணவனும் ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.


  • இளம் வழிகாட்டிகளான நாங்கள், எமது ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு மீது அன்பு செலுத்துகின்றோம். 
  • நாங்கள் எமது பெற்றோர் மேல் அன்பு செலுத்துகிறோம். 
  • நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம். 
  • நாங்கள் சோவியத் யூனியன், மற்றும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பிள்ளைகளுடன் நட்பைப் பேணுவோம். 
  • நாங்கள் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுவோம். நாங்கள் சீரான, ஒழுக்கமானவர்கள். 
  • நாங்கள் விளையாட்டில் ஈடுபடுவோம். எமது உடலை தூய்மையாக வைத்திருப்போம். 
  • நாங்கள் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவோம். சிறப்பாக பணியாற்ற உதவுவோம். 
  • நாங்கள் பாட்டுப் பாடவும், நடனம் ஆடவும் விளையாடவும் விரும்புகின்றோம். 
  • நாங்கள் நல்ல நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். - நாங்கள் எமது நீல நிற கழுத்துப் பட்டியை பெருமையுடன் அணிந்து கொள்வோம்.

பெரியோர்களே! தாய்மார்களே! மேற்குறிப்பிட்ட ஒழுக்க விதிகள் எல்லாம் "கம்யூனிச மூளைச்சலவை" என்றால், பிள்ளைகளை தறுதலைகளாக திரிய விடுவது தான் முதலாளித்துவ சுதந்திரமா?

******** 

கிழக்கு ஜெர்மன் மாநில அரசில், மீண்டும் ஒரு மார்க்சிஸ்ட் முதல்வர்!

பெர்லின் மதில் வீழ்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு, கிழக்கு ஜெர்மன் மாநிலமான துய்ரிங்கன் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில், Die Linke பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சியான SDP இரண்டாம் இடத்திற்கு வந்திருந்தது.

மாநில அவையில் கூட்டணி அமைப்பதற்கு, இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. பசுமைக் கட்சியுடன் சேர்ந்து அமைக்கப் பட்டுள்ள கூட்டரசாங்கம் "R2G" (Red, Red, Green) என்று அழைக்கப் படுகின்றது. R2G கூட்டரசாங்கத்தின் முதல்வராக டீ லிங்கே கட்சியை சேர்ந்த Bodo Ramelow தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

Bodo Ramelow, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கார்ல் மார்க்ஸ் பொம்மையை பக்கத்தில் வைத்துக் கொண்டு உரையாற்றுவார். தீவிர இடதுசாரிக் கட்சியான PDS, டீ லிங்கே கட்சியில் பெரும்பான்மை பலத்துடன் அங்கம் வகிக்கிறது. அது முன்னர் கிழக்கு ஜெர்மனி சோஷலிச நாடாக இருந்த காலத்தில் ஆட்சி செய்த SED கட்சியின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர், கிழக்கு- மேற்கு ஜெர்மனிகளை சேர்ந்த தீவிர இடதுசாரிகள் ஒன்றிணைந்து, Die Linke எனும் புதிய கட்சி உருவானது. துய்ரிங்கன் மாநில முதல்வராக தெரிவாகி உள்ள Bodo Ramelow மேற்கு ஜெர்மனியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கு ஜெர்மனி, துய்ரிங்கன் மாநில அரசாங்கத்தில் மார்க்சிய Die Linke கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அகதிகளுக்கு ஆதரவான கொள்கையை அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம், துய்ரிங்கன் மாநிலத்தில் வாழும் அகதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப் படுவார்கள். நாடு கடத்தப் படுவது இடைநிறுத்தி வைக்கப் படும். (Neues Deutschland, 20.11.2014)

விசா, வதிவிட அனுமதி எதுவுமில்லாத அகதிகளுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அநாமதேய மருத்துவ காப்புறுதி வழங்கப் படும். ஜெர்மனி முழுவதும் வாழும் அகதிகளால் வெறுக்கப் படும், உணவு முத்திரைகள் இல்லாதொழிக்கப் படும். அதற்குப் பதிலாக, அகதிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பணம் வழங்கப் படும். (ஜெர்மனியில் உள்ள தற்போதைய விதிமுறையில் அகதிகளின் கைகளில் பணம் கொடுப்பதில்லை. அரசு தரும் உணவு முத்திரைகளை, கடையில் கொடுத்து மாற்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பாவிக்க வேண்டும்.)

துய்ரிங்கன் மாநிலத்தின் அகதிக் கொள்கை, முழு ஜெர்மனிக்கும் முன்மாதிரி திட்டமாக முன்மொழிவதற்கான முயற்சிகள் எடுக்கப் படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. 


Monday, November 17, 2014

மக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்!



நீங்கள் நீண்ட காலமாக கட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள்? பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

துருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html)

துருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லியன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் மின்சார விநியோக நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விபரத்தை, வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்பு இங்கே: http://vimeo.com/111586164


Türkiye Elektrik İletim A.Ş. Hacked REDHACK from RedHack on Vimeo.


யார் இந்த ரெட் ஹேக்? துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய - லெனினிச கணனித் துறை நிபுணர்கள். 1997 ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இது வரை காலமும், துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றின் இணையத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட் ஹேக் "ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று அறிவித்துள்ளது. ஆனால், துருக்கி மக்களுக்கு அவர்கள் "நவீன காலத்து ரொபின் ஹூட்கள்".

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!


Sunday, November 16, 2014

மார்க்ஸின் கூற்றை நிரூபிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் பாட்டாளிகள்


"ஆங்கிலம் படித்தால், உலகம் முழுக்க போகலாம்" என்று சொல்லும் பலரை இன்றைக்கும் பார்க்கிறேன். உலகம் முழுவதும் நாடோடிகளாக அலைந்து, அந்நிய நாட்டு அறிவுச் செல்வங்களை கொண்டு வரும் நோக்கில் அப்படிப் பேசுகிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால், உலகம் சுற்ற விரும்பிய வாலிபர்கள், யுவதிகள், ஏதோ ஓர் ஆங்கிலம் பேசும் மேற்கத்திய நாட்டில் தங்கி விட்ட பிறகு, அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான், அவர்கள் சொல்ல வருவது தெளிவாகும். அதாவது, "உலகில் எந்த முதலாளி எனது உழைப்புக்கு அதிக விலை கொடுக்கிறானோ, அவனுக்கு எனது உழைப்பை விற்பதற்கு தயாராக இருக்கிறேன்..." என்பது தான் அவர்கள் சொல்ல விரும்பிய, ஆனால் சொல்லாமல் மறைத்த உண்மை ஆகும்.

சர்வதேச சந்தையில் உழைப்பை விற்பதற்கு, ஆங்கிலப் புலமை உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அவர்களில் யாருக்கும் தாய்நாடும் கிடையாது, தாய்நாட்டுப் பற்றும் கிடையாது. அதைத் தான், கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் கூறினார்: "பாட்டாளி வர்க்க மக்களுக்கு தாய் நாடு கிடையாது!" இன்று புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும், மார்க்ஸின் கூற்று உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"மேலும் தாய்நாட்டையும், தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றஞ் சாட்டப் படுகின்றார்கள். தொழிளார்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் இருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றிற்கும் முதலாக அரசியல் மேலாண்மை பெற்றிருக்க வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளி வர்க்கமும் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. ஆனால், அந்த சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும். பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:
 //அதிக வேலைப்பளு (Burn out) காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும். ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள்.

மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

"ஓர் உழைப்பாளி தனது இயற்கைக்கு மாறான அதிகப் படியான வேலையை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றார். அதனால் அவர் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக துன்பத்தை அனுபவிக்கிறார். சுதந்திரமாக வளர்ச்சி அடைய முடியாமல், அவரது உடல் நலனும், மன நலனும் குன்றுகின்றது.உடலளவில் சோர்வுற்று, மனதளவில் தாழ்த்தப் படுகின்றார். வேலை செய்யும் இடத்தில் ஓர் அந்நியத் தன்மையை உணர்கின்றார்..." - கார்ல் மார்க்ஸ்

Saturday, November 15, 2014

ரோகன விஜேவீர : தமிழர்கள் கற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பாடம்


இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், 1989 நவம்பர் 13, ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, அரச படையினரால் கொல்லப் பட்டார். சிறிலங்கா அரசு, தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத அரசு என்பது மட்டுமே, உலகம் முழுவதும் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அது ஒடுக்கப்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்கத்திற்கும் எதிரான தரகு முதலாளிய அரசு என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

சிறிலங்கா அரசுக்கு சவாலாக விளங்கிய, ஜேவிபி கிளர்ச்சியை அடக்கிய விதமும், அதன் தலைவர் ரோகன விஜேவீரவின் படுகொலையும், இனவாதத்தால் நடக்கவில்லை. அதற்கு, வர்க்க வெறுப்பு காரணமாக இருந்தது.

சிங்கள உயர் சாதி - மேட்டுக்குடி வர்க்கத்தினர், சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரான வர்க்கத் துவேஷத்தை வெளிப்படுத்திய காலங்கள் அவை. அந்தக் காலங்கள் மீண்டும் வராது என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை.

UNP, SLFP ஆகிய இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள், இலங்கை வரலாறு முழுவதும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. அதன் தலைமை எப்போதும், கொவிகம உயர்சாதி மேட்டுக்குடியினர் கைகளில் தான் இருந்து வந்தது.

ரோகன விஜேவீர, தென்னிலங்கையில் பிற்படுத்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அன்று முதல் இன்று வரை, சிங்கள பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினரே ஜேவிபி உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.

1982 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில், ரோகன விஜேவீரவும் போட்டியிட்டார். வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனால் கணிசமான அளவு தமிழ் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். அனேகமாக, அது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தி இருக்க வேண்டும்.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தை தொடர்ந்து ஈழப் போர் வெடித்தது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜேவிபி யை தடை செய்தார். அதனால் தலைமறைவாக இயங்கிய ஜேவிபி, ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

"தமிழர்கள் போரை விரும்பினால், நான் போருக்கு தயாராக இருக்கிறேன்." என்று ஜே.ஆர். பகிரங்கமாக சவால் விட்டார். ஆனால், அதனை சிங்கள மக்களுக்கு எதிராகக் கூறவில்லை. "வடக்கில் புலிகளும், தெற்கில் ஜேவிபியும் ஒன்று சேர்ந்து மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக..." பிரிட்டிஷ் ஊடகமொன்றுக்கு ஜே.ஆர். பேட்டி கொடுத்திருந்தார்.

அதாவது, தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், சிங்களவர்களின் வர்க்கப் போராட்டமும் ஒரே அளவுகோலின் கீழ் ஒடுக்கப் பட வேண்டியவை என்பதை அன்று குறிப்பால் உணர்த்தி இருந்தார். 2009 ஆம் ஆண்டு, புலிகளும், அவர்களுக்கு ஆதரவான தமிழர்களும் எவ்வாறு அழிக்கப் பட்டனர் என்பதை இங்கே விளக்கிக் கூறத் தேவையில்லை. ஆனால், அதற்கு முன்னோடியான சம்பவங்கள், எண்பதுகளின் இறுதிப் பகுதியிலேயே நடந்திருந்தன.

இலங்கையின் வரலாற்றில், ஜேவிபியின் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுள்ளது என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. (ஒரு சிலர் தமது வர்க்க வெறுப்புணர்வு காரணமாக மூடி மறைப்பதுண்டு.) ஆயினும், 1971 ம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி ஆயுதப் போராட்டம், சில வருடங்களுக்கு பின்னர் வட பகுதியில் இயங்கிய ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. 

அன்று, ஜேவிபி இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கிய, குமார் குணரட்ணத்தின் ஒன்று விட்ட சகோதரர், PLOTE இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். மேலும் சில ஜேவிபி உறுப்பினர்கள், புளொட் இயக்கத்தில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். அவர்களின் உதவியால் தான், நிக்கவரட்டியா என்ற சிங்களப் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் வெற்றிகரமாக தாக்கப் பட்டது. ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. 83 கலவரத்திற்கு முன்னர், ஈழ விடுதலைப் போராளிகள் சிங்களப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  

ஆரம்ப காலகட்ட புலிகள் இயக்கத்திலும் ஜேவிபி தொடர்பிருந்ததை மறுக்க முடியாது. புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த ராஜினியின் கணவர் திராணகம ஒரு முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஆவார். ஜேவிபி ஆதரவு சிங்களப் புத்திஜீவிகள் சிலரும் புலிகளை ஆதரித்தார்கள். ஆனால், அந்தக் காலகட்டம் வேறு. அப்போது புலிகளும் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாக காட்டிக் கொண்டது. சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொண்டது. 

ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப் பொது மக்கள், ஜேவிபியை வெறுக்கவில்லை. "எதற்காக ஈழ விடுதலை இயக்கங்கள், ஜேவிபியுடன் சேர்ந்து போராடவில்லை?" என்று பிரச்சாரக் கூட்டங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். தமிழீழம் அடைவதற்கு அது சிறந்த தந்திரோபாயமாக இருக்கும் என்று நம்பினார்கள். பிற்காலத்தில் புலிகள் இயக்கத் தலைமைக்குள் வலதுசாரிகளின் கை ஓங்கியதும், ஜேவிபி உடனான கூட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. 

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் ஜனாதிபதியான பிரேமதாச, இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்தார்.  "ஒரு தலித் ஜனாதிபதியான" பிரேமதாசாவை கொண்டு, சிங்கள தலித் மக்களை அழிப்பதற்கு, சிங்கள ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம். பதவிக்கு வந்த பிரேமதாச, புலிகள் அமைப்பில் இருந்த வலதுசாரி சக்திகளுடன் தந்திரோபாய கூட்டணி அமைத்துக் கொண்டார். அதன் மூலம், இலகுவாக ஜேவிபி இனை அழிக்க முடிந்தது. ஜேவிபி அழிக்கப் பட்டு, இந்தியப் படைகளும் வெளியேற்றப் பட்ட பின்னர், பிரேமதாச அரசும், புலிகளும் மோதிக் கொண்டனர். 

எண்பதுகளின் இறுதியில், தென்னிலங்கையில் ஜேவிபி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப் பட்டனர். இறுதியில் பிடிபட்ட ரோகன விஜெவீரவையும் விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்றனர். 2009 ஆம் ஆண்டு, அதே வரலாறு முள்ளிவாய்க்காலில் திரும்பி வந்தது. நாங்கள், வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று இன்னமும் பிடிவாதமாக இருக்கிறோம்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Friday, November 14, 2014

வட அயர்லாந்தில் விழுத்த முடியாத "பெல்பாஸ்ட் மதில்"!


பெர்லின் மதில் விழுந்த பின்னரான, 25 வருட காலத்தில், உலகில் இன்னமும் பல மதில்கள் விழாமல் அப்படியே உள்ளன. வட அயர்லாந்தில், பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்ட மதில் சுவர் பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்த்தேன். நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான De Muur (சுவர்) என்ற படம் பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள-தமிழ் பிரச்சினை, இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினை, எல்லாம் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை. அதே போன்றது தான், வட அயர்லாந்துப் பிரச்சினையும். எந்த வித்தியாசமும் கிடையாது. இனப்பிரச்சினை எந்தளவு தூரம் மக்களை பிளவு படுத்தியுள்ளது என்பது, அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து ஆங்கிலேயர்களும், கத்தோலிக்க ஐரிஷ் காரர்களும், இன்னமும் இரண்டு தனிதனி சமூகங்களாக பிரிந்து வாழ்வதை, De Muur ஆவணப்படம் எடுத்துக் காட்டுகின்றது. பெல்பாஸ்ட் மதிலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுடன் படம் தொடங்குகிறது. வழிகாட்டி அதை சுட்டிக் காட்டி, "சமாதான மதில்" என்று கூறுகின்றார்.

பெர்லின் மதிலை "அவமானத்தின் சின்னம்" என்று நையாண்டி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிய "சமாதான(?)" மதிலை கண்டுகொள்வதில்லை. பெல்பாஸ்ட் "சமாதான மதில்" ஒரு பக்கம் ஆங்கிலேயர்களையும், மறு பக்கம் ஐரிஷ்காரர்களையும் இன, மத அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றது.

அறுபதுகளில் நடந்த புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களுக்கு இடையிலான கலவரங்களுக்கு பின்னர், பிரிட்டிஷ் இராணுவம் அங்கே நிலை கொண்டது. அதற்குப் பிறகு தான் "சமாதானத்தை நிலைநாட்டும் மதில்" கட்டப் பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்யும், லியாம் எனும் ஐரிஷ்காரர், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். "இங்கே யாரும் தன்னை IRA உறுப்பினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்" என்று கூறுகின்றார். ஏனென்றால், இன்றைக்கும் அதற்காக கைது செய்யப் படும் அபாயம் உள்ளது!

மதில் சுவரை சுற்றிப் பார்க்க வரும் கத்தோலிக்க சிறுவர்கள், மதிலுக்கு அப்பால் உள்ள புரட்டஸ்தாந்து பகுதிக்குள் செல்ல அஞ்சுகிறார்கள். அதே மாதிரி, புரட்டஸ்தாந்து காரர்கள் கத்தோலிக்க பகுதிக்குள் செல்வதில்லை. இரு பகுதி மக்கள் மனதிலும் அச்சம் குடிகொண்டுள்ளது. ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதில்லை. அங்கே சமாதானம் பெயரளவில் மட்டுமே உள்ளது.

மதிலுக்கு அருகே வாழும் ஆங்கிலேய குடும்பம் ஒன்று, வீட்டு முற்றத்திற்கு மேலே கண்ணாடிக் கூண்டு அமைத்துள்ளது. அதைத் தவிர மதிலுக்கு மேலே கம்பி வலை கட்டப் பட்டுள்ளது. ஏனென்றால், மறு பக்கத்தில் இருந்து கற்கள் வீசப் படுகின்றனவாம். "ஒரு நாள், அந்த மதில் இடிக்கப் பட்டால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "இடம்பெயர்ந்து சென்று விடுவோம்" என்று வீட்டுக்கார பெண்மணி பதில் கூறுகின்றார்.

புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களை சேர்ந்த பிள்ளைகள், இன்னமும் தனித்தனி பாடசாலைகளில் படிக்கின்றன. அதனால், மற்ற சமூகத்தின் மீதான வெறுப்புணர்வுடன் வளர்க்கப் படுகின்றன. நண்பர்களாக்கிக் கொள்வதும் அரிதாகவே நடக்கிறது. மதிலுக்கு இரண்டு பக்கமும் சுமார் 50 மீட்டர் தூரத்தில் பிரிந்து வாழும் இரண்டு நண்பிகள், அமெரிக்காவில் தான் சந்தித்துக் கொண்டார்கள்.

டச்சு புரட்டஸ்தாந்து மன்னனின் உதவியுடன், ஆங்கிலேயர்கள் வட அயர்லாந்தை ஆக்கிரமித்தனர். தமது மேலாதிக்க வெறியை ஒவ்வொரு வருடமும் "ஒரேஞ்ச் அணிவகுப்பு" என்ற பெயரில் காட்டுகின்றனர். வேண்டுமென்றே கத்தோலிக்க தெருக்களுக்கு ஊடாக அணி நடையாக செல்லும் பொழுது தான் கலவரங்கள் நடக்கின்றன. கத்தோலிக்க மக்களை ஆத்திரமூட்டி தூண்டி விடும் நோக்கிலேயே, புரட்டஸ்தாந்துகாரர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். இந்தியாவில் இந்துத்துவாவாதிகள், முஸ்லிம்களின் தெருக்களின் ஊடாக, விநாயகர் ஊர்வலம் செல்வதை, வட அயர்லாந்தின் ஒரேஞ்ச் அணிவகுப்பு நினைவுபடுத்துகின்றது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது.

புரட்டஸ்தாந்து காரர்கள், "கலாச்சாரம் பேணுதல் என்ற பெயரில் தமது மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்துகிறார்கள்." என்று ஒரேஞ்ச் அணிவகுப்பு குறித்து ஒரு கத்தோலிக்கர் கூறுகின்றார். இன்றைக்கும், வட அயர்லாந்தின் வசதி வாய்ப்புகளை புரட்டஸ்தாந்து காரர்களே அனுபவிக்கிறார்கள். கத்தோலிக்கர்கள், வேலை வாய்ப்பு உட்பட, எல்லா இடங்களிலும் பாகுபாடு காட்டப் படுகின்றனர். அதனால் ஒரு பின்தங்கிய சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு கத்தோலிக்க ஐரிஷ்காரர்கள், பாலஸ்தீனம் போன்ற உலக விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

ஆவணப் படத்தை இதிலுள்ள இணைப்பில் பார்வையிடலாம்: 
http://www.npo.nl/de-muur/07-11-2014/VARA_101369841


Sunday, November 09, 2014

கூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்


Jared Cohen
இன்று பெர்லின் மதில் வீழ்ந்த 25 வருடப் பூர்த்தியை, கூகிள் இணையத்தளமும் கொண்டாடுகின்றது. இதனை சாதாரண விடயமாக கடந்து சென்று விட முடியாது.

கூகிள் உண்மையிலேயே அரசியல் சார்பற்றது என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த நவம்பர் 7 புரட்சி நாளன்று, லெனின் அல்லது போல்ஷெவிக் புரட்சியாளர்களின் படத்தை தனது தளத்தின் முன்பக்கத்தில் போட்டிருக்க வேண்டும். எல்லாம் தெரிந்த கூகிள், அதை மட்டும் மறந்து போனது என்று ஒரு நொண்டிச் சாட்டு கூற முடியாது.

கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள், அமெரிக்க அரசுடன் சேர்ந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நடத்துவது இன்று வரை தொடர்கின்றது. வணிகத்திற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கும் அப்பாவிகள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்தில் இருப்பவர், கூகிள் தளத்தை வடிவமைக்கும் பிரிவான Google Ideas நிர்வாகி Jared Cohen. அமெரிக்க இராணுவக் கல்லூரியான West Point Military Academy இல், புதிதாக சேர்ந்த வீரர்களுக்கு விரிவுரை ஆற்றுகின்றார். கூகிள் நிறுவனத்தின் மிகப் பெரிய "சிந்தனையாளரான" Jared Cohen, கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் அரசு செயலாளர் கொண்டோலீசா ரைசின் ஆலோசகராக இருந்தார். ( https://wikileaks.org/google-is-not-what-it-seems/)

முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள், அமெரிக்க அடிவருடிகளாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் இன்றைக்கும் இணையத்திலும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சில தமிழ் பேசும் அடிவருடிகளும் அடங்குவார்கள். எல்லாமே பணத்துக்காக. பணம் பத்தும் செய்யும்.

******* 

 இன்றைக்கும் பலர், பெர்லின் மதில் பற்றிய பொய்களை மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு பெர்லினில் இருந்து, மேற்கு பெர்லினுக்கு அகதிகளாக சென்றவர்களைப் பற்றி மட்டுமே, இன்றைக்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்கு பெர்லினில் இருந்து கிழக்கு பெர்லினுக்கு அகதிகளாக சென்றவர்களை பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? 


மேற்கு பெர்லினில் பொலிஸ் அடக்குமுறை காரணமாக, பல அனார்க்கிஸ்ட் ஆர்வலர்கள் பெர்லின் மதில் மேல் ஏறிப் பாய்ந்து, கிழக்கு பெர்லினுக்கு சென்று, அகதித் தஞ்சம் கோரினார்கள். அதுவும் 1988 ஆம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் விழுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எதுவும் இந்த தகவல் குறித்து அக்கறைப் படவில்லை. அனார்க்கிஸ்ட்கள் இடதுசாரிகளாக இருந்தாலும், அவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவலை உறுதிப் படுத்தும் வீடியோ இணைப்பை இங்கே தருகின்றேன்:




ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு :
தொழிலாளர், விவசாயிகளின் சோஷலிச நாடு.
 

கார்ட்டூன் படம் : உலக சோஷலிசக் குடியரசு (ஆங்கில உப தலைப்புகளுடன்) Socialist World Republic - Sozialistische Weltrepublik

Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)

Thursday, November 06, 2014

மொன்ட்ராகொன் : ஸ்பெயினில் ஒரு சோஷலிச மாற்றுப் பொருளாதார அதிசயம்


கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது. 

 பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள். அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம். 

ஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர். மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது. 

 மொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:

 

Monday, November 03, 2014

கார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா விமர்சனம்


ஏற்கனவே, "கத்தி ஒரு கம்யூனிச படம்" என்று மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் பயமுறுத்தி இருந்த படியால், "கம்யூனிச தடுப்பு மருந்து" போட்டுக் கொண்டு கத்தி படத்தை பார்த்து முடித்தேன். தொடக்கம் முதல் முடிவு வரை, அந்தப் படத்தில் மருந்துக்குக் கூட கம்யூனிச வாசனை வரவில்லை. ஒரு காட்சியில், கதாநாயகன் "கம்யூனிசம்" என்ற தலைப்பைக் கொண்ட புத்தகம் வைத்திருப்பான். "கம்யூனிசம் என்றால் என்ன அண்ணா?" என்ற கேள்விக்கு, "நம்ம பசி தீர்ந்ததற்கு அப்புறம் சாப்பிடுகிற இட்லி இன்னொருவருடையது...!" என்று பதில் கூறுவான். அந்த "ஒரு வரி விளக்கம்" மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. இது கம்யூனிசம் பற்றிய இயக்குனர் முருகதாசின் அறிவுக்கெட்டிய புரிதல் என்று நினைக்கிறேன்.

கொக்கோ கோலா, பல்தேசியக் கம்பனிகளை எதிர்ப்பவர்கள் "கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வது மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம். அதைத் தான் முருகதாசும் கத்தி படத்தில் காட்சிப் படுத்தி உள்ளார். வசூலில் சாதனை படைக்கும் ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டும் என்பதற்காக, முருகதாஸ் வித்தியாசமான கதை ஒன்றை தெரிவு செய்துள்ளார். மொத்தத்தில், கத்தி இன்னொரு மசாலா படம் தான். ஆனால், பொதுவாக தமிழ் சினிமாக்கள் தொடாத கதையை தெரிவு செய்திருக்கிறார். தமிழில் இதுவே முதலாவது "கார்ப்பரேட் எதிர்ப்புப் படம்" என்று சொல்ல முடியாது. சூரியா நடித்த மாற்றான் திரைப்படமும், கார்ப்பரேட் கம்பனிகளை வில்லத்தனமாக சித்தரித்த திரைப் படம் தான்.

A. R. முருகதாஸ், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, திரைக்கதை எழுதி இருக்கிறார். கேரளாவில் கொக்கோ கோலா கம்பனிக்கு எதிரான பிளாச்சி மாடா மக்களின் போராட்டம், முழு இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகளவில் பரபரப்பாக பேசப் பட்ட விடயம் ஆகும். ஏற்கனவே ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த மக்கள் போராட்டத்தை, தமிழ் சினிமாவின் வழமையான பாணியான தனி நபர் சாகசங்கள் மூலம் திரிபு படுத்தும் வேலையை தான் முருகதாஸ் செய்திருக்கிறார். இதற்காக, கார்ப்பரேட் கம்பனிகள் அவர் மீது கோபப் படப் போவதில்லை. மாறாக தட்டிக் கொடுத்து பாராட்டி இருப்பார்கள்.

மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் நினைப்பது போல, இந்தக் காலத்தில் கார்பரேட் கம்பனிகளின் அராஜகங்களுக்கு எதிராக பேசுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட சிறு முதலாளிகளும் தான். அது மட்டுமல்லாது, ஜனநாயகத்தை பேண விரும்பும் ஊடகங்கள், சில அரசு சாரா நிறுவனங்கள், இதை விட மிகவும் ஆணித்தரமாக கார்ப்பரேட் எதிர்ப்புக்குரல்களை எழுப்பி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில், அவற்றின் மூலமாக சாதாரண பொது மக்களுக்கும் கார்ப்பரேட் அராஜகங்கள் பற்றிய தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.

மேற்கத்திய நாடுகளில், குறைந்தது எழுபது சதவீத பத்திரிகைகள், சஞ்சிகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் நடக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) மேலைத்தேய அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி வழங்குகின்றன. இது ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும், எவ்வாறு அவர்களால் கார்பரேட் எதிர்ப்பு தகவல்களை தெரிவிக்க முடிகின்றது? ஏனென்றால், முதலாளித்துவம் என்பது அதற்கே உரிய சுதந்திரத் தன்மை கொண்டது. அதாவது, தன்னியல்பாக வளரும் பொருளாதார அமைப்பு முறை ஆகும். அதனால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியாது. மேலும், மேற்கத்திய நாட்டு மக்களின் பொது அறிவு முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களும், பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அடக்குமுறை கொண்டு, நாலாபுறமும் மக்களை அமுக்கினால், ஏதோ ஒரு பக்கத்தால் உடைத்துக் கொண்டு வெளியேறப் பார்ப்பார்கள். அதைத் தான் புரட்சி என்று அழைக்கிறோம். அப்படியான புரட்சிகர சூழ்நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உகந்ததாக மாறி விடும். அதைத் தடுக்க வேண்டுமானால், மூச்சு விடுவதற்கு ஜன்னலை திறந்து விடுவது அவசியம். அதனால் தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இடதுசாரிகளுக்கும், சுதந்திரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். அரசுகள் அவர்களின் கருத்துக்களை அடக்குவதில்லை. கார்ல் மார்க்ஸ் கூறியது போன்று, மக்களை ஒடுக்குபவன் நிம்மதியாக வாழ முடியாது. தன்னால் சுரண்டப் படுபவர்கள், ஒரு நாளைக்கு தன்னைக் கொல்லவும் வருவார்கள் என்று ஒவ்வொரு முதலாளியும் அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதைத் தடுப்பதற்கான ஒரே வழி, குறைந்த பட்சம் தகவல் சுதந்திரத்திற்கு வழி திறந்து விடுவது தான். அது தான், மேற்குலகில் போற்றப் பட்டுக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரம் உருவான பின்னணிக் கதை.

கார்பரேட் பணத்தில் கார்பரேட் எதிர்ப்பு கருத்துக் கூறுபவர்கள், மக்களின் கோபாவேசத்தை தணிப்பதற்கும் உதவுவார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ரொம்ப இலகு. "மக்களே வன்முறையில் இறங்காதீர்கள். அது "பயங்கரவாதமாக" கருதப்படும். கம்யூனிஸ்டுகளை பின்பற்றாதீர்கள். ஏனென்றால், அவர்கள் "கொடுங்கோலர்கள்", ஏற்கனவே "பல இலட்சம் பேரை கொன்று குவித்தவர்கள். நாங்கள் உங்களுக்கு வழி காட்டுகிறோம்... அஹிம்சா வழியில் போராடுங்கள். ஊடகங்களின் கவனத்தை கவரும் நடவடிக்கை எடுங்கள்..."

முன்பெல்லாம் போர்க் குணாம்சம் கொண்ட மக்களிடம், பாராளுமன்ற தேர்தல் முறையில் நம்பிக்கை வைக்குமாறு கூறி வந்தார்கள். "தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால், வருகிற தேர்தல்களில் எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வையுங்கள்." என்று அறிவுரை கூறினார்கள். தற்போது பெரும்பாலான மக்கள் பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். என்ன செய்வது? தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். ஆடுகிற மாட்டை ஆடித் தான் கறக்க வேண்டும். கார்பரேட் நிதியில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடதுசாரி முகமூடி போட்டு மக்களிடம் அனுப்ப வேண்டும். அவை கார்பரேட் எதிர்ப்பு அரசியல் பேசினாலும் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சர்வதேச மூலதனத்தை யாரும் அந்தளவு இலகுவாக அசைத்து விட முடியாது.

கத்தி திரைப்படத்தின் பின்னால் உள்ள அரசியலும் அது தான். படத்தை மிகக் கவனமாகப் பாருங்கள். பிரச்சினைக்கு தீர்வாக கதாநாயகன் என்ன திட்டம் வைத்திருக்கிறான்? சென்னை நகரத்திற்கு தண்ணீர் செல்லும் குழாய்ப் பாதையை தடுக்கிறார்கள். அது ஒரு அஹிம்சைப் போராட்டம். ஊடகங்களின் கவனத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், அது மாதிரியான போராட்டங்களைத் தான் கிறீன் பீஸ் (Green Peace) அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. அவர்களின் எதிரிகளும் கார்பரேட் நிறுவனங்கள் தான். அவர்களின் அறிக்கைகளை படித்தால், கத்தி திரைப்படம் கூறுவதை விட, பல மடங்கு அதிகமான கார்பரேட் இரகசியங்கள் தெரிய வரும். ஒரு தடவை, "உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குபவர்கள் யார்?" என்று ஷெல் நிறுவன அதிபரிடம் கேட்டார்கள். "எங்கள் நிறுவனத்தைப் பற்றி எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்." என்று அதற்குப் பதில் சொன்னார்.

ஆனால்... ஆனால்... கிறீன் பீஸ் இயக்கத்தைக் கண்டு, நமது தமிழ் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் "ஐயோ கம்யூனிஸ்டுகள்" என்று விழுந்தடித்து ஓடவில்லையே? அது ஏனுங்கோ? மேலை நாட்டவர்கள் என்பதால், உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ? கிறீன் பீஸ் இயக்க தொண்டர்களில், குறைந்தது அரைவாசிப் பேராவது இடதுசாரி சூழலியவாதிகள். எனக்குத் தெரிந்த வரையில், தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகள் பலர் அதனை ஆதரிக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்கு சவாலாக விளங்கும், கிறீன் பீஸ் போன்ற அமைப்புகளே தைரியமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்கிறோம். கத்தி என்ன பெரிய அரசியல் பேசிக் கிழித்து விடப் போகிறது? கத்தி திரைப் படத்தை விட, அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட "சிரியானா"(Syriana) மிகவும் அழுத்தமாக கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை பதிவு செய்துள்ளது. மன்னிக்கவும், தயவுசெய்து அதையெல்லாம் "கம்யூனிச படம்" என்று சொல்லி எங்கள் மண்டைகளை காய வைக்காதீர்கள்.

அது சரி, கொக்கோ கோலா, மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பவர்கள், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டீர்களோ? பல் தேசியக் கம்பனிகளின் வரவால் அழிந்து போன உள்ளூர் கம்பனிகள் எத்தனை? எத்தனை சிறு வணிகர்கள் நஷ்டப் பட்டு வியாபாரத்தை கை விட்டார்கள்? சிறிய அளவில் வியாபாரம் செய்தாலே, தன்னை பெரிய முதலாளியாக நினைத்துக் கொள்ளும் பலர் உண்டு. அவர்களும் தான் பல்தேசியக் கம்பனிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் மாதிரி அந்த "முதலாளிகளும்" தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கத்தி திரைப்படம் அந்த உண்மையை சொல்லவில்லை.

கத்தி திரைப்படத்தை, லைக்கா கம்பனி தயாரித்தது. அது கோடிக் கணக்கான இலாபம் ஈட்டும் ஒரு "கார்பரேட் நிறுவனம்" என்று சிலர் வாதாடலாம். உண்மையில், லைக்கா கம்பனி, பல்தேசியக் கம்பனிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. ஒரு சராசரி பல்தேசியக் கம்பனியின் வருமானம், இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் இந்திய அரசையே தாங்கள் நினைக்கும் படியாக சட்டம் இயற்ற வைக்க முடியும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. உலகவங்கி, IMF, அமெரிக்க அரசு என்பன, கார்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுப்பதை செய்யும் சேவையாளர்கள் தான்.

இயக்குனர் முருகதாசுக்கும், கத்தி படத்தை தயாரித்தவர்களுக்கும், கம்யூனிசம் பற்றித் தெரியாது என்பது ஒரு புறமிருக்கட்டும். அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். கத்தி படத்தில் காட்டுவது மாதிரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதில்லை. அந்தக் காட்சி மிகவும் அபத்தமானது.

உலக யதார்த்தம், சினிமாவுக்கு முற்றிலும் முரணானது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி, பொறாமை அதிகம். ஒன்றையொன்று காட்டிக் கொடுப்பது, போட்டுக் கொடுப்பது, எதிராளிகளை போட்டுத் தள்ளுவது.... இப்படி நிறைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன. சுருக்கமாக சொன்னால், சட்டவிரோத மாபியாக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள், கார்ப்பரேட் உலகில் இரகசியமாக நடக்கின்றன. சின்ன மீன்களை பெரிய மீன்கள் பிடித்து சாப்பிடும். ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும். வலியது பிழைக்கும், மற்றவை அழிந்து போகும். அது தான் முதலாளித்துவத்தின் இயற்கை நியதி.

"தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு." அந்தப் பழமொழி, வர்த்தக உலகின் நிதர்சனம். அண்மையில், பிரிட்டிஷ் உளவுத்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, பெல்ஜியத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தை உளவு பார்த்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தொழில் நுட்ப இரகசியங்களை திருடுவது என்று சொல்வார்கள். இன்று இணையம் மூலமாக இலகுவாக நடக்கும் சமாச்சாரமாகி விட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

உலகில் மிக அதிகமான பல்தேசியக் கம்பனிகளின் தலைமை அலுவலகங்கள், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உள்ளன. அதன் அர்த்தம், மேற்கத்திய நாடுகள் "அண்ணன், தம்பி மாதிரி" ஒற்றுமையாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கிறார்கள் என்பதல்ல. திரை மறைவில் எத்தனையோ கழுத்தறுப்புகள், குழி பறிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும், சொந்த இனத்தவரின் கார்ப்பரேட் நிறுவனங்களை, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் விழுங்கி ஏப்பம் விடுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட, 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் காணாமல் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை?

நல்ல வேளையாக, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அரசு என்ற நிறுவனம் பெயருக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சும்மா தேசியம், தேசியக் கொடி, தேசிய இராணுவம், தேசிய விலங்கு என்றெல்லாம் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பல்தேசியக் கம்பனிகள் அவற்றை உள்ளூர வெறுத்தாலும், சட்டத்திற்கு அடி பணிந்து நடப்பது போன்று காட்டிக் கொள்கின்றன. இல்லாவிட்டால், ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனியாக இராணுவம் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கி விடும். ஜூராசிக் பார்க் மாதிரி, ஒன்றையொன்று பிடித்து விழுங்கி விடும். பூரண சுதந்திரம் கொண்ட சந்தை அமைப்பும், சுதந்திரமான முதலாளித்துவமும் உலகில் இருக்க முடியாது.


இது தொடர்பான முன்னைய பதிவு:
கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!

Sunday, November 02, 2014

பூர்கினா பாசோ: மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்!

"மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்." - தோமஸ் சங்கரா


பூர்கினா பாசோவில் மக்கள் எழுச்சி. ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு சென்று பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். ஆப்பிரிக்க நாடான பூர்கினா பாசோவில், இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி பற்றி, பெரும்பாலான ஊடகங்கள் எதுவும் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏனென்றால், அங்கே கடந்த 27 வருடங்களுகளாக அதிகாரத்தில் இருந்தவர், ஒரு மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்.

முன்னாள் கம்யூனிச ஜனாதிபதி தோமஸ் சங்கராவை படுகொலை செய்து விட்டு, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் தான், இந்நாள் சர்வாதிகாரி Blaise Compaore. பிரான்ஸ் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கடந்த முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.

பிளேஸ் கொம்பாரே, தனது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பிய பொழுது, பொறுத்தது போதும் என்ற மனநிலையில் இருந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். இலட்சக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். பூர்கினா பாசொவை ஒரு சோஷலிச நாடாக ஆட்சி செய்த தோமஸ் சங்கராவின் உருவப் படங்கள், பேரணிகளில் பரவலாகக் காணப் பட்டன. புரட்சியாளர்களை மக்கள் மறப்பதில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தலைவன் தோமஸ் சங்கராவை படுகொலை செய்தவர்களுக்கு, இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

தலைநகரில் கூடிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. அதனால் கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, பிளேஸ் கொம்பாரேயின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். அதனால் சீற்றம் கொண்ட மக்கள் பாராளுமன்றத்தை முற்றாக எரித்து நாசமாக்கியுள்ளனர். அந்தச் சம்மபவம் நடந்த நேரம், அங்கே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமூகமளித்திருக்கவில்லை.

அதே நேரம், பிற அரசு அலுவலகங்களும் தாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. தற்போதைய ஆட்சியாளர் சர்வாதிகாரி பிளேஸ் கொம்பாரேயின் சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன.அதே நேரம், அதற்கு அருகில் இருந்த கடாபியின் சிலையை சேதப் படுத்தாமல் விட்டு வைத்தார்கள். பூர்கினா பாசோ மக்கள், தமது ஏகாதிபத்திய அடிவருடியான கொம்பாரேயை எந்தளவு தூரம் வெறுத்தார்கள் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியை எந்தளவு விரும்பினார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகும்.

பிளேஸ் கொம்பாரே நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்குப் பின்னர், அவரது பதவிக் கால நீடிப்பு செல்லுபடியாகாது என்று, "பாராளுமன்றம்" (அப்படி ஒன்று இருக்கிறதா?) அறிவித்தமை தான் உச்சகட்ட நகைச்சுவை. தற்போது இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தலைநகர் உகாடுகுவில் உள்ள அமெரிக்க, பிரெஞ்சு தூதுவர்கள் எதிர்கால ஆட்சியாளர் தமக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றே எத்ரிபார்ப்பார்கள். அதனால், இராணுவ ஆட்சி நடந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், பூர்கினா பாசோ மக்கள் அதற்கு அடிபணிந்து போகும் நிலையில் இல்லை. தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.

"நீங்கள் தனி மனிதர்களான புரட்சியாளர்களை கொலை செய்யலாம். ஆனால் உங்களால் சித்தாந்தங்களை கொல்ல முடியாது." - தோமஸ் சங்கரா ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிய புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஆவி, 27 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ளது. பூர்கினா பாசோவில் தோமஸ் சங்கரா விதைத்த புரட்சி விதைகள், இன்று மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. தலைநகர் உகாடுகுவில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் காணப் பட்ட ஒரு வாசகம்: "தோமஸ் சங்கரா, உனது புதல்வர்களைப் பார்! நாங்கள் உனது போராட்டத்தை முன்னெடுக்கிறோம்."

மார்க்சியப் புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதமும், அவரது ஆட்சியின் கீழான நான்காண்டு சோஷலிச பொற்காலம் பற்றிய ஏக்கமும், பூர்கினா பாசோ இளந் தலைமுறையினரை போராடத் தூண்டிய காரணங்களாக இருந்துள்ளன. "இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசம் செத்து விட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் முதலாளித்துவத்தை ஆராதிக்கிறார்கள்..." எனும் அறியாமை இருளில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை: 
Spirit of ‘Africa’s Che Guevara’ found in Burkina Faso uprising  http://america.aljazeera.com/articles/2014/10/31/burkina-faso-explainer.html

பூர்கினா பாசோவில், புரட்சியை பாதுகாக்கும் மக்கள் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக சங்கரிஸ்ட் கட்சி ஆராய்ந்து வருகின்றது. ஆபிரிக்காவின் 21 ம் நூற்றாண்டின் இளம் மார்க்சிஸ்டுகள், மறைந்த கம்யூனிச தலைவர் தோமஸ் சங்கராவை பின்பற்றி, தங்களை "சங்கிரிஸ்டுகள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் "பொருளாதார விடுதலைப் போராளிகள்" (EFF) கட்சியினரும் தங்களை சங்கிரிஸ்டுகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில், தற்போது இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக பரவி வருகிறது. உதாரணத்திற்கு, கொங்கோவில் பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுவோர் தம்மை, "லுமும்பிஸ்ட்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பெயர் எப்படி இருந்தாலும், சித்தாந்தம் எதுவென்பது தான் முக்கியம். தென் ஆப்பிரிக்காவில் EFF கட்சியினர், ஒவ்வொரு தடவையும் தோமஸ் சங்கரா மீது உறுதிமொழி எடுக்கின்றனர். அதே நேரம், உறுப்பினர்களுக்கு மார்க்சிய லெனினிச வகுப்புகளை நடத்துகிறார்கள். 

பூர்கினா பாசோ நாட்டை சேர்ந்த சங்கிரிஸ்ட்கள் பற்றி எமக்கு தெரிந்தவை மிகச் சொற்பமே. சில நேரம், பிளேஸ் கொம்பாரேயின் 27 வருட கால சர்வாதிகார ஆட்சி காரணமாக அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கலாம். இனி வருங்காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கை என்ன என்று தெரிந்து விடும்.

"அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே!"


இது தொடர்பான முன்னைய பதிவு: