கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயம், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான இலட்சியம் அல்ல. 19 ம் நூற்றாண்டில், தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட முதலாளித்துவத்தின் தீமைகள், பலரை மாற்று வழி குறித்து சிந்திக்கத் தூண்டியது.
பல ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவ மத நம்பிக்கையையும், தனியுடைமை உரிமையையும் கைவிட விரும்பாத சோஷலிஸ்ட் சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிறிஸ்தவ - சோஷலிஸ்டுகள், கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் முதலாளித்துவத்தின் தீமைகளை வெறுத்தாலும், தனியுடைமையை ஆதரித்தார்கள்.
அதே நேரம், தொழிலாளர்கள், நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில், முதலாளிகள் அற்ற பொருள் உற்பத்தியை தெரிவு செய்தனர். அதுவே கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம்.
ஸ்பெயினில், பாஸ்க் மொழி பேசும் மக்கள் வாழும் மாகாணத்தில், மொன்ட்ராகொன் (Mondragon) எனும் இடத்தில், ஒரு கத்தோலிக்க பாதிரியார் உள்ளூர் மக்களின் உதவியுடன் கூட்டுறவு தொழிற்சாலைகளை அமைத்தார். அவற்றின் தொழிலாளர்கள் தான், நிர்வாகப் பொறுப்பிலும் இருந்தனர்.
மொன்ட்ராகொன் கூட்டுறவு தொழிற்சாலைகள் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு தொழிற்சாலையாக ஆரம்பித்த மொன்ட்ராகொன் கூட்டுறவு இயக்கம், இன்று பல தொழிற்சாலைகளை கட்டி, நிர்வகித்து வருகின்றது. அவற்றில் முதலாளிகள் யாரும் கிடையாது. தொழிலாளர்களே நிர்வாகிகளாகவும் உள்ளனர். இலாபத்தை தமக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். கூட்டுறவு இயக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்ததுடன் நில்லாது, தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பத்தினரினதும் நலன்களையும் கவனித்து வருகின்றது.
மொன்றாகன் கூட்டுறவு இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இந்த ஆவணப் படத்தை பார்க்கவும்:
No comments:
Post a Comment