"மக்கள் எதிர்த்து நின்றால், ஏகாதிபத்தியம் நடு நடுங்கும்." - தோமஸ் சங்கரா
பூர்கினா பாசோவில் மக்கள் எழுச்சி. ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு சென்று பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். ஆப்பிரிக்க நாடான பூர்கினா பாசோவில், இப்போது நடந்து கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி பற்றி, பெரும்பாலான ஊடகங்கள் எதுவும் கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏனென்றால், அங்கே கடந்த 27 வருடங்களுகளாக அதிகாரத்தில் இருந்தவர், ஒரு மேற்குலக நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்.
முன்னாள் கம்யூனிச ஜனாதிபதி தோமஸ் சங்கராவை படுகொலை செய்து விட்டு, இராணுவ சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் தான், இந்நாள் சர்வாதிகாரி Blaise Compaore. பிரான்ஸ் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கடந்த முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.
பிளேஸ் கொம்பாரே, தனது பதவிக் காலத்தை நீடிக்க விரும்பிய பொழுது, பொறுத்தது போதும் என்ற மனநிலையில் இருந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். இலட்சக் கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். பூர்கினா பாசொவை ஒரு சோஷலிச நாடாக ஆட்சி செய்த தோமஸ் சங்கராவின் உருவப் படங்கள், பேரணிகளில் பரவலாகக் காணப் பட்டன. புரட்சியாளர்களை மக்கள் மறப்பதில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் தலைவன் தோமஸ் சங்கராவை படுகொலை செய்தவர்களுக்கு, இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.
தலைநகரில் கூடிய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக, ஹெலிகாப்டரில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. அதனால் கலைந்து ஓடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றத்திற்குள் புகுந்தனர். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி, பிளேஸ் கொம்பாரேயின் பதவிக் காலத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருந்தனர். அதனால் சீற்றம் கொண்ட மக்கள் பாராளுமன்றத்தை முற்றாக எரித்து நாசமாக்கியுள்ளனர். அந்தச் சம்மபவம் நடந்த நேரம், அங்கே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சமூகமளித்திருக்கவில்லை.
அதே நேரம், பிற அரசு அலுவலகங்களும் தாக்கப் பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டது. தற்போதைய ஆட்சியாளர் சர்வாதிகாரி பிளேஸ் கொம்பாரேயின் சிலைகள் உடைத்து நொறுக்கப் பட்டுள்ளன.அதே நேரம், அதற்கு அருகில் இருந்த கடாபியின் சிலையை சேதப் படுத்தாமல் விட்டு வைத்தார்கள். பூர்கினா பாசோ மக்கள், தமது ஏகாதிபத்திய அடிவருடியான கொம்பாரேயை எந்தளவு தூரம் வெறுத்தார்கள் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான கடாபியை எந்தளவு விரும்பினார்கள் என்பதும் இதிலிருந்து புலனாகும்.
பிளேஸ் கொம்பாரே நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அதற்குப் பின்னர், அவரது பதவிக் கால நீடிப்பு செல்லுபடியாகாது என்று, "பாராளுமன்றம்" (அப்படி ஒன்று இருக்கிறதா?) அறிவித்தமை தான் உச்சகட்ட நகைச்சுவை. தற்போது இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தலைநகர் உகாடுகுவில் உள்ள அமெரிக்க, பிரெஞ்சு தூதுவர்கள் எதிர்கால ஆட்சியாளர் தமக்கேற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்றே எத்ரிபார்ப்பார்கள். அதனால், இராணுவ ஆட்சி நடந்தாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், பூர்கினா பாசோ மக்கள் அதற்கு அடிபணிந்து போகும் நிலையில் இல்லை. தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.
"நீங்கள் தனி மனிதர்களான புரட்சியாளர்களை கொலை செய்யலாம். ஆனால் உங்களால் சித்தாந்தங்களை கொல்ல முடியாது." - தோமஸ் சங்கரா
ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிய புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஆவி, 27 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ளது. பூர்கினா பாசோவில் தோமஸ் சங்கரா விதைத்த புரட்சி விதைகள், இன்று மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது. தலைநகர் உகாடுகுவில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் காணப் பட்ட ஒரு வாசகம்:
"தோமஸ் சங்கரா, உனது புதல்வர்களைப் பார்! நாங்கள் உனது போராட்டத்தை முன்னெடுக்கிறோம்."
மார்க்சியப் புரட்சியாளர் தோமஸ் சங்கராவின் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதமும், அவரது ஆட்சியின் கீழான நான்காண்டு சோஷலிச பொற்காலம் பற்றிய ஏக்கமும், பூர்கினா பாசோ இளந் தலைமுறையினரை போராடத் தூண்டிய காரணங்களாக இருந்துள்ளன.
"இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிசம் செத்து விட்டது. இன்றைய இளந்தலைமுறையினர் முதலாளித்துவத்தை ஆராதிக்கிறார்கள்..." எனும் அறியாமை இருளில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை:
Spirit of ‘Africa’s Che Guevara’ found in Burkina Faso uprising http://america.aljazeera.com/articles/2014/10/31/burkina-faso-explainer.html
பூர்கினா பாசோவில், புரட்சியை பாதுகாக்கும் மக்கள் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக சங்கரிஸ்ட் கட்சி ஆராய்ந்து வருகின்றது.
ஆபிரிக்காவின் 21 ம் நூற்றாண்டின் இளம் மார்க்சிஸ்டுகள், மறைந்த கம்யூனிச தலைவர் தோமஸ் சங்கராவை பின்பற்றி, தங்களை "சங்கிரிஸ்டுகள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் "பொருளாதார விடுதலைப் போராளிகள்" (EFF) கட்சியினரும் தங்களை சங்கிரிஸ்டுகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.
ஆப்பிரிக்க நாடுகளில், தற்போது இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக பரவி வருகிறது. உதாரணத்திற்கு, கொங்கோவில் பட்ரிஸ் லுமும்பாவை பின்பற்றுவோர் தம்மை, "லுமும்பிஸ்ட்" என்று அழைத்துக் கொள்கின்றனர். பெயர் எப்படி இருந்தாலும், சித்தாந்தம் எதுவென்பது தான் முக்கியம். தென் ஆப்பிரிக்காவில் EFF கட்சியினர், ஒவ்வொரு தடவையும் தோமஸ் சங்கரா மீது உறுதிமொழி எடுக்கின்றனர். அதே நேரம், உறுப்பினர்களுக்கு மார்க்சிய லெனினிச வகுப்புகளை நடத்துகிறார்கள்.
பூர்கினா பாசோ நாட்டை சேர்ந்த சங்கிரிஸ்ட்கள் பற்றி எமக்கு தெரிந்தவை மிகச் சொற்பமே. சில நேரம், பிளேஸ் கொம்பாரேயின் 27 வருட கால சர்வாதிகார ஆட்சி காரணமாக அரசியல் பேசாமல் ஒதுங்கி இருந்திருக்கலாம். இனி வருங்காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கை என்ன என்று தெரிந்து விடும்.
"அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே!"
இது தொடர்பான முன்னைய பதிவு:
No comments:
Post a Comment