Friday, March 07, 2014

கிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாணங்கள்

யாழ் குடாநாடு, கிரீமியா குடாநாடு : இரண்டுக்கும் இடையில் இனப் பிரச்சினை தொடர்பாக நிறைய ஒற்றுமைகள் காணப் பட்ட போதிலும், நமது வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், உக்ரைனிய பேரினவாதிகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது ஏன்? 

உக்ரைன் பிரச்சினை குறித்து, எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் உங்களுக்கு சொல்லாத தகவல் இது. உக்ரைனில் நெருக்கடி நிலைமை தோன்றியதற்கு மூல காரணம், ஜனாதிபதி யனுகோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்டது அல்ல. ரஷ்ய சிறுபான்மையினத்தை பாதுகாக்கும் சட்டம் நீக்கப் பட்டது தான், இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். 2012 ம் ஆண்டு, உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப் படுத்தும் சட்டம் கொண்டு வரப் பட்டது. அது கடந்த இருபதாண்டு கால மொழிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைந்தது.

தற்போது ஆட்சியமைத்திருக்கும் உக்ரைனிய பேரினவாதிகளின் அரசாங்கம், அந்த சட்டத்தை வாபஸ் பெற்றது. நாடு முழுவதும், உக்ரைன் மொழி கட்டாயமாக்கப் பட்டது. இது ரஷ்ய மொழி பேசும் மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா பிரதேசத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதற்குப் பிறகு தான், கிரீமியாவில் ரஷ்ய சிறுபான்மையின மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தமது பிரதேசத்தை உக்ரைனிய பேரினவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதக் குழுக்களை அமைத்துள்ளனர்.

வருகிற மார்ச் 16 ம் தேதி, கிரீமியா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கிரீமியா உக்ரைனுடன் தொடர்ந்திருக்க வேண்டுமா, அல்லது ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்று அந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த இடத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி வரும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை அவதானிக்கலாம். தமிழீழத்திற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரும் தமிழ் தேசியவாதிகள், கிரீமியாவின் நிலைப்பாட்டை எதிர்ப்பது ஏன்? மேலும், ஈழத் தமிழர் பிரச்சினையும், கிரீமியா ரஷ்யர் பிரச்சினையும், ஒரே இனப் பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள் என்பதை உணரத் தவறி விடுகின்றனர். அதற்கு அவர்களுக்கு கிடைத்த தகவல் போதாமை காரணம் என்று சொல்லித் தப்ப முடியாது.

உக்ரைனில், உக்ரைனிய மொழி மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்டமை, இலங்கையில் சிங்கள மொழி கட்டாயமாக்கப் பட்ட காலத்துடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. அன்று சிங்களம் மட்டும் சட்டத்தின் விளைவாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ் குடாநட்டில் (கிரீமியாவும் ஒரு குடாநாடு தான் என்பது ஒரு அதிசயத் தக்க ஒற்றுமை.) கிளர்ச்சி ஏற்பட்டது. கிரீமியாவில் நடந்ததைப் போன்று, யாழ்ப்பாணத்திலும் மொழிப் பிரச்சினை காரணமாக ஆயுதக் குழுக்கள் உருவாகின. விடுதலைப் புலிகள் இயக்கம் அதில் ஒன்று. ஆரம்பத்தில் இந்தியா அந்தக் குழுக்களுக்கு, ஆயுதமும், பயிற்சியும் வழங்கி வளர்த்து வந்தது. 

இன்று கிரீமியா விவகாரத்தில் ரஷ்யா நடந்து கொள்வதைப் போன்று, அன்று ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்டது. கிரீமியா ரஷ்யர்கள் போன்று, யாழ்ப்பாணத் தமிழர்களும் இந்தியா படையெடுத்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். பேரினவாதிகளும், அதை எதிர்க்கும் குறுந் தேசியவாதிகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர். ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கும், கிரீமிய ரஷ்ய தேசியவாதிகளுக்கும் இடையில், இந்த விஷயத்தில் நிறைய ஒற்றுமைகள் காணப் படுகின்றன. ஆனால், இரண்டினதும் புவியியல் அமைவிடம் மட்டுமே வித்தியாசம்.



உக்ரைனில், ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா குடாநாடு, உக்ரைனில் இருந்து பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கிரீமியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் 16 ம் தேதி, பொது மக்களின் வாக்கெடுப்புக்கு விடப் படும். அநேகமாக, கிரீமியாவில் அறுபது சதவீதமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழ்வதால், அவர்களும் ரஷ்யாவுடன் சேர வேண்டுமென்று தான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இதற்கிடையே, நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு "சட்ட விரோதமானது" என்று, உக்ரைனிய இடைக்கால அரசின் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், கிரீமியா தொடர்பான வாக்கெடுப்பு, உக்ரைன் முழுவதும் நடத்தப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு, பொது வாக்கெடுப்பு உக்ரைன் நாடு முழுவதும் நடத்தப் பட்டால், பெரும்பான்மை உக்ரைனியர்கள் பிரிவினைக்கு எதிராகத் தான் வாக்களிப்பார்கள்.

இந்த இடத்தில், கிரீமியா பிரச்சினைக்கும், தமிழீழ பிரச்சினைக்கும் இடையிலான ஒற்றுமையை எடுத்துப் பார்க்கலாம். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்பது, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும். அவ்வாறு ஒரு வாக்கெடுப்பு நடத்தப் பட்டாலும், ஸ்ரீலங்கா அரசின் எதிர்வினை, தற்போது உக்ரைனிய பிரதமர் கூறியது போன்றிருக்கும். அதாவது, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு, இலங்கை நாடு முழுவதும் நடத்தப் பட வேண்டும் என்று அரசு பிடிவாதமாக இருக்கும். அவ்வாறான பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை சிங்கள மக்கள் (உக்ரைனிய மக்கள் போன்று) தமிழீழ பிரிவினைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

மேலும், கிரீமியா பிராந்தியத்தில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அங்கே வேற்றின மக்களும் வாழ்கின்றனர். கிரீமிய சனத்தொகையில் மூவின மக்களின் விகிதாசாரம் பின்வருமாறு: ரஷ்யர்கள் 58%, உக்ரைனியர்கள் 24% , (முஸ்லிம்) டாட்டார்கள் 12%. ரஷ்யர்கள் கிரீமியா பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அங்கு வாழும் உக்ரைனியர்களும், டாட்டார்களும் எதிர்த்து வாக்களிப்பார்கள். அவர்கள் எப்போதும் உக்ரைனுடன் சேர்ந்திருக்கவே விரும்புகின்றனர்.

தமிழீழத்திலும், கிட்டத்தட்ட இதே மாதிரியான, மூவின மக்களின் பிரதிநிதித்துவத்தை காணலாம். அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் குறைந்தது 24% சனத்தொகையை கொண்டுள்ளனர். (கிரீமிய டாட்டார்கள் போன்று, ஈழத்து முஸ்லிம்களும் தனியான இனமாகவே கருதப் படுகின்றனர்.) ஆகையினால், தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்களும், சிங்களவர்களும், பிரிவினைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஸ்ரீலங்காவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது.

இந்த இடத்தில், சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். உக்ரைன் நாட்டின் அரசியல் நிர்ணய சட்ட மூலம், அது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் இருந்து தொடர்ந்திருக்கிறது. முன்னைய சோவியத் ஒன்றியத்தில், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தன. ஒன்று: எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டம். மற்றது: குறிப்பிட்ட ஒரு குடியரசுக்கு மட்டுமே உரிய தனியான சட்டம்.

சோவியத் அரசமைப்பு சட்டத்தின் படி, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும், விரும்பினால் பிரிந்து செல்லும் அதிகாரம் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான், 1991 ல் உக்ரைன் தனி நாடாக பிரிந்து சென்றது. அன்றைய சோவியத் ஒன்றியத்தினுள், பல்வேறு பட்ட குடியரசுகளும், சுயாட்சிப் பிரதேசங்களும் இருந்தன. அதே மாதிரி, ஒவ்வொரு குடியரசின் உள்ளேயும் இருந்தன. அதாவது, உக்ரைன் பல சுயாட்சிப் பிரதேசங்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பைக் கொண்டிருந்தது.

கிரீமியாவுக்கு பல விசேட சலுகைகள் வழங்கப் பட்டிருந்தன. உக்ரைன் சமஷ்டி அரசமைப்பு சட்டத்தின் படி, ஒரு சுயாட்சிப் பிரதேசம் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டுள்ளது. தற்போது கிரீமியாவும், அந்த சட்ட மூலத்தை பாவித்து தான் பிரிந்து செல்ல விரும்புகிறது. ஆகவே, அது சட்டப் படி செல்லுபடியாகும். ஆனால், சில நிபந்தனைகள் உள்ளன. சட்டப் படி பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, கிரீமியாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர்களின் முடிவை, உக்ரைனில் உள்ள மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்பது ஒரு முக்கியமான நிபந்தனை. இந்த இடத்தில் பிரச்சினை உண்டாகலாம். ஆகவே, கிரீமியாவின் பிரிவினை முழுமையும் சட்டவிரோதமானது அல்ல. அனால், உக்ரைனிய அரசு விட்டுக் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், கிரீமியா பிரிவினை சட்டவிரோதமானது என்று கூறி வருவது நகைப்புக்கிடமானது. ஒபாமாவுக்கும் மற்ற தலைவர்களுக்கும், உக்ரைனிய சட்டம் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் உலக மக்களை முட்டாளாக்கும் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனிய நிலவரத்தை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கையில் ஒருக்காலும் அது போன்ற சட்டங்கள் இருக்கவில்லை. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதற்கு, இலங்கை என்றைக்குமே ஒரு சோஷலிச நாடாக இருக்கவில்லை. ஆகையினால், தமிழீழ பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக, இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை உதவிக்கு அழைக்க முடியாது. முதலில் இலங்கையின் சட்டத்தை மாற்ற வேண்டும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு தேவை என்று கோரும் வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், சட்டப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதில்லை. மேலும், அவர்கள் யாரும் கிரீமியா பிரிவினையை ஆதரிப்பதாகவும் நான் கேள்விப்படவில்லை. கிரீமியா பிரச்சினையில், உக்ரைனிய பேரினவாத அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகின்றது. உண்மையில், தமிழீழம், அல்லது தமிழ்த் தேசியம் கூட, அவர்களுக்கு முக்கியம் இல்லாமல் இருக்கலாம். அதை விட, அமெரிக்கா, மேற்குலகிற்கு ஆதரவான அரசியலை முன்னெடுப்பது முக்கியமாகத் தெரியலாம். அதனால் தான், அவர்களை நாங்கள் "வலதுசாரி தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்க வேண்டியுள்ளது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே, அதனை வெளிப்படையாக சொல்லிக் கொள்கின்றனர்.

தமிழீழம் அமைந்தால், அது இந்தியாவுக்கு விசுவாசமான நாடாக இருக்கும் என்று, நெடுமாறன், வைகோ போன்ற தமிழீழ ஆதரவாளர்கள் இந்திய அரசுடன் பேரம் பேசினார்கள். காஷ்மீர், அசாம் தனி நாடாவதை ஆதரிக்கும் தமிழீழ ஆதரவாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கொசோவோ பிரச்சினையில், மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். கொசோவோ போன்று தமிழீழமும் உருவாக வேண்டும் என்று, மேற்கத்திய அரசுக்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். அதே நேரம், பாலஸ்தீன பிரச்சினையில், இஸ்ரேலை ஆதரித்தார்கள். ரஷ்யா படையெடுப்பின் விளைவாக, ஜோர்ஜியாவில் அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரண்டு தனி நாடுகள் உருவானதை கடுமையாக எதிர்த்தார்கள். இப்படி நிறைய உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆகவே, கிரீமியா பிரச்சினையில் மட்டுமல்ல, மேற்குலகம் எதிர்க்கும் எந்தவொரு தனி நாட்டுப் பிரச்சினையிலும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை நாம் ஊகித்து அறிந்து கொள்ள முடியும்.


உக்ரைன் நாட்டில், ரஷ்ய சிறுபான்மையினரின் இனப் பிரச்சினை பற்றிய மேலதிக தகவல்களுக்கு: 
Putin Crimea Grab Shows Trail of Warning Signs West Ignored; http://www.bloomberg.com/news/2014-03-02/putin-grab-for-crimea-shows-trail-of-warning-signs-west-ignored.html

Canceled language law in Ukraine sparks concern among Russian and EU diplomats; http://rt.com/news/minority-language-law-ukraine-035/

உக்ரைன் பற்றிய முன்னைய பதிவுகள்:

2 comments:

  1. IT IS A VERY GOOOD ARTICLE . I Support tamil eelam. But taking bold decision like russia here in india or tamilnadu politician no one backbone they only talk no action.

    I have to pray god only to give freedom to our brother n.
    viyasan

    ReplyDelete
  2. I Support the above article contens. Here in tamilnadu no one have back bone they can talk many hours for their self upliftment.

    United organisation (U.N.O)only take mandate in eelam and make them a separate country then only they live happily from srilinaka and our indian/tamilnadu politician.
    viyasan

    ReplyDelete