Wednesday, March 05, 2014

சோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்!

ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. "சூரியன் மறையாத சாம்ராஜ்யம்" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும்.

ஐரோப்பா முழுவதையும் வெற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், "கிரீமியா போர்" என்று அழைக்கப்பட்ட அந்தப் போரிலும், ரஷ்யர்களே வென்றார்கள். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில், ரஷ்யா மீது படையெடுப்பது, ஹிட்லரின் மிகப் பெரிய போர் நடவடிக்கையாக இருந்தது. ரஷ்யாவை கைப்பற்றி விட்டால், உலகம் முழுவதையும் ஆள்வதற்கு சமமானது என்று நம்பினான். ஏன் எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யா மீது படையெடுக்க விரும்புகின்றன ?

உலகிலேயே அதிகளவு எண்ணை வளம் ரஷ்யாவில் தான் உள்ளது. தற்போது இருப்பில் உள்ள ரஷ்ய எண்ணையின் அளவு, சவூதி அரேபியாவை விட அதிகம். பெட்ரோல் மட்டுமல்ல, உலகில் முக்கியமான இன்னொரு எரிபொருளான எரிவாயு கூட தாராளமாக கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான எரிவாயுவை கையிருப்பில் கொண்டுள்ளது. அதை விட, தங்கம், வெள்ளி,இரும்பு, மங்கனீஸ், மற்றும் பல கனிம வளங்கள் அளவிட முடியாத அளவு கொட்டிக் கிடக்கின்றன. மக்கட்தொகையும் அதிகமென்பதால், உழைப்புச் சக்திக்கு தேவையான தொழிலாளர்களுக்கும் குறைவில்லை. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும், பல வேறுபட்ட இனங்கள், கலாச்சாரங்களை கொண்ட நாடு.

இயற்கை வளம் நிறைந்த ரஷ்யாவை கைப்பற்றுவதே, காலங்காலமாக படையெடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஹிட்லரும் அந்தக் காரணத்திற்காகவே, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமிக்க எண்ணினான். ஹிட்லரின் நாஜிப் படைகள், லெனின்கிராட் நகரை சுற்றி வளைத்தன. பல மாதக் கணக்காக, அங்கு வாழ்ந்த மக்களை பட்டினி போட்டன. ஆனால், ரஷ்யர்கள் சரணடையவில்லை. ஜெர்மன் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதற்குப் பின்னர், நாஸிப் படைகள் ஸ்டாலின்கிராட்டில் படுதோல்வி அடைந்து பின்வாங்கின. அதுவே நாஸிஸத்தின் வீழ்ச்சியாக அமைந்தது.

ரஷ்யாவுக்கு ஆதரவான இந்த ஆவணப் படத்தை, அமெரிக்க அரசு தயாரித்திருந்தது என்பது, இன்று பலருக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியன ஓரணியில் நின்று, நாஜி ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. ரஷ்யாவின் போர் பற்றி, அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த ஆவணப் படத்தை (The Battle of Russia) தயாரித்துள்ளார்கள்.

இன்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓரணியில் நின்று, ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. தற்போது உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசு ஆட்சியமைத்துள்ளது. எல்லோரும் "உக்ரைனிய நெருக்கடி" பற்றியே பேசுகின்றனர். ஆனால், மேற்குலகின் இலக்கு உக்ரைன் அல்ல. ரஷ்யாவை ஆக்கிரமிப்பதே அவர்களின் இறுதியான குறிக்கோள். இந்த உண்மை, இன்றைய ரஷ்ய அரசுக்கும் தெரியும். அதனால் தான், உக்ரைன் விவகாரத்தில் விட்டுக் கொடாத போக்கை கடைப்பிடிக்கின்றது. ஏனென்றால், உக்ரைனை விட்டுக் கொடுத்தால், அடுத்தது ரஷ்யா தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டாளிகள். ஜெர்மனி எதிரி. இன்று, அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாளிகள். ரஷ்யா எதிரி. அரசியல் கூட்டு இடம்மாறி இருந்தாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் குறிக்கோள் மட்டும் மாறவில்லை.



The Battle Of Russia Full Movie

No comments:

Post a Comment