Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.





3 comments:

  1. சிந்திக்க வைக்கும் கட்டுரை!

    ReplyDelete
  2. மிகத்தெளிவான சொற்கோர்வைகளைக் கொண்டு கட்டுரைகளை ஆக்கும் தாங்கள்...... எந்தக் கட்டுரையிலாவது போதிய தொல் பொருள் ஆதாரங்களையோ....ஓர் ”நடு நிலையான தொல் பொருள் ஆய்வாளரின்” ஆதாரங்களையோ கோடிட்டு காட்டியிருக்கிறீர்களா....என்றால் அதற்கு இல்லை என்பதே உண்மையான பதிலாக அமையும்(ஆனால் உங்கள் கட்டுரைகளின் இணைய நீட்சிகளை வழங்கியிருக்கிறீர்கள்)..........அவ்வாறு இருக்கும் போது....... தமிழின் பழமையை பற்றி தாங்கள் கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயமானது??????????????

    ReplyDelete