Monday, May 30, 2011

தோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா

"ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களது தட்டுகளைப் பாருங்கள். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, தானியங்களில் இருக்கிறது : ஏகாதிபத்தியம்!" - தோமஸ் சங்கரா


தோமஸ் சங்கரா, பிரான்சின் காலனியான பூர்கினா பாசோவின் விடுதலைக்காக போராடி, அதன் முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார். மார்க்சிய- லெனினிச வாதியான சங்கரா, சேகுவேரா போன்றதொரு சர்வதேசியவாதி. கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். பூர்கினா பாசோவில் சோஷலிச பொருளாதாரத்தை, பொதுவுடைமை தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த புரட்சியாளர். 

ஆப்பிரிக்காவின் சேகுவேரா என்று அழைக்கப் பட்ட, பூர்கினா பாசோ மக்களின் மனங்கவர்ந்த ஜனாதிபதி தோமஸ் சங்கரா, 15 அக்டோபர் 1987, பிரெஞ்சு ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப் பட்டார். அவரை நினைவுபடுத்தும் சின்னங்கள், பொருட்கள் யாவும் அழிக்கப் பட்டன.

1982 ம் ஆண்டு, இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தோமஸ் சங்கரா செய்த முதல் வேலை, அதன் காலனிய கால பெயரை மாற்றி, பூர்கினா பாசோ (நியாயவான்களின் நாடு) என்று பெயரிட்டது தான். தொடர்ந்து, "மார்க்சிய - லெனினிசம்" தேசத்தை வழிநடத்தும் சித்தாந்தமாக இருக்கும் என்று அறிவித்தார். சர்வதேச மட்டத்தில் சோஷலிச நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். 

அதே நேரம், முன்னாள் காலனிய எஜமான் பிரான்சுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். அந்நிய நாடுகளிடம் கடனுதவி கேட்டு கையேந்தாமல், உள்நாட்டு வளங்களை கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார். விவசாயம் செய்பவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டதால், பஞ்சம், பசி ஒழிக்கப் பட்டது.

சங்கராவின் விவசாய சீர்திருத்தங்களை பற்றி, ஐ.நா. அதிகாரிகளே தமது அறிக்கைகளில் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். பூர்கினா பாசோ ஒரு சோஷலிச நாடாக இருந்த நான்கு வருடங்களில், பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தது. இன்று முதலாளித்துவ பொருளாதாரம் அதனை ஆப்பிரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றாக்கியுள்ளது. 

அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியதன் மூலம், எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தது. அதைத் தவிர, அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டு திட்டம், இலவச மருத்துவ வசதி போன்றவற்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டில் இருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார். பெண்களும் படித்து உத்தியோகம் பார்க்க ஊக்குவித்தார். 

நாடு முழுவதும், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி அமைக்கப்பட்டது. இலஞ்ச ஊழல் குற்றம் புரிந்த அரசு அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னர் தண்டிக்கப் பட்டனர். கமிட்டிகளுக்குள் நிலவிய தனிநபர் குரோதங்கள், புரட்சியை பின்னடைவுக்குள்ளாக்கின.

பூர்கினா பாசொவின் முன்னாள் காலனியாதிக்க எஜமான் பிரான்சுடனான, தொடர்புகளை முற்றாக துண்டித்துக் கொண்டார். பொதுவாக மூன்றாமுலக நாடுகளின் பலம் மிக்க தலைவர் கூட, செய்யத் துணியாத செயல் அது. சேகுவேராவின் இருபதாண்டு நினைவு தினமே, தாமஸ் சங்கராவின் கடைசி உரையாக அமைந்து விட்டது. 15 October 1987, ஒரு நேர்மையான புரட்சியாளர், சதிகாரர்களால் படுகொலை செய்யப்பட்டார். (Italian revelations on the assassination of Thomas Sankara)

 "முன்னாள் காலனிய எஜமானர்கள், ஆப்பிரிக்க நாடுகளை தமது நிதி மூலதன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்குடன் தான், கடனுதவிகளை வழங்குகின்றனர்" என்று சங்கரா கூறி வந்தார். "ஆப்பிரிக்க நாடுகள் ஒன்று சேர்ந்து, கடனுதவியை மறுக்க வேண்டும். பூர்கினா பாசோ மட்டும் அதைச் செய்தால், அடுத்த வருடம் நான் இங்கே இருக்க மாட்டேன்..." என்று 1987 ம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் மகாநாட்டில் உரையாற்றினார். அதுவே அவரது இறுதி உரையாக அமைந்தது.

நவ காலனிய மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கத் துணிந்த தோமஸ் சங்கராவின் கதையை முடிப்பதற்கு, பிரான்ஸ் இரகசிய சதித் திட்டம் தீட்டி இருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர். பூர்சினா பாசோ இராணுவத்தில் இருந்த கைக்கூலிகளை கொண்டு ஒரு சதிப்புரட்சி நடத்தப் பட்டது. சங்கரா தனது பதவிக்காலத்தில், பெருமளவு சொத்துக்களை குவித்து வைத்திருந்ததாக எதிரிகள் அவதூறு செய்து வந்தனர். ஆனால், தோமஸ் சங்கரா கொலை செய்யப் பட்ட நேரம், ஒரு சல்லிக் காசு கூட இருக்கவில்லை. அவரிடம் இருந்த சொத்துக்கள் ஒரு பழைய சைக்கிளும், சில புத்தகங்களும் மட்டுமே.

சங்கராவின் புரட்சியை அழித்த சதிகாரர்களின் ஆட்சி, நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரபுலக மக்கள் எழுச்சியை கண்ட பூர்கினா பாசோ மக்கள், இன்று அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகின்றனர். இராணுவ வீரர்கள் கூட கிளர்ச்சி செய்துள்ளனர். இன்றைய பூர்கினா பாசோ புரட்சியானது, சங்கராவின் மார்க்சியத்தை மீட்பதற்கானது அல்ல. இருப்பினும் சர்வதேச ஊடகங்கள் பூர்கினாபாசோ மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்து வருகின்றன. தோழர் தாமஸ் சங்கராவின் வாழ்வையும், புரட்சியையும் ஆய்வு செய்யும் ஆவணப் படம் இது.



ஆவணப் படத்தை முழுமையாக பார்ப்பதற்கு:
Thomas Sankara :The Upright Man https://www.youtube.com/watch?v=J5USbA701SI




Sunday, May 29, 2011

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாமா)

சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்
(எழுதியவர் : அஸ்வத்தாமா)
---------------------------------------------

இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:

“மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.

இது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர்களும் இருப்பர்.

அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.

அதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.

இதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

ஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது. நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson) கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:

“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.

வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், எல்லா மனிதர்களும் சமமானோராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அமெரிக்கக் குடியரசின் கம்பீரமான பிரகடனம், அடுத்து வந்த எண்பது ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு அமெரிக்கர்களை அடிமைகளாக இருக்கும் படி அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் அனுமதித்ததனாற், பொருளற்றதாகியது. அமெரிக்கப் புரட்சியிலிருந்தும், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் துவங்கிய பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான திட்டம் மூன்று முக்கிய தன்மைகளை உள்ளடக்கியிருந்தது.

1. அரிஸ்டாட்டில் துவங்கி ரூஸோ வரையானவர்களின் மிக முற்போக்குத் தன்மை வாய்ந்த அரசியற் சிந்தனைகளை விட ஜனநாயகம் குறித்த கொள்கை அளவில் மிகக் குறைவான சுருங்கிய பார்வையே அது கொண்டிருந்தது.
2. துவக்க காலத்திலிருந்தே அது பொருளாதாரம் என்பதை ஜனநாயகத்திலிருந்து தனிமைப்படுத்திச், சமத்துவம் என்பதற்கு வெறும் சட்டபூர்வமான விளக்கமளித்துப் மக்களிற் பெரும் பகுதியினரை வாக்களிப்பதிலிருந்து எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தது. (“மக்களாகிய நாம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனச் சொற்றொடர் ஒரு வெற்றுச் சொற்றொடராகும். அது பெண்களையோ வெள்ளையரல்லாத பூர்வ குடியினரையோ ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட அடிமைகளையோ குறிப்பதல்ல).
3. பூர்ஷ்வா அமைப்பு எப்போதுமே தன் சாதனைகளைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் கூறியுள்ளது.

எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலம் வரையிலும், பூர்ஷ்வா ஜனநாயகம் முழுமை அடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் ஒஸ்ற்ரியாவிலும் ஏகாதிபத்திய முடியாட்சிகள், பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அமைப்பபைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய, அரசுகளே இருந்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் பொல்ஷ்விக் புரட்சி ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்ற்ரியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பாரம்பரிய அரசுகள், நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடுவதற்கு மாறாக, ஃபாசிசத்திற்கும் ராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன.

மன்னர்களும் ஃபாசிஸவாதிகளும் ராணுவ சர்வாதிகாரிகளும் தராளவாத ஜனநாயகவாதிகளும் மிகத் தீவிரமாக தங்களுக்கிடையே கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தபோது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. அதுவும் அவர்களின் முதுகுக்கு பின்னாலேயே ஆளும் அமைப்புகளுக்கு எதிராக எழுந்தவற்றில் நான்கு வகையான சவால்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு தீர்மானகரமானவையாக விளங்கின.

1. சொத்துடமையாளர்களின் ஆட்சிக்கெதிரான தொழிலாளர், விவசாய இயக்கங்கள்.

2.உலகின் பிற பகுதிகளில் ஐரோப்பிய கொலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள்.

3.ஆணாதிக்க சக்திக்கும் முன்னுரிமைக்கும் எதிராகப் பெண்களின் சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்குமான போராட்டங்கள்.

4.அடிமைத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக வெள்ளை இனத்தவர்களின் குடியேற்ற நாடுகளான வட அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் மையம் கொண்ட உலக அளவிலான போராட்டங்கள்.

ரஷ்யாவின் பொல்ஷ்விக் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அலையலையாக உருவான புரட்சிகள் குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஜேர்மனியில் மிகத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப் பட்ட பிறகு, நாஜிகளின் மூன்றாம் ரைஹ் (Third Reich) உருவான எல்லையற்ற வெற்றிக் களிப்பில் அதுவே “வரலாற்றின் முடிவு” என் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1990இல் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வெற்றிவாகை சூடிய பின்னணியில், மீண்டுமொரு முறை, “வரலாற்றின் முடிவு” என்பது அறிவிக்கப்பட்டது. [மேலதிக தகவல்களுக்கு ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” (The End of History and the Last Man) என்ற நூலை வாசிக்கவும். சீனப் புரட்சிக்குப் பிறகு, 1950களிலும் அல்ஜீரியா முதல் இந்தோசீனம் வரை பல்வேறு இடங்களில் புரட்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்களின் “மூலதனத்தின் பொற்காலம்” துவங்கிவிட்டது என்ற கூற்றும் புகழ்மிக்க அமெரிக்க சமூகவியலாளர்களின் “தத்துவத்தின் முடிவு” என்கிற ஆய்வும் சேர்ந்து மூலதனத்தின் முன்னால் எல்லாத் தத்துவங்களும் பின்வாங்கிவிட்டன என்ற பொருளில் உறுதியான எதிர்ப் புரட்சிப் போக்குக்களாக இருந்ததைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் மூலதனம் பிரதானமாக்கப்பட்டு அதனடிப்படையிலே அனைத்தும் வியாக்கியானம் செய்யப்பட்டன.

சர்வதேசச் சமூகம், சோவியத் யூனியனின் சிதைவை 1990கள் நினைவுபடுத்துவது போல, அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்துவதில்லை. வெற்றியடைந்த புரட்சிகளைப் பற்றி அதற்கு நினைவில் நிற்பது அவற்றின் வெற்றிகளல்ல, மாறாக அவை சந்தித்த தோல்விகளே. திறந்த ஒரு புண்ணைப் போல, அவற்றை நினைவில் வைத்திருக்கச் செய்வதில் ஆதிக்கச் சக்திகள் சோர்வதில்லை. எனினும், ஒருவர் வெற்றிகளிடமிருந்தல்லாமல் தோல்விகளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார் என்பது முக்கியமானதாகும். முதலில் பொல்ஷ்விக் புரட்சியின் வடிவத்தைப் பின்பற்ற முயன்ற சீனா பிறகு தன்னுடைய சொந்த வழியின் மூலமே வெற்றியடைந்தது. கியூபா சீனாவைப் பின்பற்றாதது போக, லத்தீன் அமெரிக்காவின் கணக்கற்ற புரட்சிக்கான முயற்சிகளில் கியூபா பின்பற்றப்படவில்லை. வெற்றிகரமான புரட்சிகளில் கஷ்டமான ஒரு விஷயம் ஏதெனில் அவற்றைத் திரும்பவும் அதேபோல் நடத்த முடியாது என்பதுதான்.

“புரட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென வெளிப்படுகின்றன. 1917ன் அக்டோபர் புரட்சியை ஏப்ரலில் கணித்த லெனினின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் கஸ்ட்ரோவின் கெரில்லாப்படை கியூபாவின் கடற்கரைக்கு வந்து பிறகு ஹவானா நகருக்குள் நுழைந்தன. சீனா அல்லது வியட்நாமைப் போல பல பத்தாண்டுகளில் நிகழ்ந்த புரட்சிகளிலும் இதே விதி பொருந்துகிறது. ஒரு நீண்ட அடைகாக்கும் காலத்திற்குப்பின் அளவுநிலை மாற்றம் குணரிதியாக மாற்றமடையும் போது, ஆளும் வர்க்கங்களின் கோட்டைகள் மிக வேகமாகச் சரிகின்றன என்பதே அந்த விதி. புரட்சிகளாக நடைபெறாத அதே சமயம், மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களாக அவை நடைபெறும் போதும் அவற்றைக் கணிக்க முடிவதில்லை 1950களில் தத்துவத்தின் முடிவு என்ற கோட்பாட்டை உரத்துக் கூவிய அமெரிக்க அறிவுஜீவிகளாகல் ஒரு பத்து வருடக் காலத்திற்குள்ளாகவே, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் சந்தித்திராத வகையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தால் தங்கள் நாடு சூழப்படப் போகிறது என்பதை அறிய முடியவில்லை” எனப் புரட்சிகளின் வரலாற்றுப் போக்கை விளக்குகிறார் அய்ஜாஸ் அஹமட் (Aijaz Ahamad).

இவ்வாறு மாற்றமடைந்த புரட்சிகள் பற்றிய படிப்பினைகளைப் எதிர்ப்புரட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களுமே புரட்சியாளர்களை விடச் சரியாக உள்வாங்கிக்கொண்டனர். மூலதனத்தை அதிலும் குறிப்பாக நிதி மூலதனத்தை மையப்படுத்தியதாக உலக ஒழுங்கு மாறியதோடு சுரண்டலின் வடிவங்களும் ஒடுக்குமுறையின் தோற்றப்பாடுகளும் மாறத் தொடங்கின.

அரசு முற்றிலும் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாகிற போது, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதாக உயரே நின்று கொண்டு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற கட்டமைப்புதான் அரசு என்ற அதன் தோற்றம் கலைகிறது. நிதி மூலதன ஆதிக்கக் காலகட்டத்திற்கே உரிய ஆட்சிகளின் எதேச்சாதிகாரத் தன்மையைக் காணுகிறபோது அரசுக்கு எவ்வித சமுதாய அங்கீகாரமும் தேவைப்படவில்லை என்று சிலர் கருதக்கூடும் சமுதாய அங்கீகாரம் என்பதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசு செயல்படுகிறது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மிகமிக மோசமான ஒரு எதேச்சாதிகார அரசுக்குக் கூட ―ஒரு பாசிச ஆட்சிக்குக் கூட― என்ன தான் அது பயங்கர அடக்குமுறைகளைப் பரவலாகப் பயன்படுத்தினாலும், அதற்குப் பிறகும் சமுதாய அங்கீகாரம் தேவைப்படுகிறது.

எதேச்சாதிகாரமும் அடக்குமுறைகளும் ஒருபோதும் சமுதாய அங்கீகாரத்துக்கு மாற்றாக முடியாது. அந்த அங்கீராத்தைப் பெற இப்படிப்பட்ட ஆட்சிகள் வேறு வழியைப் பயன்படுத்த முயல்கின்றன. சமுதாய மொத்தத்திற்கும் ஒரு பொது எதிரியை உருவாக்குவதுதான் அந்த வழி. அந்தப் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபட்டிருப்பதாகக் கதை கிளப்பி விடப்படும். பெருமை அல்லது தேச கவுரவம் நிலைநாட்டப்படுதல் எனும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் பின்னே ஒரு பொது நோக்கத்திற்காகச் சமுதாயம் ஒன்று திரட்டப்படும். அல்லது தேசத்திற்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றைச் சரிப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத் திட்டம் ஒன்று துவக்கப்படும். வேறு சொற்களிற் கூறுவதென்றால், பொருளாதார ஆளுமைக்களத்தில் இழந்த சமுதாய அங்கீகாரத்தை வேறு வகையில் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யப்படுகிறது.

அதற்காக, அடிப்படையில் ஏகாதிபத்தியத்தன்மை வாய்ந்த, இனவாத, அந்நியப் பகைமை கொண்ட ஒரு தேசம் என்பது கட்டப்படுகிறது. அந்தத் தேசம் என்ற கட்டுமானத்தைச் சுற்றி ஒரு பொதுக்கருத்து உருவாக்கப் படுகிறது. அதற்கு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே நிதி ஆதாய நோக்கங்கள் தாம் சமுதாயத்தின் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அல்லது அந்தப்பொது நோக்கத்தை எட்டுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாக அரசு இருப்பதும் பரவலாக பயங்கர அடக்குமுறைகள் கட்டவிழ்ந்து விடப்படுவதும் நியாயப் படுத்தப்படுகின்றன. அந்தப் பொதுத் திட்டத்தின் பெயரால் யுத்தம், ஆக்கிரமிப்பு, நாடுகளை வளைத்து இணைத்துக் கொள்வது ஆகிய அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன. எனினும், இவை யாவும் உருவகப்படுத்துவது அரசின் சமுதாய அங்கீகாரத்துக்கான ஒரு மாற்றுத் தேடலைத்தான். இந்த மாற்றுத் தேடல் நிதி மூலதனத்தோடு பின்ணிப்பிணைந்த அரசைத் தக்கவைக்கவும் சுரண்டலைத் தொடரும் வழியாகவும் இருந்தது.

நவீன (முதலாளித்துவக்) காலத்திற்கு முந்தைய அனைத்துச் சமுதாயங்களும் விவசாயச் சமூகங்களாகவே இருந்தன. அவற்றின் உற்பத்தி குறிப்பான பல்வேறு முறைகளதும் நியாயங்களினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. மாறாக, முதலாளித்துவச் சந்தைச் சமுதாயத்தில் மூலதனத்திலிருந்து அதிகப்படியான லாபம் பெறுவதே பிரதான விதியாக அமைந்துவிட்டது. நவீன முதலாளித்துவ விவசாயம் பெரிய அளவிலான பணக்காரக் குடும்ப விவசாயமாயிருப்பினும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களும் மூன்றாம் உலக விவசாயிகளின் உற்பத்தியின் மீது வலுவான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் அதற்கான பச்சை விளக்குக் காட்டப்பட்டது. அத் தாக்குதலுக்குப் பலர் பலியாகின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர், மனிதக் குலத்தின் அரைவாசியான மூன்றாம் உலகின் விவசாயிகளே ஆவர்.
உலக வர்த்தக அமைப்பின் சந்தைப் போட்டிக் கோட்பாட்டை நியாயப்படுத்த ஒரு பெரிய வாதம் முன்வைக்கப்படுகிறது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட வளர்ச்சி, நவீனமான வளமிக்க நகர் சார்ந்த தொழிலமைப்புகளின் துணையோடு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது. அவ்வாறே, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் அத்தகைய வளர்ச்சி ஏற்படாமல் போகுமா என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.

மேற்கூறிய முன்மாதிரியை மூன்றாம் உலக நாடுகளில் மீள ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளை இவ் வாதம் கணக்கில் எடுக்கத் தவறுகிறது. முதலாவதாக, நூற்றைம்பது ஆண்டுகளாக விருத்திபெற்ற ஐரோப்பிய மாதிரி என்பது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வல்ல தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கியது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தின் கீழ், மிகவும் குறைவான வாய்ப்புடைய சந்தைகளில், தங்களின் தொழில் உற்பத்திகள் போட்டியிட, மூன்றாம் உலகின் புதிய தொழில் அமைப்புகள் இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றாக வேண்டும். இரண்டாவதாக இந்த நூற்றைம்பதாண்டுக் கால இடைவெளியில் ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைந்தது. வளர்முக நாடுகளில் அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

உலக வர்த்தக அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பரிந்துரைக்கும் ‘முதலாளித்துவ சந்தையைத் தாராளமயமாக்குவதன் மூலம் நடைபெறும் நவீனமயமாக்கம்’ என்ற ஆலோசனை இரண்டு கூறுகளைக் கொண்டது. இனி, வளர்ந்த நாடுகளைச் சார்ந்த, போட்டியிடும் திறமுடைய நவீன விவசாயிகள் உலக அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில், வளரும் நாடுகளின் சில பகுதிகளில் இத்தகையோர் சிலர் உருவாகும் வாய்ப்பு இருக்கலாம். அதே வேளை, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளின் முன்னூறு கோடி விவசாயிகளிற் பெரும் பகுதியினர் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு ஏழ்மைக்குட் தள்ளப்படுவர். இறுதியாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர். அவ்வாறு பலியாவோரைச், சுற்றுச் சூழல் உள்ளிட்டுப், பொருளாதாரரீதியாக ஏழ்மையில் உழற்றுவதே தாராளமயக் கொள்கைகளின் நோக்கமாக உள்ளது. மேற்சொன்ன இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து செல்கின்றன.

அடிப்படையில் அரசுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக்கூடிய ஏதாகவும் இருக்கலாம். அதன் மேற் பழியைப் போட்டுவிட்டுத் தங்கள் மூலதனக் கொள்ளையையும் சுரண்டலையும் எவ்விதத் தடைகளுமற்றுத் தொடர அவர்கட்கு முடிகிறது. கொலனித்துவமும், நவகொலனித்துவமும் அன்று இலகுவாகக் கண்டுகொள்ளப் பட்டன, எதிர்க்கப் பட்டன. ஆனால், இன்று, உலகமயமாதல் நிகழச்சிநிரலின் கீழ், தேசிய அரசுகளினதும் அரசாங்கங்களினதும் வரவேற்புடனும் மக்களின் ஆதரவுடனும், ‘மனிதாபிமான ஏகாதிபத்தியம்’ தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. ஜனநாயகத் தன்மையோடு கூடிய சுதந்திரம் பூர்ஷ்வாக்கள் கூறும் சந்தையின் கற்பனையான சுதந்திரம் அல்ல: மாறாகத் தீவிரமான உண்மையான, சமத்துவத்திற்கான ஒடுக்கப் பட்டவர்களின் போராட்டத்தைப் பற்றியதாகும். இது சோசலிசம், தேச விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களோடு இணையாமல் நீடிக்க முடியாது.
(நன்றி: செம்பதாகை)

Saturday, May 21, 2011

மூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி

மே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். "எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்", "நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல." என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.

துனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. "Democracia Real Ya" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. "மக்கள் ஜனநாயகம்" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா? போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா? கைது செய்யப்பட்ட நபர்களை, "இயக்கம்" கைவிட்டு விடுமா?

மாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.







Manifesto (English)

We are ordinary people. We are like you: people, who get up every morning to study, work or find a job, people who have family and friends. People, who work hard every day to provide a better future for those around us.

Some of us consider ourselves progressive, others conservative. Some of us are believers, some not. Some of us have clearly defined ideologies, others are apolitical, but we are all concerned and angry about the political, economic, and social outlook which we see around us: corruption among politicians, businessmen, bankers, leaving us helpless, without a voice.

This situation has become normal, a daily suffering, without hope. But if we join forces, we can change it. It’s time to change things, time to build a better society together.

Therefore, we strongly argue that:
The priorities of any advanced society must be equality, progress, solidarity, freedom of culture, sustainability and development, welfare and people’s happiness.
These are inalienable truths that we should abide by in our society: the right to housing, employment, culture, health, education, political participation, free personal development, and consumer rights for a healthy and happy life.
The current status of our government and economic system does not take care of these rights, and in many ways is an obstacle to human progress.

Democracy belongs to the people (demos = people, krátos = government) which means that government is made of every one of us. However, in Spain most of the political class does not even listen to us. Politicians should be bringing our voice to the institutions, facilitating the political participation of citizens through direct channels that provide the greatest benefit to the wider society, not to get rich and prosper at our expense, attending only to the dictatorship of major economic powers and holding them in power through a bipartidism headed by the immovable acronym PP & PSOE.

Lust for power and its accumulation in only a few; create inequality, tension and injustice, which leads to violence, which we reject. The obsolete and unnatural economic model fuels the social machinery in a growing spiral that consumes itself by enriching a few and sends into poverty the rest. Until the collapse.
The will and purpose of the current system is the accumulation of money, not regarding efficiency and the welfare of society. Wasting resources, destroying the planet, creating unemployment and unhappy consumers.
Citizens are the gears of a machine designed to enrich a minority which does not regard our needs. We are anonymous, but without us none of this would exist, because we move the world.

If as a society we learn to not trust our future to an abstract economy, which never returns benefits for the most, we can eliminate the abuse that we are all suffering.
We need an ethical revolution. Instead of placing money above human beings, we shall put it back to our service. We are people, not products. I am not a product of what I buy, why I buy and who I buy from.

For all of the above, I am outraged.
I think I can change it.
I think I can help.
I know that together we can.I think I can help.
I know that together we can.

Friday, May 20, 2011

அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்

["இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா", தொடர் - 3]
(பிரேசில், பகுதி: இரண்டு)

பிரேசிலில், அடிமைத்தளைகளை அறுத்தெறிந்த கறுப்பின அடிமைகள், ஒரு சுதந்திர தேசத்தை நிர்மாணித்திருந்தனர். தென் அமெரிக்காவில், அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள். அமெரிக்க கண்டத்தில் ஆப்பிரிக்க அடிமைகள் காலந்தோறும் கட்டுண்டு கிடந்ததாக கருதுவது தவறு. வெள்ளையின கனவான்களின் பெருந்தன்மையே அடிமைத் தளையை தகர்த்தாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது. விடுதலைக்காக இரத்தம் சிந்திய போராட்டம் நடத்திய கறுப்பின அடிமைகளைப் பற்றிய ஆவணங்கள் குறைவு. அதனால் ஆயுதமேந்திய அடிமைகளின் எழுச்சி குறித்து அறிந்தவர்கள் குறைவு. தென் அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் போராடி, தமக்கென சுய நிர்ணய உரிமை கொண்ட தனி நாடு அமைத்துக் கொண்டனர். Palmares என்று அழைக்கப்பட்ட கறுப்பின அடிமைகளின் தேசம், ஒன்றிரண்டு வருடங்களல்ல சுமார் 90 ஆண்டுகளாக (1605 - 1694) தனது சுதந்திரத்தை நிலை நாட்டியது. பிரேசிலின் வட கிழக்கு கரையோரம் உள்ள Alagoas மாநிலத்தில் அந்த நாடு (Palmares) அமைந்திருந்தது. அண்ணளவாக போர்த்துக்கல் அளவு நிலப்பரப்பு, ஒரு கறுப்பின ராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற கறுப்பினப் படையணிகள் காலனியாதிக்கவாதிகளுக்கு சவாலாக விளங்கின.
பிரேசிலில் அடிமை வியாபாரிகளும், கரும்பு ஆலை அதிபர்களும், அனைத்து ஆப்பிரிக்கர்களையும் கால்நடைகளாக கருதிய காலமது. அங்கோலாவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு வந்த அடிமைகளில் பலர், நாகரீகமடைந்த "இம்பன்களா" வகுப்பை சேர்ந்தவர்கள், என்று அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இம்பங்களா என்பது இந்தியாவில் ஷத்திரிய குலத்திற்கு ஒப்பானது. அங்கோலா ராஜதானியை ஸ்தாபித்த பெருமைக்குரியவர்கள். காலம் செய்த கோலம். போர்த்துக்கேயரின் சூழ்ச்சிக்கு இரையாகி இராஜ்ஜியத்தை இழந்தார்கள். அடிமைகளாக பிரேசில் கொண்டு செல்லப்பட்டார்கள். சொந்த நாட்டில் வீர புருஷர்களாக வலம் வந்தவர்கள், கடல் கடந்த தேசத்தில் அடிமை உழைப்பாளிகளானார்கள். கரும்பு ஆலை அதிபர்களின் கொடுமையில் இருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள். டச்சு- போர்த்துக்கல் யுத்தம் அதற்கு வழி சமைத்துக் கொடுத்தது.

கரும்புத் தோட்டங்களில் நிலவிய கடுமையான தண்டனைகள், அடிமைகளை பயமுறுத்தி பணிய வைக்கவில்லை. மாறாக கொடுமை கண்டு கொதித்தெழுந்த அடிமைகள் ஆலை முதலாளியையும், வெள்ளையின காவலர்களையும் கொலை செய்து விட்டு தப்பியோடினார்கள். நிச்சயமாக, முன்னாள் இம்பங்களா வீரர்களின் போர்க்குணாம்சம் கிளர்ச்சியை தூண்டிய காரணியாக இருந்தது. இருப்பினும் கலகம் செய்யும் அடிமைகளுக்கு தப்பிச் செல்ல ஒரு புகலிடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்க அம்சம். அந்தப் புகலிடங்கள் "கிளம்போஸ்" (Quilombos ) என அழைக்கப்பட்டன. மலைகளும், காடுகளும் இயற்கையான தடுப்பரண்களாக இருந்தன. கரும்புத் தோட்ட காவலர்கள் தப்பிச் சென்ற அடிமைகளை பிடிக்க முடியாதவாறு அவை பாதுகாத்தன. சிறிது காலம் செல்ல கிளம்போஸ் குடியேற்றங்கள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு மன்னரால் நிர்வகிக்கப்பட்டன. தமக்கு தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொண்டனர். ஆயுதங்களுக்காக கரும்பாலை முதலாளிகளின் வீடுகளை தாக்கினார்கள்.

ஆரம்ப காலத்தில் தப்பியோடிய அடிமைகள் ஆண்களாக இருந்தனர். இதனால் பெருந்தோட்டங்களில் கட்டுண்டு கிடந்த பெண் அடிமைகளை விடுதலை செய்தனர். புதிய தேசத்தில் குடும்பங்களும், கிராமங்களும் உருவாகின. இருப்பினும் சனத்தொகையில் குறைந்தளவு பெண்கள் இருந்ததால், பாண்டவர்களைப் போல ஒரு பெண்ணை பல ஆண்கள் மணந்து கொண்டனர். பல்மாரஸ் தேசத்தில் சுதந்திர மனிதர்களாக வாழ்ந்த முன்னாள் அடிமைகள், கரும்பாலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஒன்று, அடிமைகளின் எஜமானர்களான ஆலை முதலாளிகளை பழி வாங்குவது. இரண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை அபகரிப்பது. மூன்று, பிற அடிமைகளை விடுதலை செய்து தம்மோடு கூட்டிச் செல்வது. இதன் மூலம் சுதந்திர கறுப்பின தேசத்தின் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அந்த நாடு, முப்பதாயிரம் குடிமக்களை கொண்டிருந்தது. அவர்களில் பலர் சுதந்திர தேசத்தில் பிறந்த பிள்ளைகள்.

பல்மாரஸ் குடிமக்கள், வெள்ளையின காலனியாதிக்கவாதிகளின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடவில்லை. போராட்டமே வாழ்க்கை என்றாகி விட்டதால், அதற்கேற்ற கலைகளும் தோன்றின. கப்புஈரா (Capoeira) என்ற தற்காப்பு நடனம் அந்தக் காலத்தில் தோன்றியது. பார்ப்பவர்களுக்கு கராத்தே சண்டை போலவும், அதே நேரம் நடனம் போலவும் தோன்றும். அது தான் அந்தக் கலையின் சிறப்பம்சம். காலனியாதிக்கவாதிகள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கவில்லை. சுதந்திர அடிமைகளின் தேசத்தை கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். ஆயினும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவின. பல்மாரஸ் மக்கள் பொறிகளை, அகழிகளை அமைத்து தம்மை பாதுகாத்துக் கொண்டார்கள். முடியாத பட்சத்தில் தமது வயல்களை தாமே அழித்து விட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

இறுதியில் போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகளுக்கு கைகொடுக்க வந்தார்கள் Bandeirantes. அதாவது போர்த்துக்கல்லில் இருந்து நாடுகடத்தப்பட்ட கொடிய கிரிமினல்கள். இவர்களின் தாக்குதல்களுக்கு நின்று பிடிக்க முடியாமல் பல்மாரஸ் நிலைகுலைந்தது. 1695 ம் ஆண்டு, சுதந்திர கறுப்பின தேசத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதப்பட்டது. மன்னன் Zumbi கொல்லப்பட, குடிமக்கள் மீளவும் அடிமைகளாக்கப்பட்டனர். அந்த தேசத்தில் சுதந்திரமாகப் பிறந்த பிள்ளைகளும் அடிமைத்தளைக்கு தப்பவில்லை. Bandeirantes வீரர்களின் சேவைக்கு நன்றிக்கடனாக ஸௌ பவுலு (Sao Paulo ) நகரில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பிரேசிலின் பிரதான குடியேற்றமான ஸௌ பவுலுவை பாதுகாப்பதே Bandeirantes வீரர்களின் ஆரம்பகால கடமையாக இருந்தது. பிரேசில் அரசியலில் "பவுலிஸ்ட்டா" க்களின் (ஸௌ பவுலுக் காரர்கள்) ஆதிக்கம் அதிகம். இன்றைக்கும், ஸௌ பவுலுவில் தூய வெள்ளையர்கள் குடியிருப்பதும் அதற்குக் காரணம்.
ஆயிரத்திற்கும் குறையாத வங்கிகள், லட்சக்கணக்கான தொழிற்சாலைகளைக் கொண்ட ஸௌ பவுலு São Paulo நகரம் பிரேசில் தேசிய வருமானத்தில் 40 % த்தை உற்பத்தி செய்கின்றது. மோட்டார் கார், விமானங்களைக் கூட உற்பத்தி செய்யுமளவுக்கு தலை சிறந்த தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரம். ஸௌ பவுலு, பொருளாதார வளர்ச்சிக்கு அங்கே குடியேறிய பெரும்பான்மை ஐரோப்பிய வெள்ளையருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. ஸௌ பவுலு நகரின் மொத்த சனத்தொகையில் 70 % தூய ஐரோப்பிய வெள்ளையர்கள். நிச்சயமாக முதன்முதல் குடியேறியவர்கள் போர்த்துக்கேயர்கள் தான். அவர்களைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் வந்து குடியேறினார்கள். அவர்களைத் தவிர பெருமளவு யூதர்கள், லெபனான் அரேபியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோரும் 19 ம் நூற்றாண்டிலேயே வந்து குடியேறியுள்ளனர். இன்றைக்கும் ஸௌ பவுலு நகரின் ஒவ்வொரு பகுதியும் பல்லின மக்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன. "சாந்தோ அமரோ" வட்டாரம் குட்டி ஜெர்மனியாக காட்சியளிக்கின்றது. அதே போல, "ஆர்மேனியா" ஆர்மேனியரின் வட்டாரம், "விலா மரியானா" அரபு வட்டாரம், "பெர்டிசெஸ்" யூத வட்டாரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஸௌ பவுலு நகரிற்கு அருகாமையில் "Holambra" என்றொரு குடியேற்றம் உள்ளது. பெயரில் இருந்தே அது டச்சுக் காரரின் பிரதேசம் என்று ஊகிக்கலாம்.

அனேகமாக அனைத்து ஐரோப்பியர்களும், ஜப்பானியர்களும் தமது நாட்டில் தீராத வறுமை காரணமாக பிரேசிலுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இரண்டாம் உலகப் போர் முடிந்த சில வருடங்களின் பின்னரும் இந்த புலம்பெயர் படலம் தொடர்ந்தது. தமது ஏழைகள் பொருளீட்டுவதற்காக கடல்கடந்து செல்வதை ஐரோப்பிய அரசுகளும் ஊக்குவித்தன. பிரேசில் அரசு ஐரோப்பிய குடியேறிகளை இருகரம் நீட்டி வரவேற்றது. இன்று ஐரோப்பா வரும் மூன்றாம் உலக குடியேறிகளை நடத்தும் விதமானது, அவர்களது இரட்டை அளவுகோலை எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதியாக வந்தாலும் "அதிர்ஷ்டம் தேடி பிழைக்க வந்தவர்கள்" என்று ஐரோப்பிய அரசுகள் ஏளனம் செய்கின்றன. அன்று தமது குடிமக்கள் அமெரிக்காவுக்கு பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்ததை மறந்து விட்டு பேசுகிறார்கள். இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், தொழில்நுட்ப அறிவின் பரவலாக்கம். ஐரோப்பியர்கள் தமது முன்னாள் ஆசிய, ஆப்பிரிக்க காலனிகளுடன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் ஸௌ பவுலு நகரில் குடியேறியவர்கள் தமது வெள்ளை இனத்தவர்கள் என்பதால், விமானம் செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பொத்தாம்பொதுவாக பிரேசிலை வறிய நாடு என்று கூறுவது முறையாகாது. பிரேசிலுக்கு விஜயம் செய்பவர்கள் அங்கு காணப்படும் முரண்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். வளர்ச்சியடைந்த முதலாம் உலகமும், அபிவிருத்தியையே கண்டிராத மூன்றாம் உலகமும் அருகருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, காலனிகளை சுரண்டிய காலம் மாறி விட்டது. இப்பொழுது எஜமானர்களின் வாரிசுகள், அந்தக் காலனிகளிலேயே நிரந்தரமாகக் குடியேறி சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய காலகட்டத்தை பிரேசிலில் தெளிவாக காணலாம். அந்தக் மாற்றம் இடம்பெற்ற பொழுது தான் அடிமை முறையும் ஒழிக்கப்பட்டது. பிரான்ஸ், அமெரிக்காவில் தோன்றிய பூர்ஷுவா புரட்சிக் காற்று பிரேசிலிலும் வீசியது.

ஔரோ பிரேட்டோ (Ouro Preto), 18 ம் நூற்றாண்டில் தங்க வேட்டைக்கு புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. பிரேசில் முழுவதிலும் அந்தப் பிரதேசத்தில் மட்டுமே அதிகளவு தங்கமும், வைரமும், பிற விலைமதிக்க முடியாத ரத்தினக் கற்களும் கிடைத்தன. அங்கே குடியேறிய மக்கள் அனைவரும் தங்கம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தங்கத்தை சாப்பிட முடியாது என்பதை காலந்தாழ்த்தி புரிந்து கொண்ட பொழுது, நிலைமை கட்டுமீறி சென்று விட்டது. உணவுப்பொருட்கள் யாவும் தங்கத்தை விட பதினைந்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. உணவுப் பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடியது. பை நிறைய தங்கம் இருந்தும் சாப்பிட எதுவுமின்றி பலர் இறந்தார்கள். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, போர்த்துக்கேய காலனிய அதிகாரிகள் வரியை உயர்த்தி மக்களை வருத்தினார்கள். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கூட காலனிய ஆட்சியாளருக்கு எதிராக திரண்டனர்.

பிரேசிலை குடியரசாக்கும் இலக்கோடு புரட்சிக்கு தயாரானது ஒரு சிறு குழு. நடுத்தர வர்க்க புத்திஜீவிகளைக் கொண்ட அந்தக் குழுவினர் செயலில் இறங்கும் முன்பே கைது செய்யப்பட்டனர். ஆட்சிக்கவிழ்ப்பு குற்றம் சாட்டப்பட்ட குழவில் இருந்த சிலர் அதிகாரத்தில் இருந்த உறவினர் உதவியால் விடுதலை பெற்றனர். பிறர் தமக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சத்தியம் செய்து தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்கள். ஒரேயொரு உறுப்பினர் மட்டும், ஜோகிம் ஜோஸ் த சில்வா சாவியர் என்ற பல் வைத்தியர், கொள்கையில் உறுதியாக நின்றார். தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க மறுத்தார். ஆட்சியாளர்கள் அவரது தலையை வெட்டி நகர சதுக்கத்தில் காட்சிக்கு வைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தை தவிர பிரேசிலில் குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்டம் எதுவும் நடக்கவில்லை.

1822 தொடக்கம் 1889 வரை பிரேசிலை பேட்ரோ அரசவம்சத்தினால் (Pedro I & II) ஆளப்பட்ட சாம்ராஜ்யமாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் காலனிய எஜமானான போர்த்துக்கல் ஐரோப்பாவில் நெருக்கடியில் சிக்கியிருந்தது. நெப்போலியனின் படையெடுப்புகள் காரணமாக மன்னர் குடும்பம் பிரேசிலுக்கு தப்பியோடியது. அங்கிருந்த படியே பிரேசிலையும், போர்த்துக்கல்லையும் ஆட்சி செய்தனர். ஒரு ஐரோப்பிய நாட்டின் தலை நகரம் லத்தீன் அமெரிக்காவில் அமைந்திருந்தது, உலக வரலாற்றில் அது தான் முதலும் கடைசியுமாகும். 15 நவம்பர் 1889 ல், இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். சக்கரவர்த்தியை போர்த்துக்கல்லுக்கு கப்பலேற்றி அனுப்பி விட்டு குடியரசு பிரகடனம் செய்தார்கள். இந்த முறை குடியரசுவாதிகளுக்கு இங்கிலாந்து பக்கபலமாக இருந்தது. பிரேசிலின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை, முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றியதில்
ஆங்கிலேயரின் பங்களிப்பு பிரதானமானது.

நகரங்களில் முதலாளித்துவ பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்ட பொழுதிலும், நாட்டுப்புறங்களில் பெரும் நிலச்சுவாந்தர்களின் ஆதிக்கம் குறையவில்லை. நிலமற்ற விவசாயிகளின் பிரச்சினையும் தீரவில்லை. அடிமை முறை ஒழிப்பில் இருந்து ஆரம்பிப்போம். சுதந்திரம் பெற்ற அடிமைகளில் பலர் வேலை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் விவசாயம் செய்ய விரும்பினர். ஆனால் அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று, முன்னாள் எஜமானிடம் கூலி வேலை செய்வது அல்லது அவனிடமே குத்தகை நிலம் எடுப்பது. இரண்டாவது, வளமற்ற தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது. சுயாதீனமாக கமம் செய்யும் விவசாயிகளின் நிலங்கள் அதிக விளைச்சலை தருமாயின், அவற்றை பெரிய பண்ணையார்கள் அபகரிக்க பார்ப்பார்கள். அடிமாட்டு விலைக்கு விற்க மறுக்கா விட்டால், குண்டர்களை வைத்து அடித்துப் பறிப்பார்கள். வெள்ளையின சிறு விவசாயிகளின் கதியும் அது தான்.

Movimento dos Trabalhadores Rurais Sem Terra (MST) என்ற நிலமற்ற விவசாயிகளின் அமைப்பு இன்று அரசுக்கு சவாலாக விளங்குகின்றது. எழுபதுகளின் இறுதியில் பிரேசிலின் தென் மாநிலங்களில் தோன்றியது அந்த அமைப்பு. நிலப்பிரபுக்களின் நிலங்களை பறித்து நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றது. உலகில் எந்தவொரு பண்ணையாரும் தனது நிலத்தில் சிறு பகுதியை ஏழை விவசாயிக்கு தானமாக கொடுப்பதில்லை. போராடாமல் எந்த உரிமையும் கிடைப்பதில்லை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள், MST யில் அங்கம் வகிக்கும் ஒன்றைரை மில்லியன் ஏழை விவசாயிகள். இது வரை காலமும் 350 க்கு மேற்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம், நிலமற்ற விவசாயிகள் சிறு துண்டு நிலமாவது சொந்தமாக்கியுள்ளனர். MST நிலப்பறிப்புடன் மட்டும் நிற்காது, நகர்ப்புற இடதுசாரி ஆர்வலர்களின் உதவியுடன் சமூக நலன் பேணும் திட்டங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதைகளை, விவசாய உபகரணங்களை, பூச்சி கொல்லி மருந்துகளை வழங்கி வருகின்றது. அதிக விளைச்சலை பெறும் வகையில் உற்பத்தி செய்வதற்கு, பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். பாடசாலைகளைக் கட்டி விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெரும்பான்மை வாக்குப்பலத்தில் ஆட்சிக்கு வந்த தொழிலாளர் கட்சியும், ஜனாதிபதி லூலாவும் சர்வதேச இடதுசாரிகள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த லூலா, சிறு வயதில் கஷ்டப்பட்டவர். ஆரம்ப பாடசாலையுடன் படிப்பை இடைநிறுத்தி விட்டு ஆலைத் தொழிலாளியாக வேலை செய்தவர். இதனால் ஏழைகளின் மனதறிந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்ததால், பிரேசிலில் புரட்சிகர மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. லூலா ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் ஆச்சரியப்பட வைத்தார். ஐ.எம்.எப். சொற்கேட்டு ஆட்சி செய்தார். லூலா தெரிவான காலகட்டம் இங்கே முக்கியமானது. 1998 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி பிரேசிலை வெகுவாகப் பாதித்தது. அத்தகைய தருணத்தில் லூலா போன்ற இடதுசாரித் தலைவரின் அவசியத்தை முதலாளிகளும் உணர்ந்திருந்தனர். பதவிக்கு வந்த சில வருடங்களிலேயே தொழிற்கட்சி மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். லூலாவின் மந்திரிசபை பொருளாதார சீர்திருத்தம் எதிலும் இறங்காததால், வெறுத்துப் போன MST ஆதரவை வாபஸ் வாங்கியது. MST போர்க்குணாம்சம் மிக்க அமைப்பாக இருந்த போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவது என்.ஜி.ஒ. என்ற தொண்டு நிறுவனங்களாகும். பிரேசிலின் ஏழைகள் காலம் ஒரு நாள் மாறும் என்று காத்திருக்கிறார்கள்.


தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, May 19, 2011

"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்" - பொதுக்கூட்டம்



பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்

மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்திவரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு,அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

■ அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்
- தோழர்களுடன் ஒரு பயணம்-Walking with the Comrades;
- உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர்

■ யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர்,
- இந்தியா மீதொரு சிவப்புநட்சத்திரம்- (Red Start overIndia) , நூல் ஆசிரியர்

■ வசந்த இந்திரா மோகன்(Basantha Indra Mohan),
- இருபத்தியோராம்நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி-
(Imperialismand Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்


நிகழ்ச்சி:
ஞாயிறு ஜூன் 12, 2011
Sunday,June 12, 2011
பகல் 1:30 தொடங்கிமாலை 5.00 வரை

நிகழ்ச்சி அரங்கம்

பிரெண்ட்ஸ் ஹவுஸ்
FriendsHouse,
Main Hall,
173 Euston Road,
London NW1 2BJ
U.K



நிகழ்ச்சி அமைப்பும்ஏற்பாடும்

இந்தியமக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம்
International Campaign Against War onPeople of India (ICAWPI)

http://www.icawpi.org

இந்திய உழைப்பாளர்சங்கம் (Indian Workers Association, GB)

மேல்விவரங்களுக்கு: june12-London@icawpi.org

அனைவரும்வருக!! ஆதரவு தருக !!

Wednesday, May 18, 2011

பாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம்மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

எம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும் ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த - பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்தவெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம்நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.

அபிவிருத்தி, யுத்தத்தில் பின்னான மீள்கட்டமைப்பு என்ற பெயரில் நடாத்தப்படும் செயற்திட்டங்கள் எதுவும், எம் மக்களின் வாழ்வில் உண்மையான வாழ்க்கை மேம்பாட்டையோ, சமுதாய ரீதியிலான வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் இராணுவத்தினராலும், இந்தியா சீனா ஈறாக சர்வதேச மூலதன மேலாதிக்க சக்திகளாலும், இவர்களுக்கு துணை போகும் மஹிந்த குடும்பம் மற்றும் உள்நாட்டு அரச ஒட்டுண்ணிகளாலும் எம் மக்களின் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்படுகிறது.

எம் தேசத்தின் விடுதலையின் பெயரிலான புலிப்போராட்டத்தையும் அதன் தலைமையையும் முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்த நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான புலிகள் மஹிந்த பாசிச அரசின் சிறைகளில் சித்திரவதைப்படுத்தப்படுகிறார்கள். சிறையில் இருந்து மீண்ட முன்னாள் புலிகள் பலர் தமது குடும்பங்களுடன் பசித்த வயிற்றுடன் அல்லற்படுகின்றனர். குறிப்பாக பெண் போராளிகளும், ஆண் துணை இழந்த பெண்களும் எமது சமூகத்தின் எல்லா வகை பிற்போக்குத்தனமான கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். புலிகளின் அழிவரசியலுக்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கொடுத்த புலம்பெயர் மக்கள் பணம், இன்று இவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும் உதவவில்லை.

இன்று புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில், புலத்தில் அவர்களின் பினாமிகள் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் தொடர்ந்தும் அழிவு அரசியலை முன்னெடுத்தபடி தமிழீழக் கனவில் மிதக்கின்றனர். மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் இவர்களைப் பயன்படுத்தி மீண்டும் எம் தேசத்தை தன் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் முதல் கனடா வரை இலங்கை மஹிந்த பாசிச அரசின் மீது கண்டனங்கள் முதல் அறிக்கைகளையும் விடுகின்றனர். நோர்வே அரசு போர்க்;கால சாட்சிகளை இலங்கையில் இருந்து கடத்தி வருவதும் இதற்குள் தான் நடந்தேறுகிறது.

இப்படியான எமது தேசத்தின் இருண்ட சூழ்நிலையில், எம்மை ஒடுக்கும் இலங்கை இனவாத பாசிச அரசு, இனவாதத்தை முன்தள்ளி நரித்தனத்துடன் எமது சகோதர இனமான சிங்கள மக்களையும், முஸ்லீம் மக்களையும், மலையக தமிழர்களையும் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளி சமுதாய சீரழிவுக்கும் உள்ளாக்கிய வண்ணமுள்ளது. குறிப்பாக அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்க்கையும், வரலாறு காணாத வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், எமது தேசவிடுதலையை இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கப்படுவதன் மூலமே வென்றெடுக்க முடியும். இதனைத்தான் நமது பல பத்து வருட போராட்ட வரலாறு கற்றுத் தந்துள்ளது. அதேபோல ஆயுதத்தையும், தமிழினவாதத்தையும், ஏகாதிபத்திய நல்லுறவையுமே அடித்தளமாகக் கொண்டு, மக்களில் தங்கி இல்லாமல் நடத்தும் போராட்டம் அழிவுக்கே வழிவகுக்கும் என்பதையும் புலிகளின் போராட்ட வரலாறு எமக்கு உணர்த்தியுள்ளது.



இந்தவகையில்:

- பேரினவாத அரசின் இனவழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும், மக்களுக்கும் எமது அஞ்சலியை தெரிவிக்கின்றோம்!

- தமிழினவாதத்தைக் கைவிட்டு சர்வதேசியத்தை முன்னிறுத்தி எம் தேசவிடுதலைக்காக போராட அறைகூவல் விடுக்கிறோம்!

- அனைத்து ஏகாதிபத்திய சக்திகளையும், அவர்களின் அடிவருடிகளையும் தேச விடுதலைப் போராட்டக் களத்திலிருந்து அகற்றுவோம்!



மக்கள் சார்ந்த அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து நட்பு சக்திகளையும் ஓர் அணியில் திரள அழைப்பு விடுக்கிறோம்!




புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 17.05.2011)


Monday, May 16, 2011

சுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்னர், சுவிஸ் வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர், முதலில் அயல்நாடுகளில் தஞ்சம் கோரி விட்டு வந்திருந்தார்கள். இன்றைக்கும் அந்த நிலை மாறவில்லை. தமிழர்களின் முதல் தெரிவு சுவிட்சர்லாந்தாக இருந்து வருகின்றது. சுவிட்சர்லாந்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது?
சுவிட்சர்லாந்து மத்திய ஐரோப்பாவை சேர்ந்த சிறிய நாடு. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஓஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. முதலில் அந்த நாடுகளில் தஞ்சம் கோரி, சிறிது காலம் தங்கி விட்டு எல்லை தாண்டி சுவிட்சர்லாந்து வந்திருந்தார்கள். என்னோடு முகாமில் தங்கியிருந்தவர்களில் நேராக சுவிட்சர்லாந்து வந்தவர்கள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொண்டேன். ஜெர்மனியில் இருந்து வந்தவர்கள், தம்மை கிழக்கு ஜெர்மன் பகுதிகளில் தங்க வைத்ததால், தப்பி வந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தாலியில் இருந்து வந்தவர்கள், அந்த நாட்டில் தமக்கு அகதி தஞ்சம் கிடைக்கவில்லை என்றனர். வேறு சிலர், தஞ்ச மனு நிராகரிக்கப் பட்டதால், வேறு வழியின்றி வந்ததாக கூறினார்கள். ஆனால், "மற்ற ஐரோப்பிய நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் ஊதியம் அதிகம் கொடுக்கிறார்கள்." என்ற காரணத்தை எல்லோரும் ஒப்புவித்தார்கள். மனித உழைப்பும் ஒரு சந்தையில் விற்கப்படும் பண்டம். யார் அதிக விலை கொடுக்கிறார்களோ, அவர்களிடம் தமது உழைப்பை விற்க வந்திருக்கும் உண்மையை அவர்கள் மறைக்கவில்லை.

சுவிஸ் முகாம்கள் தமிழர்களால் நிரம்பி வழிந்தன. அந்தக் காலம் பதவியில் இருந்த அகதிகளுக்கான அரசு அதிகாரி பீட்டர் அர்பென்ஸ்: "சிறிய நாடான சுவிட்சர்லாந்து தமிழர்களின் மிகப் பெரிய குடியேற்ற நாடாக மாறிவிட்டது." என்று தெரிவித்தார். ஆமாம், அரசு மட்டத்தில் அது குறித்த கவலை இருந்தது. ஆனால் தமிழர்களின் வருகையை தடுக்க முனையவில்லை. அதற்கு காரணம், அகதிகளாக வந்த தமிழர்கள் அனைவரும் உழைப்பதற்கு தயாரான, உடலில் வலு கொண்ட இளம் வயதினர். தஞ்சம் கோரியவர்களில் 99 வீதமானோர் ஆண்களாக இருந்தனர். அதிலும் 16 க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகம். தலைநகரமான பெர்ன் அருகில் நான் தங்கியிருந்த முகாமும் அப்படிப்பட்டதே. முகாம்வாசிகளான அகதிகளை தமிழர்கள் என்றழைப்பதை விட இலங்கையர்கள் என்றழைப்பதே பொருத்தம். ஒரு சில முஸ்லிம், சிங்கள அகதிகளும் வசித்தனர். சிங்கள இளைஞர்கள் வந்த புதிதில் சுவிஸ் காதலிகளை தேடிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். சில நேரம், வேலை அகதிகளை தேடி வந்தது. முகாம் அதிகாரிகளே எங்காவது வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சில நாட்களே செய்யக் கூடிய கூலி வேலையாக இருக்கலாம்.

நான் தங்கியிருந்த, பேர்ன் மாநிலத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருந்த முகாமில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் அதிகம் காணப்பட்டனர். இருப்பினும் தமிழ் அகதிகளுக்கு மட்டுமே வேலை தேடி வந்தது. "தமிழர்கள் என்றால் எப்படியும் வேலை கிடைத்து விடும்" என்று முகாமில் இருந்த ஆப்பிரிக்க அகதிகள் எம்மை பொறாமைக் கண்களால் பார்த்தார்கள். எனக்கும் ஒரு வேலை கிடைக்கும் வரையில் அந்தப் புதிருக்கு விடை கிடைக்கவில்லை. ஆறு மாதத்தில் ஓரளவு மொழியறிவு பெற்று, குறைந்த பட்சம் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களை வாசிக்கக் கூடிய நிலையில் இருந்தேன். இரண்டாயிரம் அடி மலை உச்சியில் இருந்த உணவு விடுதிகளிலும், சமையலறை துப்பரவாளராக வேலை செய்வதற்கு தமிழர்களை விரும்பிக் கேட்டிருந்தார்கள். சில விளம்பரங்களில் தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்துக்கு முதல் தொகுதி தமிழர்கள் வந்து, அதிக பட்சம் ஐந்து வருடங்கள் ஆகியிருக்காது. சுவிஸ் முதலாளிகளுக்கு தமிழ்த் தொழிலாளர்கள் மேல் தீராக் காதல் ஏற்பட்டு விட்டது. தமிழர்களைக் கேட்டால், "நாம் தான் உலகிலேயே கடின உழைப்பாளிகள். அதனால் எம்மை மதிக்கிறார்கள்." என்றனர். எனக்குக் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது.

சுவிட்சர்லாந்தில் வாழும் அந்நிய தொழிலாளிகளைப் பற்றிய சிறு குறிப்புகளுக்குப் பிறகு தமிழர்களைக் கவனிப்போம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, சுவிட்சர்லாந்தை நவீனமயப் படுத்தும் கட்டுமானப் பணிகளுக்கு துருக்கிய தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாக வந்தவர்கள், குடும்ப சமேதராக சுவிட்சர்லாந்திலேயே தங்கி விட்டனர். முதல் தலைமுறை உழைப்பாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் வயதாகி விட்டது. தந்தையர் செய்த தொழில்களை செய்வதற்கு, இரண்டாவது தலைமுறை துருக்கியர்கள் தயாராக இல்லை. குறைந்த பட்சம் தொழிற்கல்வி ஒன்றையாவது முடித்து விட்டு, வேறு வேலை தேடிச் செல்கிறார்கள். அடுத்ததாக ஸ்பெயின், போர்த்துக்கல் தொழிலாளிகளை தருவித்தார்கள். சுவிட்சர்லாந்தில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, சிறிது காலத்தில் தமது நாடுகளுக்கு திரும்பி விடுவார்கள். அதே போல, முன்னாள் (சோஷலிச) யூகோஸ்லேவியாவில் இருந்தும் தொழிலாளிகள் வந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒன்பது மாத விசா வழங்குவதன் மூலம், நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பை முன்கூட்டியே தடுத்தார்கள்.

வெள்ளைத் தோல் கொண்ட ஐரோப்பியர்களை, உணவு பரிமாறும் பணியாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஈடுபடுத்த முடிந்தது. அவர்கள் வந்து சில மாதங்களிலேயே மொழியை சரளமாக பேசக் கற்றுக் கொண்டனர். இதனால் சற்று அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய, உடல் உழைப்பை குறைவாக செலவிடும் வேலைகளையும் தேர்ந்தெடுத்தனர். இன்னொரு பக்கத்தில் மிகக் கடினமான பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் தேவைப்பட்டனர். உணவுவிடுதிகளில் பாத்திரங்களை கழுவுவது, துப்பரவாக்குவது, போன்ற வேலைகளுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு நிலவியது. என்பதுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் அரசியல் சூழல் விரைவாக மாறிக் கொண்டிருந்தது. துருக்கியில் ஆட்சிக்கு வந்த இராணுவ சர்வாதிகாரம், தொழிலாளிகளை விட அகதிகளையே அதிகமாக அனுப்பிக் கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் துருக்கியில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் தீவிர இடதுசாரி இளைஞர்கள். (சுவிஸ்காரர்களுக்கு கம்யூனிசம் என்றால் கொஞ்சம் அலர்ஜி) யூகோஸ்லேவியாவில் சோஷலிசம் மறைந்து, தேசியவாத சக்திகள் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டிருந்தன. போர்த்துகலும், ஸ்பெயினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்கள் என்பதால், அந்த நாடுகளின் பொருளாதாரம் முன்னேறிக் கொண்டிருந்தது. அத்தகைய இக்கட்டான தருணத்தில் தான், தமிழ் அகதிகள் சுவிட்சர்லாந்தினுள் நுழைந்தார்கள்.

அகதிகளாக வந்த தமிழர்களை விசாரணை செய்யும் பொழுதே சுவிஸ் அதிகாரிகள் அவர்களை எடை போட்டிருப்பார்கள். இவர்கள் வெள்ளயர்களல்ல, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டவர்களல்ல. அதனால் உள்ளூர் சுவிஸ் சமூகத்துடன் இலகுவாக ஒன்று கலக்க மாட்டார்கள். அதனால், சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்களை அவர்களாகவே அறிந்து கொள்ள சில காலம் எடுக்கும். துருக்கி அகதிகளைப் போல இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல. அதனால் தொழிலாளர்களின் உரிமை கேட்டு போராட மாட்டார்கள். அப்படியானவர்களை நாட்டினுள் அனுமதிக்க ஏன் தயங்க வேண்டும்? தமிழ் அகதிகள் வேலை செய்யத் தொடங்கிய சில வருடங்களில், சுவிஸ் அரசு இன்னொரு மாயவலை விரித்தது. தொழில் வாய்ப்பு உள்ள வரை சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கான "B " அனுமதிப் பத்திரம் வழங்க முன்வந்தது. ஆனால் ஒரு நிபந்தனை. "நான் அகதி அல்ல" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும். பல வேற்றின அகதிகள் அத்தகைய நிபந்தனைகளுக்கு தயங்கிய போது, பல தமிழர்கள் B அனுமதிப் பத்திரம் வாங்கிக் கொண்டனர். இதனால் சுவிஸ் அரசுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று: எமது நாட்டில் அகதிகள் எண்ணிக்கை குறைவு என கணக்குக் காட்டலாம். இரண்டு: வேலை பறிபோகும் காலத்தில், இலகுவாக தாயகத்திற்கு திருப்பி அனுப்பலாம். சுருங்கக் கூறின், சுவிஸ் அரசு அகதியாக வந்தவர்களை தொழிலாளிகளாக மாற்றுவதிலேயே அதிக அக்கறை காட்டியது. இதனால் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிப்பதை காலவரையறை இன்றி தள்ளிப் போட்டது.

சுவிட்சர்லாந்து சிறந்த ஜனநாயகத்தைக் கொண்ட நாடு எனப் பாராட்டப் படுகின்றது. அதே நேரம், ஒரே வேலைக்கு வெவ்வேறு ஊதியம் கொடுப்பதை அனுமதிக்குமளவு பாரபட்சம் காட்டும் நாடும் அது தான். தஞ்சம் கோரிய ஒருவரின் விண்ணப்பத்தை பரிசீலித்து அகதியாக முடிவெடுக்கும் வரையில் அவருக்கு நிச்சயமற்ற வாழ்க்கை தான். அத்தகையவர்கள் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டப் படி வரையறை செய்யப்படுகின்றது. அந்த வேலைகளுக்கு கூட குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகின்றது. வதிவிட அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதே வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம். அகதிகளை அங்கீகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் குறைந்த கூலிக்கு உழைக்கும் காலமும் அதிகரிக்கும். அத்தனை வருடங்களும் அகதிகளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் மில்லியன் பிராங்குகள் சம்பாதித்து விடுவார்கள். மேலும் வேலை செய்யும் அகதிகளின் சம்பளத்தில் ஒரு தொகை கழிக்கப் பட்டு, முகாமில் வதியும் அகதிகளின் செலவினத்தை ஈடு செய்கிறார்கள். அரசு, முதலாளிகள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் என்று பல சுவிஸ் அமைப்புகள் அகதிகளின் உழைப்பை சுரண்டி இலாபமடைகின்றனர்.

Sunday, May 15, 2011

வலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா?

(கடந்த வருடம், "பூச்சரம்" இணையத்தளத்தில் வாசகர்கள் தொடுத்த வினாக் கணைகளுக்கு எனது பதில்கள்.)

1. கேள்வி: உங்கள் வலைப்பூவில் வரும் தகவல்கள் பெரும்பாலும் நாம் இதுவரை அறிந்த தகவல்கட்கு எதிராகவே இருக்கின்றன. உங்கள் கருத்துக்களை திடீரென நம்பமுடியவில்லை. குழப்பமாக இருக்கிறது. எவ்வாறு உண்மையை உறுதிப்படுத்துவது? (யோகா)

பதில்: நான் வலைப்பூ ஆரம்பித்த நோக்கமே தமிழ் ஊடகங்களின் வறுமை தான். அதாவது உள்ளூர் செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சர்வதேச செய்திகளில் காட்டுவதில்லை. நமது ஊடகங்கள் யாவும் குறிப்பிட்ட நிறுவனங்களில் தங்கியுள்ளன. தமிழ் ஊடகங்கள், Reuters , AFP , AP , CNN , BBC வழங்கும் தகவல்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றன. இவை எல்லாம் செய்தி வழங்கலை லாபம் கொழிக்கும் வர்த்தகமாக மாற்றியுள்ள நிறுவனங்கள். அவற்றிற்கென்று பொதுவான அரசியல் அபிலாஷைகள் உள்ளன. அதனால் செய்திகளும் அந்த வரையறைக்குள்ளேயே அடங்கி விடுகின்றன. நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு மாற்றாக, மறு தரப்பு செய்திகளைக் கூறும் மாற்று ஊடகத்தின் தேவை பல காலமாக எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அவர்களோடு போட்டி போடுமளவு பலமோ, பணமோ இருக்கவில்லை. இன்டர்நெட் யுகம் ஆரம்பமாகிய போது, குறைந்தளவு செலவில் ஊடகத்தை பயன்படுத்தக் கூடிய வசதி தோன்றியது. அப்போது சில ஆர்வலர்களால் "Indymedia Group " (சுதந்திர ஊடகம்) என்ற வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுடனான அனுபவம், என்னையும் தனியாக வலைப்பூ தொடங்க ஊக்குவித்தது. உண்மையை உறுதிப் படுத்துவதற்கு, உங்களுக்கு நீடித்த தேடுதல் அவசியம்.

*
2. கேள்வி: உங்கள் கருத்துக்களின் படி இதுவரை ஊடகங்கள் எம்மை ஏமாற்றி வருகின்றன. சரியான தகவல்களை எவ்வாறு அறிந்துகொள்வது? (பெரோஸ்)

பதில்: ஊடகவியலில் " வரிகளுக்கு இடையில் வாசிப்பது" என்று சொல்வார்கள். அதாவது வெகுஜன ஊடகங்களிலேயே நிறைய தகவல்கள் மறைக்கப்பட்டு, வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகின்றன. சொல்லாமல் விட்ட சேதிகளை கண்டுபிடிக்க சிறிது பயிற்சி தேவை. மேலும் எத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன. தமது நலன்களுக்கு மாறானது எனக் கருதும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அவை மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. நான் அப்படி மறைக்கப்பட்ட செய்திகளை கண்டுபிடித்து சொல்கிறேன். அவ்வளவே. மக்களின் கருத்தை தீர்மானிக்கும் சக்தியை ஊடகங்கள் பெற்றுள்ளன. ஊடகங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அவை பின்னர் மக்களின் கருத்துகளாகின்றன. அந்த ஊடகம் எத்தகைய அரசியல் சக்தியின் ஆதிக்கத்தில் இருக்கின்றதோ, அவர்களின் கருத்து மட்டுமே கூறப்படும். சரியான தகவல்களை அறிவது நமது கையில் தான் உள்ளது. அதாவது மாற்று ஊடகம் ஒன்றை தொடங்கவோ, ஊக்குவிக்கவோ பழக வேண்டும். ஊடகம் என்பது மக்களுக்கானது.

*
3. கேள்வி: வித்தியாசமான கருத்துக்களை எழுதுகிறீர்கள். பிரபலமடைவது நோக்கமா? (சந்திரகாந்தன்)

பதில்: வித்தியாசமாக எழுதினால் பிரபலமடையலாம் என்பது எனது நோக்கமாக இருக்கவில்லை. நான் எனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான். நான் எழுதும் விடயங்கள் உலகில் பலர் அறிந்திருக்கவில்லை என்பதை, வாசிப்பவர்களின் எதிர்வினையைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

*
4. கேள்வி: உங்கள் கருத்துக்கள் எவ்வளவு தூரம் மக்களை சென்றடைகின்றன? (நஸீர்)


பதில்: அதை மக்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும். எனது கருத்துகள் குறைந்தது பத்து பேரின் மனதில் சென்று பதிந்துள்ளன என்றால் அதுவே எனக்கு பெருமை தான். அந்தப் பத்து பேரும் அடுத்து நூறு பேருக்காவது கொண்டு போய் சேர்க்க மாட்டார்களா? சிறு பொறியில் இருந்து தான் பெரு நெருப்பு தோன்றுகின்றது.

*
5. கேள்வி: வலைப்பூக்கள் மொக்கைகட்கே களமமைக்கிறது. இதனிடையே காத்திரமான கருத்துக்களை தரும் உங்கள் வலைப்பூ வாசகர்களிடையே போதிய வரவேற்புப்பெற்றுள்ளதா? (என்ன கொடும சார்)

பதில்: அப்படி வரவேற்பு கிடைத்திரா விட்டால் எப்போதோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். பலதரப்பட்ட நண்பர்களின், வாசகப் பெருமக்களின் ஆதரவு என்னை மேலும் எழுதத் தூண்டியது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாசகர்கள், என்னிடம் பல தகவல்களை கிடைக்கும் என எதிர்பாக்கிறார்கள்.

*
6. கேள்வி: இன்று நியாயம் பேசுவோர்கள் எல்லாரும் "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்றே ஒதுக்கப்படுகிறார்கள். அரசியலில் பெரும் தோல்வியடைகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் அணிதிரளாதது ஏன்? (ரமீஸ்)

பதில்: ஏனெனில் பொதுவான நியாயம் என்ற ஒன்று இன்றைய உலகில் இல்லை. ஒவ்வொருவரும் தங்களின் நலன் சார்ந்தே நியாயம் பேசுகிறார்கள். தனி மனிதன் மட்டுமல்ல, அரசியல் அமைப்பு, மத அமைப்பு எல்லாமே ஒரு பக்க நியாயம் மட்டுமே பேசுகின்றன.

*
7. கேள்வி: ஊடகங்கள் வர்த்தக நோக்கம் கொண்டவை. மக்களிடம் செய்திகளை சரியாக சேர்க்கும்போது அவை பிரபலமடந்து வர்த்தக ரீதியில் வெற்றி பெறுகின்றன. யதார்த்தம் அவ்வாறு இருக்கையில் ஊடகங்கள் ஏன் செய்திகளை திரிக்க முற்படுகின்றன? (ரவி)

பதில்: "செய்திகளை சரியாக சேர்க்கும் போது", இது ஊடகம் பற்றி ஏட்டில் மட்டுமே காணப்படும் வாசகம். நடைமுறையில் அப்படியல்ல. செய்தியை அப்படியே கூறுவதால் சிலரின் நலன்கள் பாதிக்கப்படும் என நம்பினால், அதனை செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தன என்று ஒரு காலத்தில் அனைத்து ஊடகங்களும் ஒரு பொய்யை கூறிக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு சில நேர்மையான மாற்று ஊடகங்கள் மட்டுமே, அதை மறுத்து வந்தன. அன்று வெகுஜன ஊடகங்கள் தைரியமாக பொய் சொன்னதன் மூலம், பொது மக்களின் ஆதரவை ஈராக் மீதான படையெடுப்புக்கு ஆதரவாக திரட்டி விட்டிருந்தன.

*
8. கேள்வி: நீங்கள் எழுதும் கருத்துக்கள் வித்தியாசமானவை. அவை எங்கிருந்து கிடைத்தன என்று ஏன் நீங்கள் சொல்வதில்லை? (மதிவதனி)

பதில்: நான் போடும் பதிவுகள் இரண்டு வகையானவை. ஒன்று: செய்திக் குறிப்புகள். இவற்றிற்கான மூலங்களை உடனேயே தந்து விடுகிறேன். ஏனெனில் அவை பெரும்பாலும், வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்த்ததாக இருக்கும். முடிந்த அளவு ஆங்கில மூலத்தையும், அது முடியாத பட்சத்தில் வேறு அந்நிய மொழி மூலங்களையும் குறிப்பிடுகிறேன். இரண்டு: ஆய்வுக் கட்டுரைகள். விவாதத்திற்குரிய கட்டுரை என்றால், இவற்றிற்கான உசாத்துணை கொடுக்கிறேன். எப்போதும் அது சாத்தியமாவதில்லை. சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், ஏற்கனவே வருடக்கணக்காக சேர்த்து வைத்துள்ள அறிவைக் கொண்டு தான் கட்டுரைகளை எழுதுகின்றேன். அவை எல்லாம் நீண்ட கால கடின உழைப்பின் பின்னர் கிடைத்த பெறுபேறுகள். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்னர், அது பற்றி பலருடன் விவாதித்திருப்பேன். ஏற்கனவே அந்த விடயம் குறித்து குறைந்தது பத்து நூல்கள் வாசித்திருப்பேன். எங்காவது ஒரு பத்திரிகையில், இணையத்தில் வாசித்திருப்பேன். அவை எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளாதது எனது குறை தான். வருங்காலத்தில் அந்தக் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

*
9. கேள்வி: வலைப்பூவை வித்தியாசமான கருப்பொருளின் கீழ் எழுதுவதற்கான காரணம் என்ன? (ஜயகிருஷ்ணன்)

பதில்: அவையெல்லாம் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. நான் எப்போதும் இரு வேறு உலகங்களில் சஞ்சரித்திருக்கிறேன். புறக்கணிக்கப்படும் சமூகங்கள், விளிம்புநிலை மனிதர்கள், இவை தான் எனது கருப்பொருட்கள். அதிகமானோரின் கண்களுக்கு அவர்கள் தெரிவதில்லை. அவர்கள் தமது பிரச்சனைகளை வெளிக் கொண்டுவரும் வசதியோ, எழுத்துத் திறமையோ இல்லாதவர்களாக இருக்கலாம். சுருக்கமாக சொன்னால், குரல் இல்லாதவர்களின் குரலாக இருப்பதில் பெருமையடைகிறேன்.

*
10. கேள்வி: இலங்கை இந்திய அரசியலில் வரலாறில் ஒரு கருத்தியலை உருவாக்குவதில் இராமாயணம் பெரும் பங்கு வகிக்கின்றது. கம்பராமாயணத்தை தவிர்த்து தமிழ் இல்லை என்ற நிலமை இருக்கிறது. சேது சமுத்திர திட்டத்தை கூட அது சீர்குலைக்கிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சிறுத்தலாகவும் இருக்கிறது. ஏன் இதுவரை இராமாயணம் பிழை என நிரூபிக்க யாரும் முயற்சிக்கவில்லை? (ரகீப்)

பதில்: ஒரு காலத்தில் பெரியார் இராமாயணத்தின் பிற்போக்கு கருத்துகளை அம்பலப் படுத்தி ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். எம்.ஆர். ராதா என்ற சினிமா கலைஞன், இராமாயணத்தை கிண்டல் செய்து கீமாயணம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வந்தார். இப்போது தான் யாரும் பகுத்தறிவு பேசுவதில்லையே? ஆனால் மேலை நாட்டில் நிலைமை வேறாக இருக்கின்றது. இங்கே பெரும்பான்மை மக்கள் பகுத்தறிவு பேசுகின்றனர். ஒரு வேளை, மக்களின் வாழ்க்கை வசதி உயர்ந்தால் தானாகவே பகுத்தறிவு வரும் போலும்.

*
11. கேள்வி: தலித்தியம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இவை சரியாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளனவா? (கார்த்திக்)

பதில்: இவையெல்லாம் குறிப்பிட்ட சமூக அரசியல், கலாச்சாரம் சம்பந்தப்பட்டது. எல்லோரும் மதம், ஆல்லது ஏதாவதொரு கொள்கை, கோட்பாட்டை தேடி ஓடுகின்றார்கள். ஜனநாயகமயப்படும் சமுதாயத்தில் தவிர்க்கவியலாத விளைவுகள்.

*
12. கேள்வி: உலக அரசியலில் ஒவ்வொரு நாட்டிலும் இருட்டடிக்கப்பட்ட வரலாறு ஒன்று நிச்சயாமாக இருக்கும். இவற்றை தேடி எழுதும் நீங்கள் ஒரு சில (குறிப்பாக ஆசிய அமெரிக்க) பிரதேச நிகழ்வுகளையே எழுதுகிறீர்கள். ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க அல்லது சீன / ஜப்பானிய வரலாறுகளை நீங்கள் எழுதுவதை தவிர்ப்பது ஏன்? (ப்ரியா)

பதில்: ஒரு காலத்தில், நான் குறிப்பாக மத்திய கிழக்கு பற்றி அதிகம் எழுதுவதாக, என் மீது விமர்சனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அது தவிர்க்க முடியாமல் இருந்தது. ஏனெனில் நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தது, 2000 ஆண்டுக்குப் பின்னர் தான். உலகை அடியோடு மாற்றிய 11 செப்டம்பர் 2001 நிகழ்வு, பலரின் கவனத்தை மத்திய கிழக்கு, அரபுக்கள், இஸ்லாம், பக்கம் திரும்ப வைத்தது. அதையொட்டி ஆசியா, அமெரிக்கா என்று எனது பார்வை விரிந்தது. இருப்பினும் ஆப்பிரிக்க நாடுகள் பற்றி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவை தற்போது நூலாக வந்துள்ளன. இந்த வருடம் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பற்றிய தொடரை ஆரம்பிக்க இருக்கிறேன். சீனாவை பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஜப்பான் பற்றிய ஒரு கட்டுரை விரைவில் பதிவிட இருக்கிறேன்.

*
13. கேள்வி: கருத்துச்சுதந்திரம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. மிகுந்த கட்டுப்பாடுகள் உள்ள சீனா வளர்ச்சியடைவதற்கு இதுவும் ஒரு காரணம். ஏன் பிளவுகளை உருவாக்குகிறீர்கள்? (கோபி)

பதில்: பிளவுகள் ஏற்கனவே சமுதாயத்தில் உள்ளவை தாம். இவைகளுக்கிடையிலான முரண்பாடுகளும், போராட்டங்களும் இயற்கையானவை. எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்கும் சமூகம் உலகில் எங்குமே இல்லை. ஒருவரின் கருத்து சுதந்திரம், இன்னொருவருவருக்கு மறுக்கப்படுகின்றது என்பதே யதார்த்தம்.

*
14. கேள்வி: நீங்கள் புலம்பெயர் இலங்கையர் என்று அறியக்கிடைத்தமை மகிழ்ச்சி. கடைசியாக எபோது இலங்கை வந்தீர்கள்? இலங்கை தொடர்பாக எதிர்கால கணிப்பு என்ன? (ஜஸீபா)

பதில்: கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் நாடோடி வாழ்க்கை காரணமாக இலங்கை திரும்ப முடியவில்லை. வெகு விரைவில் தாயகம் திரும்பி, எனது எழுத்துக்கு உறுதுணையாக நிற்கும் அன்புள்ளங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இலங்கையில் இதுவரை நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பார்க்கையில், அங்கே மேற்கத்திய பாணி ஜனநாயகத்திற்கு இனி இடமில்லை என்று தோன்றுகிறது.

*
15. கேள்வி: வெளிநாடுகளில் இருக்கின்ற மணமகனுக்குத்தான் மிகப்பெரும் சீதனத்தை இலங்கை தமிழ் சமூகம் வழங்குகிறது. அவர்கள் ஆதரிக்கும் கருத்தே வெற்றி பெறச்செய்யப்படுகிறது. புலம்பெயர் இலங்கையர்கள் என்ற புதிய வர்க்க பேதம் இலங்கையில் உருவாகிறது என்று கொள்ளலாமா? அது இன்னும் சமூக சீரழிவுகளை கொண்டுவராதா? (லாவண்யன்)

பதில்: இலங்கையில் ஏற்கனவே இருந்த நடுத்தர வர்க்கம், அந்த வர்க்கம் சார்ந்த நலன்கள், அந்த நலன் சார்ந்த அரசியல், புலம்பெயர் தமிழரால் விரிவடைந்துள்ளது எனலாம். அதாவது நிரந்தர வருமானம், வசதியான வாழ்க்கை, சிறப்பான எதிர்காலம் இவற்றை கொண்ட வர்க்கம். அது தன்னை திருமண சந்தையில் நல்ல விலைக்கு விற்றுக் கொள்கின்றது. இலங்கையில் வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால் வெளிநாட்டு மோகம் கொள்வதை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு? பணக்கார நாடுகள் இலங்கையரை வர விடாமல் தடுக்க கதவுகளை மூடிக் கொள்கின்றன.

*
16. கேள்வி: வெளிநாட்டு மோகம் இலங்கையில் தலைவிரித்தாடுகிறது. புலம்பெயர்தலின் இருண்ட பக்கங்களை ஏன் வெளிக்கொணரக்கூடாது? (தினுஷா)

பதில்: எனது துறை சார்ந்த நல்ல கேள்வி. அந்தக் கடமையைத் தான் நான் இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். எனது கட்டுரைகளையும், பதிவுகளையும் படித்தால் புரியும். எல்லாமே செல்வந்த நாடுகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவை தான். சொல்வதற்கு இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள்.

பூச்சரம் சார்பான கேள்விகள்
* கேள்வி: Sri Lankan President invited all migrated Sri Lankan Intelectuals to return. Will you return to Sri Lanka? (Murali)

பதில்: இலங்கை மக்கள் என்னை அழைக்கும் பட்சத்தில் நிச்சயம் வருவேன். அதிகாரத்தில் இருப்பவர்களை விட, அடித்தட்டு மக்களின் அன்பான அழைப்பை அதிகம் மதிக்கிறேன்.

* கேள்வி: இலங்கை வலைப்பூ எழுத்தாளர்களை வாசிப்பது உண்டா?

பதில்: நிச்சயமாக. சமுதாய அக்கறை கொண்ட பல இலங்கைப் பதிவர்களை காணும் போது மகிழ்ச்சி உண்டாகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் இணைய வசதி படைத்தோர் தொகை அதிகம். ஆனால் தமிழில் வலைப்பூ வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். இலங்கையில் இணையப் பாவனை அதிகரித்தால் தலைசிறந்த பதிவர்கள் உருவாகுவார்கள்.


* கேள்வி: புதிய வலைப்பதிவர்களுக்கான ஆலோசனை என்ன?

பதில்: உங்கள் சுற்றாடலிலேயே நிறைய தகவல்கள் உள்ளன. சமூகப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மோப்பம் பிடியுங்கள். காரண காரியங்களை ஆராயுங்கள். அவற்றை அனைவரதும் ஆர்வத்தை தூண்டத் தக்கதாக பதிவிடுங்கள். பதிவுலகம் ஒரு மக்கள் ஊடகம்.

* கேள்வி: உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்?

பதில்: ராகுல சாங்கிருத்தையர், மார்க்சிம் கோர்க்கி. இவர்கள் தாம் எனது எழுத்துகளுக்கு வழிகாட்டிகள்.

* கேள்வி: இதுவரையில் எழுதியதன்மூலம் சாத்தித்தது அல்லது அடைவு?

பதில்: குறிப்பிட்ட ஒரு சிக்கலான பிரச்சினையை, எளிய தமிழில் அழகுற விளக்கி கூற முடியும் என செய்து காட்டியுள்ளேன். இருபது முதல் என்பது வயது வரையான, பல தரப்பட்ட வாசகர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். எனது அனுபவத்தில் பார்த்த பல விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளேன். இந்த அனுபவங்களை தொகுப்பதற்குள் ஒரு தலைமுறை கடந்து விட்டது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் எனது எழுத்துகளை ஆர்வத்துடன் வாசிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

* கேள்வி: வலைப்பூக்கள் பதிவர்களின் எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக மட்டும் இருக்கிறதா அல்லது படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி பயன் உள்ளதாக இருக்கின்றனவா ?

பதில்: ஆரம்பத்தில் பதிவர்களின் ஆர்வத்திற்கு வடிகாலாகத் தான் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. பின்னர் அவர்களின் எழுத்துகளால் கவரப்பட்ட வாசகர்கள் அதிகரிக்கும் போது, பதிவரின் கருத்துகள் பலரின் சிந்தனையை தூண்டுகின்றன.


http://poosaram2.blogspot.com/2010/01/blog-post_12.html
http://www.poosaram.tk

Wednesday, May 11, 2011

4 வருடங்கள் பிந்திய "பின்லாடன் மரண அறிவித்தல்"!


அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போரை பிரகடனப் படுத்திய, ஒசாமா பின் லாடன் என்ற சர்வதேச பயங்கரவாதியை கொன்று விட்டதாக ஒபாமா அறிவித்துள்ளார். கொல்லப்பட்ட ஒசாமாவின் உடலை, "இஸ்லாமிய முறைப்படி" கடலில் அடக்கம் செய்து விட்டதாக அறிவித்துள்ளது. இதனால், ஒசாமாவின் மரணம் குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் நேரம் பார்த்து, அமெரிக்க அரசு "பின்லாடன் மரணச் செய்தியை" அறிவித்திருக்க வாய்ப்புண்டு.


-------------------------------------------------------------
மூன்று வருடங்களுக்கு முன்பே ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டதாக, காலஞ் சென்ற பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அப்போது இந்தச் செய்தி பரவலான மக்களை சென்றடையவில்லை. கடந்த வருடம் "கலையகத்தில்" பதிவிட்டிருந்த வீடியோவை, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வலையேற்றம் செய்கிறேன்.


Benazir Bhutto: Bin Laden was Murdered












Bin Laden dead long before US raid

Iran's intelligence minister says the country has reliable information that former head of the al-Qaeda terrorist group Osama bin Laden died of disease some time ago. “We have accurate information that bin Laden died of illness some time ago,” Heidar Moslehi told reporters on the sidelines of a Cabinet meeting on Sunday.

He questioned Washington's claim that bin Laden was killed by American troops in a hiding compound in Pakistan on May 1. “If the US military and intelligence apparatus have really arrested or killed bin Laden, why don't they show him (his dead body) why have they thrown his corpse into the sea?” Moslehi asked. “When we apprehended [former Jundallah ringleader Abdul Malik] Rigi, we showed him and also aired his interview,” ISNA quoted the intelligence chief as saying.

By releasing such false news, he said, the White House seeks to overshadow regional awakening. Moslehi said US officials resort to such PR campaigns to divert attention from their domestic problems as well as their “fragile” economic situation. US President Barack Obama claimed that Osama bin Laden was killed by US forces on May 1 in a hiding compound in Pakistan.

A US official later announced that bin Laden's body was abruptly buried at sea, falsely boasting that his hasty burial was in accordance with the Islamic law, requiring burial within 24 hours of death. However, burial at sea is not an Islamic practice and Islam does not have a timeframe for burial. US officials also claimed their decision for a sea burial was made because no country would accept bin Laden's remains, without elaborating on which countries were actually contacted on the matter. Analysts, however, have raised serious questions as to why US officials did not allow for the application of a DNA test to officially confirm the identity of the corpse before its hasty burial.

(http://www.presstv.ir/detail/178898.html)

Tuesday, May 10, 2011

எத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி

"ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிக்கும் வரையில், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரீகமடையாத காட்டுமிராண்டிகள். ஆப்பிரிக்கர்களுக்கு வரலாறு கிடையாது. ஆப்பிரிக்காவில் எங்கேயுமே வளர்ச்சியடைந்த ராஜ்யங்கள் இருந்ததில்லை." இவ்வாறான பொய்களை வெள்ளையின நிறவெறியர்கள் திட்டமிட்டு பரப்பி வந்துள்ளனர். மூவாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எத்தியோப்பிய மன்னராட்சியை இந்த ஆவணப் படம் ஆராய்கின்றது. ஐரோப்பியர்களுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் யூத, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றியுள்ளனர். எத்தியோப்பிய மன்னர் பரம்பரையினர், விவிலிய நூலில் வரும் சாலமன்-ஷீபாவுக்கு பிறந்த வாரிசின் வழித்தோன்றல்கள் என்று நம்பப் படுகின்றது. பழைய ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதியொன்று, எத்தியோப்பியாவில் இன்றளவும் பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. முதன் முதலாக எத்தியோப்பியாவை "கண்டு பிடித்த" போர்த்துக்கேயர்கள் ஐரோப்பிய பாணி கத்தோலிக்க மதத்தை திணிக்க விரும்பினார்கள். அந்நிய மத மேலாண்மைக்கு எதிரான போராட்டம், எத்தியோப்பியாவின் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைத்தது.











Monday, May 09, 2011

புலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்

நெதர்லாந்து நாட்டின் வட பகுதி மாகாணம். இந்த நாடு இப்போது அபிவிருத்தியடைந்து விட்டது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நாட்டுப்புற ஏழை மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயம் எதுவும் இல்லை. அதனால் ஞாபகச் சின்னமாக ஒரு கிராமத்தை செயற்கையாக உருவாக்கி வைத்துள்ளனர். அங்கே பார்ப்பதற்கு அப்படி எந்த விசேஷமும் இல்லை. வைக்கோலால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட வீடுகள், பழம்பெருமை பேசுகின்றன. நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒரு கிராமத்தில் வசித்திருக்கிறேன். பொழுது போகா விட்டால், அயலில் உள்ள கிராமங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவோம். நவீனமயமாதலின் தாக்கம் சிறு குக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓலை வீடுகள் எல்லாம், வசதியான கல் வீடுகளாகி விட்டன.குறைந்த மாத வருமானம் எடுக்கும் குடும்பம் கூட சொந்தமாக கட்டிய வீட்டில் வாழ்கின்றது. (நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போர் எண்ணிக்கை அதிகம்.) நான் வசித்த கிராமத்தின் மத்தியில் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ தேவாலயம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிராம மக்களை அந்த தேவாலயத்தில் சந்திக்கலாம். நிச்சயமாக, இன்றைய நவீன உலகில் தேவாலயம் செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் தமது செல்வச் செழிப்புக்கு காரணம், ஆண்டவன் அருள் என்று நம்புவோர்கள் இன்றும் அந்த தேவாலயத்திற்கு வருகின்றனர்.

விடுமுறை காலம் என்றால், கிராமத்து மக்கள் பலருக்கு அந்நிய நாடுகளில் இருந்து உறவினர்கள் வந்திருப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா, இந்த நாடுகளில் இருந்து குடும்பத்தோடு வந்திருப்பார்கள். எல்லோரும் அந்த கிராமத்து தேவாலயத்திற்கு வருகை தருவதால், எனக்கும் அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்தை விட்டு சென்ற முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டும் சரளமாக டச்சு மொழி பேசுகின்றனர். அவர்களது பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். அந்த சமூகத்தினரிடம் நான் கண்ட ஒரு பழக்கம் ஆர்வத்தை தூண்டியது. பருவ வயது பெண் பிள்ளைகள் தேவாலயத்தினுள் செல்லும் பொழுது தலைக்கு முக்காடு அணிந்து இருந்தனர். மேற்கொண்டு விசாரித்த பொழுது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான பழக்கம் நிலவியது தெரிய வந்தது. நெதர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள், அந்தப் பழக்கத்தை விடாது கடைப்பிடிக்கின்றனர். ஆனால், தாயகமான நெதர்லாந்தில் அது வழக்கொழிந்து விட்டது.

புலம்பெயர்ந்த சமூகமும், புலம்பெயராமல் நெதர்லாந்திலேயே தங்கி விட்ட சமூகமும் வேறு பல கலாச்சார வேறுபாடுகளை கொண்டிருந்தனர். இன்றைய நெதர்லாந்து ஒரு தாராளவாத நாடாகி விட்டது. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு (வெள்ளையரல்லாத அன்னியர்கள்) சம உரிமை வழங்கப் படுகின்றது. இப்படிப் பல கலாச்சார அதிர்ச்சிகளை புலம்பெயர்ந்த மக்கள் மனதில் இருப்பது தெரிய வந்தது. அதற்கு மாறாக, தாயகத்தில் தங்கி விட்ட மக்கள் இத்தகைய மாற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். உலகம் எவ்வளவோ மாறி விட்டது. நாமும் அதற்கேற்றப மாற வேண்டும், என்பது அவர்கள் கருத்து.

வளர்ச்சி அடைந்த நாடான நெதர்லாந்தில் இருந்து சென்ற புலம்பெயர் சமுதாயத்தின் எண்ணவோட்டம், நமது தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பா எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்று எமது நாடுகள் இருக்கின்றன. அன்று பெருமளவு ஐரோப்பியர்கள் வறுமை காரணமாக தொழில் வாய்ப்பு தேடி, அதிகம் சம்பாதிப்பதற்காக, அல்லது குடும்ப கஷ்டம் காரணமாக புலம் பெயர்ந்து அமெரிக்க கண்டம் சென்றார்கள். யுத்தங்கள் காரணமாக புலம்பெயர்ந்தோரும் உண்டு. (உதாரணம்: யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும்)

தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குறைந்தது இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சிறு குழந்தைகள் என்றால், இன்று பருவ வயதை அடைந்து திருமணம் முடித்திருப்பார்கள். இரு தசாப்தங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்கள் இரண்டாவது தலைமுறையை கண்டு விட்டனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே தாயகம் திரும்பியுள்ளனர். (வதிவிட விசா கிடைக்காதவர்களை குறிப்பிடவில்லை.) அவ்வாறு ஊர் திரும்பியோரும் வியாபார முயற்சியில் முதலீடு செய்யும் நோக்கத்தோடு தான் சென்றுள்ளனர். இருப்பினும் அவர்களது பிள்ளைகள், புலம்பெயர்ந்து வாழும் அந்நிய நாட்டில் காலூன்றி விட்டனர்.

முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், ஊரில் உள்ள உறவினரோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். அதற்கு மாறாக, இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் நண்பர்களையும், புதிய உறவுகளையும் தேடுகிறவர்கள். இவ்வாறு இரு வேறு பாதையில் பிரியும் உறவுச் சிக்கல்கள், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. இவர்களில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள், முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்களே. புலம்பெயர்ந்து செல்லும் முடிவை எடுத்தவர்களும், துணிச்சலுடன் செயற்படுத்தியவர்களும் அவர்களே. இருப்பினும், அவர்கள் என்னென்ன காரணங்களை கூறி புலம்பெயர்ந்தார்களோ, அவை எல்லாம் அவர்கள் காலத்திலேயே காலாவதியாகி விடும்.

முதலாவது தலைமுறையை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது தாயகம் பற்றிய தகவல்களை தமது வாரிசுகளுக்கு கடத்துகின்றனர். இரண்டாவது தலைமுறையின் அரசியலும், உலகம் குறித்த பார்வையும் பெரும்பாலும் அவர்களது பெற்றாரை ஒத்ததாகவே உள்ளது. ஒரு சில படித்த, அல்லது தேடுதல் உள்ள பிள்ளைகள் இதிலே விதிவிலக்கு. இருப்பினும் படித்த இரண்டாம் தலைமுறை, மத்தியதர வர்க்கத்தில் இணையும் வேளை, அடையாளச் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களும் தாய், தந்தையாரின் அரசியலை மெருகூட்டி தமதாக்கிக் கொள்கின்றனர். முதலாவது தலைமுறையை சேர்ந்த பெற்றோரின் அரசியல், உலகப் பார்வை என்ன? அவர்களின் தாயகம் குறித்த புரிதல் என்ன? முதலில் அவற்றை புரிந்து கொண்டால் தான், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறலாம். இந்தக் கட்டுரையில் விசேடமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியே அலசப் படுகின்றது. ஆகவே அவர்களைப் பற்றிய சுருக்கமான மீளாய்வும் அவசியமாகின்றது.

இலங்கையில் தமிழர்களின் புலம்பெயர்ந்த வாழ்வு, இனப்பிரச்சினையின் பின்னர் தான் ஆரம்பமாகியது. முதலில் கொழும்பை மையமாக கொண்ட மத்தியதர வர்க்க தமிழர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் ஒரு காலத்தில் அதிகம் சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தவர்கள், அல்லது லாபம் தரும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள். சிங்களவர்கள், அவர்களது உத்தியோகங்களை, வியாபாரங்களை மட்டுமல்ல, உயிரையும், சொத்துகளையும் பறிக்கும் அபாயம் தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடுவோம் என்று அஞ்சிய தமிழர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஏற்கனவே ஆங்கில அறிவும், கல்வித் தகைமையும் இருந்த காரணத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் இலகுவாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. இவை யாவும் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. இலங்கையில் வாழ்ந்த காலங்களில் கூட அவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இந்தப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமுறை, தன்னை ஐரோப்பியனாக எண்ணத் தலைப்பட்டது. இவர்கள் மத்தியில் அடையாளச் சிக்கலோ, அல்லது தாயகம் நோக்கிய அரசியலோ கிடையாது.

இலங்கையில் இருந்து இரண்டாவது புலப்பெயர்வு எண்பதுகளில் ஆரம்பித்தது. இனப்பிரச்சினை கொதிநிலைக்கு சென்று, இரத்தம் சிந்தும் போர் தொடங்கியதும், நாடு முழுவதும் வசதி படைத்த பலர் புலம்பெயர நினைத்தார்கள். பாதுகாப்புக்காக வேறொரு இடத்திற்கு கூட இடம்பெயர வழியற்ற நிலையில் இருந்த மக்கள் போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும், அவர்கள் அனுப்பும் பணத்தில் கொழும்பிலோ, அல்லது தமிழ் நாட்டிலோ பாதுகாப்பை தேடிக் கொண்டவர்கள், சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரிவினராக உள்ளனர். இவர்கள் முன்னர் குறிப்பிட்ட மேட்டுக்குடித் தமிழர்கள் போல ஐரோப்பியமயப் பட்டவர்களல்ல. மாறாக நாட்டுப்புறங்களில் பாரம்பரியம் பேணிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களது தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்பன அவர்களது இயல்பான வாழ்க்கைமுறை சார்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர், சில ஏக்கர் நிலமாவது சொந்தமாக வைத்திருந்தவர்கள். விவசாயம், அரசாங்க உத்தியோகம், அல்லது சிறு வணிகம் மூலம் கொஞ்சம் பணமாவது சேமிப்பில் வைத்திருந்தவர்கள். சமூக விஞ்ஞானப் பார்வையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த போதிலும், மத்தியதர வாழ்க்கை வசதிகளை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தவர்கள். புலம்பெயர் வாழ்வு, இந்த சமூகத்தில் இருந்து பல "புதுப் பணக்காரர்களை" தோற்றுவித்திருந்தது. ஒரு நாட்டில் புதுப்பணக்கார வர்க்கத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. மண் வாசனை அறிந்தவர்கள். அதனால் சிறிதளவு மூலதனம் சேர்த்தாலும், அதைக் கொண்டு பிறந்த மண்ணில் தமது தரத்தை உயர்த்தப் பார்ப்பார்கள்.

ஒரு சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வித்தியாசம் அல்ல. இரண்டு பிரிவுமே ஒன்றில் மற்றொன்று தங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் இடையிலான உறவும் அவ்வாறானது தான். பணக்கார நாடுகள் அபிவிருத்திக்கு நிதி வழங்கினால் தான் ஏழை நாடுகள் வாழ முடியும், என்பதை ஒரு சாதாரண விடயமாக கருதிக் கொள்கிறார்கள். பணக்கார நாடுகளுக்கு சம்பாதிக்க சென்றவர்களுக்கும் அத்தகைய சிந்தனை இயல்பாகவே வந்து விடுகின்றது. புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து வரும் பணத்தால், தாயகத்து உறவுகளின் வறுமை நிலை அகன்றது.

முதலில் குடும்ப கஷ்டங்களை போக்குவது என்பதில் ஆரம்பித்து, பின்னர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் தொடர்கின்றது. தாயகத்தில் வாழும் உறவுகள், புலம்பெயர்ந்து வாழ்வோரை பணம் காய்க்கும் மரமாக கருதுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்பவர் குடும்பத்தில் வயதில் இளையவர் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுள் பெரியவராக மதிக்கப் படுகின்றார். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷமும், மனத்திருப்தியும் அவர்களை தொடர்ந்து பணம் அனுப்ப உந்தித் தள்ளுகின்றது. அதாவது ஒரு பெரிய குடும்பத்தைக் கூட வழிநடத்தும் கடிவாளம் தனது கையில் என்று நினைப்பதில் பெருமைப் படுகிறார். சாதாரண பாச உறவு, இங்கே பொருள் சார்ந்த உறவாக மாற்றப் படுகின்றது.

மேலை நாடுகளில் உள்ளதைப் போல, இலங்கையில் அடித்தட்டு வர்க்க மக்களும் வசதியாக வாழும் வகை செய்து தரப் படவில்லை. வலியது பிழைக்கும் என்ற தத்துவத்தின் படி, எந்த வழியிலாவது பொருளீட்டத் தெரிந்தவர் பணக்காரனாகலாம். நேர்மையாக உழைத்து பணம் சேர்க்க நினைக்கும் சாமானியர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் புரிவது ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, பணம் அனுப்பி தமது உறவுகளின் வாழ்வையும் வளப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் அரசின் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்க உதவுகின்றது. அதாவது வறுமை ஒழிப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு, ஊதிய அதிகரிப்பு ஆகியனவற்றை நடைமுறைப் படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. குறைந்த பட்சம் ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவு போன்ற ஏற்கனவே உள்ள அரச செலவினங்கள் கூட ஒருவரின் வாழ்க்கையை கொண்டு நடத்த போதுமானது அல்ல. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டுகின்றது. இது ஒரு வகையில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றது. இன்று இலங்கையின் இரண்டாவது அந்நிய செலாவணி புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தே கிடைக்கின்றது.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு நிரந்தரமானதல்ல. முதலாவது தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் மட்டுமே தாயகத்திற்கு பணம் அனுப்புவது குறிப்பிடத் தக்கது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர, இலங்கையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். அவர்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை, தமது தேவைகளுக்கு மாத்திரமே செலவிடுகின்றனர். அது மட்டுமல்ல, "ஏன் நீங்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும்?" என்று தமது தாய், தந்தையரைக் கேட்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பிள்ளைகள் வாழ்ந்த சூழல் அப்படி.

மேலைத்தேய நாடுகளில் ஒரு தனி மனிதனின் பாதுகாப்பை அரசு பொறுப்பெடுக்கின்றது. வேலையற்றவர் கூட தனக்கு தேவையானதை வாங்கும் வல்லமையைக் கொண்டுள்ளார். பிள்ளைகளுக்கு வறிய நாடுகளின் பொருளாதார பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. பெற்றோரும் தாயக உறவுகளுக்கு நிதி வழங்கும் சக்தி மட்டுப் படுத்தப் பட்டதாக உணருகின்றனர். இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிருப்பவர்கள், எதிர்காலத்திலும் அது சாத்தியப்படுமா எனக் கவலையுறுகின்றனர். அதற்காக புதிய உழைப்பாளிகளை இலங்கையில் இருந்து அனுப்ப விரும்புகின்றனர். இவ்வளவு காலமும் அப்படித் தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது மேற்குலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. அவர்கள் புதிய குடியேற்றக்காரரை ஏற்கும் நிலையில் இல்லை.

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஐரோப்பிய இனத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. ஒற்றுமை மொழி, கலாச்சாரம் சார்ந்தது. புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் தமது உணவு, உடை, மதப் பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை தொடரவே விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அது தான் "சிறந்த கலாச்சாரம்". ஆனால் இது எவ்வளவு தூரம் நவீனமடைதலுக்கு எதிர்த் திசையில் போகின்றது? கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தேவாலயத்திற்கு முக்காடு அணிந்து செல்லும் பெண்களை உதாரணமாக குறிப்பிடலாம். புலம்பெயர் மக்களில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளில் கூட தொடரும் கலாச்சாரக் கூறு மதம் மட்டுமே. (கடவுளுக்கு எல்லோரும் பயம்.) இன்றைக்கும் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ், பிஜி ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஐரோப்பியமயப் பட்டாலும், மதத்தால் இந்துக்களாக இருக்கின்றனர். ஐரோப்பாவில் அல்கைதா எதிர்ப்பு பிரச்சாரம் கூட, இரண்டாவது தலைமுறை முஸ்லிம் இளைஞர்களை குறி வைக்கின்றது. அதற்குக் காரணம், மதம் புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்க உதவுகின்றது என்பது தான்.

புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள் அவர்களின் வரலாறு சார்ந்தது. அது காலனிய காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதற்கு முன்னரும் மக்கள் புலம்பெயர்ந்தார்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்ததந்த நாட்டின் மொழி, கலாச்சாரங்களை உள்வாங்கி இரண்டறக் கலந்து விட்டனர். காலனிய காலத்திற்கு முன்னர், புலம்பெயர் சமூகம் ஒன்றின் தேவை குறித்து யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. (ஐரோப்பாவில் யூதர், ஜிப்சி நாடோடிகளின் பிரச்சினை விதிவிலக்கு. அதற்கான காரணங்களும் வேறு.) காலனிய ஆட்சியாளர்கள், புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்துள்ளனர். அதற்கு காரணம், ஒரு காலனியில் எஜமானின் மக்களும், அடிமை மக்களும் ஒன்று கலக்கக் கூடாது என்பதில் அவதானமாக இருந்துள்ளனர்.

இரண்டு வகை மக்களுக்கும் இடையில் பெயரிடுவதில் கூட வித்தியாசம் உண்டு. ஐரோப்பிய கலாச்சாரத்தின் படி, ஒருவரின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் பரம்பரை, உறவினர்கள் போன்ற விபரங்களை இலகுவாக அறியலாம். இன்றைக்கும் வெள்ளை அமெரிக்கர்களின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் முன்னோர்கள் இத்தாலியிலிருந்தா, கிரீசிலிருந்தா, அயர்லாந்திலிருந்தா வந்தனர் என்பதை அறியலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு, தமது மூதாதையர் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருந்து வந்தனர் என்பது தெரியாது. காலனிய அடிமைப் படுத்தப் பட்ட மக்கள், எஜமானின் கலாச்சாரமே சிறந்ததாக கருதுவார்கள்.


(இலங்கையில் இருந்து வெளிவரும் "வணக்கம்" சஞ்சிகைக்காக எழுதப்பட்டது.)