Monday, May 30, 2011

தோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா

"ஏகாதிபத்தியம் எங்கே இருக்கிறது? நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களது தட்டுகளைப் பாருங்கள். இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, தானியங்களில் இருக்கிறது : ஏகாதிபத்தியம்!" - தோமஸ் சங்கரா


தோமஸ் சங்கரா, பிரான்சின் காலனியான பூர்கினா பாசோவின் விடுதலைக்காக போராடி, அதன் முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார். மார்க்சிய- லெனினிச வாதியான சங்கரா, சேகுவேரா போன்றதொரு சர்வதேசியவாதி. கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். பூர்கினா பாசோவில் சோஷலிச பொருளாதாரத்தை, பொதுவுடைமை தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த புரட்சியாளர். 

ஆப்பிரிக்காவின் சேகுவேரா என்று அழைக்கப் பட்ட, பூர்கினா பாசோ மக்களின் மனங்கவர்ந்த ஜனாதிபதி தோமஸ் சங்கரா, 15 அக்டோபர் 1987, பிரெஞ்சு ஏகாதிபத்திய கைக்கூலிகளினால் படுகொலை செய்யப் பட்டார். அவரை நினைவுபடுத்தும் சின்னங்கள், பொருட்கள் யாவும் அழிக்கப் பட்டன.

1982 ம் ஆண்டு, இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தோமஸ் சங்கரா செய்த முதல் வேலை, அதன் காலனிய கால பெயரை மாற்றி, பூர்கினா பாசோ (நியாயவான்களின் நாடு) என்று பெயரிட்டது தான். தொடர்ந்து, "மார்க்சிய - லெனினிசம்" தேசத்தை வழிநடத்தும் சித்தாந்தமாக இருக்கும் என்று அறிவித்தார். சர்வதேச மட்டத்தில் சோஷலிச நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். 

அதே நேரம், முன்னாள் காலனிய எஜமான் பிரான்சுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். அந்நிய நாடுகளிடம் கடனுதவி கேட்டு கையேந்தாமல், உள்நாட்டு வளங்களை கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார். விவசாயம் செய்பவர்களுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டதால், பஞ்சம், பசி ஒழிக்கப் பட்டது.

சங்கராவின் விவசாய சீர்திருத்தங்களை பற்றி, ஐ.நா. அதிகாரிகளே தமது அறிக்கைகளில் புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். பூர்கினா பாசோ ஒரு சோஷலிச நாடாக இருந்த நான்கு வருடங்களில், பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தது. இன்று முதலாளித்துவ பொருளாதாரம் அதனை ஆப்பிரிக்காவின் மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றாக்கியுள்ளது. 

அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியதன் மூலம், எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 90% ஆக உயர்ந்தது. அதைத் தவிர, அனைத்து மக்களுக்கும் இலவச வீட்டு திட்டம், இலவச மருத்துவ வசதி போன்றவற்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டில் இருந்து பெண்கள் விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார். பெண்களும் படித்து உத்தியோகம் பார்க்க ஊக்குவித்தார். 

நாடு முழுவதும், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி அமைக்கப்பட்டது. இலஞ்ச ஊழல் குற்றம் புரிந்த அரசு அதிகாரிகள், மக்கள் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னர் தண்டிக்கப் பட்டனர். கமிட்டிகளுக்குள் நிலவிய தனிநபர் குரோதங்கள், புரட்சியை பின்னடைவுக்குள்ளாக்கின.

பூர்கினா பாசொவின் முன்னாள் காலனியாதிக்க எஜமான் பிரான்சுடனான, தொடர்புகளை முற்றாக துண்டித்துக் கொண்டார். பொதுவாக மூன்றாமுலக நாடுகளின் பலம் மிக்க தலைவர் கூட, செய்யத் துணியாத செயல் அது. சேகுவேராவின் இருபதாண்டு நினைவு தினமே, தாமஸ் சங்கராவின் கடைசி உரையாக அமைந்து விட்டது. 15 October 1987, ஒரு நேர்மையான புரட்சியாளர், சதிகாரர்களால் படுகொலை செய்யப்பட்டார். (Italian revelations on the assassination of Thomas Sankara)

 "முன்னாள் காலனிய எஜமானர்கள், ஆப்பிரிக்க நாடுகளை தமது நிதி மூலதன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்குடன் தான், கடனுதவிகளை வழங்குகின்றனர்" என்று சங்கரா கூறி வந்தார். "ஆப்பிரிக்க நாடுகள் ஒன்று சேர்ந்து, கடனுதவியை மறுக்க வேண்டும். பூர்கினா பாசோ மட்டும் அதைச் செய்தால், அடுத்த வருடம் நான் இங்கே இருக்க மாட்டேன்..." என்று 1987 ம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் மகாநாட்டில் உரையாற்றினார். அதுவே அவரது இறுதி உரையாக அமைந்தது.

நவ காலனிய மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கத் துணிந்த தோமஸ் சங்கராவின் கதையை முடிப்பதற்கு, பிரான்ஸ் இரகசிய சதித் திட்டம் தீட்டி இருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர். பூர்சினா பாசோ இராணுவத்தில் இருந்த கைக்கூலிகளை கொண்டு ஒரு சதிப்புரட்சி நடத்தப் பட்டது. சங்கரா தனது பதவிக்காலத்தில், பெருமளவு சொத்துக்களை குவித்து வைத்திருந்ததாக எதிரிகள் அவதூறு செய்து வந்தனர். ஆனால், தோமஸ் சங்கரா கொலை செய்யப் பட்ட நேரம், ஒரு சல்லிக் காசு கூட இருக்கவில்லை. அவரிடம் இருந்த சொத்துக்கள் ஒரு பழைய சைக்கிளும், சில புத்தகங்களும் மட்டுமே.

சங்கராவின் புரட்சியை அழித்த சதிகாரர்களின் ஆட்சி, நீண்ட காலம் நிலைக்கவில்லை. அரபுலக மக்கள் எழுச்சியை கண்ட பூர்கினா பாசோ மக்கள், இன்று அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகின்றனர். இராணுவ வீரர்கள் கூட கிளர்ச்சி செய்துள்ளனர். இன்றைய பூர்கினா பாசோ புரட்சியானது, சங்கராவின் மார்க்சியத்தை மீட்பதற்கானது அல்ல. இருப்பினும் சர்வதேச ஊடகங்கள் பூர்கினாபாசோ மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்து வருகின்றன. தோழர் தாமஸ் சங்கராவின் வாழ்வையும், புரட்சியையும் ஆய்வு செய்யும் ஆவணப் படம் இது.



ஆவணப் படத்தை முழுமையாக பார்ப்பதற்கு:
Thomas Sankara :The Upright Man https://www.youtube.com/watch?v=J5USbA701SI




No comments:

Post a Comment