Monday, May 09, 2011

புலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்

நெதர்லாந்து நாட்டின் வட பகுதி மாகாணம். இந்த நாடு இப்போது அபிவிருத்தியடைந்து விட்டது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நாட்டுப்புற ஏழை மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயம் எதுவும் இல்லை. அதனால் ஞாபகச் சின்னமாக ஒரு கிராமத்தை செயற்கையாக உருவாக்கி வைத்துள்ளனர். அங்கே பார்ப்பதற்கு அப்படி எந்த விசேஷமும் இல்லை. வைக்கோலால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட வீடுகள், பழம்பெருமை பேசுகின்றன. நெதர்லாந்துக்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒரு கிராமத்தில் வசித்திருக்கிறேன். பொழுது போகா விட்டால், அயலில் உள்ள கிராமங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டு வருவோம். நவீனமயமாதலின் தாக்கம் சிறு குக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓலை வீடுகள் எல்லாம், வசதியான கல் வீடுகளாகி விட்டன.குறைந்த மாத வருமானம் எடுக்கும் குடும்பம் கூட சொந்தமாக கட்டிய வீட்டில் வாழ்கின்றது. (நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போர் எண்ணிக்கை அதிகம்.) நான் வசித்த கிராமத்தின் மத்தியில் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ தேவாலயம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கிராம மக்களை அந்த தேவாலயத்தில் சந்திக்கலாம். நிச்சயமாக, இன்றைய நவீன உலகில் தேவாலயம் செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் தமது செல்வச் செழிப்புக்கு காரணம், ஆண்டவன் அருள் என்று நம்புவோர்கள் இன்றும் அந்த தேவாலயத்திற்கு வருகின்றனர்.

விடுமுறை காலம் என்றால், கிராமத்து மக்கள் பலருக்கு அந்நிய நாடுகளில் இருந்து உறவினர்கள் வந்திருப்பார்கள். தென் ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா, இந்த நாடுகளில் இருந்து குடும்பத்தோடு வந்திருப்பார்கள். எல்லோரும் அந்த கிராமத்து தேவாலயத்திற்கு வருகை தருவதால், எனக்கும் அவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்தை விட்டு சென்ற முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டும் சரளமாக டச்சு மொழி பேசுகின்றனர். அவர்களது பிள்ளைகள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். அந்த சமூகத்தினரிடம் நான் கண்ட ஒரு பழக்கம் ஆர்வத்தை தூண்டியது. பருவ வயது பெண் பிள்ளைகள் தேவாலயத்தினுள் செல்லும் பொழுது தலைக்கு முக்காடு அணிந்து இருந்தனர். மேற்கொண்டு விசாரித்த பொழுது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான பழக்கம் நிலவியது தெரிய வந்தது. நெதர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள், அந்தப் பழக்கத்தை விடாது கடைப்பிடிக்கின்றனர். ஆனால், தாயகமான நெதர்லாந்தில் அது வழக்கொழிந்து விட்டது.

புலம்பெயர்ந்த சமூகமும், புலம்பெயராமல் நெதர்லாந்திலேயே தங்கி விட்ட சமூகமும் வேறு பல கலாச்சார வேறுபாடுகளை கொண்டிருந்தனர். இன்றைய நெதர்லாந்து ஒரு தாராளவாத நாடாகி விட்டது. மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு (வெள்ளையரல்லாத அன்னியர்கள்) சம உரிமை வழங்கப் படுகின்றது. இப்படிப் பல கலாச்சார அதிர்ச்சிகளை புலம்பெயர்ந்த மக்கள் மனதில் இருப்பது தெரிய வந்தது. அதற்கு மாறாக, தாயகத்தில் தங்கி விட்ட மக்கள் இத்தகைய மாற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். உலகம் எவ்வளவோ மாறி விட்டது. நாமும் அதற்கேற்றப மாற வேண்டும், என்பது அவர்கள் கருத்து.

வளர்ச்சி அடைந்த நாடான நெதர்லாந்தில் இருந்து சென்ற புலம்பெயர் சமுதாயத்தின் எண்ணவோட்டம், நமது தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பா எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்று எமது நாடுகள் இருக்கின்றன. அன்று பெருமளவு ஐரோப்பியர்கள் வறுமை காரணமாக தொழில் வாய்ப்பு தேடி, அதிகம் சம்பாதிப்பதற்காக, அல்லது குடும்ப கஷ்டம் காரணமாக புலம் பெயர்ந்து அமெரிக்க கண்டம் சென்றார்கள். யுத்தங்கள் காரணமாக புலம்பெயர்ந்தோரும் உண்டு. (உதாரணம்: யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும்)

தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குறைந்தது இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சிறு குழந்தைகள் என்றால், இன்று பருவ வயதை அடைந்து திருமணம் முடித்திருப்பார்கள். இரு தசாப்தங்களுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்கள் இரண்டாவது தலைமுறையை கண்டு விட்டனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே தாயகம் திரும்பியுள்ளனர். (வதிவிட விசா கிடைக்காதவர்களை குறிப்பிடவில்லை.) அவ்வாறு ஊர் திரும்பியோரும் வியாபார முயற்சியில் முதலீடு செய்யும் நோக்கத்தோடு தான் சென்றுள்ளனர். இருப்பினும் அவர்களது பிள்ளைகள், புலம்பெயர்ந்து வாழும் அந்நிய நாட்டில் காலூன்றி விட்டனர்.

முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், ஊரில் உள்ள உறவினரோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். அதற்கு மாறாக, இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் நண்பர்களையும், புதிய உறவுகளையும் தேடுகிறவர்கள். இவ்வாறு இரு வேறு பாதையில் பிரியும் உறவுச் சிக்கல்கள், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. இவர்களில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள், முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்களே. புலம்பெயர்ந்து செல்லும் முடிவை எடுத்தவர்களும், துணிச்சலுடன் செயற்படுத்தியவர்களும் அவர்களே. இருப்பினும், அவர்கள் என்னென்ன காரணங்களை கூறி புலம்பெயர்ந்தார்களோ, அவை எல்லாம் அவர்கள் காலத்திலேயே காலாவதியாகி விடும்.

முதலாவது தலைமுறையை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது தாயகம் பற்றிய தகவல்களை தமது வாரிசுகளுக்கு கடத்துகின்றனர். இரண்டாவது தலைமுறையின் அரசியலும், உலகம் குறித்த பார்வையும் பெரும்பாலும் அவர்களது பெற்றாரை ஒத்ததாகவே உள்ளது. ஒரு சில படித்த, அல்லது தேடுதல் உள்ள பிள்ளைகள் இதிலே விதிவிலக்கு. இருப்பினும் படித்த இரண்டாம் தலைமுறை, மத்தியதர வர்க்கத்தில் இணையும் வேளை, அடையாளச் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களும் தாய், தந்தையாரின் அரசியலை மெருகூட்டி தமதாக்கிக் கொள்கின்றனர். முதலாவது தலைமுறையை சேர்ந்த பெற்றோரின் அரசியல், உலகப் பார்வை என்ன? அவர்களின் தாயகம் குறித்த புரிதல் என்ன? முதலில் அவற்றை புரிந்து கொண்டால் தான், புலம்பெயர்ந்த தமிழரின் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறலாம். இந்தக் கட்டுரையில் விசேடமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியே அலசப் படுகின்றது. ஆகவே அவர்களைப் பற்றிய சுருக்கமான மீளாய்வும் அவசியமாகின்றது.

இலங்கையில் தமிழர்களின் புலம்பெயர்ந்த வாழ்வு, இனப்பிரச்சினையின் பின்னர் தான் ஆரம்பமாகியது. முதலில் கொழும்பை மையமாக கொண்ட மத்தியதர வர்க்க தமிழர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் ஒரு காலத்தில் அதிகம் சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தவர்கள், அல்லது லாபம் தரும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள். சிங்களவர்கள், அவர்களது உத்தியோகங்களை, வியாபாரங்களை மட்டுமல்ல, உயிரையும், சொத்துகளையும் பறிக்கும் அபாயம் தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, பாதிக்கபடுவோம் என்று அஞ்சிய தமிழர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஏற்கனவே ஆங்கில அறிவும், கல்வித் தகைமையும் இருந்த காரணத்தால், புலம்பெயர்ந்த நாட்டில் இலகுவாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. இவை யாவும் ஆங்கிலம் பேசும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. இலங்கையில் வாழ்ந்த காலங்களில் கூட அவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இந்தப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமுறை, தன்னை ஐரோப்பியனாக எண்ணத் தலைப்பட்டது. இவர்கள் மத்தியில் அடையாளச் சிக்கலோ, அல்லது தாயகம் நோக்கிய அரசியலோ கிடையாது.

இலங்கையில் இருந்து இரண்டாவது புலப்பெயர்வு எண்பதுகளில் ஆரம்பித்தது. இனப்பிரச்சினை கொதிநிலைக்கு சென்று, இரத்தம் சிந்தும் போர் தொடங்கியதும், நாடு முழுவதும் வசதி படைத்த பலர் புலம்பெயர நினைத்தார்கள். பாதுகாப்புக்காக வேறொரு இடத்திற்கு கூட இடம்பெயர வழியற்ற நிலையில் இருந்த மக்கள் போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோரும், அவர்கள் அனுப்பும் பணத்தில் கொழும்பிலோ, அல்லது தமிழ் நாட்டிலோ பாதுகாப்பை தேடிக் கொண்டவர்கள், சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரிவினராக உள்ளனர். இவர்கள் முன்னர் குறிப்பிட்ட மேட்டுக்குடித் தமிழர்கள் போல ஐரோப்பியமயப் பட்டவர்களல்ல. மாறாக நாட்டுப்புறங்களில் பாரம்பரியம் பேணிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களது தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்பன அவர்களது இயல்பான வாழ்க்கைமுறை சார்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர், சில ஏக்கர் நிலமாவது சொந்தமாக வைத்திருந்தவர்கள். விவசாயம், அரசாங்க உத்தியோகம், அல்லது சிறு வணிகம் மூலம் கொஞ்சம் பணமாவது சேமிப்பில் வைத்திருந்தவர்கள். சமூக விஞ்ஞானப் பார்வையில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த போதிலும், மத்தியதர வாழ்க்கை வசதிகளை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தவர்கள். புலம்பெயர் வாழ்வு, இந்த சமூகத்தில் இருந்து பல "புதுப் பணக்காரர்களை" தோற்றுவித்திருந்தது. ஒரு நாட்டில் புதுப்பணக்கார வர்க்கத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. மண் வாசனை அறிந்தவர்கள். அதனால் சிறிதளவு மூலதனம் சேர்த்தாலும், அதைக் கொண்டு பிறந்த மண்ணில் தமது தரத்தை உயர்த்தப் பார்ப்பார்கள்.

ஒரு சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வித்தியாசம் அல்ல. இரண்டு பிரிவுமே ஒன்றில் மற்றொன்று தங்கியுள்ளது. ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் இடையிலான உறவும் அவ்வாறானது தான். பணக்கார நாடுகள் அபிவிருத்திக்கு நிதி வழங்கினால் தான் ஏழை நாடுகள் வாழ முடியும், என்பதை ஒரு சாதாரண விடயமாக கருதிக் கொள்கிறார்கள். பணக்கார நாடுகளுக்கு சம்பாதிக்க சென்றவர்களுக்கும் அத்தகைய சிந்தனை இயல்பாகவே வந்து விடுகின்றது. புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து வரும் பணத்தால், தாயகத்து உறவுகளின் வறுமை நிலை அகன்றது.

முதலில் குடும்ப கஷ்டங்களை போக்குவது என்பதில் ஆரம்பித்து, பின்னர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் தொடர்கின்றது. தாயகத்தில் வாழும் உறவுகள், புலம்பெயர்ந்து வாழ்வோரை பணம் காய்க்கும் மரமாக கருதுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்பவர் குடும்பத்தில் வயதில் இளையவர் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுள் பெரியவராக மதிக்கப் படுகின்றார். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷமும், மனத்திருப்தியும் அவர்களை தொடர்ந்து பணம் அனுப்ப உந்தித் தள்ளுகின்றது. அதாவது ஒரு பெரிய குடும்பத்தைக் கூட வழிநடத்தும் கடிவாளம் தனது கையில் என்று நினைப்பதில் பெருமைப் படுகிறார். சாதாரண பாச உறவு, இங்கே பொருள் சார்ந்த உறவாக மாற்றப் படுகின்றது.

மேலை நாடுகளில் உள்ளதைப் போல, இலங்கையில் அடித்தட்டு வர்க்க மக்களும் வசதியாக வாழும் வகை செய்து தரப் படவில்லை. வலியது பிழைக்கும் என்ற தத்துவத்தின் படி, எந்த வழியிலாவது பொருளீட்டத் தெரிந்தவர் பணக்காரனாகலாம். நேர்மையாக உழைத்து பணம் சேர்க்க நினைக்கும் சாமானியர்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் புரிவது ஒரு வரப்பிரசாதம். இவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, பணம் அனுப்பி தமது உறவுகளின் வாழ்வையும் வளப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் அரசின் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்க உதவுகின்றது. அதாவது வறுமை ஒழிப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு, ஊதிய அதிகரிப்பு ஆகியனவற்றை நடைமுறைப் படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை. குறைந்த பட்சம் ஓய்வூதியம், வேலையற்றோர் கொடுப்பனவு போன்ற ஏற்கனவே உள்ள அரச செலவினங்கள் கூட ஒருவரின் வாழ்க்கையை கொண்டு நடத்த போதுமானது அல்ல. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டுகின்றது. இது ஒரு வகையில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றது. இன்று இலங்கையின் இரண்டாவது அந்நிய செலாவணி புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தே கிடைக்கின்றது.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு நிரந்தரமானதல்ல. முதலாவது தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் மட்டுமே தாயகத்திற்கு பணம் அனுப்புவது குறிப்பிடத் தக்கது. இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள், விதிவிலக்காக ஒரு சிலரைத் தவிர, இலங்கையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். அவர்கள் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை, தமது தேவைகளுக்கு மாத்திரமே செலவிடுகின்றனர். அது மட்டுமல்ல, "ஏன் நீங்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும்?" என்று தமது தாய், தந்தையரைக் கேட்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பிள்ளைகள் வாழ்ந்த சூழல் அப்படி.

மேலைத்தேய நாடுகளில் ஒரு தனி மனிதனின் பாதுகாப்பை அரசு பொறுப்பெடுக்கின்றது. வேலையற்றவர் கூட தனக்கு தேவையானதை வாங்கும் வல்லமையைக் கொண்டுள்ளார். பிள்ளைகளுக்கு வறிய நாடுகளின் பொருளாதார பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை. பெற்றோரும் தாயக உறவுகளுக்கு நிதி வழங்கும் சக்தி மட்டுப் படுத்தப் பட்டதாக உணருகின்றனர். இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிருப்பவர்கள், எதிர்காலத்திலும் அது சாத்தியப்படுமா எனக் கவலையுறுகின்றனர். அதற்காக புதிய உழைப்பாளிகளை இலங்கையில் இருந்து அனுப்ப விரும்புகின்றனர். இவ்வளவு காலமும் அப்படித் தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது மேற்குலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. அவர்கள் புதிய குடியேற்றக்காரரை ஏற்கும் நிலையில் இல்லை.

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஐரோப்பிய இனத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. ஒற்றுமை மொழி, கலாச்சாரம் சார்ந்தது. புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் தமது உணவு, உடை, மதப் பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை தொடரவே விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்த வரை, அது தான் "சிறந்த கலாச்சாரம்". ஆனால் இது எவ்வளவு தூரம் நவீனமடைதலுக்கு எதிர்த் திசையில் போகின்றது? கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தேவாலயத்திற்கு முக்காடு அணிந்து செல்லும் பெண்களை உதாரணமாக குறிப்பிடலாம். புலம்பெயர் மக்களில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளில் கூட தொடரும் கலாச்சாரக் கூறு மதம் மட்டுமே. (கடவுளுக்கு எல்லோரும் பயம்.) இன்றைக்கும் தென் ஆபிரிக்கா, மொரீசியஸ், பிஜி ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஐரோப்பியமயப் பட்டாலும், மதத்தால் இந்துக்களாக இருக்கின்றனர். ஐரோப்பாவில் அல்கைதா எதிர்ப்பு பிரச்சாரம் கூட, இரண்டாவது தலைமுறை முஸ்லிம் இளைஞர்களை குறி வைக்கின்றது. அதற்குக் காரணம், மதம் புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்க உதவுகின்றது என்பது தான்.

புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள் அவர்களின் வரலாறு சார்ந்தது. அது காலனிய காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதற்கு முன்னரும் மக்கள் புலம்பெயர்ந்தார்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்ததந்த நாட்டின் மொழி, கலாச்சாரங்களை உள்வாங்கி இரண்டறக் கலந்து விட்டனர். காலனிய காலத்திற்கு முன்னர், புலம்பெயர் சமூகம் ஒன்றின் தேவை குறித்து யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. (ஐரோப்பாவில் யூதர், ஜிப்சி நாடோடிகளின் பிரச்சினை விதிவிலக்கு. அதற்கான காரணங்களும் வேறு.) காலனிய ஆட்சியாளர்கள், புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்துள்ளனர். அதற்கு காரணம், ஒரு காலனியில் எஜமானின் மக்களும், அடிமை மக்களும் ஒன்று கலக்கக் கூடாது என்பதில் அவதானமாக இருந்துள்ளனர்.

இரண்டு வகை மக்களுக்கும் இடையில் பெயரிடுவதில் கூட வித்தியாசம் உண்டு. ஐரோப்பிய கலாச்சாரத்தின் படி, ஒருவரின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் பரம்பரை, உறவினர்கள் போன்ற விபரங்களை இலகுவாக அறியலாம். இன்றைக்கும் வெள்ளை அமெரிக்கர்களின் குடும்பப் பெயரைக் கொண்டு, அவரின் முன்னோர்கள் இத்தாலியிலிருந்தா, கிரீசிலிருந்தா, அயர்லாந்திலிருந்தா வந்தனர் என்பதை அறியலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு, தமது மூதாதையர் ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருந்து வந்தனர் என்பது தெரியாது. காலனிய அடிமைப் படுத்தப் பட்ட மக்கள், எஜமானின் கலாச்சாரமே சிறந்ததாக கருதுவார்கள்.


(இலங்கையில் இருந்து வெளிவரும் "வணக்கம்" சஞ்சிகைக்காக எழுதப்பட்டது.)

3 comments:

  1. அருமையான பதிவு,
    பல புலம் பெயர் வாழ்வியல் பிரச்சினைகலை அலசியது. மதங்கள் ஒரு அளவிற்கு தனித்துவ கலாச்சாரத்தை பாதுகாப்பது உண்மைதான் என்றாலும் இது பிற்காலத்தில் வாழும் நாட்டில் முரண்பாடுகளை வளர்க்கும் பிரச்சினையாக மாறிவிடும் வாய்ப்பும் உண்டு.
    நன்றி

    ReplyDelete
  2. முதலில் குடும்ப கஷ்டங்களை போக்குவது என்பதில் ஆரம்பித்து, பின்னர் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதில் தொடர்கின்றது. தாயகத்தில் வாழும் உறவுகள், புலம்பெயர்ந்து வாழ்வோரை பணம் காய்க்கும் மரமாக கருதுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்பவர் குடும்பத்தில் வயதில் இளையவர் என்றாலும், குடும்ப உறுப்பினர்களுள் பெரியவராக மதிக்கப் படுகின்றார். இதன் மூலம் கிடைக்கும் சந்தோஷமும், மனத்திருப்தியும் அவர்களை தொடர்ந்து பணம் அனுப்ப உந்தித் தள்ளுகின்றது. அதாவது ஒரு பெரிய குடும்பத்தைக் கூட வழிநடத்தும் கடிவாளம் தனது கையில் என்று நினைப்பதில் பெருமைப் படுகிறார். சாதாரண பாச உறவு, இங்கே பொருள் சார்ந்த உறவாக மாற்றப் படுகின்றது.////

    எங்குமே பணம் வரும் இடத்துக்குத்தான் மதிப்பும் கண்ணீயமும்...

    ReplyDelete
  3. நிதானமான அலசல்!எவர் மனதையும் புண்படுத்தாத நடை!வாழ்த்துக்கள்!சிந்திக்கத் தூண்டுகிறது!

    ReplyDelete