Thursday, August 26, 2010

பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்

பகுதி : இரண்டு)
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஜேர்மனிய தேசிய அரசுக்கும், ஒஸ்மாமானியர்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்தது. அதன் நிமித்தம் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் வந்தது. அதே காலத்தில் தான், ஜேர்மனிய பெற்றோலிய நிபுணர்கள் ஈராக்கில் செய்த ஆராய்ச்சியின் பயனாக நிலத்தடி எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பானது பிற்கால ஈராக்கின் அரசியல்-பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் எதிர்பாராத விதமாக, முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியுற்றது. போரில் ஜெர்மனியை ஆதரித்ததால் துருக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒஸ்மானிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து, அந்நியரின் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. போரில் வெற்றி வாகை சூடிய பிரிட்டனும், பிரான்சும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ஒஸ்மானிய ஆதிக்கத்தில் இருந்த அரபு பிரதேசங்கள் யாவும், ஒன்றில் ஆங்கிலேயரினால் அல்லது பிரெஞ்சுக்காரரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அப்படித்தான் ஈராக் ஆங்கிலேயர் காலனியாகியது.

துருக்கியர் காலத்தில் ஈராக் ஒரே தேசமாக கருதப்படவில்லை. அப்போது அங்கே மூன்று மாகாணங்கள் இருந்தன. (தேசம் என்ற சொல் ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை குறிக்கும்.) ஈராக்கின் தென் பகுதி, குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப் படலாயிற்று. மத்திய ஈராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வட ஈராக் மொசுல் மாகாணம். ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்.) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய் விட்டார்கள். குர்தியரின் தனி நாட்டுக் கோரிக்கை குப்பைக் கூடைக்குள் போனது.

1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு, புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார-கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும், லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும் தான். ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 ல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ, பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப் படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.

எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் முடிசூட்டிக் கொண்ட இளவரசர் காசியின் காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றின. ஈராக் இராணுவம் அரசியலில் தலையிட ஆரம்பித்தது. இரண்டாவது உலகப்போர் காலத்தில் இராணுவ அதிகாரிகள் பிரிட்டனுடனான உறவை துண்டித்து விட்டு, ஜெர்மனியுடன் உறவை ஏற்படுத்தினார்கள். ஏதோ அவர்கள் விருப்பம், என்று பிரிட்டன் விட்டுக் கொடுக்கவில்லை. ஈராக் மீது படையெடுத்தார்கள். பாக்தாத் கடற்கரையில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், ஒரு மாதத்திற்குள்ளேயே பாக்தாத்தை கைப்பற்றி விட்டன. (2003 ம் ஆண்டு சரித்திரம் திரும்பியது. பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்தன.) பாக்தாத்தில் பிரிட்டிஷ் சார்பு பொம்மை அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஒன்று போடப்பட்டது. அதன் பிரகாரம் ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்துறை துரித கதியில் வளர்ந்தது. நிலங்கள் தொடர்பான புதிய சட்டம் ஒன்று நிலவுடமையாளருக்கு சாதகமாக அமைந்தது. சிறிய விவசாயிகளின் நிலங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்கள் தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நகரங்கள் பெருகின. கல்வி கற்ற மத்திய தர வர்க்கம் ஒன்று உருவானது. இந்த வர்க்கம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பொழுது, தமது நாடு நிலப்பிரபுக்களால் ஆளப்படுவதை புரிந்து கொண்டனர். அவர்களது மனக்குமுறலை பிரதிபலிக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது.
மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, நகர்ப்புற தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க விடுதலை குறித்து பேசியதால், பெருமளவு ஷியா முஸ்லிம்களும், குர்து இன மக்களும் கவரப்பட்டனர். இதற்கிடையே அரச குடும்பம் அரசியல் செல்வாக்கு இழந்திருந்தாலும், அவர்களது உல்லாச வாழ்வு பறிபோகவில்லை. ஈராக் அரசு நிலவுடமையாளர்களினதும், பிரிட்டிஷாரினதும் நலன்களை மட்டுமே கவனித்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தன. இராணுவத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவியது.

எகிப்தில் நாசர் தொடங்கி வைத்த அரபு தேசிய அலை ஈராக் கரையை அடைந்தது. 14 ஜூலை 1958 ம் ஆண்டு, பிரிகேடியர் காசிம் தலைமையில் "சுதந்திர அதிகாரிகள்" ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். ஈராக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் 1958 ம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் புரட்சி தான் ஜனநாயகத்திற்கான முதற்படியாகும். அதுவரை காலமும் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்களான பிரிட்டிஷ்காரர்கள், ஈராக்கில் பிற்போக்கு மன்னராட்சியை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் தமது நலன்களைப் பேணும் அரசாங்கத்தை அமைக்கவே விரும்பினார்கள். 1958 ஈராக் புரட்சி ஈராக் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவை மேற்கத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தன.

ஈராக்கில் எண்ணெய் அகழும் தொழிலில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கொள்ளை லாபமீட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு சிறு தொகையை மட்டும் ராயல்ட்டியாக ஈராக் அரசுக்கு வழங்கி வந்தன. அது கூட மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. ஈராக் அரச குடும்பமும், அதிகாரிகளும் எண்ணெய் விற்ற ராயல்ட்டி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தார்கள். புரட்சிக்குப் பின்னர் வந்த அரசாங்கம் ராயல்ட்டி தொகையை அதிகரித்தது. எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உடன்பாட்டுக்கு வரமுடியாமல் போனதால், எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறின. இதனால் ஈராக் அரசு எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது. தகுதியற்ற உள்நாட்டு முகாமைத்துவம் காரணமாக பல பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. பல வருடங்களுக்குப் பின்னர், 1968 ம் ஆண்டு, சோவியத் யூனியன் நிபுணர்களின் வருகைக்கு பின்னரே பெற்றோலிய உற்பத்தி அதிகரித்தது. அதன் பிறகு தான் ஈராக் உலகில் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டது.

1958 புரட்சி ஈராக் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. பெறும் நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. (சதாம் ஹுசைன் காலத்திற்குப் பின்னர் தான் விவசாயத் துறையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தலையெடுத்தன.) பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. பெண்களுக்கு சமவுரிமை கிடைத்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஈராக்கில் மொத்த பணியாட்களில் இருபது வீதமானோர் பெண்கள். இத்தகைய சமூக நலன் சார்ந்த பொருளாதார திட்டங்கள் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை அமுலில் இருந்தன. இடையில் எத்தனையோ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் சமுதாய முன்னேற்றம் தடைப்படவில்லை.

(தொடரும்)

முதலாவது பகுதி:

1. (ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

4 comments:

  1. //அதன் பிரகாரம் ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.//

    "அதன் பிரகாரம் பிரிட்டன், ஈராக்கில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது". என்று இருக்க வேண்டுமல்லவா?

    - அபூ உமர்

    ReplyDelete
  2. ஈராக்கின் கம்முனிச வரலாறு இப்போதுதான் உங்களின் மூலமாக அறியமுடிந்தது நன்றி. அதன் தோற்றம் அதற்கான அவசியம் வளர்ச்சி தொடர்து ஏன் அது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறவில்லை போன்ற விவரங்களோடு ஒரு பதிவிடும் பட்சத்தில், வாசகர்கள் இன்று ஈராக் மக்களின் விடுதலை உணர்வின் வரலாற்று பின்புலத்தையும் போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ள ஏதுவாக அமையும். நன்றி

    ReplyDelete
  3. பாஸ்கர், இந்த தொடர் கட்டுரை ஈராக் வரலாற்றை சுருக்கமாக கூறுகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய தகவல்கள் ஓரளவு மட்டுமே இடம்பெறும்.

    ReplyDelete