Wednesday, August 25, 2010

அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள்

மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

செனிப்பின் கதை இன்னொரு வகையானது. செனிப் கருவுற்றவுடன் அவளைக் காதலித்தவன் கைவிட்டு விட்டான். கல்யாணமாகாமலே குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குடும்பத்திற்கு வேண்டப்படாதவள். பெற்றார் அவளைக் குடிமுழுகி விட்டார்கள். வாழ வழியின்றி நிர்க்கதியாக தவித்த நேரம், ஒரு நண்பி விபச்சாரத் தொழிலை அறிமுகப் படுத்தினாள். செனிப்பை பொறுத்தவரை, மொரோக்கோவில் பாலியல் தொழில் செய்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. "நீங்கள் கருதுவது போல அல்லாது, மொரோக்கோ சமூகம் திறந்த மனப்பான்மை கொண்டது. பகிரங்கமாக விளம்பரம் செய்யாத வரையில் இங்கே எல்லாமே சாத்தியம்." என்று கூறினாள். செனிப்புக்கு புதிய காதலன் ஒருவன் மூலம் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. புதிய காதலன் ஒரு வாடிக்கையாளனாக அறிமுகமானான். அன்பொழுகப் பேசினான். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தான். ஆனால் மொரோக்கோவில் விபச்சாரிகளை காதலிக்கும் ஆண்கள் பலர் ஒன்றில் இலவச பாலுறவுக்காக, அல்லது பணத்திற்காக சுரண்ட நினைக்கின்றனர்.

மொரோக்கோவின் சமூகவியல் அறிஞர் Soumaya Naamane Guesous, பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். அவரது நூலான "அனைத்து வெட்கங்களும் போய் விட்டன. மொரோக்கோவில் பெண்களின் பாலுறவு"(Au-dela de toute pudeur, la sexualite feminine au Maroc), இதுவரை பதினேழு பதிப்புகள் வந்து விட்டன. சுமயா கூறுகிறார்: "மறந்து விடாதீர்கள். மொரோக்கோ கடுமையான இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட நாடாக பேரெடுத்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் பல விடயங்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. அடித்தட்டு ஏழை மக்கள் மத்தியில், இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. இறைவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, அல்லது அவள் ஒருத்தி தானே குடும்பத்தை பார்க்கிறாள் என்றோ பரிதாபப் படுவார்கள்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள், பணக்கார வீட்டு இளைஞர்களின் பாலியல் வெறிக்கு இரையாகின்றனர். அடங்கிப் போக வேண்டிய நிலையில், ஒரு தடவை கர்ப்பமானால் வாழ்க்கையே முடிந்து விடும். அதன் பிறகு, பாலியல் தொழில் செய்து பிழைப்பதை தவிர அந்த அபலைப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை.

முன்பெல்லாம் ஒரு விபச்சாரியை அடையாளம் கண்டுபிடிப்பது இலகு. கவர்ச்சியான தோற்றத்துடன் நகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் காத்திருப்பார்கள். மொரோக்கோவில் அட்லஸ் மலைப் பிரதேசக் கிராமங்கள் சில திறந்த வெளி விபச்சார விடுதிகளாக அறியப்பட்டன. இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், உலகமயமாக்கலும் மரபுவழி விபச்சாரத்திற்கு முடிவு கட்டின. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு பெருகுவதால் அரசாங்கம் வெளிப்படையான பாலியல் தொழிலை அடக்கி விட்டது. அந்த இடத்தில் மேற்குலக மோகமும், உலகமயமாக்கலும் புதிய வகை விபச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நவீன விபச்சாரிகளை, மரபு வழி விபச்சாரிகளைப் போல இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஆச்சாரமான குடும்பப் பெண் போல தோற்றமளிப்பார்கள். பாரிலும், டிஸ்கோதேக்கிலும் சந்திக்கும் பெண்ணுடன் சில நிமிட உரையாடலுக்கு பின்னர் தான், அவள் ஒரு விபச்சாரி என்று தெரிய வரும். செல்லிடத் தொலைபேசி, இணையங்களின் பாவனை, பாலியல் சந்தையை பலரறியா வண்ணம் பரப்பி வருகின்றது. தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக, பாலியல் தொழில் முன்னரை விட பல்கிப் பெருகியுள்ளது.

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல் தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில் ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின் கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத் தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக இருக்கிறார்கள்.

காசாபிளாங்கா நகரில் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்கு போய்ப் பார்த்தால் தெரியும். பணக்கார ஆண்கள் தமது "நண்பிகளுக்கு" நகைகளை பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. டிஸ்கோ நடன விடுதிகள் லாபம் சம்பாதிக்கின்றன. கூட்டிச் செல்லும் டாக்சி ஓட்டுனருக்கு, வழியில் மறிக்கும் போலீஸ்காரருக்கு, அடுக்குமாடி கட்டிட காவலாளிக்கு, ஹோட்டல் வரவேற்ப்பாளருக்கு என்று பலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதைவிட கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள், நகைக் கடைகள் என்பன பக்க விளைவாக லாபம் சம்பாதிக்கின்றன.

இத்தகைய நாகரீக போக்கு வசதியற்ற அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள், தாம் விபச்சாரம் செய்வதாக கூறுவதில்லை. ஆனால் தமது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காக பல ஆண்களுடன் உறவு கொள்கின்றனர். மனேஜர் மட்டத்தில் தொழில் புரியும் படித்த பெண் ஒருவர், பணத்திற்காக உடல் உறவு கொள்வதை ஏற்றுக் கொண்டார். அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் மேல்தட்டு தோற்றப் பொலிவை பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. தனக்கென வாழ்க்கைத்துணையை வைத்திருக்கும் பெண்கள் கூட, மேலதிக பணத் தேவைக்காக வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். மாதாந்த ஊதியத்தை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் அதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.

எண்ணைவள வளைகுடா நாடுகளைச் சேர்ந்த, பணக்கார அரேபிய ஆண்களின் காம வேட்கையை பூர்த்தி செய்யும் இடமாக மொரோக்கோ மாறியுள்ளது. முன்பு லெபனான் அந்தப் பெருமையை பெற்றிருந்தது. தங்களது நாட்டில் தமது பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கும் இந்த வளைகுடா அரேபியர்கள், சுதந்திரமாக திரியும் லெபனான், மொரோக்கோ அழகிகளை வேட்டையாடுகிறார்கள். 1975 ல் இருந்து தீராத உள்நாட்டு யுத்தத்திற்குள் லெபனான் விழுந்து விட்டதால், அவர்கள் தற்போது மொரோக்கொவை குறிவைத்துள்ளனர். இந்த திமிர் பிடித்த பணக்கார வளைகுடா அரேபியர்கள், மொரோக்கோவில் பலரது வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு முறை இரவு விடுதி ஒன்றினுள் புகுந்த சவூதி பணக்காரன், அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்பினான். அதற்காக எல்லா நுளைவுச்சீட்டுகளையும் வாங்கினான். நல்ல வேளையாக அங்கிருந்த மொரோக்கோ பணக்காரன் ஒருவன் நுளைவுச்சீட்டுகளுக்கு இரு மடங்கு விலை கொடுத்து சவூதிக்காரனை விரட்டி விட்டான். பாலியல் தொழிலில் ஈடுபடும் மொரோக்கோ பெண்கள் கூட வளைகுடா வாடிக்கையாளர்களை விரும்புவதில்லை. "ஐரோப்பியர்களும், ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ ஆண்களும் கண்ணியமாக நடத்துவார்கள். பணக்கார வளைகுடா ஆண்கள் எங்களை விலங்குகளாக கருதுகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கலாம். ஆனால் எங்களை பொம்மை போலத் தான் நடத்துவார்கள்."

(நன்றி : NRC Handelsblad, 24 aug. 2010)

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை.)

13 comments:

  1. உடலை விற்றுப் பிழைப்பவர், பெண்ணோ ஆணோ, இப்படித் தான் கையாளப்படுகிறார்கள். எந்த நாட்டிலும் இதே நிலை தான் என்று நினைக்கிறேன். என்றாலும் பதினைந்து வயது மிகவும் பாதிக்கிறது.

    ReplyDelete
  2. பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது//
    இது சாத்தியமா?

    ReplyDelete
  3. நண்பர் கலையரசன்,வணக்கம்.
    பாலியல் தொழில் என்பது வறுமை என்ற காரணத்தை தாண்டி அரசியல்,மற்றும் வணிகத்துக்கும் தேவை என ஆகி கொண்டிருக்கின்றது.தமிழ் நாட்டு பத்திரிக்கையில் 'வாடகை மனைவி' என்ற வார்த்தை பிரகோகத்தை ஊடக வார்த்தையாக சேர்த்து விட்டார்கள். வாடகை பெருபவள் மனைவியா? மனைவிகள் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடந்தால் என்ன என்ற ஆலொசனையில் உள்ளேன்!

    ReplyDelete
  4. நண்பர் வணக்கம்.
    பாலியல் தொழில் அரசியல்,வணிகத்திற்க்கு இன்றிமையானதாக வருகின்றது.தமிழ் ஊடகத்தில் வாடகை மனைவி என்ற சொல்லாடலை புகுத்தியுள்ளார்கள்.வாடகை பெருபவள் மனைவியா?
    ஏன் ஒரு மனைவியும் மானநஷ்ட வழக்கை பற்றி எண்ணுவதில்லை?.

    ReplyDelete
  5. ஒருவனுக்கு பெண் சுகம் தேவைபட்டால் தன்னுடைய ஆணாதிக்கத்தை மற்றும் பண பலத்தை அங்கு அவன் செலுத்துகிறான்.பிரேமனந்த மற்றும் நித்தியானந்த போன்றோர் மக்கள் பணத்தை ஏமாற்றி தன் காம இச்சையை தீர்துகொள்ளும் போது பணக்கார வர்க்கத்தை சேர்ந்த அரபுகள் நம்ம சாமியர்களைப்போல் குடும்ப பெண்களை சீரழிக்காமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட பெண்களை நாடுகின்ற அவர்கள் எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு, மிக நுட்பமான மொழிபெயர்ப்பு. மொராக்கோ மட்டுமல்ல, உலக வணிகமயமாக்களில் உடலும் வணிக மயமாக்கப்பட்டுவிட்டது, பாரதத்தில், male escorts, female escorts, என்று வேறு பெயர் வைத்துக்கொள்கிறார்கள், அவ்வளவே, நடப்பது உடல் பரிமாறலே

    ReplyDelete
  7. just see this. is it ture

    http://video.yahoo.com/watch/3384006/9467729

    ReplyDelete
  8. //பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட பெண்களை நாடுகின்ற அவர்கள் எவ்வளவோ மேல்.//

    பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட பெண்கள் குடும்ப பெண்கள் இல்லையா? செய்வது வெறித்தனம். அதிலென்ன கீழ் மேல்?

    ReplyDelete
  9. மதங்களால், கடவுள்களால் தீர்க்க முடியாமல் போனது வறுமையை மட்டுமல்ல... விபச்சாரத்தையும்.

    ReplyDelete
  10. //ஒருவனுக்கு பெண் சுகம் தேவைபட்டால் தன்னுடைய ஆணாதிக்கத்தை மற்றும் பண பலத்தை அங்கு அவன் செலுத்துகிறான்.பிரேமனந்த மற்றும் நித்தியானந்த போன்றோர் மக்கள் பணத்தை ஏமாற்றி தன் காம இச்சையை தீர்துகொள்ளும் போது பணக்கார வர்க்கத்தை சேர்ந்த அரபுகள் நம்ம சாமியர்களைப்போல் குடும்ப பெண்களை சீரழிக்காமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட பெண்களை நாடுகின்ற அவர்கள் எவ்வளவோ மேல்.//

    அதான. "நாங்க மோசமானவங்க தான். ஆனா, இட விட மோசமானவங்க இருக்காங்களே. பரவாயில்ல"-னு சொல்றாரு. நல்ல முன்னேற்றம்... :)

    ReplyDelete
  11. ஒருவனுக்கு பெண் சுகம் தேவைபட்டால் தன்னுடைய ஆணாதிக்கத்தை மற்றும் பண பலத்தை அங்கு அவன் செலுத்துகிறான்.பிரேமனந்த மற்றும் நித்தியானந்த போன்றோர் மக்கள் பணத்தை ஏமாற்றி தன் காம இச்சையை தீர்துகொள்ளும் போது பணக்கார வர்க்கத்தை சேர்ந்த அரபுகள் நம்ம சாமியர்களைப்போல் குடும்ப பெண்களை சீரழிக்காமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்ட பெண்களை நாடுகின்ற அவர்கள் எவ்வளவோ மேல்.mjm rimsi

    ReplyDelete

  12. 01.Please pub.a write-up about the contents of the book "sane sex order"-author Pitriam

    sorokin-famous Russian sociologist - and self -indulgence and self-control by Mahatma

    Gandiji- particularly the chapter Moral Bankruptcy.

    02.பிரம்மச்சாியம் பிரதிபன்னம் வீாிய லாப -பிரம்மச்சாியம் காப்பதால் உடலுக்கு மனதிற்கு ஆன்மாவிற்கு வீாியம் வாய்கின்றது என்கிறது யோக சுத்தரம்.ராமாயாணம் வழியாக ஆணுக்கும் கற்பு வலியுருத்தும் பண்பு வலியுருத்தப்படுகின்றது.எத்தனை இந்தியா்களை மேற்படி யோகசுத்திரம் அடைந்துள்ளது ?

    பிரம்மச்சாியத்தை புறக்கணித்ததால்தான்-ஆணுக்கு கற்பு வேண்டாம் என்றதால்-

    இந்தியா வீழ்ச்சியுற்றது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

    பெண்ணுக்கு ஒரு நீதி ஆணுக்கு ஒரு நீதி என்று வலுத்த ஆண்மகன்செய்த அநீதியை மெலிந்த ஆண்மகனால் தட்டிக் கேட்கவோ சமாளிக்கவோ தன் குடும்ப பெண்களை காத்துக் கொள்ள இயலாத நிலை இன்றும் தொடா்கின்றது.வலுத்தவன் தனக்கு மனைவியை தேடும் போது கன்னியாக இருக்க வேண்டும் என்கிறான்.தன் மகளுக்கு வரன் தேடும் போது மட்டும் மருமகன் இராமனாக ஏகபத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்கிறான்.ஆனால் அவா்கள் அந்தரங்க வாழ்வில் துச்சாதனா்களாகவே இருப்பது குறித்து குற்ற உணா்வு இல்லை.

    ஆண்களை ஒழுங்கு படுத்துவது எப்படி ?

    ReplyDelete