Monday, July 05, 2010

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா

உலகில் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த "ஐக்கிய அமெரிக்க நாடுகளை" விட பரப்பளவால் இரண்டு மடங்கு பெரியது. அந்தக் கண்டத்தை சேர்ந்த 500 மில்லியன் மக்கட்தொகை ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுவதால் "லத்தீன் அமெரிக்கா" என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிகள் பண்டைய லத்தீன் மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அந்தப் பெயர் வந்தது. சரியான அர்த்தத்துடன் தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டதா? வாஷிங்டனை தலைநகராகக் கொண்ட அமெரிக்கா என்ற 50 மாநிலங்களின் குடியரசில், நாற்பது மிலியன் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது இன்று உலகில் ஐந்தாவது ஸ்பானிய மொழி பேசும் நாடு! மியாமி, நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகின்றது. இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள். கனடாவில் லத்தீன் அடிப்படையில் அமைந்த இன்னொரு மொழியான பிரெஞ்சு பேசும் மக்கள் தனியாக "கெ பெக்" (Québec ) என்ற மாநில சுயாட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் லத்தீன் மொழிகள் மட்டுமே பேசப் படுகின்றனவா? கயானாவிலும் சிறிய கரீபியன் தீவுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழி. சுரினாமில் நெதர்லாந்து உத்தியோகபூர்வ மொழி. இவை லத்தீன் அடிப்படை அற்ற, ஜேர்மனிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். சிலி நாட்டில் கணிசமான அளவு ஜெர்மானியர்கள், தனிமைப்படுத்தப் பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றார்கள். அவை இன்றும் "குட்டி ஜெர்மனிகளாக" காணப்படுகின்றன. பிரேசிலில் சாவோ பவுலோ (São Paulo) நகரில் வாழும் சில மில்லியன் ஜப்பானியர்கள், இன்றைக்கும் தமது ஜப்பானிய மொழியை மறக்கவில்லை. பெரு நாட்டு பொருளாதாரத்தில், ஜப்பானிய வணிகர்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. அங்கே புஜிமோரி (புலம்பெயர்ந்தாலும் பெயரை மாற்றவில்லை) என்ற ஜப்பானியர் ஒரு தசாப்தமாக ஜனாதிபதியாக வீற்றிருந்தார். பதவியிழந்ததும் பாட்டன் மாரின் தாயகத்தில் சென்று தஞ்சம் புகுந்தார். ஆர்ஜன்தீனாவில் ஒரு மில்லியன் ஆங்கிலேயர்கள், விக்டோரியா இராணி காலத்து தொடர்புக்கு சாட்சியாக வாழ்கின்றனர். புவனொஸ் ஐரெஸ் (Buenos Aires ) நகரில் சாயங்கால தேநீர் விருந்தில் "புவனஸ் அயர்ஸ் ஹெரால்ட்" நாளேட்டுடன், ஆங்கிலம் பேசுவதை இன்றைக்கும் பார்க்கலாம்.

அமெரிக்கா என்ற புதிய பூமியை கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புறம் இருக்கட்டும். யார் "லத்தீன் அமெரிக்கா" என்ற சொல்லைக் கண்டுபிடித்தார்கள்? நிச்சயமாக 19 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் அரசியல் சொல்லாடலாக இருக்க வேண்டும். வட அமெரிக்கக் கண்டத்தில் பெருமளவு பகுதிகளை கபளீகரம் செய்த ஆங்கிலேயரை எதிர்க்க முடியாமல் போர்க்களத்தில் தோல்வியுற்றனர் பிரெஞ்சுக்காரர்கள். லூசியானா (அமெரிக்கா), கெபேக் (கனடா) என்று தமது உடன்பிறப்புகளின் மாநிலங்களையும் பறிகொடுத்தார்கள். பிரெஞ்சு அரசுக்கு கொள்கை வகுத்துக் கொடுத்த அறிவுஜீவிகளின் மனதில் தோன்றிய தீர்க்கதரிசனம் வரப்போகும் உலகை மாற்றியது. வட அமெரிக்க ஆங்கிலேயரின் பலத்தை சமன் செய்ய தென் அமெரிக்காவை முன் நிறுத்தினார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வைத்த பெயரான லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

"கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்." உலக நாடுகள் எங்கும் பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம். அமெரிக்கா ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை. கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு. கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரே ஆசியாவில் இருந்து (இன்றைய ரஷ்யாவின் கிழக்கு எல்லை) மக்கள் அமெரிக்கா வந்து குடிபுகுந்துள்ளனர். தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆசிய இனக்குழுக்கள், நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தனர். மாபெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியுள்ளனர். இந்த நாகரீங்களில் பல, கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் கால் பதிப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஸ்காண்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள் குடியேறியுள்ளனர். சிறு தொகையினரே என்றாலும், கனடாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட "நியூ பவுன்ட்லான்ட்"(New Foundland ) எனுமிடத்தில் தமது தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். இதைவிட எழுதப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறாத பினீசிய(லெபனான்), சீன கடலோடிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசப்படுவதில்லை. அப்படியானால் கொலம்பஸ் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்?

500 வருட கால "ஐரோப்பிய மையவாத அரசியல்" கொலம்பஸின் உதவி இன்றி உயிர் பெற்றிருக்காது. இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பியரின் அரசியல் ஆதிக்கம் உலகை அச்சுறுத்துகிறது. அதற்கெல்லாம் அவர்கள் கொலம்பஸிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். ஆம், ஐரோப்பியர்கள் உலகை ஆள வழி திறந்து விட்டவர் தான் கொலம்பஸ். அன்றைய ஸ்பானிய இராணி இசபெல்லா தனது நகைகளை விற்று கொலம்பஸின் கடற்பயணத்திற்கு நிதி சேர்த்தார். அவர் கண்களில் கனவுகள் இருந்தன. கடல் கடந்து புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் கனவு. நூறாண்டுகளுக்கு முன்பு உதிரிகளாக உலகை சுற்றிய கடலோடிகள் எழுதிவைத்த குறிப்புகளுடன் வந்தார், ஜெனோவாவை (இன்று, இத்தாலி) சேர்ந்த கொலம்பஸ். "செல்வந்த நாடான இந்தியாவில் இருந்து சரசேனர்கள் (அரேபிய முஸ்லிம்கள்) திரவியங்களை கொண்டு வந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். நாம் நேரடியாக வியாபாரத்தில் இறங்க வேண்டுமானால் கடல் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்." கொலம்பஸின் திட்டம் இசபெல்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது.

கஸ்திலிய நாட்டு (ஸ்பானியாவின் பழைய பெயர்) கொடியுடன் புறப்பட்ட கொலம்பஸின் கப்பல்கள் பஹாமாஸ் தீவில் தரை தட்டின. ஆரம்பத்தில் தங்கம் கிடைக்கிறதா எனத் தேடினார்கள். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கரீபியன் தீவுகளின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதைப் போல தேடித் தேடி அழைத்தார்கள். இன்றைய உலகம் அதை இனவழிப்பு என்று கூறும். அன்று அதுதான் அரச கொள்கை. கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும் இனவழிப்புக்கு துணை போனது. முதலில் கரீபியன் கடல் பகுதி தீவுகளை சுத்திகரித்தார்கள். பிறகு ஸ்பானியாவில் இருந்து படைகளை தருவித்தார்கள். மத்திய அமெரிக்காவை கைப்பற்ற குறி வைத்தார்கள். இவை அனைத்தும் கொலம்பஸின் காலத்தில் நடந்தவை. கொலம்பஸ் ஒரு கண்டுபிடிப்பாளன் மட்டுமல்ல, கப்பற்படைத் தலைவன், நிர்வாகி... இவ்வாறு மட்டும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கலாம். ஆனால் கூடச் சென்ற கொலம்பஸின் தம்பி ஒரு ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதி. ஆம், கொலம்பஸ் வெறுமனே அமெரிக்காவை கண்டுபிடித்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. படையெடுத்து ஆக்கிரமிக்கவும், அடிமைப்படுத்தவும் வழிகாட்டினான். அதனால் தான் எமது சரித்திரப் பாட நூல்களில் கொலம்பஸிற்கு சிறப்பான இடம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் இனவழிப்புக்கு வித்திட்ட ஒருவர் உதாரண புருஷராக போற்றப்படுகிறார்.

அமெரிக்காவை கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கொலம்பஸ் புறப்படுவதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே, ஸ்பானிய, போர்த்துக்கேய கடலோடிகள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் அருகில் இருந்த தீவுகளை கண்டுபிடித்தார்கள். கனாரி, மடைரா போன்ற தீவுகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆப்பிரிக்காவின் சில கரைகளுக்கும் சென்றார்கள். அங்கு வாழ்ந்த மக்களை சிறைப் பிடித்தார்கள். தாய்நாட்டில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அன்றைய ஐரோப்பாவில் அவர்களிடம் தான் சிறந்த கடற்படை இருந்தது. நவீன கப்பல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தாயகம் இன்றைய ஸ்பெயின், போர்த்துக்கல்லின் வடக்கே உள்ள ஒரு சிறிய பிரதேசமாக இருந்தது. இபேரிய உபகண்டம் என்றழைக்கப் படும் அந்தப் பகுதியில், பெருமளவு அரேபியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது. உயர்தர கம்பளியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. தொழிற்துறை வளர்ச்சி காணப்பட்டது. வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான கத்தோலிக்கர்களின் புனிதப்போர் அறிவிக்கப் பட்டது. உண்மையான ஆண்டவரைக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தவர்கள், மோசக்கார முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டும் என்றார்கள். வத்திக்கானில் இருந்த பாப்பரசரும் ஆசீர்வாதம் வழங்கினார். வரலாற்றில் அது, இரு மதங்களுக்கு இடையிலான போராக பதியப்பட்டது. உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் அரசியல் பிரச்சாரம் அது. புனிதப் போரை நடத்தியவர்களிடம் கத்தோலிக்க மதவெறி மட்டும் காணப்படவில்லை. அவர்கள் மனதில் பூகோள அரசியல் ஆதிக்கமும், செல்வத்தைக் கொள்ளையிட்டு பொருளாதார முன்னேற்றம் காணும் நோக்கமும் மறைந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மதப் போர்வையால் மூடிக் கொண்டார்கள். மக்களை தம் பின்னால் அணிதிரட்ட மதம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறியது. மதம் மக்களைப் பிரித்தது. போர்க்கள வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

அன்றும் இன்றும் புனையப்படும் பிரச்சாரத்திற்கு மாறாக, அரபு முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் மதப் பிரச்சினை அறவே இருக்கவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும், யூதர்களும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து வந்தனர். கத்தோலிக்கப் படைகள், அரபு முஸ்லிம்களை ஸ்பெயினில் இருந்து அடித்து விரட்டின. ஸ்பெயினிலும், போர்த்துகல்லிலும் ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசர்களின் நாட்டில் முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடம் இருக்கவில்லை. அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அல்லாவிட்டால் கொல்லப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமியப் பேரரசை தோற்கடித்த கத்தோலிக்க ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பிய வல்லரசுகளாக மாறின. அவர்கள் வட ஆப்பிரிக்கா மீதும் படையெடுத்தனர். சில பகுதிகளை தக்க வைத்துக் கொண்டனர். (மொரோக்கோவின் வட கரையை சேர்ந்த செயுத்தா,மெலியா இன்றைக்கும் ஸ்பெயினின் பகுதிகள்.) ஆனால் அவர்களது தொலைநோக்கு முழுவதும் தங்கம் விளையும் புது உலகம் மீதிருந்தது. கொலம்பஸின் பின்னர் மாபெரும் கடற்படையணிகள் அமெரிக்கா என்ற கண்டம் நோக்கி பயணமாகின. அதில் ஒரு பகுதி தான் இந்தியாவிற்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிப்பது. அவர்களுக்கு அதுவரை தடையாகவிருந்த அரேபியரின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. உலகம் ஐரோப்பியருக்காக திறந்து விடப்பட்டது. அடுத்தடுத்து ஆப்பிரிக்கா, ஆசியா, இலங்கை, இந்தியா எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள். ஐரோப்பியரின் காலனிய சாம்ராஜ்யங்களின் கீழ் கொண்டு வந்தார்கள்.

உலகை வெல்லக் கிளம்பிய ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களை மட்டும் குடியேறுவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை ஆண்டவரால் தமக்கு நிச்சயிக்கப் பட்ட பூமியாக கருதிக் கொண்டார்கள். மத்திய அமெரிக்காவில் வந்திறங்கிய ஸ்பெயின் அரச பிரதிநிதிகளும், கத்தோலிக்க பாதிரிகளும் ஆண்டவன் கட்டளையை பறைசாற்றினார்கள். "இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்..." அவர்களின் அறிவிப்பை செவி மடுப்பதற்கு அந்தப் பிரதேசத்தில் எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை.

(தொடரும்)

24 comments:

  1. கொலம்பஸ் அமெரிக்க மற்றும் அமெரிக்க தீவுகளுக்கு செல்லும் போது அங்கு மக்கள் இருந்தனர். அனால் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததாக சொல்ல காரணம் என்ன?

    ReplyDelete
  2. மதப்படுகொலைகளை திரும்ப திரும்ப சொல்வதும், திரும்ப திரும்ப வாசிப்பதும் மற்றுமொரு மிகப்பெரும் மதப்படுகொலைகளுக்கே வழி வகுக்கும். மனதில் மீண்டுமொரு சிலுவைப்போரும், புனிதப்போரும் நினைக்கும். மற்றப்படி இந்த பதிவால் என்ன பயன்.

    ReplyDelete
  3. miga nalla pathivu , ungal pathivukku nan puthithu miga nalla muyarchi , nanun ethennum seiya vendum pola thondrukirathu

    ReplyDelete
  4. //லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.//

    தென் அமெரிக்கா எனவும் தற்போது அழைக்கப்படுகிறது.



    //அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது.//

    ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்பெயினும், போர்த்துக்கல்லும்: அதுவும் முழு பகுதிகளும் இல்லை. ஆட்சிகூட நீண்ட காலம் நீடிக்கவில்லை.

    ReplyDelete
  5. "இந்த பதிவால் என்ன பயன்" இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். நான் விரும்பி & நம்பி படிக்கும் ஒரே பதிவு இதுதான். வேலை பளுவுக்கு மத்தியில் இது போன்ற செய்திகள் சேகரிப்பது & மொழி பெயர்ப்பது & வழங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க முடியாது. .... முடியுமானவரை ஆதரிப்போம்

    ReplyDelete
  6. //ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்பெயினும், போர்த்துக்கல்லும்: அதுவும் முழு பகுதிகளும் இல்லை. ஆட்சிகூட நீண்ட காலம் நீடிக்கவில்லை.//

    நீங்கள் உங்கள் மதம் சார்ந்து தவறான பிரச்சாரம் செய்ய முற்படுகின்றீர்கள். முழு ஸ்பெயின், போர்த்துக்கல் மட்டுமல்ல, தென் பிரான்சின் ஒரு பகுதியும் அரபு இஸ்லாமிய படைகளால் போரில் வெல்லப்பட்டன. ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்த பகுதிகள் அவை. ரோமர்களின் வீழ்ச்சியின் பின்னரும் அன்று கிறிஸ்தவ மதம் எல்லா இடங்களிலும் பரவவில்லை. கிறிஸ்தவ மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அப்படியான காலத்தில் தான் அரபு-முஸ்லிம் படையெடுப்பு நிகழ்ந்தது. மன்னன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி என்றொரு பழமொழி உண்டு.
    ஆயிரம் வருட காலம் நீடித்த ஆட்சியை ஆக்கிரமிப்பு என்று அழைக்க முடியாது. ஆளுபவர்கள் முஸ்லிம்கள் என்பதால், மக்களும் அந்த மதத்தை பின்பற்றினார்கள். அரசியல் அதிகாரம், சமூக அந்தஸ்து, பதவி, பணம், இவற்றை அடைவதற்கு அது இலகுவாக இருந்தது.

    ReplyDelete
  7. அருமையான பதிவு !
    தொடருங்கள் !

    ReplyDelete
  8. //முழு ஸ்பெயின், போர்த்துக்கல் மட்டுமல்ல, தென் பிரான்சின் ஒரு பகுதியும் அரபு இஸ்லாமிய படைகளால் போரில் வெல்லப்பட்டன. //

    //வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.//

    இவர்கள் எங்கிருந்தார்கள்? முன்னுக்குப் பின் முரணான வாதம்.
    வடக்கே கடல்தான் இருக்கிறது.

    //ஆயிரம் வருட காலம் நீடித்த ஆட்சியை ஆக்கிரமிப்பு என்று அழைக்க முடியாது.//

    Caliphate காலத்தில்தான் (661–750) ஸ்பெயின், போர்த்துக்கல் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அதன் பின்பு வேறுபட்ட முஸ்லிம் ஆக்கிரமிப்புக்குள்ளானது. அவை 1000 வருடங்கள் நீடிக்கவில்லை. அத்தோடு 1000 வருடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்தால்கூட அது ஆக்கிரமிப்பில்லை என்றாகிவிடாது. அப்படியானால் உலகின் பெரும்பகுதி ஜரோப்பா வசமாக வேண்டுமே?

    ReplyDelete
  9. //இவர்கள் எங்கிருந்தார்கள்? முன்னுக்குப் பின் முரணான வாதம்.
    வடக்கே கடல்தான் இருக்கிறது//

    அதி புத்திசாலி அனானி நண்பரே! இந்தக் கட்டுரையில் வரும் சம்பவங்கள் நடைபெறும் வரலாற்றுக் காலகட்டத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். (ஆயிரம் வருட கால இஸ்லாமிய ஸ்பெயின் இருந்ததை நம்ப மறுக்கும் உங்களால் இதனைப் புரிந்து கொள்ளவே முடியாது.) ஆயிரம் வருட கால இஸ்லாமிய ஆட்சியின் இறுதிக் காலத்தில் தான் கொலம்பஸின் வருகை நிகழ்கின்றது. இந்தக் கட்டுரை அந்தக் காலகட்டத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. வடக்கே பாதியளவு ஸ்பெயின் கிறிஸ்தவ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டாலும் (உங்கள் தியரியின் படி ஆக்கிரமிப்பு) தென் ஸ்பெயின் சில நூற்றாண்டுகள் இஸ்லாமிய நாடாக (அண்டலூசியா) இருந்தது.
    உங்களுக்கு தனியாக வரலாற்றுப் பாடம் எடுக்க முடியாது. நீங்கள் தான் ஸ்பெயின் வரலாற்றை தேடித் படிக்க வேண்டும்.

    //அப்படியானால் உலகின் பெரும்பகுதி ஜரோப்பா வசமாக வேண்டுமே?//
    நிச்சயமாக. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் தென் அமெரிக்க நாடுகள் (உங்கள் கோட்பாட்டின் படி) 500௦௦ வருடங்களாக ஐரோப்பியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் விடயம் உங்களுக்கு தெரியாதா?

    ReplyDelete
  10. //ஆயிரம் வருட கால இஸ்லாமிய ஸ்பெயின் இருந்ததை நம்ப மறுக்கும் உங்களால் இதனைப் புரிந்து கொள்ளவே முடியாது//

    ஓருபக்கச் சார்பான உங்களால் உங்கள் கருத்தில்தான் குறியாய் இருப்பது தெரிகிறது. வரலாற்று படம் நீங்கள் எடுக்கத்தேவையில்லை, சற்று ஆழமாய் படித்தால் நலம். அப்போது கிறிஸ்தவ துருக்கி, எகிப்து, etc எல்லாம் புரியும்.

    ReplyDelete
  11. // அப்போது கிறிஸ்தவ துருக்கி, எகிப்து, etc எல்லாம் புரியும்.//
    அப்படியா? ஆக்கிரமிக்கப்பட்ட துருக்கி, எகிப்து பற்றி பேசுகின்றீர்களா? உங்களைப் பொறுத்த வரை அவை எல்லாம் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்திருந்த நாடுகள் அல்லவா? துருக்கி, எகிப்தில் கிறிஸ்தவ மதம் ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்த மதங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். நீங்கள் தான் பக்கச் சார்பின்றி ஆழமாகப் படிக்கும் நடுநிலமையாளர் ஆயிற்றே.

    ReplyDelete
  12. //துருக்கி, எகிப்தில் கிறிஸ்தவ மதம் ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்த மதங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.//

    முதல் 3 நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் யுத்தம் செய்யவில்லை. மாறாக பலராலும் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள். அக்காலங்களில்தான் துருக்கி, எகிப்துக்கு கிறிஸ்தவம் பரவியது. அது பலாத்காரமே ஆக்கிரமிப்போ இல்லை. அக்காலங்களில் அவர்கள் அந்நாட்டவர்களால் கொல்லப்பட்டார்கள்.

    ReplyDelete
  13. //முதல் 3 நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் யுத்தம் செய்யவில்லை. மாறாக பலராலும் துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.//

    இது வெறும் ஒரு பக்கச்சார்பான கதைகள். பிற அரசியல், மத நிறுவனங்களைப் போல கிறிஸ்தவமும் தன்னை பாதிக்கப்பட்ட அப்பாவி என்றே காட்டிக் கொள்ள விரும்புகின்றது. அந்தக் கதைகளை மட்டுமே உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அதே கிறிஸ்தவர்கள் துருக்கி, எகிப்தில் பிற மதத்தவர்களை பலாத்காரமாக வாள் முனையில் மதம் மாற்றினார்கள். அப்படியான எதிர்மறையான கதைகளைப் பற்றி யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டார்கள். அப்புறம் நீங்கள் கிறிஸ்தவர்களும் இத்தனை கொடுமைக்காரர்களாக இருந்தார்களா என்று வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதைத் தான் முன்பே குறிப்பிட்டேன். ஒரு அரசியல் கட்சி போல, (கிறிஸ்தவ) மதமும் தன்னைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றது. இதைப் புரிந்து கொள்ள நீங்கள் ஆழமாக படிக்க வேண்டும். அல்லது எப்போதும் போல கிறிஸ்தவர்கள் சொல்லும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருங்கள்.
    துருக்கியிலும், எகிப்திலும் எவ்வாறு கிறிஸ்தவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்? தமது எதிராளிகளை வன்முறை கொண்டு அடக்கினார்கள். பிற மதத்தவர்கள் கிறிஸ்தவராக மாறா விட்டால் ஈவிரக்கமின்றி கொலை செய்தார்கள். பெரும்பான்மையான மக்கள் தமது உயிரைக் காப்பாற்ற கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அந்த மக்கள் எல்லாம் தமது நாடு கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக தான் கருதினார்கள். இப்போது அவர்களின் பேரப்பிள்ளைகள் கடந்த கால வரலாற்றை மறந்திருக்கலாம். ஆனால் உண்மை மறைவதில்லை. உங்களைப் போல எத்தனை பேர் பொய்ப்பிரச்சாரம் செய்தாலும் உண்மை என்றைக்கோ வெளிவந்தே தீரும்.

    ReplyDelete
  14. //அக்காலங்களில்தான் துருக்கி, எகிப்துக்கு கிறிஸ்தவம் பரவியது. அது பலாத்காரமே ஆக்கிரமிப்போ இல்லை. அக்காலங்களில் அவர்கள் அந்நாட்டவர்களால் கொல்லப்பட்டார்கள்.//
    அனானி நண்பரே, நீங்கள் படிக்க விரும்பாத கிறிஸ்தவ மதம் குறித்த சரித்திர உண்மைகளை பின்வரும் பதிவில் வாசிக்கலாம்:
    கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

    ReplyDelete
  15. //இது வெறும் ஒரு பக்கச்சார்பான கதைகள். பிற அரசியல், மத நிறுவனங்களைப் போல கிறிஸ்தவமும் தன்னை பாதிக்கப்பட்ட அப்பாவி என்றே காட்டிக் கொள்ள விரும்புகின்றது. அந்தக் கதைகளை மட்டுமே உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அதே கிறிஸ்தவர்கள் துருக்கி, எகிப்தில் பிற மதத்தவர்களை பலாத்காரமாக வாள் முனையில் மதம் மாற்றினார்கள்.//

    உங்களால் ஆதாரப்படுத்த முடியுமா முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்கள் துருக்கி, எகிப்தில் பிற மதத்தவர்களை பலாத்காரமாக வாள் முனையில் மதம் மாற்றினார்கள் என்று? மாறாக அவர்கள் கொல்லப்பட்டதுதான் வரலாற்றில் உண்டு.



    //உங்களைப் போல எத்தனை பேர் பொய்ப்பிரச்சாரம் செய்தாலும் உண்மை என்றைக்கோ வெளிவந்தே தீரும்.//

    நீங்கள் மட்டும் உண்மையையா பிரச்சாரம் செய்கிறீர்கள். உங்கள் பதிவுகளை பின்னோக்கிப்பாருங்கள் புரியும்.

    ReplyDelete
  16. //அனானி நண்பரே, நீங்கள் படிக்க விரும்பாத கிறிஸ்தவ மதம் குறித்த சரித்திர உண்மைகளை பின்வரும் பதிவில் வாசிக்கலாம்:
    கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏//


    நண்பரே, கிறிஸ்தவர்கள் மட்டும் நல்லவர்கள் என்றோ அல்லது கிறிஸ்தவம் பிழையே செய்யவில்லை என்ற கருத்துடன் நான் இல்லை. அதற்கான பொருத்தமில்லாத உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு என்னால் உடன்பட முடியாது. அது கிறிஸ்தவர்களிடம் இருந்து வந்தாலும் சரி.

    உங்கள் பதிவுகளை பார்த்தால் அவை கிறிஸ்தவ வெறுப்பை விதைப்பதைக் காணலாம். காட்டுக்கு ஒரு சில கட்டுரைகளில் மற்றைய மதங்களையும் சாடிவிட்டு அங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒருசில பதில்களுடன் பேசாமல் இருந்துவிடுவீர்கள். கிறிஸ்தவம் என்றால் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். அதற்காக மற்ற மதங்களை விமர்சியுங்கள் என்று கருத்தல்ல. ஆனால் நடுநிலையாளர் வேடம் போடாதீர்கள். 100% கிறிஸ்தவத்திற்கு எதிராக எழுதுங்கள்.

    ReplyDelete
  17. மதம் எவ்வளவு கொடியது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதற்கு நன்றி.

    உங்கள் கட்டுரைகள் என்றேன்டும் பாதுகாக்கப் படவேண்டியவை. நன்றிகள்.

    ReplyDelete
  18. முந்தைய பகுதிகளின் இணைப்பை கட்டுரை இறுதியில் கொடுக்கலாமே!!

    ReplyDelete
  19. //ஆயிரம் வருட காலம் நீடித்த ஆட்சியை ஆக்கிரமிப்பு என்று அழைக்க முடியாது//
    ஆங்கிலேயர்களும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்தார்கள். அதற்காக அவர்களை இங்கே இருக்க அனுமதித்து இருக்கலாமா? உங்கள் வீட்டை நான் ஆக்கிரமித்து நிறைய நாட்கள் தங்கி விட்டால் அது எனக்கு சொந்தமாகி விடுமா.
    ஸ்பெயினில் முஸ்லிம்கள் எவ்வாறு ஆட்சியை பிடித்தார்கள் என்பதை c m n சலீம் என்பவர் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறார்.

    http://www.youtube.com/watch?v=RyKy6iGVcws&feature=related

    அதில், 7000 முஸ்லிம்கள் ஸ்பெயின் மீது படை எடுத்து சென்று அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த "விசிகோத்" என்ற கிறிஸ்தவ மன்னனை கடற் போரில் தோற்கடித்து, அமைதி மார்க்கத்தினர்? அமைதியாகவே ஸ்பெயினை கைப்பற்றி உள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது

    //ஆளுபவர்கள் முஸ்லிம்கள் என்பதால், மக்களும் அந்த மதத்தை பின்பற்றினார்கள்//
    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தனர். ஆனாலும் இன்னும் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினர்.

    கி.பி. 711 இல் ஸ்பெயின் உள்ளே இஸ்லாமிய படைகள் நுழைகிறது. கி.பி 720 இல் ஸ்பெயின் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படுகிறது. இந்த குறுகிய 9 ஆண்டுகள் கால கட்டத்தில் கிறிஸ்தவ நாடாக இருந்த ஸ்பெயின் எப்படி முழு இஸ்லாமிய நாடாக மாறியது? அமைதி மார்க்கத்தினர் எந்த விதமான அமைதி முறையை கையாண்டு மக்களை மதம் மாற்றினர்? மேலும் அந்த ஆவணபப்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப்படுவது கலீபாக்கள் எந்தெந்த நாடுகளுக்கு படைகளை அனுப்பினார்கள் என்பது. அவர்கள் படைகள் செல்லும் நாடுகள் எல்லாம் குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய நாடுகளாக மாறிவிடுகின்றன, . ஒருவேளை பிரிட்டானியா பிஸ்கட்டும், லாலிபாப்பும் கொடுத்து அமைதியான வழியில் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    //தென் பிரான்சின் ஒரு பகுதியும் அரபு இஸ்லாமிய படைகளால் போரில் வெல்லப்பட்டன//
    நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் அந்த ஆவணப்படத்தில் பிரான்சின் கிறிஸ்தவ படைகளால் இஸ்லாமியர்கள் முறியடிக்கப்பட்டனர் என்றல்லவா இருக்கிறது.

    மதம் என்றாலே, பூர்வீகத்தை கிண்டி பார்த்தால் சாக்கடை நாற்றம் தான் வரும். அதில் இஸ்லாத்தில் மட்டும் என்ன சந்தன மணம் வீசுகிறதா உங்களுக்கு.

    M. George Vincent
    Kanyakumari

    ReplyDelete
  20. //அதில், 7000 முஸ்லிம்கள் ஸ்பெயின் மீது படை எடுத்து சென்று அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த "விசிகோத்" என்ற கிறிஸ்தவ மன்னனை கடற் போரில் தோற்கடித்து, அமைதி மார்க்கத்தினர்? அமைதியாகவே ஸ்பெயினை கைப்பற்றி உள்ளனர் என்று குறிப்பிடப்படுகிறது.//

    இஸ்லாமிய மதத்தின் மீதான வெறுப்பு காரணமாக என்ன எழுதுவது என்று தெரியாமல் உளறுகின்றீர்கள்.
    இரண்டு மன்னர்களின் படைகள் அதிகாரத்திற்காக மோதிக் கொள்ளும் போர்களைப் பற்றி இப்பொழுது தான் கேள்விப் படுகிறீர்களா? யுத்தம் யுத்தம் தான். இதிலே கிறிஸ்தவன் என்ன, முஸ்லீம் என்ன?

    // ஆங்கிலேயர்களும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்தார்கள். அதற்காக அவர்களை இங்கே இருக்க அனுமதித்து இருக்கலாமா?//

    அது என்ன, "ஆட்சி செய்தார்கள்"? ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல உங்களுக்கு தைரியமில்லையா? அவர்களை யாரும் அனுமதிக்கவுமில்லை, அதனை யாரும் நியாயப் படுத்தவுமில்லை. ஆனால் ஆங்கிலேய காலனியாக இந்தியா இருந்த சரித்திர உண்மையை மறைக்க முடியாது.

    //உங்கள் வீட்டை நான் ஆக்கிரமித்து நிறைய நாட்கள் தங்கி விட்டால் அது எனக்கு சொந்தமாகி விடுமா.//

    ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்த அமெரிக்காவையும், அவுஸ்திரேலியாவையும் அவர்கள் தங்கள் வீடு என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதையெல்லாம் எப்படிப் பொறுத்துக் கொள்கிறீர்கள்?

    //கி.பி. 711 இல் ஸ்பெயின் உள்ளே இஸ்லாமிய படைகள் நுழைகிறது. கி.பி 720 இல் ஸ்பெயின் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படுகிறது. இந்த குறுகிய 9 ஆண்டுகள் கால கட்டத்தில் கிறிஸ்தவ நாடாக இருந்த ஸ்பெயின் எப்படி முழு இஸ்லாமிய நாடாக மாறியது?//

    இஸ்லாமிய நாடு என்று அறிவித்த உடனேயே அங்கே இருத்த அத்தனை மக்களும் இஸ்லாமியராக மாறி விட்டதாக அர்த்தமல்ல. அதே போல கிறிஸ்தவ படைகள் ஸ்பெயினை கைப்பற்றியவுடன் அதனை கிறிஸ்தவ நாடு என்று அறிவித்தன. அதனால் அங்கே இருந்த மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அனால் கிறிஸ்தவ படைகள் கைப்பற்றிய பின்னர் ஸ்பெயினில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் காணாமல் போய் விட்டார்கள். அதாவது ஒன்றில் கொலை செய்யப்பட்டார்கள். அல்லது நாடு கடத்தப் பட்டார்கள். இதெல்லாம் சரித்திரப் புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.

    //அவர்கள் படைகள் செல்லும் நாடுகள் எல்லாம் குறுகிய காலத்திலேயே இஸ்லாமிய நாடுகளாக மாறிவிடுகின்ற.//

    இதை நீங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு சாதகமாக பயன்படுத்தலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மக்கள் நீண்ட காலத்திற்கு பின்னர் தான் இஸ்லாமியராக மாறினார்கள். எகிப்து, லெபனான், ஈராக் போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவ சனத்தொகை உங்கள் கூற்றை பொய்யாக்குகின்றது.

    //இந்தியாவில் ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தனர். ஆனாலும் இன்னும் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினர்.//

    இந்தியாவில் பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழ்வது பற்றிக் கேள்விப்படவேயில்லையா? கேரளாவில் உள்ள சிறு தொகை ஆதிக் கிறிஸ்தவர்களைத் தவிர, பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய ஆக்கிரமிப்பின் காரணமாக மதம் மாறியவர்கள். இதெல்லாம் நீங்கள் படிக்கவேயில்லையா? இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் லட்சக்கணக்கான ஆங்கிலோ-இந்தியர்கள் (கிறிஸ்தவர்கள்) வெளிநாடுகளுக்கு சென்று குடியேறி விட்டார்கள். அவர்களும் இருந்திருந்தால் இன்று இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். இந்துக்கள் பெரும்பான்மையாகியது ஒரு மோசடி. பிரிட்டிஷ் காலம் வரை தலித் மக்கள் இந்துக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் நடந்த கணக்கெடுப்பில் தலித்கள் இந்துக்களாக கருதப்பட்டார்கள்.

    ReplyDelete
  21. //ஸ்பெயினில் முஸ்லிம்கள் எவ்வாறு ஆட்சியை பிடித்தார்கள் என்பதை c m n சலீம் என்பவர் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறார்.//

    George Vincent, நீங்கள் குறிப்பிடுவது ஒரு ஆவணப்படமல்ல. அரசியல் பிரச்சார வீடியோ.

    ReplyDelete
  22. "இந்த பதிவால் என்ன பயன்" இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள, வேலை பளுவுக்கு மத்தியில் இது போன்ற செய்திகள் சேகரிப்பது & மொழி பெயர்ப்பது & வழங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க முடியாது. .... முடியுமானவரை ஆதரிப்போம்

    ReplyDelete
  23. Respected comrade,
    This is Rayappan, a Ph.D scholar in Latin American Poetry. I read one of your articles on " இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா".It was really thoughபt-provoking. Could you send me the complete collection of articles to my email.
    My email id : mariarasashj@gmail.com.

    ReplyDelete