Wednesday, February 10, 2010

இஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்


["இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி" தொடரின் 4 ம் பகுதி]
மெக்கா நகருக்கு அருகில், "அல் உஸ்ஸா" என்ற பெண் தெய்வத்தின் கோயில் இருந்தது. இஸ்லாமிய மதத்தில் புதிதாக புதிதாக சேர்ந்த காலித், தனது (மத) விசுவாசத்தை நிரூபிக்க, அந்த தெய்வத்தின் உருவச் சிலையை உடைத்து சேதப்படுத்தினார். மெக்கா மேட்டுக்குடியை சேர்ந்த காலித், சில வருடங்களுக்கு முன்னர் முகமதுவின் முஸ்லிம் படையை எதிர்த்து போரிட்டிருந்தார். அனால் பின்னர் ஒரே இறைவன் கோட்பாட்டிலும், சமூகநீதியிலும் கவரப்பட்டு தீவிர இஸ்லாமியரானவர். இவ்வாறு இறைதூதர் முகமது நபிக்கும், முதலாவது கலீபா அபு பாக்கரின் நம்பிக்கைக்கு பாத்திரமான காலித்திடம் சிரியா மீது படையெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 24 ஏப்ரில் 634 அன்று, காலித் தலைமையிலான அரபு-முஸ்லிம் படைகள் சிரியா மீது படையெடுத்தன.

அன்று ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் எல்லாம் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாகாணமாக இருந்தன. அங்கே வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் அரபு, அல்லது அரேமிய மொழி பேசுபவர்கள். ஆனால் அரச-இராணுவ அதிகார வர்க்கம் கிரேக்கர்களை அல்லது ஆர்மேனியர்களைக் கொண்டிருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. இந்த மூவின மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். டமாஸ்கஸ் அன்றைக்கும் சன நெரிசல் கொண்ட வளர்ச்சியடைந்த நகரமாக இருந்தது. டமாஸ்கசில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களான (கிறிஸ்தவ) அரேபியர்கள், படையெடுத்து வந்த முஸ்லிம் படைகளின் பக்கம் சாய்ந்து விட்டனர். கிரேக்க சாம்ராஜ்யத்தின் படையணிகளில் கிரேக்க, ஆர்மேனிய, அரபு மொழி பேசும் வீரர்கள் கலந்திருந்தனர். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்தது.

அரபு-முஸ்லிம் படையெடுப்புகள் நடந்த காலங்களில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அவர்களை சூழவிருந்த ஈரானிய, கிரேக்க பேரரசுகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. ஏற்கனவே இவ்விரண்டு வல்லரசுகளும் தமக்குள் மோதிக் கொண்டதால், எல்லைப்புற மாகாணமான சிரியா பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. அதை விட அந்தக் காலகட்டத்தில் பரவிய தொற்று நோய் ஒன்று, ராஜ்யத்தின் தற்காப்பு வலிமையை குறைத்து விட்டிருந்தது. முஸ்லிம் படைகள் காசா நகரை கைப்பற்றியதால், எகிப்துக்கான வழி திறந்து விடப்பட்டது. அதே போல தற்கால சிரியா-ஈராக் எல்லையில் இருக்கும் எடேசாவின் வீழ்ச்சி ஈராக் மீதான போர் முனையை திறந்து விட்டது. சின்னஞ்சிறிய "எடேஸா" தேச மன்னனே, உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய முதலாவது அரசன் என்பது குறிப்பிடத் தக்கது.

அரபு-முஸ்லிம் படைகள் நகரங்களை கைப்பற்றிய போதிலும், இராணுவ தலைவர்கள் அவற்றை காலனிப்படுத்த நினைக்கவில்லை. போரில் பங்குபற்றிய வீரர்கள் நகரங்களுக்கு அருகில் புதிய குடியிருப்புகளை அமைத்தனர். பாலைவனத்தில் இருந்த தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியமர்த்தினர். கிறிஸ்தவர்களின் மத சுதந்திரம் பூரணமாக அங்கீகரிக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பழமையான டமாஸ்கஸ் தேவாலயத்தின் கதை அதற்கு சாட்சி. டமாஸ்கஸ் நகர மத்தியில் இருந்த பாரிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் அரைவாசிப் பகுதி முஸ்லிம்களின் மசூதியாக்கப் பட்டது. 60 வருடங்களுக்கு பின்னர், நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த பாரம்பரிய தேவாலயம் முழுமையான மசூதியாகியது. அப்போது கூட (இஸ்லாமிய) அரசு கிறிஸ்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கியது. மசூதிக்கு மிக அருகில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்விரண்டு பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களையும், இன்றைக்கும் டமாஸ்கஸ் நகரில் காணலாம்.

சிரியாவை கைப்பற்றும் வரை முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான மசூதி இருக்கவில்லை. இஸ்லாத்தின் படி எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம். டமாஸ்கஸ் கிறிஸ்தவ தேவாலய கட்டிடத்தின் வடிவமைப்பு, பிற்காலத்தில் மசூதிக் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக அமைந்தது. கவனிக்கவும்: டமாஸ்கசில் இருந்தது ஒரு "கிரேக்க கிறிஸ்தவ" தேவாலயம். அவை கத்தோலிக்க தேவாலய வடிவமைப்பில் இருந்து மாறுபடுகின்றன. இன்றைக்கும் கிரீசுக்கு பயணம் செய்பவர்கள், அங்கிருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை காணலாம்.

அரேபிய பாலைவனத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள், நிர்வாகம் செய்யும் நடைமுறைகளையும் சிரியாவிலே கற்றுக் கொண்டனர். ஆட்சி அதிகாரம் அரபு-முஸ்லிம்களின் கையில் இருந்தது. ஆயினும் நிர்வாக அலுவல்களை கிரேக்க மொழி பேசிய நடுத்தரவர்க்கம் ஒன்று கவனித்துக் கொண்டது. முன்னர் கிரேக்க சாம்ராஜ்யத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், குமாஸ்தாக்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள் அப்படியே இருந்தனர். இதனால் தொடர்ந்து சில வருடங்களுக்கு அரபு-இஸ்லாமிய ராஜ்யத்தின் நிர்வாகம் கிரேக்க மொழியில் நடந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல அரபுமயமாகியது.

இஸ்லாமியப் பேரரசில் கிரேக்க மொழியின் செல்வாக்கு, அறிவியல் துறையையும் வளர்த்தது. பிற்காலத்தில் கிரேக்க மொழயில் இருந்த கணித, விஞ்ஞான நூல்கள், அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை யாவும் கிரேக்கத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முந்திய அறிவியலை, கிறிஸ்தவ மதம் அஞ்ஞானமாக கருதியது. நீண்ட காலமாக தடை செய்யப்பட்டிருந்த நூல்கள், இஸ்லாமிய ஆட்சியில் புத்துயிர்ப்பு பெற்றன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பின்னர், ஸ்பானியாவில் அந்த நூல்கள் லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை பின்னர் ஐரோப்பியர்களால் தமது காலனிகளிலும் பரப்பப்பட்டன. இன்றைக்கும் நமது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் தாவரவியல், விலங்கியல், கேத்திர கணிதம் ஆகியன அரேபியரால் வழங்கப்பட்ட கொடைகள்.

சிரியா, கோலான் குன்றுகளுக்கு அருகில், யார்மூக் என்ற இடத்தில் அரபு-முஸ்லிம் படைகளும், கிரேக்க-கிறிஸ்தவ படைகளும் மோதிக் கொண்டன. மத்திய கிழக்கின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த போர்க்களத்தில், இஸ்லாமியப் படைகள் வெற்றிவாகை சூடின. "யார்மூக் யுத்தம்", "ரிட்டா போர்கள்" என்பன அரேபிய தீபகற்பம் முழுவதும் இஸ்லாமிய மதம் பரவ உதவின. இஸ்லாமிய மதம் சாந்தியையும், சமாதானத்தையும் மட்டுமே போதிப்பதாகவும், அது ஒரு போதும் வாள் முனையில் பரப்பபடவில்லை என்று சில மதவாதிகள் கூறலாம். இஸ்லாமியர் மட்டுமல்ல, கிறிஸ்தவர், இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், என்று அனைத்து மதத்தவர்களும் அவ்வாறு தான் கூறிக் கொள்கின்றனர். வன்முறைப் போர்கள், அல்லது வாளேந்திய அரசு அதிகாரம் இன்றி உலகில் எந்த மதமும் பரவவில்லை. ஆயுத பலமற்ற மதங்கள் அழிந்து போனதை உலக வரலாறு நெடுகிலும் காணலாம்.

ஆரம்பத்தில் முகமது நபியின் போதனைகளைக் கேட்டு முஸ்லிமாக மாறியவர்கள், மெக்காவை சேர்ந்த ஒரு சிறு தொகையினரும், மெதீனாவாசிகளும் தான். இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள். பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தில் இருந்து பிரிந்து சுதந்திரமாக விரும்பிய கிழக்கு அரேபிய கிளர்ச்சியாளர்கள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டனர். அன்று அந்தக் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டிருக்கா விட்டால், இன்றைய ஓமானும், யேமனும் நூறு சத வீத முஸ்லிம் நாடுகளாக மாறியிருக்க மாட்டா. சிரியா, பாலஸ்தீனம் மீது படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்டிருக்கா விட்டால், அங்கே முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள்.

வாள் முனையில் மத அதிகாரத்தை நிலை நாட்டுவது வேறு, வாள் முனையில் மக்களை மதம் மாற்றுவது வேறு. இஸ்லாமிய வரலாற்றில் இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இரத்தம் சிந்திய போர்களின் மூலம் தான், இஸ்லாமியப் படைகள் பிரதேசங்களைக் கைப்பற்றின. எந்தப் பிரதேசம் எப்போது கைப்பற்றப்பட்டது? எந்த ஆண்டு, எந்த இடத்தில் அதற்கான யுத்தம் நடந்தது? போர்வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எந்தெந்த ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன? போர்முனையில் நேர்ந்த இழப்புகள் எத்தனை? இது போன்ற விபரங்களை எல்லாம் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இஸ்லாமியத் தளபதிகள் போரில் நிகழ்த்திய வீர சாகசங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரைக் கதைகளாக உலாவின. "இஸ்லாமிய மதம் வாள் முனையில் இருந்து பிறந்தது", என்பதை கூறிக் கொள்ள அன்றைய முஸ்லிம்கள் வெட்கப்படவில்லை. அதை பெருமையாக கருதிக் கொண்டனர்.

இன்று பலர் நினைப்பதற்கு மாறாக, முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பலாத்காகாரமான மதமாற்றம் இடம்பெறவில்லை. "மதம் மாறா விட்டால், கொலை செய்து விடுவேன்" என்று யாரையும் பயமுறுத்தவில்லை. ஆனால் மிக நாசூக்காக, சாத்வீக வழியில் மத மாற்றம் நடந்தது. இஸ்லாமியப் படைகளால் வெல்லப்பட்ட பகுதிகள், அரபு மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தன. நகரங்களில் அரச நிர்வாகத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் அரச உத்தியோகம் பெற விரும்பிய பிற மதத்தவர்கள் முஸ்லீமாக மாறினார்கள். காலப்போக்கில் அரபியை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர்.

நாட்டுப்புறங்கள் அரபு-இஸ்லாமிய நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இஸ்லாமியரல்லாதோர் இவர்களின் கீழே குத்தகை விவசாயிகளாக வேலை செய்தனர். பிற மதங்களை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் ஒரு பகுதியை, முஸ்லிம் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இஸ்ரேல்-எகிப்து எல்லையில் இருக்கும் பண்டைய நெசானா நகரில், அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரச ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க, அரபி இரு மொழிகளில் எழுதப்பட்ட அரச ஆணை அது(674 -675 ). இஸ்லாமியரல்லாத குடி மக்கள் எவ்வளவு கோதுமை, ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஏழை உற்பத்தியாளருக்கும், செல்வந்த நுகர்வோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வான பொருளாதார உறவு, பலரை முஸ்லீமாக மதம் மாறத் தூண்டியது.

நவீன காலத்தில் அரேபியரின் இஸ்லாமியமயமாக்கல் யுக்தி, ஆங்கிலேயரால் சிறந்த முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், ஒரு நாளும் தமது மதமான ஆங்கலிக்க-கிறிஸ்தவ மதத்தை வாள் முனையில் பரப்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலனிகளில் நிர்வாகப் பொறுப்புகளில் (அன்க்லிகன்) கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். உள்ளூர்வாசிகள் பலர் பதவிக்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி, ஆங்கிலத்தை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர். பிரிட்டிஷ் கொள்கைக்கு சாட்சியமாக "ஆங்கிலோ-இந்தியர்கள்" என்ற சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உள்ளது. "ஒரு சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி?" என்ற பாடங்களை, ஆங்கிலேயர்கள் அரேபியரிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
3.வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்
2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்
1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

5 comments:

  1. Good compilation. In fact detailed one. Surprise to see how come u became more interested in Islam studies?

    ReplyDelete
  2. சகோதரரே...
    தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    மேலும், தங்களின் முன்முடிவுகளை உதறியெறிந்துவிட்டு எழுதுவீர்களாயின் அது சரியான தொடராக இருக்கும். இதற்கு நல்ல உதாரணம், பா.ரா.வின் 'நிலமெல்லாம் ரத்தம்'. http://nilamellam.blogspot.com/ அவர், அதனை எழுதுமுன், யூத, கிருத்துவ, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அனைவரையும் படித்துவிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் எழுதி இருப்பார்... அதாவது நடுநிலையுடன்..! அதில் உங்களுக்கு பல தகவல்களும் 'நடுநிலையுடன் எழுதுவது எப்படி' என்ற தடமும் தென்படும் என்பது என் கருத்து. தங்களின் கொள்கைக்கு விரோதமாய் இருப்பின் தயவுசெய்து வரலாறை வளைக்காதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. //இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள்.//

    கலையரசன் உங்களின் எழுத்து திறமை என்னை அதிகமாக இரசிக்க வைத்துள்ளது.ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதுவதாக சொல்லும் நீங்கள் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் தப்பும் தவறுமாக வக்காலது வாங்குகிறீர்கள்.

    முதன் முதலில் மெக்கா குரைசிகள் மதீனாவின் முகமதுவை அளிக்க படை எடுத்து வந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை.முகமதுவே ஒரு கூட்டத்துடன் மெக்காவின் வியாபாரக்குழுக்களை பலமுறை அச்சுறுத்தியதாகவே வரலாறு உண்டு.வாசித்துப்பாருங்கள்

    ReplyDelete
  4. //இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள்.//

    கலையரசன் உங்களின் எழுத்து திறமை என்னை அதிகமாக இரசிக்க வைத்துள்ளது.ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதுவதாக சொல்லும் நீங்கள் இஸ்லாமிய வரலாற்றை மட்டும் தப்பும் தவறுமாக வக்காலது வாங்குகிறீர்கள்.

    முதன் முதலில் மெக்கா குரைசிகள் மதீனாவின் முகமதுவை அளிக்க படை எடுத்து வந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை.முகமதுவே ஒரு கூட்டத்துடன் மெக்காவின் வியாபாரக்குழுக்களை பலமுறை அச்சுறுத்தியதாகவே வரலாறு உண்டு.வாசித்துப்பாருங்கள்

    ReplyDelete
  5. //நல்ல உதாரணம், பா.ரா.வின் 'நிலமெல்லாம் ரத்தம்'. http://nilamellam.blogspot.com/ அவர், அதனை எழுதுமுன், யூத, கிருத்துவ, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அனைவரையும் படித்துவிட்டு ஒவ்வொரு விஷயத்தையும் எழுதி இருப்பார்... அதாவது நடுநிலையுடன்..!//

    தயவு செய்து நடுநிலை என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம்.இஸ்லாமிய தலைவர்கள் கொடுத்த இஸ்லாமிய வரலாற்றை அப்படியே ராகவன் அவர்கள் பதிவு செய்து புத்தகம் எழுதியுள்ளார்கள்

    ReplyDelete