நிலக்கண்ணி வெடிகள், யுத்த தளபாடங்கள், ஆகிய அழிவு சாதனங்களின் உற்பத்தியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தொழிலாளரை சுரண்டுதல், சுற்றுச் சூழல் மாசடைதல் போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்வதற்கும் வங்கிகளின் லாபவெறி ஒரு காரணம். நெதர்லாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர் குழு ஒன்று, தமது நாட்டின் பெரிய வங்கிகளின் முதலீடுகளைப் பற்றி ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆவணப்படம் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நெதர்லாந்தில் தலைமையகத்தை கொண்ட, உலகின் மிகப்பெரிய தேசங்கடந்த வங்கி நிறுவனங்களான ABN Amro, ING, Rabo போன்றன, பொது மக்களின் சேமிப்பு பணத்தை எடுத்து, மனித அழிவு வியாபாரத்தில் முதலீடு செய்கின்றன.
ஒவ்வொருநாளும் சராசரி 48 பேர் உலகின் எங்காவது ஒரு இடத்தில் நிலக்கண்ணி வெடிக்கு பலியாகினறனர். Alliant Techsystems, General Dynamics, Textron போன்ற நிலக்கண்ணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், வங்கிகள் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் வழங்குகின்றன. உலகில் மிக மோசமான அழிவு சாதனமாக கருதப்படும், "Cluster Bomb" உற்பத்தி செய்யும் Alliant, L3 Communications, Lockheed Martin, Northrop Grumman, Raytheon ஆகிய நிறுவனங்களிலும் இந்த வங்கிகள் முதலீடு செய்து, மனித அழிவில் பணம் சம்பாதிக்கின்றன. இது குறித்து வங்கிகள் தகவல் தர மறுக்கின்றன. தாம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதில்லை என்று நழுவுகின்றனர். அதேநேரம் இந்த அழிவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில் இருப்பதால், முதலீட்டாளரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால், இந்த வங்கிகளின் முதலீடுகள் குறித்த விபரங்கள் தெளிவாக காணக்கிடைக்கின்றன.
மக்கள் வங்கியில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தை, அல்லது பங்கு முதலீட்டை எடுத்து இந்த வங்கிகள் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன, அல்லது கடன் கொடுக்கின்றன. அந்த நிறுவனம் ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, அல்லது கடனுக்கான வட்டிகளை சம்பாதிக்கும் வங்கிகள் அவற்றில் ஒரு சிறுபகுதியை, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு கொடுக்கின்றன. இதனால் அதிக பயனடைவது வங்கிகள் தான். இவ்வாறு வங்கிகளுக்கு கிடைக்கும் மொத்த வருடாந்த லாபம் 3 டிரில்லியன் யூரோக்கள்! (3.000.000.000.000) இவ்வளவு பெரிய தொகையை மூலதனமாக கொண்டிருக்கும் வங்கிகள் உலகிலேயே சக்திவாய்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.
சர்வதேச சட்டங்களையும் வங்கிகள் மதிப்பதில்லை. சீனாவுக்கு ஆயுத ஏற்றுமதி சம்பந்தமான தடை இருந்த காலத்தில் அந்நாட்டிற்கு யுத்த ஹெலிகாப்டர் விற்பனை செய்யப்பட்டது. சீனா அந்த ஹெலிகாப்டர்களை பின்னர் சர்வதேச தடை இருக்கும் இன்னொரு நாடான சூடானுக்கு விற்றது. சூடான் இராணுவம், டார்பூர் பிராந்தியத்தில் நடக்கும்போரில் மக்களை படுகொலை செய்வது தொடர்பாக சர்வதேச கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் EAD என்ற ஐரோப்பிய நிறுவனம், அதிலே முதலீடு செய்யும் ABN Amro வங்கி, என்பன சர்வதேச சட்டங்களை தெரிந்து கொண்டே மீறும் குற்றத்தை புரிந்துள்ளன. இதிலே வேடிக்கை என்னவென்றால், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ABN Amro வங்கியின் ஆணையராக பதவி வகுப்பது தான். இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளை (Novib என்ற NGO)பகிரங்கப்படுத்திய போது, எந்த வங்கியும் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.
உலகை அழிவுக்கு இட்டுச் செல்லும் சுற்றுச் சூலை மாசு படுத்தும் சுரங்க கம்பெனிகளிலும் வங்கிகள் முதலீடு செய்கின்றன. இந்தோனேசியாவில் பொஸ்பேட் கணிமவளத்தை அகழும் Freeport McMoran என்ற நிறுவனத்தில் ABN Amro முதலீடு செய்திருந்ததை ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பு அம்பலப்படுத்திய பின்னர், வங்கி அந்த ப்ரொஜெக்டில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போதும் சர்ச்சைக்குரிய Freeport McMoran நிறுவனத்தில் கணிசமான பங்குகளை ABN Amro வைத்திருக்கின்றது. பொஸ்பேட் அகழ்வு வேலைகளால் இந்தோனேசியாவில் நீர், நிலம் மாசடைந்ததுடன், சுற்றாடலில் வாழும் மக்களும் நோயாளிகளாகியுள்ளனர். இந்தியாவிலும் (ஒரிசாவில்) இது போன்ற சர்ச்சைக்குரிய சுரங்க நிறுவன அகழ்வு திட்டங்களுக்கு நெதர்லாந்து வங்கிகள் பணம் கொடுக்கின்றன. இது போன்ற சூழலை மாசுபடுத்தும் திட்டங்களுக்கு, வங்கிகள் முதலீடு செய்யாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இயங்க முடியாது.
அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி "Wall-Mart" நிறுவனத்திற்கு சொந்தமான, பங்களாதேஷில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலகங்களில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தினசரி 17 மணிநேரம் கட்டாயவேலை வாங்கப்படுகின்றது. குழந்தைகளின் உற்பத்தித்திறன் குறையும் போது, அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். Wall-Mart மனித உரிமை மீறல்களை புரிவதாக அமெரிக்காவின் Human Rights Watch கூட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நெதர்லாந்தின் பெரிய வங்கிகள் யாவும், குழந்தை தொழிலாளரை சுரண்டும் Wall-Mart ல் முதலீடு செய்து வருகின்றன.
எந்த வித பொறுப்புணர்வும் இல்லாமல் பொது மக்களின் பணத்தை எடுத்து, தீய காரியங்களில் முதலீடு செய்யும் வங்கிகள், இது குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரிவிப்பதில்லை. மனித அழிவுக்கும், மனித உரிமை மீறலுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடி காரணமாக இருந்தாலும், இவற்றில் முதலிடும் வங்கிகளுக்கும், தெரிந்து கொண்டே பணம் வைப்பிலிடும் மக்களுக்கும் மறைமுகமான பொறுப்பு இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பிய "Bank Secrets" (மூல மொழி:நெதர்லாந்து, ஆங்கில தலைப்புகளுடன்)வீடியோவை பின்வரும் தொடுப்பின் மூலம் பார்வையிடலாம். Zembla (English)
Part 2
_________________________________________
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை , இந்த சர்வதேச செய்திகள் நம்மை உலுக்குவது நிஜம் .
ReplyDeleteமிக முக்கியமான கட்டுரை.
ReplyDeleteஎதோ ஒரு மூலையில் நல்ல நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன...
http://www.hindustantimes.com/rssfeed/europe/Church-of-England-sells-Vedanta-shares-over-Orissa-human-rights/Article1-505944.aspx