Monday, April 14, 2008

தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?

சீன ஆட்சிக்கெதிராக திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முண்டியடித்துக் கொண்டு தலைப்புசெய்தியாக போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. சாத்வீகமான போராட்டம் என்று கருதப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம், திடீரென வன்முறை வெடித்து, பௌத்த ஹான், முஸ்லீம் ஹுய் சீனர்களின் கடைகள், உடமைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவியுடை தரித்த திபெத்திய பௌத்த பிக்குகள், அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திய காட்சிகளை, சீன தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது. வேறு வழியில்லாமல், (ஏனென்றால் அப்போது திபெத்தில் இருந்து வேறு எந்த படங்களும் வராததால் ), மேலைத்தேய ஊடகங்களும் அந்த ஒளிப்படங்களையே வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இப்படியான செயல்களை வேறு யாராவது செய்திருந்தால், (உதாரணத்திற்கு: பாலஸ்தீனியர்கள்), வன்மையாக கண்டிக்கும் மேற்குலக "அரசியல் அவதானிகள்", இந்த திபெத்தியர்கள் சீன அரச அதிகார இலக்குகளை தாக்குவதை விட்டு, எதற்கு பொதுமக்களின் சொத்துகளை தாக்க வேண்டும், என்றெல்லாம் தர்க்க ரீதியாக கேட்காமல், தீபெத் வன்முறைகளை மட்டும் நியாயப்படுத்தி கதைத்தனர். "பாலஸ்தீனியர்கள் அடித்தால் பயங்கரவாதம், திபெத்தியர்கள் அடித்தால் சுதந்திரப்போராட்டம்", என்று படித்து பட்டம் பெற்ற "அரசியல் அவதானிகள்" வேறு எப்படி பேசப்போகிறார்கள்?

இந்த நியாயப்படுத்தல்கள் சில நாட்களே தேவைப்பட்டது. ஒரு நாள், தலாய் லாமாவிடம் இருந்து, ஒரு நிழற்படம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்தப்படத்தில் சீன போலிஸ் படையினர், கைகளில் (பிக்குகள் அணியும்) காவி உடைகளுடன் காட்சி தருகின்றனர். அந்த நிழற்படம் கூற விரும்பும் செய்தி இது தான். திபெத்திய பௌத்த பிக்குகள் வன்முறையில் ஈடுபடவில்லை. சீன பொலிசார், பிக்குகள் போல் வேஷம் போட்டு, இந்தக் காரியங்களை செய்துள்ளனர். அதனை சீன அரசு வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்கின்றது. அமெரிக்க, ஐரோப்பிய "நடுநிலை காக்கும்" ஊடகங்களுக்கு இந்த ஒரு படம் போதாதா? சீனர்களின் "உண்மை சொரூபத்தை" தோலுரிக்க? பலதடவை பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது, தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. ( அந்தப் படம் கீழே உள்ளது)


ஆனால் உண்மை என்ன? தலாய் லாமா அனுப்பிய அந்தப்படம் ஒரு திரைப்படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. திபெத் பற்றிய சீன படம் ஒன்றில், இராணுவ வீரர்களாக நடித்த அதே நடிகர்கள், பின்னர் பௌத்த பிக்குகள் வேடத்திலும் நடிக்க தயாராக நின்ற போது, எடுத்த நிழற்படம் தான் அது. அந்த நடிகர்கள் போட்டிருந்த சீருடை கூட, மாவோ காலத்திய இராணுவத்தினுடையது. இன்றைய சீன போலிஸ், அல்லது இராணுவம் வேறுவிதமான சீருடை போட்டிருப்பதை, இதை வாசிக்கும் நீங்களே பின்னர் கவனித்து பாருங்கள். தலாய் லாமாவின் ஏமாற்று வேலை தெரிய வர, சீன ஊடகங்கள் பின்னர் மேற்கத்திய ஊடகங்களின் நம்பகத்தன்மையை அக்கு வேறு, ஆணி வேறாக அலசத் தொடங்கி விட்டன. இதனால் நாணமுற்ற மேற்கத்தைய ஊடகங்கள், திபெத்தியர்கள் செய்வதும் பிரச்சாரம் தான், இதனால் உண்மை எது பொய் எது என்று தெரியவில்லை, என்று சப்பைக்கட்டு கட்டின. ஒரு சில, அப்போது திபெத்தில் இருந்த, மேலைத்தேய உல்லாச பயணிகளை விசாரித்து, செய்தி வெளியிட்டன. அவர்களும் தாம் வெடிச்சத்தங்களை தூரத்தில் கேட்டதாகவும், ஊரடங்கு உத்தரவினால் வெளியே போகவில்லை என்று மட்டும் கூறினர்.

தலாய் லாமா, இப்போது மட்டும் தான் உண்மையை திரிபு படுத்துகிறாரா? ஓட்டு மொத்த திபெத் மக்களின் ஆன்மீக-அரசியல் தலைவராகவும், புகலிடத்து திபெத் அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆகவும், தனது நான்கு வயதில் இருந்து, எழுபத்தியிரண்டு வயது வரை பதவியில் இருக்கும் "தென்சின் கியஸ்டோ" என்ற இயற் பெயருடைய மனிதர், "தலாய் லாமா" (அறிவுக்கடல் என்று அர்த்தம்) என்ற கௌரவ பட்டத்துடன், நமக்கெல்லாம் அறிமுகமாகிறார். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன், அஹிம்சை, சமாதானம் பேசும் இவருக்கு "சமாதானத்திற்கான நோபெல் பரிசு" வழங்கப்படும் அளவிற்கு, உலக மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்துள்ளார். அல்லது மேற்குலகம் அவரை அப்படித்தான் எமக்கு காட்ட விரும்புகிறது. ஐரோப்பியரும், அமெரிக்கரும் சொல்லி விட்டால் நாமும் நம்பத்தானே வேண்டும்?

அஹிம்சா முறை போராட்டம், சமாதானம் எல்லாம், கடந்த இருபது வருட காலமாக, சரியாக சொன்னால், ஆயுதமேந்திய திபெத்திய விடுதலை போராட்டம் தோல்வியை தழுவிய பின்னரே, தலாய் லாமா இப்படி பேசி வருகின்றார். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக திபெத்தில் இடம்பெற்ற, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயதமேந்திய போராளிகளின் கெரில்லா போராட்டம், பற்றி பலர் இப்போது தான் முதன்முறையாக கேள்விப்படலாம். திபெத்தியரின் கெரில்லா தாக்குதல்களில், பல சீன இராணுவ வீரர்கள் மடிந்திருந்தாலும், யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்களும் இறந்துள்ளனர். ஆயுதமேந்திய திபெத் சுதந்திரப்போராட்டம் பற்றி எந்த சரித்திர நூல்களிலும் எழுதப்படவில்லை, ஊடகங்கள் மௌனம் காத்தன. அந்தப் போராட்டத்திற்கு தேவையான நிதி, ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்க அரசாங்கம் இதைப்பற்றி மிக இரகசியமாக வைத்திருந்தது. அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள இரகசிய பயிற்சி முகாமில், திபெத்தியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களை, ஆயுதங்களுடன் அமெரிக்க விமானங்கள் எடுத்து சென்று, திபெத் மலைகளில் பரசூட் மூலம் இறக்கி விட்டன.


சீன அணு குண்டு தயாரிப்பது பற்றிய தகவல் முதற்கொண்டு, பல சீன இராணுவ இரகசியங்கள், இந்த திபெத் போராளிகள் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.எ. கு வழங்கினர். ஆனால் அதுவே அவர்களது ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்கு காரணியானது. சீனா அணு வல்லரசாக மாறியதால், அமெரிக்கா அதனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சீனாவின் நட்பினை பெரிதாக மதித்த அமெரிக்கா, திபெத்தியர்களை கை விட்டது.


இந்த உண்மைகளை அமெரிக்க அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக சொல்லவில்லை என்றால், ஒரு ஆன்மீக தலைவரான தலாய் லாமா சொல்லலாம் தானே? திபெத்தின் நீண்ட ஆயுதமேந்திய போராட்ட வரலாற்றை மறைப்பதேன்? அப்படி சொன்னால் தனது சமாதான முகமூடி கிழிந்துவிடும், ஆன்மீக வேஷம் கலைந்து விடும், என்று அஞ்சுகிறாரா? திபெத் போராளிகளின் தியாகத்தை மூடி மறைத்து விட்டு, திபெத்தியர்கள் என்றால் வன்முறையில் ஈடுபடாத அப்பாவிகள், என்று கதையளப்பதேன்? இப்போது கூட சில திபெத்திய தீவிரவாதிகள் தலைமறைவாக வன்முறைக்கு தயாராகும் செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தலாய் லாமா அதை சீன அரசாங்கத்தின் பொய் பரப்புரை என்கிறார். தலாய் லாமா அவர்களே! நீங்கள் ஆண்ட அன்றைய திபெத்தில், பண்டைய இந்தியாவில் இருந்தது போன்ற சத்திரியர் குலம், "காம்" என்ற மாகாணத்தில் இருந்தும், அவர்களே உங்களது ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினராக இருந்ததையும் எதற்கு சொல்லாமல் மறைக்கிறீர்கள்? தலாய் லாமா, பொய் சொல்ல லாமா?

மேற்கத்தைய ஊடகங்களால் திரிக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு வீடியோ கீழே:


______________________________________________________

கலையகம்

No comments:

Post a Comment