Saturday, April 12, 2008

உலக ( உணவுக் கலவர) வங்கி

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்." - என்று பாடினான் பாரதி. "பல கோடி மக்களுக்கு உணவில்லை எனில் தனி மனிதர்களை அழிப்பதில் தவறில்லை." - என்று பொருளாதார பாடம் சொல்லிக் கொடுக்கிறது உலக வங்கி. அந்த வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்று, எதிர்வரும் காலங்களில் உலகில் முப்பத்திமூன்று நாடுகளில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து, போது மக்கள் கலவரங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எகிப்து, ஹைத்தி, கமரூன் ஆகிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரத்தை அடக்க பொலிசார் சுட்டதில் ஹைத்தியில் ஐந்து பெரும், கமரூனில் நாற்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா, பாகிஸ்தான், மொரோக்கோ, செனகல், மொசாம்பிக், மொரிடனியா ஆகிய நாடுகளிலும் உணவுப்பொருள் விலையேற்றத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பிலிப்பைன்சில் அரிசிக்கடைகளுக்கு பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யாராவது ஒரு பிடி அரிசி திருடினால், கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நான்கு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று: பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள். இரண்டு : சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பெருகிவரும் மத்தியதர வர்க்கத்தினரின் வாங்குதிறன் அதிகரித்து, முன்பை விட அதிகம் இறைச்சி தமது அன்றாட உணவில் சேர்க்கின்றனர். இறைச்சி உண்பவர்கள், அதோடு சேர்த்து பல மடங்கு தானியங்களையும் நுகர்கின்றனர். மூன்று : பணக்கார நாடுகள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, வழக்கமான நிலத்தடி பெற்றோலிய நுகர்வை குறைத்து, சுற்று சூழல் காப்பது என்ற பெயரில், உயிரியல் எரிபொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில், பெருந்தோட்டங்களில் விளைவித்து எரிபொருளாக பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அதே சோளம், அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள். ஐரோப்பாவும், அமெரிக்காவும் தமது நாட்டின் 20 வீதமான வாகனங்கள் வரும் பத்தாண்டுகளில் உயிரியல் எரிபொருளை பாவிக்க வேண்டும், என்று திட்டம் போட்டு நடைமுறைபடுத்துகின்றன. இதனால் சோளத்தின் விலை உலகசந்தையில் உயர்ந்து, வறிய மக்களால் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு : பங்குச்சந்தை சூதாடிகள், தானிய வியாபாரத்தில் அதிகளவு லாபம் வரும் என்று நம்பி, தானிய விலையை செயற்கையாக அதிகரிக்க வைக்கின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும், தானியங்களின் விலை உயர்வு ஏழை மக்களையே அதிகளவு பாதிக்கின்றது.

இந்த பொருளாதார தாக்கம் முரண்நகையாக ஏழை நாடுகளில் தானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளையே பாதிக்கின்றது. உலகமயமாகிய பொருளாதாரம் காரணமாக, ஏழை நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை விட, தாய்லாந்திலும், சீனாவிலும் இருந்து இறக்குமதியாகும் அரிசி மிக மலிவாக உள்ளது. இதனால் உள்ளூர் விவசாயம் நலிவடைந்து, விவசாயிகள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி தள்ளப்பட்டனர். கிராமங்களில் விவசாயிகளாக இருந்த போது, உணவுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. ஆனால் நகர்புற சேரிகளில், கூலி உழைப்பாளிகளாக வாழும் போது, கிடைக்கும் கூலியில் அரைவாசிக்கு மேல் உணவுத்தேவைக்கு செலவிட வேண்டிய நிலை. ஒரு காலத்தில், மலிவான அரிசி விற்றுக்கொண்டிருந்த தேசங்கடந்த வர்த்தக நிலையங்கள், தற்போது அதே அரிசியின் விலையை இரு மடங்காக அதிகரித்த போது, அதனை விலை கொடுத்து வாங்க சக்தியற்றவர்கள் ஏழை மக்கள் தான். அதனால் தான் ஹைத்தியிலும், எகிப்திலும் அவர்கள் கலவரங்களில் ஈடுபட்டனர்.

உணவுக் கலவரங்கள் பரவவிடாது தடுக்கும் பொருட்டு, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஹைத்தி, எகிப்து ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், உள்ளூர் தனிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை கேட்டது தான் தாமதம், உலக வங்கி அலறி அடித்துக் கொண்டு; "இது தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும், அரச வரவுசெலவுத்திட்டத்தில் செலவினத்தை அதிகரிக்கும், இது தற்காலிக தீர்வு மட்டுமே, மானியத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் பொருளாதார விருத்திக்கு உதவ மாட்டார்கள்..." இவ்வாறு பொருளாதார வல்லுனர்கள், அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். இதே உலக வங்கி, மக்கள் பட்டினியால் சாவதை பற்றியோ, சாமானியர்களின் செலவினம் அதிகரிப்பது பற்றியோ கவலைப்படவில்லை. உலகவங்கியின் கவலை எல்லாம், உலகம் முழுக்க தானியம் விற்கும் தேசங்கடந்த நிறுவனங்களின் லாபம் குறைந்து விடும் என்பது மட்டுமே.

அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்பு வெளிநாடுகளில் இருந்து தானியம் இறக்குமதி செய்வதை தடைசெய்து, தமது விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தனர். அன்று அப்படி செய்த அதே நாடுகள் தான், இன்று தமது மிதமிஞ்சிய தானியங்களை உலகசந்தையில் விற்கின்றனர். அதனையே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் செய்ய விரும்பினால், உலக வங்கி ஓடி வந்து பொருளாதார வகுப்பு எடுக்கும். மூன்றாம் உலக நாடுகளில், சீனா மட்டுமே பணக்கார நாடுகளுக்கு நிகராக தானிய ஏற்றுமதி செய்கின்றது. அதுவும் முன்பு அங்கு இடம்பெற்ற கம்யூனிச புரட்சியின் பின்னர், எல்லைகளை மூடி, ஏற்றுமதியை தடைசெய்து, உள்ளூர் உற்பத்தியை பெருக்கியதாலே தான் இன்று இந்த நிலை.

உள்நாட்டு உற்பத்தியை கூட்ட, சந்தையை பாதுகாக்க நினைக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார சீர்திருத்தம், காலம் பிந்தி வந்த மிகச்சிறிய சீர்திருத்தம் என்று அந்நாட்டு மக்கள் குறைப்படுகின்றனர். அதேநேரம் சந்தையை திறந்துவிடு, கட்டுபாடுகள் போடாதே, என்று உலகவங்கி கொடுக்கும் அழுத்தம் காரணமாக அந்த சீர்திருத்தம் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் தானியங்களின் விலையும் குறையப்போவதில்லை. இதைப்பற்றி பணக்கார நாடுகளில் உயிரியல் எரிபொருள் நிரப்பிய கார் ஓடும் மக்களுக்கு, உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர்களுக்கு, வறிய நாடுகளில் உள்ள வசதிபடைதோருக்கும் என்ன கவலை? அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தாராளமாக சந்தையில் கிடைக்கின்றன. அதை வாங்க கூடிய பலமும் இருக்கிறது. அவ்வப்போது உணவுக்கலவரங்கள் வெடிக்கும் போது, ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் உலகின் மறுகோடியில் இருக்கும் மக்களுக்கு செய்தி போய்ச்சேர்வதில்லை.

__________________________________________________

கலையகம்

1 comment:

  1. அடர்த்தியான கட்டுரை நண்பரே.

    ReplyDelete