Wednesday, March 05, 2008

சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை

“வெள்ளையர்கள் எமது நாட்டுக்கு வந்த போது, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. எம்மிடம் நிலம் இருந்தது. எம்மை கண் மூடி
தியானம் செய்ய சொன்னார்கள். கண் விழித்து பார்த்த போது,அவர்கள் கைகளில் நிலங்களும், எமது கைகளில் பைபிளும் இருந்தது.” - ஒரு தென் ஆப்பிரிக்க கவிஞர்.

மேற்கத்திய ஊடகங்கள் ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி முகாபே பற்றி ஒரு போதும் நல்லதாக சொல்வதில்லை. அவர்கள் பார்வையில் முகாபே ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன், பைத்தியக்காரன், அவன் தொலைந்தால் தான் அன் நாடு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். இந்த “பத்திரிகாதர்மம்”, ஜிம்பப்வேயில் காலங்காலமாக, கறுப்பர்களின் நிலங்களை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடிய வெள்ளையின “விவசாயிகளை” ( அவர்கள் விவசாயிகளா அல்லது நில உடமையாளர்களா?) முகாபே விரட்டியதால் வந்த இனப்பாசம். உலகம் முழுக்க மேலைத்தேய ஊடகங்களின் பிரச்சாரம் எடுபட்ட போதும், ஆபிரிக்க கண்டத்தில் மட்டும் நிலைமை வேறு விதமாக உள்ளது. முகாபெக்கு உள் நாட்டிலயே, அவரை வெறுக்கும் மக்கள் இருக்கின்றனர் தான். இருந்தாலும், ஜிம்பாப்வேக்கு வெளியே பிற ஆபிரிக்க நாடுகளில் நல்ல செல்வாக்கு உள்ளது. பெரும்பான்மை ஆபிரிக்கர்கள் முகாபெயை தமது ஆதர்ச நாயகனாக பார்க்கின்றனர். இன்னும் சொன்னால், மேற்கத்தைய நாடுகளின் சட்டாம்பிள்ளைதனத்தை எதிர்க்க திராணியற்ற தமது நாட்டு தலைவர்களை விட முகாபே மீது நிறைய மதிப்பு வைத்துள்ளனர். அந்தக் கண்டத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு எந்த ஆப்பிரிக்க நாட்டு தலைவரும் முகபெக்கு எதிராக கதைக்க துணிவற்று உள்ளனர். அதற்கு காரணம், தம் நாட்டு மக்களே அதை விரும்பபோவதில்லை என்பதுடன் , எதிர்ப்பவர்கள் யாவரும் ஐரோப்பிய எஜமானர்களின் வேலைக்காரர்களாக கருதப்படுவதும் தான்.

சிம்பாவே அதிபருக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை அறிவிக்க ஆளும் ZANU-PF கட்சி மறுத்து வருகின்றது. ஜனநாயகம் என்பது தமக்கு எதிராக ஒரு நேரம் திரும்பும் என்று கண்ட தற்போதைய அதிபர் முகபேயும், அவரதும்கட்சியும் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்றன. இதே நேரம் தேர்தலில், கணிசமான வாக்குகளை பெற்ற எம்.டி.சி. என்ற எதிர்கட்சி, தேர்தலில் வென்றதாக அறிவித்ததும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததும் அண்மைக்கால செய்திகள். நீண்ட காலம் ஜனாதிபதி பதவியில் உள்ள ZANU-PF தலைவர் முகபெக்கும், எதிர்கட்சி எம்.டி.சி. தலைவர் ஷங்கரைக்கும் இடையில் நடந்த போட்டியில், இருவரும் கிட்டதட்ட சம அளவு வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அதனால் இரண்டாவது தேர்தல் அவசியமென்றும் கருதப் படுகின்றது. முன்னால் கொலனியவாதியான பிரிட்டனுக்கும், பிற மேற்கத்திய நாடுகளுக்கும், அது அவசியமில்லை. ஆட்சியதிகாரத்தை எதிர்கட்சி தலைவர் ஷங்கரையிடம் கொடுத்து விட்டு, முகபே பதவி விலக வேண்டும். அவர்களைப் பொறுத்த வரை, தமது சொல் கேட்டு நடக்கும் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவசரம். ஷங்கரையும் ஆளும் கட்சி அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்து தரும் என்று எதிர்பார்க்கின்றது. அப்படி நடக்கா விட்டால்? அவர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. சர்வகட்சி ஜனநாயகம் ஜிம்பாப்வேயில் இருந்தாலும், ZANU-PF கட்சி தமது விடுதலைப் போராட்டம் அதற்கனது அல்ல என்று கூறியுள்ளது. அந்தக் கட்சி நூற்றாண்டு காலம் நீடித்த வெள்ளையின ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்துக்கு வந்த பத்தாண்டுகளுக்கு மார்க்சிய அடிப்படையில் ஆட்சி நடத்தியது. பின்னர் உலகில் சோஷலிச நாடுகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு உதவியையும், நண்பர்களையும் குறைத்ததால், தவிர்க்க இயலாமல் மேற்கத்திய ஐ.எம்.எப்., உலக வங்கி போன்றவற்றிடம் அபிவிருத்தி நிதி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்களை விட, போட்ட நிபந்தனைகள் அதிகம். அதனால் எமக்கு கடன் உதவியே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முகபெக்கும், குறிப்பாக பிரிட்டனுக்கும் இடையேயான முறுகல் நிலை முற்றி, காலனிய காயங்களை மீண்டும் கிளறி விட்டது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே பிரிட்டிஷார் நிரந்தரமாக குடியேறி இருக்க நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், ஜிம்பப்வேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள்(வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய ஜனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார்.

இன்று மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் வரலாறு முக்கியமில்லை என்று கூறுவார்கள். அப்படி சொல்வது யார்? கடந்தகாலத்தில் தமது முன்னோர் செய்த கொடுமைகள், தவறுகள், தீய வழிமுறைகள் என்பன இன்றைய தலைமுறையினருக்கு தெரியக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள். ஏனெனில் அவர்களின் நல்வாழ்வும், அதிலே தானே தங்கியுள்ளது? ஜிம்பாப்வே பிரச்சினையையும் இந்த அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின ஜனாதிபதியும், ZANU-PF தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும்; வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பின்பும், அந்த நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது. தென் ஆப்ரிக்கவிலும் இது தான் நிலைமை. இதனால் சந்தேகத்திற்கு இடமின்றி, பெரிய கோடிஸ்வரர் எவரும் வெள்ளை இனத்தவராகவே இருப்பார். இதைக்கேட்ட உடனே, யாராவது ஒரு அறிவாளி, சோம்பேறி கறுப்பர்களுக்கு சுறுசுறுப்பான வெள்ளையர்கள் மீதுபொறாமை என்று சொல்லலாம். அது திருடர்களுக்கு நியாயம் கற்பிப்பது போலாகி விடாதா?

முன்னால் ZANU-PF போராளிகளும், அந்த கட்சியின் இளைஞர் பிரிவும் சேர்ந்து, வெள்ளையின விவசாயிகளை வன்முறையினால் வெளியேற்றி, அவர்களிடம் நிலங்களை கைப்பற்றி, கறுப்பின விவசாயிகளுக்கு வழங்கிய போது, பிரிட்டனுக்கும், மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும், அதன் நியாயத்தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவரை கண்ணியமான நடுநிலை ஊடகங்களாக காட்சி தந்தவை; அநியாயம், அக்கிரமம், வெள்ளையர் மீது கறுப்பர்கள் நிறவெறியாட்டம் என்றெல்லாம் வர்ணித்தன. பிரிட்டிஷ் அரசாங்கமோ வெள்ளையின ஜிம்பாப்வே “அகதிகளுக்கு” நிலமும் வீடும் கொடுத்து வரவேற்றது. அதே நேரம், ஜிம்பாப்வே எதிர்கட்சி ஆதரவாளர்களான கறுப்பினத்தவர் பலருக்கு, அகதி அந்தஸ்து கூட வழங்கவில்லை. அரச மட்டத்தில், பத்திரிகை துறையில் காணப்படும், பகிரங்கமான நிறுவனமயப் படுத்தப்பட்ட நிறவாதம், “தனி மனித உரிமை” என்ற பெயரில் நியாயப் படுத்தப் படுகிறது. ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்து போன்று, அமெரிக்கா ஜிம்பாப்வே மீது படையெடுக்க வேண்டும் என்று பிரிட்டன் நிர்பந்தித்து வருகின்றது. உலக வல்லரசான அமெரிக்காவிற்கு அங்கே எந்த பொருளாதார நலன்களும் இல்லாததால் அக்கறையின்றி உள்ளது.

இதனால் வேறு வழிகளில் முகாபெயை பதவி இறக்கும் நோக்கில், பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையின் கதவுகள் மூடப்பட்டன. நாணய பெறுமதி இறக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றில், சர்வதேச சந்தையை கட்டுபடுத்தும் அன்னிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இதனால் அயல் நாட்டில் இருந்து கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில், பாவனைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. (ஏற்றுமதி பற்றி கூறத் தேவையில்லை). முக்கிய ஏற்றுமதியான புகையிலை தோட்டங்கள் யாவும் வெள்ளையின விவசாயிகள் கைகளில் இருந்தன. அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்பு சர்வதேச சந்தை சிம்பாப்வே புகையிலை வாங்குவதை நிறுத்தியது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தனியார்மயம் இருந்ததால், சர்வதேச நிர்ப்பந்தத்திற்கு கட்டுபட்டு, செயற்கையான உணவுத்தட்டுபாடை ஏற்படுத்தினர். உலகின் பிற நாட்டு மக்களை போல, பாவனையாளர் கலாச்சரத்திற்கு பழக்கப்பட்ட ஜிம்பாப்வே மக்கள், பட்டினி கிடக்கும் நிலைக்கு வந்தனர். முகாபே நிர்வாகம், மேற்குலக நாடுகளை பகைத்து கொண்டதற்கு, பெரிய விலை கொடுத்து, கடைசியில் அதிகாரத்தை பறிகொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. சீனா மட்டும் தான் தற்போது ஜிம்பாப்வேயின் பொருளாதார நண்பன். அனைத்து பொருட்களும் சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றது. இருப்பினும் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடில்லை என்பதால், சர்வதேச நெருக்குவாரத்திற்கு கட்டுபட்டே நடக்க வேண்டியுள்ளது.

காலனிய காலகட்டத்தில் இருந்து தேசத்தை முழுமையாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்று, ஜிம்பாப்வே அனுபவரீதியாக உணர்ந்து வருகின்றது. முகாப்வே நிர்வாகம் அரசியல் அதிகாரம் தமது கையில் இருந்தால் போதும், எல்லாம் சரிவரும், என்று நினைத்து நடந்ததன் பலன்களை அனுபவித்து வருகின்றது. பல கட்சி ஜனநாயகத்திற்கு இடம்கொடுத்தமை, கருத்து சுதந்திரத்திற்கு அனுமதித்தமை, லிபரல் பொருளாதாரத்தை தன்பாட்டிலே விட்டமை போன்ற காரணிகள் தற்போது மேற்குலக (முகாபேயின் மொழியில் : காலனியவாதிகள்) சக்திகள், தமக்கு சார்பாக பயன்படுத்த வாய்ப்பளித்தது போலாகி விட்டது.

இன்றுள்ள நிலை, முகாபே எந்த வித நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஹராரேயில் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் ஊர்வலம் நடந்துள்ளது. எதிர்புரட்சியாளர்களை வன்முறை கொண்டு அடக்க தயாராக இருப்பதாக சூளுரைத்துள்ளனர். அப்படி வன்முறை வெடித்தால், மேற்குலக நலன்களுக்கான உள்நாட்டு முகவராக செயற்படும் எதிர்கட்சி எம்.டி.சி.யும், அதன் தலைவர் ஷங்கரையும், தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களை இழக்க வேண்டி ஏற்படும். ஜிம்பாப்வே இதற்கு முன்னரும் இதுபோன்ற காட்சியை கண்டுள்ளது. எண்பதுகளில், ZANU-PF அதிகாரத்திற்கு வந்து ஒரு சில வருடங்களே இருந்த நிலையில், அன்றிருந்த இன்னொரு விடுதலை இயக்கம் , அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இன்றுள்ள எதிர்க்கட்சியான எம்.டி.சி. வன்முறையை எதிகொள்ள கூடிய நிலையில் இல்லை.

முகாபே ஒரு புரட்சிக்காரன் அல்ல. சுயநலம் உள்ள அரசியல்வாதி தான். இருப்பினும், தனது ஆதரவுத்தளம் புரட்சிக்காக தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய, முன்னால் விடுதலைப்போரளிகளிடம் உள்ளது என்பது நன்றாக தெரியும். வெள்ளையின விவசாயிகளின் நிலங்களை பறித்தமை, கடந்த காலத்தில் பூர்த்தி செய்ய படாத, இதே முகாபெயினால் உறுதிமொழி வழங்கப்பட்ட, புரட்சியின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றது. ஜிம்பாப்வே இன்றும் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது என்றால், அது புரட்சி இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றே காரணம் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள், பழியை முகாபே மீது போடுகின்றன. உள்ளூர் முகாமைத்துவ குறைபாடுகள், பிழையான பொருளாதார திட்டங்கள், போன்றன தான் பிரச்சினைக்கு காரணிகள் என்கின்றன. அதன் அர்த்தம் என்ன? கறுப்பர்களுக்கு நிர்வகிக்க தெரியாது, வெள்ளையரிடம் விட்டு விடுங்கள், சிறப்பாக நடத்தி காட்டுவார்கள் என்ற காலனிய மனப்பான்மையா?

முன்னால் காலனிய நாடுகள் பேசுவது போல, ஜிம்பாப்வே எப்படி தேர்தல் நடத்த வேண்டும்? ஜனநாயகம் என்றால் என்ன? என்றெல்லாம் நாமும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அந்த பொறுப்பை அந்நாட்டு மக்களிடமே விட்டு விடுவோம். அவர்கள் எதையும் தாமாகவே கற்றுக் கொள்ளட்டும். ஆனால் அதே நேரம் கறுப்பர்களின் கடமை ஒன்று உள்ளது. முன்பு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய போது, அதனை ஐரோப்பியர்கள் தமக்கு “கறுப்பர்களை நாகரீகப்படுத்த வேண்டிய கடமை” இருப்பதாக தமது செயல்களை நியாயப்படுத்தினர். நூற்றாண்டுகளுக்கு முன்பு அபகரித்த நிலங்களை, இப்போதாவது உரியவர்களிடம் ஒப்படைக்கும் நாணயம் வெள்ளையருக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமை கறுப்பருக்கு உண்டு.

______________________________________________

கலையகம்

No comments:

Post a Comment