Saturday, April 27, 2024

EPDP & TMVP யின் இணக்க அர‌சிய‌ல், ஆயுதப் போராட்டத்தின் தோல்வி!

டக்ளஸ் தலைமையிலான EPDP மற்றும் கருணா/பிள்ளையான் தலைமையிலான TMVP ஆகிய அரசியல் கட்சிகள், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைப்பது தமிழீழத்திற்கான ஆயுத போராட்டத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகின்றது! 

விளக்கம் கீழே 👇👇👇

இவ்விரு கட்சிகளை உருவாக்கிய ஆரம்ப கால உறுப்பினர்கள் முன் ஒரு காலத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அவர்கள் வந்தடைந்த இடம் என்னவென்று விபரிக்க தேவையில்லை.

இன்னொரு வகையில் பார்த்தால், அவர்களால் தனித்து நின்று எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாது. காரணம், முன்பு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் என்பதால், அரசு எந்நேரமும் சந்தேகம் கொண்டிருக்கும். இனவாத மனநிலையும் இலகுவில் நம்ப விடாது. இதற்கு பல ஆதாரங்களை காட்டலாம். 

முன்னாள் இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய நந்திக் கடல் நோக்கி நூலை வாசிக்கவும். புலிகளால் இயங்க விடாமல் தடுக்கப் பட்ட முன்னாள் போராளிக் குழுக்கள், அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை எதிர்த்து போரிட முன்வந்த போதிலும் அவர்களை தம்முடன் சேர்க்காமல் தனித்து இயங்க விட பட்டதாக குறிப்பிடுகிறார். காரணம்: "அவர்களை நம்ப முடியாது. ஒரு காலத்தில் எமக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்டவர்கள்." 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் துணைப் படைக் குழுக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு இருந்தன. அரசு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி இருந்தாலும், இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் குழுக்கள் தமது நிதி ஆதாயத்திற்காக தமிழ் வர்த்தகர்களிடம் மிரட்டி கப்பம் வசூலிப்பதை கண்டு கொள்ளவில்லை.  

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இன்று எதிர்ப்பு அரசியல் செய்யும் தரப்பினர் யார் என்று பார்த்தால், அவர்களுக்கும் ஆயுத போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது! சிலரது உறவினர்கள் போராளிகளாக இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் யாரும் இயக்கத்தில் சேரவில்லை. உறங்காமல் விழித்திருந்து படித்து இருப்பார்களே தவிர, ஒரு இரவாவது காவலரண் கடமையில் இருந்திருக்க மாட்டார்கள். 

அனைவருக்கும் தெரிந்த தமிழரசுக் கட்சி, அதிலிருந்து பிரிந்து சென்று "தீவிர புலி அரசியல்" பேசும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி. இவ்விரண்டு கட்சிகள் தான் அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தூய தமிழ்த் தேசியக் கட்சிகளாக தம்மைக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒரு போதும் துப்பாக்கியை கையால் தொட்டிருக்க மாட்டார்கள். 

ஆயுத பாணி இயக்கங்களை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் இரு‌ந்து அரச இராணுவத்தை எதிர்த்து போராட்டிக் கொண்டிருந்த காலத்தில், இவர்கள் படித்து பட்டம் பெற்று அதே அரச இயந்திரத்தில் வேலைக்கு சென்றனர். இது தான் யதார்த்தம். 

ஆழமாக சிந்தித்து பாருங்கள். ஒரு போதும் ஆயுதம் தூக்கியிராதவர்கள், இன்னொரு விதமாக சொன்னால் மிதவாதிகள் "எதிர்ப்பு அரசியல்" செய்வதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே நேரம் அவர்களே இணக்க அரசியல் செய்யும் முன்னாள் போராளிகளை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும் எவனாவது தமிழீழத்திற்காக ஆயுதமேந்தி போராட முன்வருவானா? ஆளை விட்டால் போதும் சாமி என்று ஓடி விடுவான். 

அது... வந்து... என்று இழுக்காதீர்கள். ஒருவேளை பிரபாகரன் ஆயுதங்களை கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினாலும் அரசுடன் ஒத்தோடும் இணக்க அரசியல் செய்து கொண்டிருப்பார். உலகில் தனிநாடு பிரிவினை கேட்டு போராடிய இயக்கங்கள் எல்லாம் கடைசியில் அவ்வாறான இடத்திற்கு வந்தடைந்து உள்ளன. PLO முதல் IRA வரை பல உதாரணங்கள் காட்டலாம்.

No comments:

Post a Comment