Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

No comments:

Post a Comment